ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்!

ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்!

‘என் கடைல இப்போ A டு X   வரைக்கும் ஜனங்க வந்து சாப்பிட்டுப் போயிட்டாங்க Y யும் Z ம் தான் பாக்கி, அப்படியாப்பட்ட மக்களும் வந்து சாப்பிடத்தான் போறாங்க. நம்ம கடை ருசி அப்படி என்கிறார் அந்த வெள்ளந்தி
Published on

ஃபேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு மட்டும் லாபமோ லாபம்! 24 மணி நேரமும் இணையத்திலேயே குடும்பம் நடத்துபவர்களுக்கு சுந்தரி அக்காவைத் தெரியாமலிருக்க முடியாது. ஃபேஸ்புக்கிலும், யூ டியூபிலும் சுந்தரி அக்காவைத் தேடிப்பாருங்கள், அவரது ரசிக சிகாமணிகள் சுந்தரி அக்காவின் சமையல் சேவையைப் பற்றிப் பக்கம், பக்கமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஏனெனில், சென்னை போன்ற பெருநகரங்களில் நட்சத்திர உணவகங்களுக்குச் சென்று மதியச் சாப்பாடு சாப்பிட்டால் இன்றைய ஜிஎஸ்டி யுகத்தில் பில்லைப் பார்த்ததும் பிரஸ்ஸர் எகிறி ஹார்ட் அட்டாக் வரக்கூடிய நிலையிலிருக்கும் நம் அனைவருக்குமே மதிய உணவை மீன், கறி, முட்டை, சிக்கன் என சகலவிதமான செளகரியங்களுடன் வெறும் 30, 400 ரூபாய்களுக்குள் முடித்து திருப்தியாக ஏப்பம் விட்டுக் கொள்ள அனுமதிக்கும் சுந்தரி அக்கா மாதிரியானவர்களின் சாப்பாட்டுக்கடை நிச்சயம் தேவகிருபையில்லாமல் வேறென்ன?! விலை குறைவு என்பது மட்டுமல்ல, வரும் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்காவண்ணம் தனது கடையில் சுத்தம், சுகாதாரத்தையும் தொடர்ந்து பேணி வருகிறார் சுந்தரி அக்கா. இவரது உணவகத்தின் பெயர் கானாவூர் உணவகம். ஆனால் நெட்டிஸன்களுக்கு ‘சுந்தரி அக்கா கடை’ என்று சொன்னால் தான் சட்டெனப் புரியும். இங்கே அசைவ உணவுகள் மட்டுமல்ல சைவ உணவு வகைகளும் கிடைக்கும். முன்பெல்லாம் மதிய உணவு மட்டும் தான் சமைத்துக் கொடுத்துக் கொண்டு இருந்ததாகவும் தற்போது வெகு தூரத்திலிருந்து வரும் சில வாடிக்கையாளர்களுக்காக இரவுச் சாப்பாடும் தயார் செய்து தருவதாகவும் சுந்தரி அக்கா யூ டியூப் வீடியோ ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

சுந்தரி அக்கா கடையில் அப்படி என்ன விசேஷம்?!

மெரினா பீச்சில் சாப்பாட்டுக் கடை போட்டிருக்கும் சுந்தரி அக்கா கடையில் சாப்பிட இப்போதெல்லாம் கூட்டம் கும்முகிறதாம். வாடிக்கையாளர்களில் ஒருவர், தயவு செய்து டோக்கன் முறை இல்லாவிட்டால் சுந்தரி அக்கா கடைக்கென தனி ஆப் மூலமாக முன்னரே ஆர்டர் செய்துகொள்ளும் வசதி என எதையாவது ஏற்பாடு செய்யுங்கள். சுந்தரி அக்கா கடையில் சாப்பிடும் ஆசையுடன் நேரடியாக கடை இருக்கும் இடத்துக்கே வந்தால் இங்கிருக்கும் கூட்டத்தைச் சமாளித்து சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டு முடிப்பதற்குள் மூச்சு முட்டி உயிர் போகிறது என்று  குதூகலமாகத் தனது சாப்பாட்டு அனுபவத்தை விவரிக்கிறார். இப்படி கூட்டம், கூட்டமாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு சுந்தரி அக்கா சமைக்கும் உணவுகளில் அப்படி என்ன விஷேசம் என்று சுந்தரி அக்காவிடமே கேட்டால்;

{pagination-pagination}

‘காலையில 3 மணிக்கெல்லாம் காசிமேட்டுக்குப் போய் மீன் வாங்கி வருவேன். என் கடையில மீன் எல்லாம் அன்னன்னைக்கே வாங்கி, அப்பப்போ வெட்டி சமைக்கிறது தான். 3 மணிக்கு எழுந்து மீன், கோழி, கறி, மரக்கறி எல்லாம் வாங்கியாந்து வச்சாத்தான் அதையெல்லாம் பக்குவமா சுத்தப் படுத்தி நறுக்கி சமையலுக்குத் தயார் செஞ்சு சமைச்சு முடிச்சு 1 மணிக்கு டான்னு சாப்பாட்டுக் கடையைத் திறக்க சரியா இருக்கும். என் கடைல எப்பவுமே 1 மணிக்கு சாப்பாடு தயாரா இருக்கும். நைட்டு பத்துமணி வரைக்கும் கடை தான். அப்புறம் 11 மணிவாக்குல கடையை மூடிட்டு தூங்கப் போவேன். மறுநாள் 3 மணிக்கெல்லாம் எந்திருக்கனுமே. எனக்கு தினமும் தூக்கம் வெறும் 4 மணி நேரம் தான். இல்லனா 1 மணிக்கு எந்தக்குறையுமில்லாம எல்லா கஸ்டமர்ங்களுக்கும் சாப்பாடு போட முடியாத போய்டுமே. அதான். இங்க அல்லாமே ஃப்ரெஷ் மீனு,  கொஞ்சம் மின்னால கடல்ல எண்ணெய் கொட்டிச்சுன்னாங்களே அப்பக்கூட நான் நாகபட்டிணத்துல இருந்து ஐஸ்பொட்டில மீன் எறக்கி என் கஸ்டமர்ங்களுக்கு சாப்பாடு செஞ்சு போட்டேன். அவங்க அதையெல்லாம் நேர்ல பார்க்கறாங்க இல்ல. நான் என்ன பொய்யா சொல்லப்போறேன். இங்கே சமையலும் கஸ்டமர்ங்க முன்னாடி வச்சுத்தான் நடக்குது. நான் என்னல்லாம் பொடி போடறேன், எப்படியெல்லாம் சமைக்கிறேன்? நான் எப்படியெல்லாம் மீன் சுத்தம் செய்றேன்னு அல்லாத்தையும் அவங்க பார்க்கறாங்க. அது அவங்களுக்கு பிடிச்சிருக்கு சுத்தமா சமைக்கிறாங்க, சாப்பாடு ருசியாவும் கீதுன்னு தான் ஒரு நம்பிக்கைல என் கடைல வந்து சாப்பிட்டுப் போறாங்க. அப்புறம் இப்ப ஃபேஸ்புக் எல்லாம் வந்ததாங்காட்டி என் கடைல சாப்பிட்டுப் போறவங்க அதுல போய் எழுதி வைக்கிறாங்க, அதைப் பார்த்தும் இப்ப நிறைய பேர் இங்க சாப்பிட வர்றாங்க. அதான் நம்ம கடையோட விசேஷம். என்கிறார் சுந்தரி அக்கா!

மீனோ, கறியோ மிஞ்சிப்போனா என்ன செய்வீங்க, வச்சிருந்து மறுநாள் சமைப்பீங்களா? என்றால்;

அய்யே... அதெல்லாம் கூடாது, நம்மள நம்பி சாப்பிட வரவங்கள ஏமாத்தலாமா, அது கூடாது,  இன்னைக்கு இவ்ளோ மிஞ்சப் போகுதுன்னு சமைக்கிறவங்களுக்கு முன்னவே தெரிஞ்சுடும்ல,  ராத்திர சாப்பிட வர கஸ்டமருங்க கிட்ட, இன்னைக்கு இவ்ளோ மீந்திருக்கு பாதி விலைக்குத் தாரேன் நீங்க எடுத்துக்குங்க.. இதை வச்சிருந்து நாளைக்கு வர கஸ்டமருங்களுக்குத் தர எனக்கு விருப்பமில்லன்னே கேட்டுப் பார்ப்பேன். நிறைய பேர் சாப்பாடு ருசியா இருக்கறதாலயும், விலை குறைவுங்கறதாலயும் இல்லாத ஏழை, பாழைங்க வாங்கிச் சாப்பிட்டுப்பாங்க. வச்சிருந்து மறுநாள் அதையே சமைச்சுப் போட்டா என் கடைக்கு இவ்ளோ கூட்டம் வருமா? அதெல்லாம் நம்பிக்கை! என்கிறார் சுந்தரி அக்கா.

2000 ஆவது ஆண்டில் கணவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட கடை வேண்டாம் என ஒதுங்கியவரை மெரினா பீச்சில் சுந்தரி அக்கா கடையின் அருகிலிருந்த ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் தான் ‘அக்கா, மறுபடியும் சாப்பாட்டுக்கடையைப் போடுங்க, நாங்க இருக்கோம் உங்களுக்கு’ என்று ஊக்கப்படுத்தி மீண்டும் பீச்சில் மீன் கடையும், சாப்பாட்டுக்கடையும் போட உதவியிருக்கிறார்கள். அந்த நன்றியை மறவாமல், ஒவ்வொரு ஆண்டும் தன் கணவர் இறந்த தேதியில் அவரது நினைவு நாளன்று அக்கம் பக்கமிருக்கும் ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் அசைவ உணவு வகைகளைச் சமைத்து இலவசமாகச் சாப்பாடு போட்டு வரும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறாராம் சுந்தரி அக்கா!

சாப்பாட்டுக் கடை வருமானத்தை வைத்தே தனது இரு மகன்களின் ஒருவரை கப்பல் படிப்பும், சமையற்கலையும் படிக்க வைத்தேன் என்கிறார் சுந்தரி அக்கா.

{pagination-pagination}

சுந்தரி அக்கா கடையைப் பற்றி இணையத்தில் வாசித்தும், வீடியோ பார்த்தும் அறிந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களும் வந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள் இப்போது. இதை, சுந்தரி அக்கா ஸ்டைலில் சொல்வதென்றால், ‘என் கடைல இப்போ A டு X   வரைக்கும் ஜனங்க வந்து சாப்பிட்டுப் போயிட்டாங்க Y யும் Z ம் தான் பாக்கி, அப்படியாப்பட்ட மக்களும் வந்து சாப்பிடத்தான் போறாங்க. நம்ம கடை ருசி அப்படி என்கிறார் அந்த வெள்ளந்தி சாப்பாட்டு வியாபாரி.

அவரது நம்பிக்கை பலிக்கட்டும். 

எளியவர்களின் கடின உழைப்பும், முயற்சியும் எப்போதும் வெல்லும் என்பதற்கு சுந்தரி அக்கா ஒரு உதாரணம்.

ஆனால்... இம்மாதிரியான கட்டுரைகள் வெளிவந்து சுந்தரி அக்காவின் கடை பிரபலமானதின் பின் தற்போது அவரது கடையில் சாப்பிடச் சென்று திரும்பியவர்கள் கூறும் பரவலான குற்றச்சாட்டு, வரவர சுந்தரி அக்கா கடையில விலையெல்லாம் ஒரேயடியா ஸ்டார் ஹோட்டல் மாதிரி ஏறிப்போச்சு, அக்காவும் முன்ன மாதிரி கஸ்டமர்கள் கிட்ட பொறுமையா பேசறது இல்லை.’ என்று சங்கடப் பட்டுக் கொள்கிறார்கள்.

நிஜமா சுந்தரி அக்கா?!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்