2017 ல் தமிழகத்தை உலுக்கி எடுத்த பிரச்னைகள்! தீர்வு காண்பது எப்போது?!

தமிழர்களே, தமிழர்களே மூளையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்களேன். 2017 ஆம் ஆண்டு துவங்கியது முதலாக நம்மை வாட்டி எடுத்த பிரச்னைகள் எவையெவையென?
2017 ல் தமிழகத்தை உலுக்கி எடுத்த பிரச்னைகள்! தீர்வு காண்பது எப்போது?!

தமிழர்களே, தமிழர்களே மூளையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்களேன். 2017 ஆம் ஆண்டு துவங்கியது முதலாக நம்மை வாட்டி எடுத்த பிரச்னைகள் எவையெவையென? அவற்றையெல்லாம் அத்தனை சீக்கிரமாக மறந்து விட்டு அடுத்தடுத்த பிரச்னைகளூக்குப் போய்க்கொண்டிருந்தால் முதலில் தொடங்கிய பிரச்னைக்கான தீர்வுகளை யார் தான் கொண்டுவருவது?

சரி அந்தப் பிரச்னைகள் எல்லாம் என்னென்ன? அவற்றில் எது ஒன்றுக்காவது இப்போது வரை நிரந்தரத் தீர்வு காணப்பட்டிருக்கிறதா? அல்லது இன்னும் இழுபறி நிலை தானா? இவற்றையெல்லாம் உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான தகுதியும் திறனும் கொண்ட தலைமை என்ற ஒன்று இன்றைய தமிழக ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கிறதா? அன்றியும்  ‘பேய் அரசாள பிணம் தின்னும் சாத்திரங்கள்’ எனும்படியாகத் தான்  அரசாங்கம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதா? என்பதை உங்களுக்கு நீங்களே ஒருமுறை புத்தி எனும் உரைகல்லில் கூர்தீட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு புரட்சியுடன் தொடங்கியது இந்த ஆண்டுக்கான முதல் கிளர்ச்சி; அது பின்னர் அப்படியே நூல் பிடித்துக் கொண்டு 

  • ஜல்லிக்கட்டுப் புரட்சி
  • நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்
  • நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
  • டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
  • தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்
  • மாட்டிறைச்சிக்குத் தடை
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்
  • தொடரும் ஆணவக் கொலை அவலங்கள்

முதல் பிரச்னை;

ஜல்லிக்கட்டுப் புரட்சி!

ஜல்லிக்கட்டுக்கு இனியும் தடை வரக் கூடுமா?

2017 ஜனவரியை ஒரு கலக்கி கலக்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்கச் செய்த பெருமை ஜல்லிக்கட்டு புரட்சிக்கு உண்டு. இதை சிலர் தை புரட்சி என்கிறார்கள். சிலர் மாட்டுக்காக நடந்த புரட்சி என்கிறார்கள். எது எப்படியோ? குழந்தைகள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாகப் போராடி மத்திய அரசை செவி சாய்க்க வைத்த இந்த மாபெரும் புரட்சிக்குப் பின்னரே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமை சட்டப்பூர்வமாகத் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது.

அதற்கு முன்பு சில ஆண்டுகள் வரை தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதலை நடத்த தமிழகத்தில் நீதிமன்றத் தடை இருந்தது. அதற்குக் காரணம் பீட்டா அமைப்பு. விலங்குகள் நல அமைப்பாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த அமைப்பு வாயிலாக இனி வரும் ஆண்டுகளிலும் கூட ஜல்லிக்கட்டைத் தடை செய்வதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகவே கருதப்படுகிறது. அதற்குத் தகுந்தார்போல சமீபத்தில் பீட்டா அமைப்பு ஏறு தழுவுதலைத் தடை செய்யக்கோரிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம்...

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற கோரி 174 நாட்களாக மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக அக்டோபர் 2 ஆம் நாள்வாபஸ் பெறப்பட்டுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சில நாள்கள் நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்கினால் நெடுவாசலில் விவசாயம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் மாசுபடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆட்சியாளர்கள் உறுதி இதைத் தொடர்ந்து பொதுமக்களின் விருப்பம் இன்றி அந்த இடத்தில் அப்பணிகள் நடைபெறாது என்று தமிழக அரசு உயரதிகாரிகளும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.

நம்ப வைத்து ஏமாற்றம் இதைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 17 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது. இதற்கு நெடுவாசல் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களிடம் வாக்குறுதி அளித்த நிலையில் மத்திய அரசு நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இதை கண்டித்து நெடுவாசல் போராட்டக் குழுவினர் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். இந்த போராட்டம் 100 நாள்களுக்கு மேலாகியும் இவர்களுக்கு தீர்வு ஏதும் காணப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் 174 நாள்கள் நடைபெற்று வந்த நெடுவாசல் போராட்டம் தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் அறிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீட் தேர்வு எதிர்ப்பு ...

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் கூட ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2017 ஆம் ஆண்டில் பலத்த கண்டனங்களுடன் இத்தேர்வு தமிழகத்திலும் நடத்தப்பட்டது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத ஏமாற்ற உணர்வில் பிளஸ் டூ மாநில வழிக் கல்வி முறையில் மிக அதிக மதிப்பெண்களாக 1174 மதிப்பெண்கள் பெற்ற திருச்சி அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா துக்கிட்டுத் தற்கொலை  செய்து கொண்டார். அதையடுத்து தமிழகம் முழுதும் நீட் தேர்வுக்கெதிராக கிளர்ச்சிகள் வெடித்து கடுமையான எதிர்ப்புணர்வு வெளிப்படுத்தப் பட்டது.

ஆயினும் தமிழகத்தில் நீட் தேர்வு வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்பதே அரசின் நிலைப்பாடாக இருக்கிறது. நீட் தேர்வைப் பொருத்தவரை இனி வரும் ஆண்டுகளிலும் தேர்வு சமயங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களிலும் தொடர்ந்து மாணவ, மாணவர்களிடையே கொந்தளிப்பான உணர்வுகளையே அரசு மிஞ்சச் செய்யவிருக்கிறதா? அல்லது இது குறித்து தெளிவான முடிவுகளை வரையறுக்கவிருக்கிறதா? என்பது குறித்தான குழப்பம் இன்னும் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது.

டெல்லியில் தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டம்...

தமிழக விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், விவசாயக் கடன்களை ரத்து செய்யக் கோரியும், இடைத்தரகர்கள் இல்லாமல் தங்களது விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யக் கோரியும் இப்படி இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் தொடர்ந்து டெல்லியில் போராடி வருகிறார்கள். நிர்வாணப் போராட்டம்கூட முயற்சித்துவிட்டார்கள். அசைந்து கொடுக்கவில்லை மத்திய அரசு.  விவசாயிகளைப் பார்க்கவோ, அவர்களது கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்கவோ அவர்களுக்கு நேரமே இல்லை.. ஆகவே, அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. விவசாயிகளும் எலிக்கறி, பாம்புக்கறி, மண்டையோடு, பிச்சையெடுத்தல், மொட்டை போடுதல், தாலி அறுத்தல் என எண்ணற்ற போராட்ட முறைகளை தினம் ஒரு போராட்ட முறை என்று விதவிதமாக போராடிப் பார்க்கிறார்கள். ஆளும் பாஜக வழக்கம்போல் போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பித்து கொச்சைப்படுத்தி வருகிறது. தமிழக அரசைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டி 24 மணி நேர தொலைக்காட்சிகளுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது. தங்கள் பதவி, அதிகாரம், பண வரவு ஆகியவற்றை பாதுகாக்க இறுதிப்போரில் ஈடுபட்டுவரும் வேளையில், விவசாயி எலிக்கறி சாப்பிட்டால் என்ன? எருமைக்கறி சாப்பிட்டால் எங்களுக்கென்ன என, தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக மூழ்கிப் போயிருக்கிறார்கள் அவர்கள். அதன் விளைவு 2017 ஜூன் மாதம் டெல்லியில் தொடங்கிய தமிழக விவசாயிகள் போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை. விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது கையிருப்பை இழந்து இன்னும் அடிநிலைக்கு அமிழ்த்தப் பட்டது தான் மிச்சமே தவிர இவ்விஷயத்தில் அரசின் செவி கேட்காது என்றே ஆகிப் போனாது.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்...

இந்தியாவின் பிற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பது குறித்து 8 வாரங்களில் தமிழக அரசு பதிலளி்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு இடம் ஒதுக்குவதுடன், தடையில்லா சான்றும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மதுரை ஐகோர்ட்டின் கிளையின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசின் மனுவில் கேட்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்து மத்திய - மாநில அரசுகள் மற்றும் மனுதாரர்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆக மொத்தம் நவோதயா பள்ளிகள் விவகாரத்திலும் இழுபறி நிலை தான் நீடித்துக் கொண்டே இருக்கிறதே தவிர தமிழகத்தில் முற்றாக அந்தப் பள்ளிகளுக்குத் தடை விதிக்கவோ அல்லது பள்ளிகளை நடைமுறைப்படுத்தவோ கூடியதான ஒரு தீர்க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படுவதற்கான தெளிவான நிலைப்பாடு தற்போதைய அரசிடம் இல்லை.

மாட்டிறைச்சிக்குத் தடை...

2017 மே மாத வாக்கில் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடை செய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது மத்திய அரசு. இந்தத் தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும் என அச்சம் தெரிவித்தனர். அரசியல் தலைவர்களும் இந்தத் தடை அறிவிப்புக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர். 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்...

2017 ஆம் ஆண்டில் அல்ல 2016 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்தே இன்றூம் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பாலியல் வன்முறை வழக்குகள் தமிழக நீதிமன்றங்களில் அனேகம் உண்டு. திருச்சி அரியலூர் நந்தினி வழக்கு முதலாக போரூர் மதனந்தபுரத்துச் சிறுமி ஹாசினி கொலை வழக்கு, எண்ணூர்ச்சிறுமி ரித்திகா கொலை வழக்கு, இணையதளத்தில் ஆபாசப் படம் வெளியிட்டதால் தற்கொலை செய்து கொண்ட சேலம் வினோதினி வழக்கு, டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு, தூத்துக்குடி ஆசிரியை ஒருதலைக்காதல் கொலை வழக்கு ஈறாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் தான் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனவே தவிர குற்றங்கள் குறைவதற்கான அறிகுறிகளை மட்டும் எங்குமே காணோம்.

தொடரும் ஆணவக் கொலைகள்...

திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். கொலையான போது இவருக்கு வயது 22. இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா (வயது 19) என்ற பெண்ணை காதலித்து கலப்பு மணம் செய்தார். இதனால், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, பழனி மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் (எ) கலைதமிழ்வாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் மற்றும் பட்டிவீரன்பட்டி மணிகண்டன் என 11 பேர் மீது உடுமலை போலீஸார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த நவ.14-ம் தேதி முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், டிச. 12-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி தனது தீர்ப்பில், முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி (42), குற்றவாளிகள் ஜெகதீசன் (33), பழனி எம்.மணிகண்டன் (27), பி.செல்வக்குமார் (25), தமிழ் (எ) கலைதமிழ்வாணன் (26), மதன் (எ) எம். மைக்கேல் (27) ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார். கூட்டு சதி, வன்கொடுமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் 6 பேருக்கும் இரட்டை தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜூக்கு (25) வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்தும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டி மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி (37), தாய்மாமன் பாண்டித்துரை (51), கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் (21) ஆகிய 3 பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கவுசல்யாவுக்கும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கும் நிவாரணமாக ரூ.11 லட்சத்து 95,000-த்தை சரிபாதியாக பிரித்துக் கொடுக்கவும் உத்தரவிட்டார். 

இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற ஆணவக் கொலை வழக்கு விவகாரங்களில் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்ட வழக்காக இந்த வழக்கு தற்போது கருதப்படுகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவரான கெளசல்யா தற்போது தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட தனது தாய் மற்றும் தாய்மாமன் உள்ளிட்டோருக்கும் தண்டனை பெற்றுத்தராமல் தான் ஓயப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்.

இப்படி 2017 ஆம் ஆண்டுக்கான பிரச்னைகளே இன்னும் தீராத நிலையில் இனி பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கு இந்த விவகாரங்களை எல்லாம் அப்படியே கடத்தவிருக்கிறோமே தவிர இவற்றுக்கான உத்தரவாதமான தீர்வுகளை ஆலோசிக்க இன்று வரை இங்கு ஒருவருக்கும் நேரமிருக்கவில்லை என்பதே நிஜம்!

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு மற்றதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் ஒவ்வொரு புத்தாண்டையும் நகற்றிக் கொண்டிருக்கிறோம் நாம்.

அதனால் தான் எல்லாவற்றிலும் தாமதமான நீதி, தாமதமான தீர்வுகள், தாமதமான தண்டனைகள், தாமதமான நிவாரணங்கள் என ஒரு மந்தகதி நமக்குப் பழக்கப்பட்டுப் போயிற்று! பிறகு அரசு இயந்திரத்தைக் குறை சொல்லி ஆவதென்ன?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com