10 முதல் 19 வயதுக்குட்பட்ட அடலசன்ட் வயதினர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள்...

எல்லோரும் கூகுளின் சுந்தர் பிச்சையாகவும், சச்சின் டெண்டுல்கராகவும். ரிலையன்ஸ் அம்பானியாகவும் ஆக வேண்டுமென்பதில்லை. குழந்தைகள் தமது திறமைகளை கண்டுணர்ந்து அவற்றை பட்டை தீட்டிக் கொள்ள வெளியில்
10 முதல் 19 வயதுக்குட்பட்ட அடலசன்ட் வயதினர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள்...

10  முதல் 19  வயதினரிடையே தற்கொலைக்கான காரணங்களாக பெரும்பாலும் இருப்பவை தேர்வில் தோல்வி, பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரிய,ஆசிரியர்களின் வன்முறை ,கடுமையான வசைகள், வெளியார் பாலியல் அச்சுறுத்தல்கள், மேலும் காதல் தோல்விகள் என பட்டியலிடப் பட்டிருக்கின்றன.

1. தேர்வில் தோல்வி:

வாழ்கையின் வெற்றி தோல்வி என்பது முழுக்க முழுக்க டென்த் மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில்  பெறப் போகும் மதிப்பெண்களை மட்டுமே சார்ந்தது என்ற நினைப்பு பல மாணவ மாணவிகளை அச்சத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகிறது.தொடர்ந்து வீட்டில் பெற்றோர்களும் பள்ளியில் ஆசிரியர்களும் இம்மாணவர்களை 'இந்த வருஷம் பப்ளிக் எக்சாம் " என்று புலி வருது புலி வருது கதையாக  ஒரு விதமான பதட்டத்தில் நீடிக்க வைத்து விடுவதால் பயத்தில் பலருக்கு சரியாக படிக்கவும் தேர்வெழுதவும் முடியாமல் போய்விடுகிறது. முதலில் பெற்றோர்களும் சரி ஆசிரியர்களும் சரி தேர்வு காலப் பதட்டங்களை மாணவர்களிடமிருந்து துடைத்து எடுத்து அவர்களை இயல்பாக தேர்வை எதிர்கொள்ளப்பழக்க வேண்டும் .

ஒவ்வொரு வருடமும் டென்த் மற்றும் பிளஸ் டூ ரிசல்ட் வெளியாகும் போதும் அடுத்த ஒரு வாரத்திற்கு பத்திரிகளைகளில் தலைப்புச் செய்தி ஆகிறவர்கள் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவிகளே! இவை மட்டுமல்ல .தேர்வு காலங்கள் தவிரவும் தினசரி வாழ்விலும் ஆசிரியர் மாணவர் உறவு சரியாகப் பேணப் பாடல் வேண்டும். மாணவனுக்கு ஆசிரியரின் மீது பக்தி இருக்கலாம் பயம் இருக்க கூடாது .நேசம் இருக்கலாம் வெறுப்பு இருக்கக்கூடாது. இந்த பயமும் வெறுப்பும் எல்லை மீறும் போது சில ஆசிரியர்களின் சிடு சிடு கண்டிப்புகளால் பலகீனமான இதயம் கொண்ட மாணவ  மாணவர்கள் தங்களது ஆசிரிய ஆசிரியர்களின் வசைகளையும் கண்டிப்புகளையும் தாங்கிக்கொள்ளும் மனோதைரியம் இல்லாது தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் இருதரப்பினருக்கும் தொல்லை தானே தவிர எவருக்கும் நன்மை கிடையாது .

2. பள்ளி ஆசிரிய, ஆசிரியர்களின் வன்முறை, கடுமையான வசைகள்:

சில ஆண்டுகளுக்கு முந்தைய பத்திரிகைச் செய்தி ஒன்று ;

அபினா எனும் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு ஊஞ்சல் என் சரியாக உச்சரிக்கத் தெரியாததால் அவளை எல்லா மாணவர்களின் முன்பாக அவளது ஆசிரியை; "நீ எல்லாம் ஏன் ஐந்தாம் வகுப்பில் உட்காருகிறாய், போ மறுபடியும் ஒன்றாம் வகுப்புக்கு” என்று கடுமையாகத் திட்டி விடுகிறார், இதற்கு அந்த சிறுமி மனம் நொந்து போய் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்டு இறந்து போனாளாம், இங்கே குறிப்பிடத் தக்க ஒரு விஷயம் ,ஆசிரியை மீது தவறு தான். அதற்கு நடவடிக்கை எடுக்க வசதி இருக்கிறது.ஆனால் அந்த சிறுமி அபினாவின் மனநிலையை எண்ணிப் பாருங்கள் வெறுமே பள்ளியில் ஆசிரியை திட்டினால் அதற்குத் தன்னைக் கொளுத்திக் கொண்டு இறந்து போக வேண்டும் என அவளுக்கு எப்படித் தோன்றியது? குழந்தைகளை மனதளவில் எதையும் எதிர் கொள்ள திராணியற்றவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நமது வளர்ப்பு முறையில் அல்லவா இங்கே முதல் தவறு ஒளிந்திருக்கிறது. ஆசிரியை திட்டியதால் குழந்தை தற்கொலை செய்து கொண்டாள், என பத்திரிகைகளில் வரும் பெரும்பான்மையான செய்திகள் மிக்க மனவருத்தத்தை அளிக்கின்றன. எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் அல்ல.

மேலும் அந்த ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கான பந்தம் வாழ்வின் சில காலமே. அப்போதும் தினமும் அந்த ஆசிரியர்கள் விரும்பத் தகாத வண்ணமே பேசிக் கொண்டு இருக்கப் போவதில்லை, ஏதோ ஒருநாள் திட்டலாம், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒட்டு மொத்த வாழ்வை முடித்துக் கொள்வது முட்டாள் தனம் தவிர வேறென்ன? குழந்தைகளே... மாணவர்களே உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் தயங்காமல் மரியாதை குறைவின்றி ஆசிரிய ஆசிரியர்களிடம் எதிர்வாதம் செய்யுங்கள். உங்களை அவர்களுக்குப் புரிய வைக்க முயலுங்கள். காரணமே இன்றி யாருக்கும் யார் மீதும் வெறுப்பு வர வாய்ப்பில்லை. பள்ளிகள் கல்வி கற்பதற்கு தான். அந்த வேலையில் குறை வைக்காமால் இருந்தால் என்ன தான் முசுட்டு ஆசிரியை என்றாலும் சம்பந்தப் பட்ட மாணவியின் மீது அவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்யும். அந்தப் பலனை கெட்டியாகப் பற்றிக் கொள்ள முயலுங்கள்.

பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புவது. கண்மூடித் தனமாக ஆசிரியர்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். நாணயத்திற்கு இருபக்கங்கள். இன்றைக்கு வகுப்பறையில் எல்லோர் முன்னிலும் திட்டி கருத்துக் கொட்டும் ஆசிரியை நாளையே உங்களிடம் உங்கள் மகன் அல்லது மகளை ஏதாவது ஒரு திறமைக்காக வானளாவப் புகழும் நிலை வரும். அதற்கு நம் குழந்தைகள் உயிரோடு இருக்க வேண்டும் .

அதற்கு முன் வெகு முக்கியமாய் உளவியல் ரீதியாக நேரக் கூடும் மனமுடைதல் குறித்து நம் குழந்தைகளின் "இம்" மெனும் முன் தற்கொலை) பூஞ்சை மனதை வலுப்படுத்த உருப்படியாய் ஏதானும் முயற்சிக்கலாம். இந்த உலகில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது.அப்படித் தான் குழந்தைகள் நம்ப வேண்டும், "முதலில் பாடம் படிக்க வேண்டியது பெற்றோர்களே" நம்மிலிருந்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். தற்கொலை அதற்கான தீர்வாக முடியாது.

3. பாலியல் அச்சுறுத்தல்கள்:

இது தனியாக விவாதிக்க வேண்டிய பொது நலப் பிரச்சினைகளில் ஒன்றாகி விட்டது. இன்றைய அவசர யுகத்தில் .பள்ளியோ கல்லூரியோ எங்கு பயிலும் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களாகட்டும் மாலை வீடு திரும்பி பின் இரவு உணவை சேர்ந்து உண்ணும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு அரை மணி நேரமாவது ஒதுக்கி குழந்தைகளின் அன்றன்றைய நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வதை தினசரி கடமையாக நினைத்துச் செய்ய வேண்டும். குழந்தைகளின் அல்லது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் பெற்றோர்கள் இப்படிச் செய்யத் தவறுவதால் தங்கள் பிள்ளைகளின் மனச் சங்கடங்கள்,அகச் சிக்கல்கள் குறித்து அவர்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது. பல பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் தற்கொலைக்கான காரணங்களே அவர்களை இழந்த பிற்பாடே தெரிய வருவது அதிர்ச்சி கரமான விஷயம்.

4.காதல் தோல்விகள்:

அறியாத வயதில் ஏற்படக் கூடிய பக்குவப் படாத இனக் கவர்சியை காதல் என்று எண்ணி அதில் விழுந்து தங்களது எதிர்கால் அவாழ்வை பாழாக்கிக் கோபத்தோடு தற்கொலையால்  உயிரையும் இழக்கும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்விசயத்தின் தீவிரத்தை அறியாது மேம்போக்காக இதை அணுகி மேலும் மேலும் நஷ்டமடைவதை விட இதற்கென தனியாக நேரம் செலவிட்டு இந்த பொது நலப் பிரச்சினையையும் ஆராய்ந்து களைவது பெற்றோர்கள் மற்றும் ஆசிர்யரின் கடமையே .

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமைகள்:

மாணவர்கள் வெகு எளிதாக இந்த தற்கொலை எண்ணங்களை கடந்து வந்து விடலாம். அதற்கான மன பக்குவத்தையும், ஆற்றலையும் அவர்களுக்கு வழங்க வேண்டியது... பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர்களும் சரி பெற்றோர்களும் சரி வெறும் மதிப்பெண்களை மட்டுமே மனதில் லட்சியமாகக் கொண்டு தங்கள் குழந்தைகளை ஆட்டு மந்தைகளாகவோ வாத்துக் கூட்டங்களாகவோ முடுக்கி விடக் கூடாது. பிஞ்சு மனங்கள் மென்மையானவை, அவர்களின் தேவைகள், திறமைகளை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களை அவர்களது விருப்பங்களின் திசையில் சுதந்திரமாக இயங்க விட்டால் பல சாதனையாளர்களை உருவாக்கலாம் .

எல்லோரும் கூகுளின் சுந்தர் பிச்சையாகவும், சச்சின் டெண்டுல்கராகவும். ரிலையன்ஸ் அம்பானியாகவும் ஆக வேண்டுமென்பதில்லை. குழந்தைகள் தமது திறமைகளை கண்டுணர்ந்து அவற்றை பட்டை தீட்டிக் கொள்ள வெளியில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோர்களும் உதவ வேண்டும். முயல் குட்டி கதை போல  அதை கற்று கொள் இதைக் கற்றுக் கொள் என்று இலக்கே இன்றி பலவற்றையும் திணித்து கடைசியில் ஒரு திறமையும் இன்றி மழுங்கிப்போய் நமது குழந்தைகள் சராசரிக்கும் கீழாக ஆவதை விட ஏதாவது ஒரு திறமையோடு சாதனை செய்தால் அது ஆரோக்கியமானது தானே!

எதிர்காலம் என்பது எஜுகேசன் சிஸ்டங்களை மட்டுமே நம்பித்தானா !

ஒரு வருடம் முழுக்க கற்ற கல்வியை தேர்வென்ற பெயரில் மூன்று மணி நேரங்களில் விடைத்தாட்களில் நிரூபிக்கத் தவறினால் அந்த மாணவனின் ஒட்டுமொத்த வாழ்வுமே கேள்விக் குறியாகி விட வேண்டுமா! ஒரு மாணவனின் முழுத் திறமை  என்பது கேட்கப் படும் கேள்விகளுக்கு அளிக்கப் படும் பதில்களுக்கான மதிப்பெண்களில் தான் ஒழித்து வைக்கப் பட்டிருக்கிறது. பிறகு இந்தியாவின் தாரக மந்திரமான ஆன்மசக்தியை பலப்படுத்தும் மனோதிடத்தின் அடிப்படையில் ஆன தன்னம்பிக்கை என்ற விஷயம் எங்கே போனது.

தொலைகாட்சி விளம்பரங்களும் சரி திரைப்படங்களும் சரி, தொடர்களும் சரி எப்போதும்  மனிதர்களை பிறருக்கு தங்களை அடையாள படுத்திக் கொள்ளும் ஆர்வமுடையவர்களாகவே காட்ட முனைகிறது. விளைவு எல்லோரும் விளம்பரப் பிரியர்களாகி விடுகிறோம். சுற்றி இருப்பவர்கள் தம்மை கவனிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காகவே பல காரியங்களை அவற்றின் அவசியம் பற்றி ஆராயாமலே கூட செய்து கொண்டிருக்கிறோம், குழந்தைகளையும் அவ்வாறே செய்யப் பழக்கி வைத்திருக்கிறோம். குழந்தைகள் தங்களை உணர வேண்டும், அடுத்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட குழந்தைகளும் சரி இளைஞர்கள் மற்றும் பெரியவர்களும் சரி தங்களை தாங்களே அறிந்து கொண்டார்கள் எனில் பெற்றோர்களை அச்சுறுத்தும் எல்லா பொது நலப்பிரச்சினைகளுக்கும் சிறிது சிறிதாக முடிவு கட்டலாம்.

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com