டிசம்பர் 12, வார்தாவால் சூரையாடப்பட்ட கடந்த வருடச் சென்னை! ஒரு கொடுங்கனவின் மீள் நினைவு!

பகல் சுமார் 12 மணியளவில் உச்சத்தை அடைந்த புயல் சென்னையில் பல இடங்களில் கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கியது. சூரைக்காற்று பேயாட்டமாட கனமழை
டிசம்பர் 12, வார்தாவால் சூரையாடப்பட்ட கடந்த வருடச் சென்னை! ஒரு கொடுங்கனவின் மீள் நினைவு!
Published on
Updated on
4 min read

கடந்த ஆண்டு இதே நாள் சென்னையில் வார்தா புயல் கரையை கடந்தது.

அதி தீவிர வர்தா புயலானது வடக்கு இந்தியப் பெருங்கடலின் மேலாக 2016 ல் நிகழ்ந்த ஒரு வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். டிசம்பர் 12ஆம் தேதி சென்னைக்கு அருகே கரையைக் கடந்த இந்தப் புயல், டிசம்பர் 13 ஆம் கர்நாடக மாநில எல்லையைத் தாண்டி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது. இது 2016 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிகழ்ந்த நான்காவது புயலாகும்.

சிவப்பு ரோஜா எனும் வார்தா புயல்...

டிசம்பர் 3 ஆம் தேதி மலேசியத் தீபகற்பத்தின் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகிய இப்புயலனது, டிசம்பர் 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. தொடர்ந்து அடுத்த நாள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின், டிசம்பர் 8ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தாண்டி புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்த இப்புயலானது டிசம்பர் 9ஆம் தேதி தீவிர புயலாக மாறியது. டிசம்பர் 11 ஆம் தேதியன்று அதி தீவிர புயலாக மாறும் முன் காற்றின் வேகம் மணிக்கு 130 கிலோமீட்டராக இருந்தது. வலுவிழந்த இப்புயலானது சென்னைக்கு அருகே டிசம்பர் 12 ஆம் தேதி கரையைக் கடந்தது.

இப்புயலுக்கு சிவப்பு ரோஜா எனப் பொருள்படும் வர்தா என்ற பெயர் புயல்களுக்குப் பெயர் சூட்டும் ஆசிய நாடுகளின் வரிசைப்படி பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டது.

வார்தா புயலால் தமிழ்நாட்டில் பிற நகரங்களைக் காட்டிலும் சென்னையே படு பயங்கரமான பாதிப்புகளுக்கு உள்ளானது.

வார்தா விளைவுகள்...

வார்தா புயல் கரையை நெருங்க நெருங்க சென்னையில் டிசம்பர் 11 ஆம் தேதி ஞாயிறு மாலையிலிருந்தே லேசான காற்றும், மழையும் தொடங்கி மறுநாள் திங்களன்று காலை முதலே காற்றின் வேகமும், மழையும் மேலும், மேலுமென அதிகரித்துக் கொண்டே இருந்தது. பகல் சுமார் 12 மணியளவில் உச்சத்தை அடைந்த புயல் சென்னையில் பல இடங்களில் கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கியது. சூரைக்காற்று பேயாட்டமாட கனமழை கொட்டித் தீர்த்ததில் 1000 க்கும் மேற்பட்ட பெருமரங்கள் வேரோடு சாய்ந்தன,

3000 க்கும் அதிகமான மின்கம்பங்கள் மூட்டோடு பெயர்ந்து விழுந்தன. நகர் முழுவதும் ஆலமர விழுதுகள் போல மின்கம்பிகளும், வயர்களும் தொங்கிக் கிடந்து பீதி கிளப்பின. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னை முழுதும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இப்படி சென்னை முழுதுமே பல இடங்களை வார்தா புயல் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தது. அந்த ஒருநாள் புயல் பாதிப்பிலிருந்து முற்றிலும் மீள அதன் பின்னான நாட்களில் சென்னைக்கு குறைந்த பட்சம் ஆறுமாத அவகாசமேனும் தேவைப்பட்டது. 

நகரெங்கும் விழுந்து கிடந்த ஆயிரக்கணக்கான மரங்களை அப்புறப்படுத்தும் பணியோடு பல இடங்களில் மின்சாரக் கம்பங்களும் தூரோடு வீழ்ந்து கிடந்ததால் சென்னை முழுதுமே பிரதான பகுதிகளில் கூட ஓரிரு நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக மின்சார வசதியின்றி தவிக்க நேர்ந்தது. புறநகர்ப் பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சென்னையை ஒட்டி இருந்த புறநகர்ப்பகுதிகளுக்கு நான்கைந்து தினங்களிலும் தொலைவில் இருந்த புறநகர்ப்பகுதிகளுக்கு 10, 15 தினங்களிலும் மின்சாரம் மீண்டது. புயலில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதில் பால், காய்கறிகள், மருந்துப் பொருட்கள், தண்ணீர் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து சென்னை மக்கள் மிகுந்த அவதியுற்றனர். அன்றைய முதல்வரும் இன்றைய துணை முதல்வருமான ஓ.பி.எஸ் போர்க்கால அவசரத்தில் வார்தா புயல் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் சென்னை மாநகரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று மக்களுக்கு உறுதியளித்துக் கொண்டிருந்தனர். 

புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் 90 க்கும் மேற்பட்ட புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு அம்மா உணவகம் மூலமாக வழங்கப்பட்டது. இந்தப் புயலுக்கான எச்சரிக்கையை தமிழக அரசு முன்கூட்டியே பொது மக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கியிருந்த காரணத்தால் மரங்கள் இழப்பு, அத்யாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தாலும் பெரிதாக உயிர்ச்சேதம் எதுவுமின்றி சென்னை பாதுகாக்கப்பட்டது. வார்தா புயலால் சென்னை 30 உயிரிழப்புகளைச் சந்தித்திருந்தாலும் புயலின் கோரத்தாண்டவத்தோடு ஒப்பிடுகையில் சென்னை முன்னெச்சரிக்கை உணர்வுடன் பாதுகாக்கப்பட்டதாகவே தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

வார்தா புயல் விளைவுகளால் அரசின் அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் யாரும் வீடுகளில் இருந்து வெளியில் வர வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்திருந்தது. புயல் நிவாரணப் பணிகளுக்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட புயல் நிவாரண முகாம்கள் மூலமாகச் சுமார் 8000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.

சென்னையில் இருந்து இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களுக்குப் புறப்படும் சுமார் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

பலத்த சூரைக்காற்று வீசுவதால், காற்றின் வேகம் தணிந்த பிறகே மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்தது.

சென்னை ராதகிருஷ்ணன் சாலை, கதீட்ரல் சாலை, சாந்தோம் சாலை உள்ளிட்ட இடங்களில் பெருமரங்கள் சாலையை அடைத்துக் கொண்டு விழுந்து கிடந்ததால் வேறு பாதையைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பலத்த காற்றால் மீனவக் கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்தது.

சென்னைக்கு வர வேண்டிய ரயில்கள் அனைத்தும் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

சென்னைக்கு வர வேண்டிய 25 விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 25 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட பயணிகள் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், எக்மோர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், மீனம்பாக்கம் விமான நிலையம் என எங்கு பார்த்தாலும் குழந்தைகளுடனும், வயதானவர்களுடனும் காத்திருப்பில் வைக்கப்பட்ட பயணிகளின் முகங்களில் புயலின் விளைவுகள் குறித்த பீதி அப்பட்டமாகத் தெரிந்தது.

சென்னை முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் அனைத்து பொதுமக்களுக்கும் இலவச உணவு வழங்கப்பட்டு வருவதாக அதிமுக அரசின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை மக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் நாளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை அரசின் மறு அறிவிப்பு வரும்வரை வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்றும், வெளியில் சென்றவர்கள் பயணத்தில் ஈடுபட வேண்டாம், இருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்கவும் எனவும் தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தது.

வார்தா புயல் உருவானதிலிருந்து தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் தொடர்ந்து 11 வது முறையாக புயல் எச்சரிக்கைத் தகவல் அனுப்பட்டது. அதன்படி செனை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. கடலூர், நாகபட்டிணம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் 8 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டன. 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று பொருளாம்.

ஒருவழியாக இத்தனை களேபரங்களின் பின் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் நாள் மாலை வார்தா புயல் சென்னையில் கரையைக் கடந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.