அடுக்கடுக்காக செல்ஃபீ எடுத்துத் தள்ளினாலும் இன்னும் ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுத்த திருப்தி கிட்டாதவரா நீர்?!

இப்படி செல்ஃபீ எடுத்துப் பாருங்கள். பெர்ஃபெக்ட் செல்ஃபீ ரெடி! அப்புறம் உங்கள் செல்ஃபீ மீது உங்கள் கண்ணே பட்டு விட்டதென்று சொல்லி இரவில் கண்ணேறு கழிக்க வேண்டியது தான் பாக்கி!
அடுக்கடுக்காக செல்ஃபீ எடுத்துத் தள்ளினாலும் இன்னும் ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுத்த திருப்தி கிட்டாதவரா நீர்?!

ஃபோட்டோகிராபி போலத்தான் செல்ஃபீட்டோகிராபியும்... ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுத்த திருப்தி கிடைக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் எடுத்த செல்ஃபீ உங்களுக்கே பிடித்தமானதாக இருக்க வேண்டும். ஆனால், சூட்டோடு சூடாக எடுத்த செல்ஃபீக்களை எல்லாம் ஒன்றும் தேறாது என திருப்தியில்லாமல் டெலிட்டுபவர்கள் தான் நம்மில் அனேகம் பேர். எடுத்த செல்ஃபீக்களை கண்ணுக்குக் கண்ணாக நினைத்து பாஸ் வேர்டு போட்டு லாக் செய்து பத்திரப்படுத்தி வைப்பவர்கள் குறைவே! காரணம் திருப்தியின்மை. ஒரு பக்கா பெர்ஃபெக்ட் செல்ஃபீ எப்படி இருக்க வேண்டுமென்பதில் இன்னமும் நமக்குக் குழப்பங்கள் நிறைய உண்டு. அதை நிவர்த்தி செய்யாமல் எப்படி கச்சிதமான ஒரு செல்ஃபீ எடுத்துக் கொள்ள முடியும்?! முதலில் பெர்ஃபெக்ட் செல்ஃபீ என்றால் என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிளைத் தீர்மானியுங்கள்....

முதலில் செல்ஃபீ எடுத்துக் கொள்ளும் போது முகத்துக்கு நேரே நீட்டி ஏதோ ஒரு டைரக்‌ஷனில் கேமரா ஆங்கிளை வைத்து கன்னா, பின்னாவென கிளிக்கித் தள்ளக் கூடாது. கேமரா ஆங்கிளுக்குச் சரியாக நமது இருப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கேமரா ஆங்கிள் எங்கோ இருக்கும், நாம் எங்கோ பார்த்துக் கொண்டிருப்போம். முடிவு செல்ஃபீயில் கோயில் திருவிழாவில் காணாமல் போன சவலைப் பிள்ளைக்களை தெரியும் நம் முகத்தில். அது தேவையா? அதனால் செல்ஃபீ எடுத்துக் கொள்ளும் ஆசை இருப்பவர்கள் முதலில் உங்கள் அலைபேசிக் கேமராவின் ஆங்கிளுக்குப் பொருத்தமாக நீங்கள் உங்கள் இருப்பைத் தீர்மானித்து விட்டீர்களா? என்பதில் தான் உங்கள் பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுக்கும் பயணத்தைத் துவங்க வேண்டும். சரி ஒருவழியாக நெட்டுக்குத்தாகவோ, குறுக்கு வெட்டாகவோ, அல்லது மூலை விட்டமாகவோ உங்களையும், கேமரா ஆங்கிளையும் செட் செய்து முடித்து விட்டீர்கள் எனில் உடனே கிளிக்கி விடத் தேவையில்லை. அப்புறமும் இருக்கின்றன சில முக்கியமான வேலைகள்.

லைட்டிங் செட் செய்யுங்கள்...

நீங்கள் செல்ஃபீ எடுத்துக் கொள்ள தீர்மானித்த ஆங்கிளில் வெளிச்சம் அதாவது ஃபோட்டோகிராபி மொழியில் சொல்வதென்றால் லைட்டிங் உங்களது செல்ஃபீயை அழகூட்டக் கூடிய விதத்தில் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். அதிக வெளிச்சமென்றால் உருவம் வெந்நிற ஆவி அலைவதைப் போல செல்ஃபீயில் விழுந்து தொலையும், அதிக இருள் என்றால் இருட்டுக்கடைப் பிசாசுகள் போலத் தோற்றமளிப்போம். அதனால் சரியான உருவம் பொருத்தமான கலர் காண்ட்ராஸ்டுடன் அலைபேசித் திரையில் பதிவாகிறதா? என ஒன்றுக்கு இருமுறை சோதித்த பிறகு அம்மாதிரியான லைட்டிங்கை ஒப்புக் கொள்ளலாம். அடுத்ததாக;

உராங்குட்டான் போல கடுப்படிக்காமல் கொஞ்சம் சிரிங்க பாஸ்...

செல்ஃபீ எடுக்க வேண்டும் என்றால் இன்று ஹிட்லர் உயிருடன் இருந்திருந்தால் அவரும் கூட கொஞ்சம் புன்னகைத்துத் தான் தீர வேண்டும். அந்த அளவுக்கு பக்கா செல்ஃபீ என்றால் அதில் நிச்சயம் புன்னகை மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புன்னகையில் தான் எத்தனை எத்தனை வகைகள் உள்ளன. உங்களுக்குத் தெரியாததா? மோனாலிஸா புன்னகை முதல் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, புன்னகை இளவரசி சினேகா, கோல்கேட் பேஸ்ட் காஜல் அகர்வால் வரை எத்தனை எத்தனை புன்னகைகள் நமக்குத் தெரியுமோ? அத்தனை விதமாகவும் புன்னகைத்துப் பார்த்து அதிலொன்றை நமக்கே, நமக்கான பெர்ஃபெக்ட் செல்ஃபீக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஓகே செல்ஃபீ எடுக்க இப்போது நமது புன்னகையும் ரெடி, அடுத்து என்ன?

இது பிராப்பர்ட்டி ரவுண்டு...

இதேதடா... புதுதாக செல்ஃபீக்கு கூட பிராப்பர்ட்டி ரவுண்டு கண்டீஷனெல்லாம் போடுகிறீர்களே! என்று சலித்துக் கொள்ளாதீர்கள். ஃபோட்டோவோ, செல்ஃபீயோ எதுவானாலும் நமக்கே, நமக்கானதாக ஒரு ஸ்பெஷல் பிராப்பர்ட்டியுடன் எடுத்துக் கொண்டால் தான் அது ரசனையானதாக இருக்கும். உதாரணத்துக்கு உங்கள் செல்ல நாய்க்குட்டியையோ, பூனைக்குட்டியையோ, ஃபிஷ் டேங்கையோ அட எதுவும் தேறவில்லை என்றால் செல்லக் கணவரையோ கூட பிராப்பர்ட்டியாக செட் செய்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் குழந்தைகளைக் கூடத்தான். அப்போது தானே சமூக வலைத்தளங்களில் நமது ஆஹா, ஓஹோ செல்ஃபீ பார்த்து லைக்குகளும், கமெண்டுகளும் போடக்கூடியவர்கள், மகளைப் பார்த்து கூட நிக்கறது யார்? உங்க தங்கையா? என்றும் கணவரைப் பார்த்து கூட நிக்கறது யார் உங்க அப்பாவா? என்றும் கேட்டு நம் வயிற்றில் பாலையும் கணவர்/மகள் வயிற்றில் ஆஸிட்டையும் கரைக்க முடியும்! இந்த உணர்வுகளை எல்லாம் தராவிட்டால் பிறகெப்படி அது ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீயாக இருக்க முடியும்.

பேக்ரவுண்டு...

எல்லாம் முடிந்தது. இது தான் கடைசி ரவுண்டு அதாவது பேக்ரவுண்டு. நமது உடைகளுக்கும், இரவா, பகலா என்பதைப் பொறுத்தும் ஒரு பக்கா செல்ஃபீக்கான பேக்ரவுண்டை நாம் தீர்மானிக்க வேண்டும். அது மொட்டைமாடியாக இருக்கலாம், காஃபீ டே வாக இருக்கலாம், டூர் சென்ற இடமாக இருக்கலாம், அல்லது உங்களது சமையலறையாகக் கூட இருக்கலாம். அத்தனை ஏன் மீன் மார்க்கெட்டாகக் கூட இருக்கலாம். ஆனால், எந்த பேக்ரவுண்டாக இருந்தாலும் மேலே சொன்ன அத்தனை அம்சங்களும் நாம் எடுக்கவிருக்கும் செல்ஃபீக்குள் அடங்கி இருக்கின்றனவா? என்று சோதித்த பின்னரே நமது கட்டைவிரல் செல்ஃபீ கேமராவைக் கிளிக்கத் துணிய வேண்டும்.

இப்படி செல்ஃபீ எடுத்துப் பாருங்கள். பெர்ஃபெக்ட் செல்ஃபீ ரெடி!

அப்புறம் உங்கள் செல்ஃபீ மீது உங்கள் கண்ணே பட்டு விட்டதென்று சொல்லி இரவில் கண்ணேறு கழிக்க வேண்டியது தான் பாக்கி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com