தமிழ்க் கடவுள் முருகனுக்கு அசுரர்களைக் கட்டமைப்பதில் ஏன் இத்தனை கற்பனை வறட்சி?!

அரக்கர்கள் என்றால் முகத்தை இப்படி அலங்கோலப்படுத்தக் கற்றுக் கொடுத்தது எந்த இலக்கியம்?! அல்லது வரலாறு?!
தமிழ்க் கடவுள் முருகனுக்கு அசுரர்களைக் கட்டமைப்பதில் ஏன் இத்தனை கற்பனை வறட்சி?!

பள்ளி விடுமுறை என்பதால் நேற்றிரவில் நானும், என் மகளும் கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் ‘ஆதிபராசக்தி’ திரைப்படத்தை யூ டியூபில் கண்டுகளித்தோம். அப்போது என் மகள் கேட்டாள், ‘அம்மா, இவன் தான் மகிஷாசுரனா? ஆனா, இன்னைக்கு ‘தமிழ்க் கடவுள் முருகன்’ல பார்த்த மகிஷாசுரன் வேற மாதிரி இருந்தானே?! அவனும், இவனும் வேறு, வேறா?’ நான் சொன்னேன், ‘இல்லை... இரண்டும் ஒன்று தான். ஆனால் அது அந்தக் கால குழந்தைகளுக்கான மகிஷாசுரன், இப்போது காட்டப்படுவது இந்தக் கால குழந்தைகளுக்கான மகிஷாசுரன்.’ பதிலைக் கேட்டதும் அவளுக்குக் குழப்பமாகி விட்டது. ‘ம்மா... எந்தக் காலத்திலும் ஒரே ஒரு மகிஷன் தானே இருந்தான்! அவனை ஏன் வேற, வேற மாதிரி காண்பிக்கனும்?!’ எனக்கும் அதில் கொஞ்சம் குழப்பம் தான், இருந்தாலும் அவளது சந்தேகத்தை தெளிய வைக்கும் பொருட்டு,

‘இல்லடா, அந்தக் காலத்துல நாங்க குழந்தையா இருக்கும் போது, எருமைத் தலையோட ஒரு அரக்கன் (அசுரன்) இருந்தான்னு சொன்னாக்கா அதை அப்படியே நம்பினோம் அதனால அப்படிக் காண்பிச்சாங்க, ஆனா இப்போ இருக்கற உங்க தலைமுறைக் குழந்தைகள் அதை ஒத்துக்க மாட்டீங்களே? எருமைத் தலையோட மனுஷன் இருக்க அறிவியல் பூர்வமா சாத்தியமே இல்லைன்னு மல்லுக்கு நிற்பீங்களா? இல்லையா? அதான் உங்களுக்கு எருமைத் தலை எல்லாம் மாட்டாம சாதாரண மனுஷன், குணம் மட்டும் அரக்கத்தனமா இருக்கறதா காண்பிக்கிறாங்க. என்றேன். அப்போதும் அவள் சமாதானமாகவில்லை. ‘பிள்ளையாரை மட்டும் தும்பிக்கையோட ஏத்துக்கத் தானேம்மா செய்றோம்’ என்று மீண்டும் எதையோ கேட்டுவிட்டு, அப்படியே படத்தில் ஆழ்ந்து விட்டாள்.

அவள் கேட்டதற்கான விடையும் அது தான்.

நாம் எப்போதுமே கேள்வி கேட்கிறோமே தவிர, எதையும் எப்போதும் புறக்கணித்து விடுவதில்லையே, மீண்டும் அதையெல்லாம் ரசித்துப் பார்க்கத்தானே விரும்புகிறோம்.

பிறகெப்படி உண்மையில்லாத அப்படிப்பட்ட சித்தரிப்புகள் எல்லாம் இல்லாமலாகும்?!

நேற்றைக்குப் பாருங்கள், தமிழ்க்கடவுள் முருகனில் துர்முகன் என்றொரு அரக்கன், அவனது முகத்தைப் பார்த்தால் சோற்றில் கை வைக்க முடியாது போல, அத்தனை அகோரம்.

அரக்கர்கள் என்றால் முகத்தை இப்படி அலங்கோலப்படுத்தக் கற்றுக் கொடுத்தது எந்த இலக்கியம்?! அல்லது வரலாறு?!

இதற்குப் பழைய திரைப்படங்கள் எத்தனையோ தேவலாம் போலிருக்கிறதே?! 

கடோத்கஜனும் அரக்கன் தான், ராவணனுன் அரக்கன் தான். அவர்களை எல்லாம் அந்தக் காலத் திரைப்படங்களில் நல்ல முக லட்சணத்துடன் தானே காண்பித்தார்கள். இடும்பனும், இடும்பியும் கூட காணக் சகிக்காமல் இருந்ததில்லையே அப்போது?!

இன்றைய நவீனயுக புராண, இதிகாச மெகா சீரியல்கள் தான் அரக்கர்களை (அசுரர்களை) படு கேவலமாகச் சித்தரிக்கிறது. அசுரர்களிலும் விபீஷணன் போல, திரிசடை போல, இடும்பி போல நல்லதனத்துடன் இருந்தவர்களும் உண்டு. அவர்களும் மனிதர்களே. இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியர்கள் தங்களை விட நிறத்திலும், உருவத்தில் தாழ்வாக இருந்த புராதன இந்தியப் பழங்குடிகளை அசுரர்களாக அடையாளப்படுத்தினார்கள் தங்களது இதிகாச இட்டுக்கட்டல்களில். அதை அப்படியே நம்பிக் கொண்டு வாந்தியெடுக்காமல் இன்றைய மெகா சீரியல் கிரியேட்டிவ் இயக்குனர்கள் அசுரர்களைச் சித்தரிக்கும் விதத்தில் கொஞ்சம் மாற்றி யோசிக்கலாமே!

நமக்கு ராமன் நாடு கடத்தப் பட்ட இளவரசன் என்பதை ஒப்புக் கொள்ளவோ, நம்பவோ இன்னமும் பயம் தான். ராமன் கடவுள் மட்டுமே என்பதையே நம்ப விரும்புகிறோம் நாம்.

ஒரு வாதத்திற்கு இப்படி யோசித்துப் பாருங்களேன், ராமபிரான் தன் மனைவி சீதாபிராட்டியுடன் அயோத்தியில் தனது ராஜ்ஜியத்தில் நல்லாட்சி நடத்துகையில் அதைக் கெடுக்கும் வண்ணம் ராவணனான அசுரன் லங்கையில் இருந்து பறந்து போய் அன்னை சீதையைச் சிறையெடுத்து வரவில்லை. ராமாயணமும் அப்படிக் கூறவில்லை. சீதை தண்டகாரண்யத்தில் தன் கணவருடன் வாழ்கையில் சூர்ப்பனகை வாயிலாகத் தான் அவளை அறிகிறான் ராவணன் எனும் தட்சிணாதிபதி. தண்டகாரண்யம் அப்போது அவனது ஆளுகைக்கு உட்பட்டது. தனது எல்லைக்குள், தனது அனுமதியின்றி ஊடுருவிய ஆரிய இளவரசனின் அழகான மனைவியை, அவனை எதிரியாகக் கருதத்தக்க ராவணேஸ்வரன் சிறையெடுத்தான். ராஜ அநீதியின்படியோ அல்லது அந்தக்கால மன்னராட்சி தத்துவத்தின் படியோ இந்த விஷயத்தை அணுகுவதாக இருந்தால் எதிரியின் மனைப்பெண்டிரை சிறையெடுப்பது அன்றிருந்த வழக்கம் தான். இதற்கு பல உதாரணங்கள் நமது வேத, இதிகாச, புராணக் கதைகளில் மட்டுமல்ல சங்க இலக்கியமான புறநானூற்றிலும் உண்டு. அப்படிப் பார்த்தால் இதில் அசுரத்தனம் எங்கிருந்து வந்தது? அரக்கத்தனமென்று எதைக் குறிப்பிடுகிறார்கள்?! 

தேவர் தலைவனென்று சுட்டிக்காட்டப்படும் தேவேந்திரனிடத்தில் தான் அத்தனை அசுர குணமும் கொட்டிக் கிடக்கிறதென்று சொல்ல வேண்டும். ஏனெனில்; 

  • விஸ்வாமித்திரரின் தவத்தைக் கலைக்க மேனகையை அனுப்பிய கதை முதல்,
  • கெளதம முனிவரின் பத்தினியான அகலிகையை அவரது கணவன் வேடத்தில் உளம்குலையச் செய்து அவள் கல்லாகக் காரணமானது.
  • குருஷேத்திரப் போருக்கு முன் மிகமிக சூழ்ச்சியுடன் கவச குண்டலங்களை கர்ணனிடம் தானம் பெற்றது. வரை தேவேந்திரனின் செயல்கள் ஒவ்வொன்றுமே அசுரத் தன்மை கொண்டவை.

ஆனால், நம் புராணங்கள் நெடுக பழிக்கப்பட்டது என்னவோ எப்போதுமே ஆதிப்பழங்குடிகள் மாத்திரமே!

ஒரு உதாரணத்திற்குத்தான் தமிழ்க்கடவுள் முருகன் தொடரைக் குறிப்பிட்டேனே தவிர, அப்படியான அத்தனை புராண மெகாத் தொடர்கள் அனைத்தும் ஒன்று போலத்தான் தோற்றமளிக்கின்றன.
இதில்;

  • சீதையின் ராமன்
  • ஜெய் ஹனுமான்
  • மகாபாரதம்
  • சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவான்
  • பாலவீர்

என்று எதுவும் விதிவிலக்குகளில்லை.

எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டிகளே!

யோசித்துப் பார்க்கையில்; இவர்கள் ஏன் இன்னமும் அகோரத்தனமான முகங்களைக் கொண்ட, அருவருக்கத் தக்க அங்க சேஷ்டைகள் கொண்ட அசுரர்களைப் படைத்து தங்களது மெகா சீரியல்களில் உலவவிட்டு நேரத்தை விரயமாக்குகிறார்கள் என்று அலுப்பாக இருக்கிறது.

இதில் குழந்தைகள் வேறு, நேரம், காலமின்றி எந்த நேரத்தில் அந்த தொடர்கள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டாலும் ரிமோட்டை அபகரித்துக் கொண்டு அதையே பார்த்துத் தொலைக்கும்படி பெற்றோரையும், பெரியோரையும் கூட வற்புறுத்தலில் நிறுத்தி விடுகிறார்கள்.

இதை என்னவென்று சொல்ல?

உண்மையில் இன்றைய அசுரர்கள் யார்?

  • உண்ணத்தக்கது அல்ல என்று பிற நாடுகளில் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களையும், ஸ்னாக்ஸ் வகையறாக்களையும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் விற்பதற்கான உரிமை வழங்கிய அத்தனை முதலாளி வர்க்கங்களும் அவர்களுக்கு அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகளும் அசுரர்கள் அல்லாமல் வேறு யார்?
  • உணவுத் துறையில் மட்டுமல்ல, மருத்துவத்துறையில் எத்தனையெத்தனை முறைகேடுகள். போலி மருந்து, மாத்திரைகளை உற்பத்தி செய்து மிகத் தைரியமாக சந்தையில் விற்பனைக்குத் திறந்து விடும் துணிவு கொண்டவர்களை அசுரர்கள் எனாமல் என்னவென்பீர்கள்?
  • மக்களாட்சி என்ற பொய்த்திரையிட்டு ஜனநாயகத்தை சாகடித்து தேர்தலை மிக மோசமான கள்ளப் பணம் புழங்கும் மாபெரும் ஓட்டு வர்த்தகச் சந்தைக்கடையென ஆக்கி வைத்தவர்களை என்னவென்பீர்கள்?

இவர்கள் தானே உண்மையில் இன்றைய நவீன அரக்கர்கள்?!

இவர்களைத் தானே நாம் இனி அரக்கர்களாகச் சித்தரிக்க வேண்டும்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இவர்களை கொஞ்சமும் கூசாமல் ஹீரோக்களாகவும், தெய்வத் திருவுருக்களாகவும் அல்லவா மாற்றி விடுகிறோம்.

காலக்கொடுமையல்ல இது திட்டமிட்ட சதி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com