Enable Javscript for better performance
Sketch By A 10Year Old In Delhi Sent Her Rapist|காமுகனை சிறையில் தள்ளி, களி தின்ன வைத்த ஓவிய சாட்சி!- Dinamani

சுடச்சுட

  

  சிறுமியைச் சீரழித்த காமுகன்... சிறையில் தள்ளிய ஓவியம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 15th June 2017 02:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  10_year_girl_verdict_sketch

   

  சாட்சி சொன்னது மட்டுமல்லாமல், குற்றவாளிக்குத் தண்டனையும் பெற்றுத் தந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? டெல்லி நீதிமன்றத்தில் ஓவிய சாட்சியை அடிப்படையாக வைத்து அப்படி ஒரு தீர்ப்பு அளித்து குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் வித்யாசமான முன்னுதாரணத்தை துவக்கி வைத்திருக்கிறார் நீதிபதி 'விவேக் மேத்தா'.

  தொடர்ந்து குழந்தைகளிடையே நிகழ்த்தப் படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் விரும்பத் தகுந்த மாற்றங்கள் எதுவும் கிட்டாது சோர்வுற்றிருக்கும் இந்த நாட்களில் சற்றே ஆசுவாசம் கொள்ளச் செய்கிறது இந்தச் செய்தி. 10 வயதுச் சிறுமி ஒருத்தி வரைந்த ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு 45 வயது மனிதனின் வக்கிரத் தனத்தை அடையாளம் கண்டு தண்டனையும் அளித்திருக்கிறார் ஒரு நீதிபதி.

  இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில், பல நேரங்களில் குற்றவாளிகள் அதிகமும் அடையாளம் காணப்படுவதில்லை எனும் குறை இருந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே, பாதிப்படைந்த குழந்தைகளுக்கு, தங்களுக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றிச் சொல்லத் தெரிந்திராத குழந்தமை தான். பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப் பட்ட இளம்பெண்களே நீதிமன்றங்களிலும், மருத்துவமனைகளிலும் கேட்கப் படும் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் அளிக்க தகுந்த வார்த்தைகள் கிடைக்காது தடுமாறி மனம் வெறுத்துப் போகையில் மனித உடலின் அந்தரங்கம் அறியாப் பூந்தளிர்களுக்கு மட்டும் எப்படித் தெரியும் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிக்க?!

  இம்மாதிரியான சம்பவங்களில் எதிர்த்துப் போராடும் வலுவற்ற குழந்தைகள் முதலில் அதிர்ச்சியில் உறைந்து விடுகின்றனர். இதை தங்களுக்கான வெற்றி என நினைக்கும் சைக்கோ மிருகங்கள் தொடர்ந்து குழந்தைகளிடத்தில் மிகக் கேவலமாக தங்களது பாலியல் இச்சைகளுக்கு விடை காண முயலும் போது மேலும், மேலுமென அதிர்ச்சியில் உறையும் குழந்தைகள் பிறகு இந்த புற உலகில் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தீவிரமான மனச்சிதைவு நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார்கள். அத்தகைய குழந்தைகளால், குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமலாகி விடுகிறது. இப்படித்தான் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் பல காட்டுமிராண்டிகள் எளிதில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள்.

  இந்தக் குழந்தை விசயத்திலும் அப்படித்தான் நடக்குமென்று குற்றவாளி எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு புத்திசாலி நீதிபதி அந்தக் காட்டுமிராண்டியின் ஆசையில் கூடை மண் அள்ளிப் போட்டு விட்டார். 

  கல்கத்தாவில் தன் தாயுடன் வசித்து வந்தாள் சிறுமி நீத்து. அப்பா மோசமானதொரு ட்ரக் அடிக்ட். அந்த மனிதனுக்கு மனைவியையும், மகளையும் காட்டிலும் போதை வஸ்துக்கள் தான் முக்கியம். ஆகவே அந்த அப்பா இருப்பதும் ஒன்று தான், இல்லாததும் ஒன்று தான் எனும் நிலைமையில் திடீரென ஒருநாள் நீத்துவின் அம்மா விபத்தில் இறந்து விட்டதாக செய்தி வருகிறது. அம்மா இறந்த நிலையில் நீத்துவின் பாதுகாக்கும் பொறுப்பு அவளது அத்தையிடம் சென்று சேருகிறது. அத்தை நீத்துவை தன்னுடன் டெல்லிக்கு அழைத்து வருகிறாள். 

  அதிலிருந்து தான் தொடங்குகின்றன... நீத்துவின் நரகநாட்களுக்கான அத்யாயம். அத்தை வேலைக்குச் சென்று விட அத்தையின் கணவனான கயவன், 10 வயதுச் சிறுமி என்றும் பாராமல் தனது காம இச்சைகளுக்கான வடிகாலாக நீத்துவைப் பயன்படுத்தத் தொடங்குகிறான். மாமா எனும் போர்வையில் வாழும் மனித மிருகத்தை எதிர்க்க வலுவற்ற நீத்து அதைத் தன் அத்தையிடமும் சொல்வதற்கு பல முறை முயற்சித்தும் முடியாமல் போகவே... ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு காணாமல் போகிறாள்.

  ஏதோ ஒரு பேருந்தில் ஏறி... எங்கே செல்கிறோம் என்றே தெரியாமல் பயணித்து... தனக்கு நேர்ந்த கொடுமைகளை நினைத்து பேருந்தில் தனித்து அமர்ந்து அழுது கொண்டிருந்த நீத்துவைப் பார்த்து பரிதாபப் பட்ட அந்தப் பேருந்தின் நடத்துனர்; அவளிடம் நடந்தது என்ன என்று கனிவாக விசாரிக்க முயல... இறுக்கமாகிப் போன நீத்துவால் அவருக்கு பதில் அளிக்க முடியவில்லை. வேறு வழியின்றி நடத்துனர் நீத்துவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அவர்களது விசாரணையிலும் நீத்து தன்னைப் பற்றி எந்த ஒரு விவரத்தையும் தெரிவிக்காமல் மெளனமாகவே இருக்க, அவர்கள் தங்களது விசாரணையில் உதவிக்காக Haq Foundation எனும் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த மன நல ஆலோசகரான உஸ்மா ப்ரவீனை அணுகினர்.

  முதல் சில அமர்வுகளில் ஆலோசகரிடம் அந்நியப் பட்டு, வாய் திறக்க மறுத்த நீத்து...தொடர்ந்த சில அமர்களில் மெதுவாக அவருடன் சிநேகமாகிறாள். அப்போதும் அந்தக் குழந்தையால் தனக்கு நேர்ந்த அராஜகத்தை தெளிவாக விவரிக்கத் தெரிந்திருக்கவில்லை. அவள் துண்டு, துண்டாகச் சொன்ன விசயங்களில் இருந்து முழு விசயத்தையும் கிரகிக்க வேண்டியதாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார் உஸ்மா.

  தனது மனநல ஆலோசனையின் ஊடே உஸ்மா கண்டறிந்த மற்றொரு விசயம்... எப்போதும் பதட்டமாகவும் நடுக்கத்துடனும் இருக்கும் குழந்தை, அதன் கையில் பென்சிலையும், கிரேயான்களையும் தரும் போது மட்டும் சற்றே ஆசுவாசமடைகிறது என்ற உண்மை. இப்படித்தான் அந்தக் குழந்தைக்கு படம் வரைவதில் ஈடுபாடு இருப்பது தெரிய வந்தது. நீதிமன்றத்தில் அவளது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடைவெளியில் நாங்கள் அவளது கைகளில் பேப்பரும், பென்சிலையும், வண்ண கிரேயான்களையும் கொடுத்தோம். அப்படி அவள் வரைந்த ஓவியங்களில் ஒன்றை நான் விவாத நேரத்தில் நீதிபதியிடமும் காட்டினேன். அதைக் கண்டு ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டுப் போன நீதிபதி விவேக் மேத்தா.... பிறகு அந்த ஓவியத்தின் அடிப்படையில் குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்வது தவறில்லை. சட்டத்தில் அதற்கு இடமுண்டு என ஒப்புக் கொண்டு நீத்துவின் மாமாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்திருக்கிறார்.

  சிறுமி நீத்து வரைந்த ஓவியம் இது தான்...

  இந்த ஓவியத்தில் ஒரு சிறுமி கை நிறைய பலூன்களைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள். ஆனால் அவளது உடலில் உடைகள் இல்லை. அவை தரையில் கிடக்கின்றன. சற்றே எட்டும் தொலைவில் ஒரு ஆளரவமற்ற வீடொன்று இருக்கிறது. பின்னணியில் சூரியன் மலைவாயிலுள் விழுந்து கொண்டிருக்கிறான், இந்த ஓவியச் சித்தரிப்பைக் கண்ட நீதிபதி விவேக் மேத்தா.. அந்தச் சிறுமிக்கு நடந்த அவலத்தை அதை வைத்து ஊகிப்பதில் தவறில்லை என்று முடிவு செய்கிறார். குழந்தைகளுக்கான மனோதத்துவத்தின் படி எல்லாக் குழந்தைகளாலும் தமக்கு நேர்ந்த கொடுமைகளை வாய் விட்டுச் சொல்லி விட முடியாது. படங்கள், சைகைகள், வித்யாசமான நடவடிக்கைகள் மூலமாகவும் நாம் அவர்களுக்கு நேர்ந்ததை அடையாளம் காண முயற்சிக்க வேண்டும் என்பது டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ஜஸ்டிஸ் கீதா மிட்டலின் பரிந்துரைகளில் ஒன்று. அதன் அடிப்படையில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வழக்குகளில் டிராயிங் தெரபியும் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளது.

  சிறுமி நீத்து வரைந்த அந்த ஓவியத்தைப் பார்த்தால் நமக்கும் அவரது பரிந்துரை சரி தான் என்றே தோன்றுகிறது.

  முன்னதாக அதுவரை நீதிமன்ற விசாரணைகளின் போது சிறுமி நீத்து அளித்த துண்டு, துண்டான சாட்சியங்களை வைத்து தன்னை குற்றவாளி என்று நிரூபிக்க முடியாது என்றும் சிறுமியின் சாட்சியம் செல்லாது என்றும் வாதிட்டுக் கொண்டிருந்த தனது காமுக மாமாவின் முகத்திரையை தனது ஓவியத்தின் மூலம் கிழித்தெறிந்த நீத்துவை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து எத்தனையோ வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. சிலவற்றில் கடுமையான தீர்ப்புகள் வந்திருக்கக் கூடும். ஆனால் சில வழக்குகளின் தீர்ப்புகள் மட்டுமே அதிலிருக்கும் புதுமையினால் சிறந்த முன்னுதாரணங்களாகி விடுகின்றன. அப்படி ஒரு தீர்ப்பு இது!

  டிஸ்கி:  சிறுமியின் பெயர் கற்பனை. 

  Image courtsy: NDTV

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai