வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!

லஷ்மி குறும்படத்தை நாம் அணுக வேண்டிய முறை அவளை விமர்சிப்பது அல்ல, அவள் ஏன் அப்படியானாள்? அதைத் தடுக்க கணவன் மனைவி உறவில் எப்படிப்பட்ட புரிதல்கள் அவசியம்
வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!

சுலோச்சனாவை ‘சுலோ’ அல்லது ‘சுலு’ என்றும் அழைக்கலாம்...

வித்யாபாலன் நடிப்பில் நேற்று (17.11.17) வெள்ளியன்று வெளிவந்துள்ள புத்தம் புதிய இந்தித் திரைப்படத்தின் பெயர் ‘துமாரி சுலு’. வித்யாசமான திரைப்படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள திரைப்படங்களில் நடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் வித்யாபாலனுக்கு இந்தத் திரைப்படத்தின் கதைக்களனும் கூட வழக்கமான திரைக்கதைகளுடன் ஒப்பிடுகையில் வித்யாசமானது தான். ஜோதிகாவின் 36 வயதினிலே திரைப்படத்தை வித்யாசமான திரைப்படம் என்று கொண்டாடியவர்கள் நாம். அப்படிப் பார்க்கையில், ‘துமாரி சுலு’வில் வரும் சுலோச்சனா அதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலானவர் என்றே கூறலாம்.

சுலுவின் கதையை அறிந்தவர்கள் எனில் நீங்களே கூட அதை உணரலாம். மும்பை புறநகர் பகுதியொன்றில் தனது கணவர் மற்றும் ஒரே மகனுடன் வசிக்கும் சுலு என்கிற சுலோச்சனா ஒரு சரியான எஃப் எம் ரேடியோ பைத்தியம். பைத்தியமென்றால், ரேடியோவில் அறிவிக்கப்படும் அத்தனை போட்டிகளிலும் கலந்து கொண்டு ஒரு கை பார்த்து விடுவது என்று துடிக்கும் அளவுக்கு சுலுவுக்கு ரேடியோவென்றால் உயிர். கணவர் பல்லாண்டுகளாக யூனிஃபார்ம்கள் விற்கும் பாரம்பரியமான தனியார் நிறுவனமொன்றில் விற்பனை மேலாளர். ஒரே மகன் பிரணவ். அவனுக்கு வயது 11. கணவரை அலுவலகத்துக்கும், மகனைப் பள்ளிக்கும் அனுப்பிய பிறகு நாள் முழுதும் சுலுவின் ஒரே பொழுதுபோக்கு ரேடியோ கேட்பது. இந்த இடத்தில் நாம் சுலுவின் இயல்பைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. சுலு மிகவும் நேர்மையானவள் என்பதோடு எப்போதுமே அவளொரு வேடிக்கைப் பிரியையும் கூட. எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் எப்போதும் ‘முடியாது’ என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடிய பெண்ணும் கூட! 

இப்படிப்பட்ட சுலுவுக்கு ஒருமுறை அவள் கலந்து கொண்ட ரேடியோ போட்டி ஒன்றில் பிரஸ்ஸர் குக்கர் பரிசு கிடைக்கிறது. அந்தப் பரிசைப் பெற்றுக் கொள்ள அவள் ரேடியோ நிலையம் செல்லும் போது தான் அவளது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தும் விதமாக கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் அங்கேயே அவளுக்கு ரேடியோ ஜாக்கியாகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கிறது. ரேடியோ ஜாக்கியென்றால் சாதாரணமாக ரேடியோ நேயர்களுடன் பகல் நேரத்தில் பேசிப் பேசியே கொல்கிறார்களே அப்படியல்ல; சுலு பொறுப்பேற்று நடத்தித் தர வேண்டிய நிகழ்ச்சி ரொம்பவே வித்யாசமானது. அவளுக்கு ரேடியோ நிலையத்தில் இரவில் தான் வேலையே. சுலு, இரவில் தனிமையில் இருக்கும் மனிதர்களுடன், தனது நிகழ்ச்சி மூலமாகப் பேச வேண்டும். தனிமையில் வசிக்கும் ஆத்மாக்களென்றால் அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாமில்லையா? அவர்கள் முரடர்களாக இருக்கலாம், சைக்கோக்களாக இருக்கலாம், குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் உலகத்தோரால் கைவிடப்பட்டவர்களாக இருக்கலாம், பெண் பித்தர்களாக இருக்கலாம், மொத்தத்தில் இரவு நேரங்களில் தனிமையே கதியெனக் கிடக்கும் அநாதரவான மனிதர்களுடன் சுலு ரேடியோ மூலமாக உரையாட வேண்டும். இது தான் சுலுவுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு. சுலுவின் வாழ்க்கையில் தான் எப்போதுமே ‘முடியாது’ என்ற பேச்சுக்கே இடமில்லையே. அதனால் அவள் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறாள்.

ஒருபக்கம் வேலையில் சேல்ஸ் மேனேஜர் எனும் நடுத்தரமான பதவியில் இருந்து கொண்டு முன்னேற வாய்ப்பின்றி, ஊதியத்தையும் நீட்டிக்க முடியாமல் சதா தனது வேலை தொடர்பான மனக்குழப்பங்களுடன் உலவும் கணவர். மறுபுறம் பள்ளியில் சதா எதைக்கண்டோ பயந்து கொண்டே பள்ளி செல்லும் 11 மகன். இவர்களுக்கு நடுவே புதிதாக தனக்குக் கிடைத்த நைட் ஷிஃப்ட் ரேடியோ ஜாக்கி வேலையை ஒப்புக் கொள்ளும் மனைவியாக, அம்மாவாக வித்யாபாலன் லைஸ் சுலு! ரேடியோ ஜாக்கியாக சுலு நடத்தும் தனிமை உரையாடல்கள் அவரது வாழ்க்கையை எவ்விதமாக நகர்த்திக் கொண்டு செல்கிறது என்பது தான் ‘துமாரி சுலு’ திரைப்படம். ரேடியோ ஜாக்கியாகக் களமிறங்கிய சுலுவின் வாழ்வில் அடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதை அறிய நீங்கள் தியேட்டருக்குச் செல்லலாம். அல்லது ஸ்டார் டிவி அல்லது சோனி டிவி காரர்கள் அந்தத் திரைப்படத்தை சில மாதங்களில் பெரிய முத்தாய்ப்புகளுடன் சின்னத்திரையில் ஒளிபரப்பலாம். தியேட்டருக்குச் செல்ல வாய்ப்பில்லாதவர்கள் அப்போதாவது ஒருமுறை சுலுவைத் தரிசித்து விடுங்கள். படம் பெண்கள் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இப்போது சொல்லுங்கள் ‘துமாரி சுலு’ வித்யாசமான படமா இல்லையா?

இந்தியாவில் இந்த ஹவுஸ் வைஃப் என்ற விஷயத்தை மையமாக வைத்து இன்னும் எத்தனையோ புதுப் புது கதைக்கருக்களை உருவாக்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தி லஞ்ச் பாக்ஸ்’ திரைப்படம் கூட அப்படியான ஒரு முயற்சி தான்.

‘தி லஞ்ச் பாக்ஸ்’ திரைப்படம்...

திருமணமாகி ஒரு சில வருடங்களின் பின் சலித்துப் போன உறவில் கணவனது அன்பையும், காதலையும் மீண்டும் பெற ஏங்கும் ஒரு ஹவுஸ் வைஃப் அவனுக்கு அனுப்பும் லஞ்ச் பாக்ஸில் தினம், தினம் புதிது புதிதாக அவனுக்குப் பிடித்த உணவைத் தயார் செய்து அனுப்புகிறாள். ஆனால் மும்பை டப்பாவாலாக்கள் புண்ணியத்தில் அவள் தனது கணவனுக்கு அனுப்பும் டிஃபன் பாத்திரம் வாழ்வில் இளமையெல்லாம் கழிந்து முதுமையின் தொடக்கத்தில் தனது ரிட்டயர்மெண்ட் வயதில் வாழ்வை அலுப்போடு கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாகத் தள்ளிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைச் சென்றடைகிறது. லஞ்ச் பாக்ஸ் தவறுதலாக டெலிவரி செய்யப்படுவதை அறிந்து ஹீரோயினான ஹவுஸ்வைஃப் அதை அவருக்கு அறிவிக்க அதே லஞ்ச் பாக்ஸில் ஒரு கடிதம் எழுதி வைக்க இறுதியில் இருவருக்குமிடையில் சிறந்த புரிந்துணர்வு ஏற்பட்டு நட்பென்றும் சொல்ல முடியாத, காதலென்றும் சொல்ல முடியாத ஒரு மானசீகமான பிணைப்பில் முடிகிறது அந்த உறவு. இதற்கிடையில் கணவன் தன்னைப் புறக்கணிப்பது திருமண வாழ்வின் சலிப்பினால் அல்ல, பிறிதொரு பெண்ணுடன் கொண்ட தொடர்பால் என்பதை அறிந்து இல்லத்தரசி தன் கணவனைப் பிரிந்து ஒரே மகளுடன் பூடானுக்குச் சென்று தனியாக வசிப்பதென்று முடிவெடுக்கிறாள். கணவன் மீதான வெறுப்பு மட்டுமே இந்த முடிவுக்கு காரணமல்ல, புற்றுநோயால் இறந்து விட்ட தன் அப்பாவின் மரணத்துக்காக அவள் தனது பிறந்தகம் செல்லும் போது அவளது தாய் தன் கணவனைப் பற்றிக் கூறும் மனத்தாங்கல்களுமே அவளை இந்த முடிவுக்குத் தள்ளுகின்றன. பூடானுக்குச் சென்று வாழ்வது எதற்கென்றால்? அங்கே தான் காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவு என்பதால். இந்தத் தகவலை அவள் வழக்கம் போலத் தனது லஞ்ச் பாக்ஸ் நட்பிடம் தெரிவிக்க அவர், தானும் அவளுடன் பூடான் வருவதாகக் கூறுகிறார். இப்படிச் செல்லும் ‘தி லஞ்ச் பாக்ஸ்’ திரைப்படம் சொல்லும் சேதியின் அடிப்படை இந்தியாவில் ‘இல்லத்தரசிகள்’ எனும் கேட்டகிரியில் அடையாளம் காணப்படும் பெரும்பான்மை பெண்குலமும் மனதளவில் அனுபவிக்கும் விதம், விதமான இன்னல்களே!

‘லஷ்மி’ குறும்படம்...

கடந்த மாதம் இணையத்தில் பரபரப்பான பேசுபொருளாக இருந்த ‘லஷ்மி குறும்படம் பலரால் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டாலும் அந்தப் பெண்ணின் மனநிலையில் இன்று நமக்குத் தெரியாமல் எத்தனையோ பெண்கள் இந்தச் சமூகத்தில் உலா வருகிறார்கள் என்பதே நிஜம். லஷ்மிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதைக் காட்டிலும் இந்த சமூகத்தின் பிரதிநிதிகளான ஆண்கள், வொர்க்கிங் உமனாகவோ அல்லது ஹவுஸ் வைஃபாகவோ இருக்கும் தத்தமது மனைவிகளை உளவியல் ரீதியாகப் புரிந்துணர்வுடன் அணுக முயற்சிக்கலாம். ஆண் குடும்ப வாழ்வில் அல்லது திருமண உறவில் சலிப்படைந்து பிறிதொரு பெண்ணை நாடுவதை கண்டிக்கும் அதே வேலையில் சற்றே புரிந்துணர்வுடன் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் முயலும் இந்த சமூகம், அதையே ஒரு பெண்... அதிலும் மனைவியாகிய பெண் செய்யும் போது மட்டும் பொங்கி எழுந்து கலாச்சாரம் குறித்தும், பண்பாடு குறித்தும், குடும்ப மானம் குறித்தும் கேள்விகளை விட்டெறிவது மேலும் மேலும் ஆணாதிக்கத்தைத் தான் பறைசாற்றக்கூடுமே தவிர பெண்களின் உளவியல் பிரச்னைகளுக்கு அது எந்தவிதத்திலும் தீர்வாக முடியாது. லஷ்மி குறும்படத்தை நாம் அணுக வேண்டிய முறை அவளை விமர்சிப்பது அல்ல, அவள் ஏன் அப்படியானாள்? அதைத் தடுக்க கணவன் மனைவி உறவில் எப்படிப்பட்ட புரிதல்கள் அவசியம் என்பதைக் கண்டுணர்ந்து அப்படியான நிலை பெண்களுக்கு வராமல் தடுப்பதே எனலாம். அந்தக் குறும்படத்திலும் கூட அந்தப் பெண் தான் புதிதாகக் கண்டடைந்த ஆணுக்கும் தன் உடல் தான் பிரதானம் என்று அறிந்ததுமே அவனிடமிருந்து விலகுவதாகத் தான் கதையின் போக்கு அமைகிறது. இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டு பெண் எனும் ஜீவன் தன் கணவனிடத்தில் தேடித் தேடி களைப்பது அன்பையும், ஆறுதலையும், சக ஜீவன் என்ற நட்புணர்வையும் மட்டுமே! ஆனால் ஆண் என்பதால் எப்போதும் ஆதிக்கம் செலுத்துவோராக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விளையும் கணவர்களுக்குத் தான் அது காலா காலத்துக்கும் புரிவதே இல்லை.

நிற்க!

இப்படி ஹவுஸ் வைஃப்களை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படங்களில் இந்த மேற்கண்ட இரு திரைப்படங்களும் ஏன் அந்தக் குறும்படமும் கூட முக்கியமானவையே! 

தமிழில் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் கூட இதே கேட்டகிரி தான்.என்ன பிரச்னைகளும் அதற்காக அந்தப் பெண்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளும் தான் வேறு வேறாக இருக்கின்றனவே தவிர அடிநாதமென்னவோ திருமண உறவில் ஆணுக்கும், பெண்ணுக்குமான உளவியல் பேதங்கள் தான். இப்படியான திரைப்படங்கள் இந்தி மற்றும் பெங்காலியோடு ஒப்பிடுகையில் தமிழில் குறைவே. தமிழில் அத்திப்பூத்தார் போல ஆடிக்கொன்றும் அமாவாசைக்கொன்றுமாக இப்படிப்பட்ட திரைப்படங்கள் வருவதைக் காட்டிலும் வியாபார ரீதியாகவும் வெற்றியை ஈட்டும் விதத்தில் ‘ஹவுஸ் வைஃப்’கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து மேலும் வித்யாசமான பல திரைப்படங்கள் வெளிவர வேண்டும், வெறுமே ரசித்து மகிழ மட்டுமல்ல நெத்தியடியாகப் பெண்கள் சந்திக்கும் வினோதமான பிரச்னைகளனைத்தையும் இந்த உலகின் முன் வைக்கவுமாகத்தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com