திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை என்று போ(பா)ர்வையில் நரகத்தில் வாழப் பணிக்கப்பட்டவர்களா நீங்கள்?!

திருமணங்கள் ரத்தானதை கேள்விப்பட்டாலே, ஏன்... சகித்துக் கொண்டு வாழ இயலாத அளவுக்கு அப்படி என்ன தான் நடந்திருக்கக் கூடும்?! இன்றைய தலைமுறை ஆணும், பெண்ணுமே இப்படித்தான், எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை என்று போ(பா)ர்வையில் நரகத்தில் வாழப் பணிக்கப்பட்டவர்களா நீங்கள்?!

40 வருடங்களுக்கு முந்தைய கதை இது.

உறவில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்று அம்மா, தனது பிறந்த ஊருக்குச் சென்றிருந்தார்.

இரண்டு நாட்களில் திரும்பி வந்தவரிடம் பாட்டி, ‘என்னம்மா, கல்யாணமெல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்ததா?’ என்ற வழக்கமான விசாரணையைப் போட்டார்.

கல்யாணமா? ம்ம்... அதுதான் ஒரேயடியாக முடிந்துவிட்டதே! அது ஒரு பெரிய கதை அத்தை! என்று அம்மா பீடிகையுடன் தொடங்கினார்.

‘திருமணமெல்லாம் ஏக தடபுடலாகத்தான் நடந்தது. மணப்பெண்ணுக்கு கிலோ கணக்கில் நகை, சீர்வரிசையாக வெள்ளி, வெண்கல எவர்சில்வர் பாத்திரங்கள். தவிர தேக்குக் கட்டில், தேக்கு பீரோ, ஒனிடா கலர் டி.வி, ஃபிரிஜ், மாப்பிள்ளைக்கு புல்லட், புலிநகச் செயின் என்று அன்னத்தாய் தன் மகளுக்கு டாம்பீகமாகச் செலவழித்து திருமணம் நடத்தியிருந்தார். மாப்பிள்ளையும், பெண்ணும் கல்யாணக் கோலத்தில் கண்ணுக்கு ரொம்ப லட்சணமாகத்தான் இருந்தார்கள். யார் கண் பட்டதோ தெரியவில்லை, இத்தனை செலவழித்து நடத்தப்பட்ட கல்யாணம், அன்று ராத்திரி தாண்டுவதற்குள் ரத்தாகிவிட்டது’ என்றார்.

கேட்டதும் பாட்டிக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது.

என்னம்மா சொல்கிறாய்? ஐயோ... பாவம் அன்னத்தாய் எத்தனை கஷ்டப்பட்டு தன் மகளை வளர்த்துப் படிக்கவைத்தாள். அவளுடைய மகளுக்கா இப்படி ஆக வேண்டும்? அட ராமா!... ஏன் அப்படியாச்சாம்?’

‘அத்தை, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. திருமணத்தை ரத்து செய்து தன் மகளை கையோடு அழைத்துச் சென்றதே அன்னத்தாய்தான்!’

அம்மாவின் பதிலைக் கேட்டதும் பாட்டி வாயடைத்து நின்றுவிட்டார்.

இன்றைக்கும்கூட சீரும், சிறப்புமாக நடத்தப்பட்ட ஒரு திருமணம் பாதியில் நின்றாலோ, அல்லது ரத்தானாலோ நாம் எல்லோருமே அதிர்ச்சியடைவது வழக்கமான ஒன்றுதான். இன்றைய நவீன காலத்திலேயே இப்படித்தான் என்றால் 40 வருடங்களுக்கு முந்தைய கதையை நினைத்துப் பாருங்கள்.

திருமணங்கள் ரத்தானதை கேள்விப்பட்டாலே, ஏன்... சகித்துக்கொண்டு வாழ இயலாத அளவுக்கு அப்படி என்னதான் நடந்திருக்கக்கூடும்?! இன்றைய தலைமுறை ஆணும், பெண்ணுமே இப்படித்தான் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றுதான் முடிக்கப் பார்ப்பார்கள். நாங்களெல்லாம் அந்தக் காலத்தில் கணவரிடத்தில் அடியும் உதையும் பட்டுக்கொண்டு, மாமியார், நாத்தானாரிடம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு, குழந்தைகளுக்காகவும், ஊருக்காகவும், உறவுகளுக்காகவும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டவில்லையா? இப்போது பாருங்கள், ‘ம்’ என்றால் விவாகரத்துதான் என்ற பொதுவான முணுமுணுப்பு எழத்தொடங்கிவிடுகிறது.

ஆனால், இந்த ‘சகிப்புத்தன்மை’ என்ற சாத்வீகப் போராட்டத்தின் எல்லை எதுவரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் பலருக்கும் புரிவதில்லை.

அன்னத்தாயம்மாளின் மகள் விவகாரத்தில், மணமகனுக்கு மனநலப் பிறழ்வு இருந்ததும், அதை மணமகளால் திருமணமான முதல்நாளே புரிந்துகொள்ள முடிந்ததும், மாமியாரிடத்தில் அவ்விஷயத்தை எடுத்துச்செல்கையில், அவர் அதை ஒரு பொருட்டாகவே கருதாது, மருமகளை குற்றவாளியாக்கப் பார்த்ததும்தான் திருமண ரத்துக்கான காரணம் என அப்போது கூறப்பட்டது. திருமணம் ரத்தானது குறித்து ஊருக்குள் பலர், பலவிதமாகப் பேசித் தீர்த்தபோதும், அடுப்படியிலும், கிணற்றடியிலும், வயல் வரப்புகளிலும் அன்னத்தாயை நோக்கிப் பெண்களின் பாராட்டுகள் குவியாமலும் இல்லை.

தன் மகள், தான் பாராட்டி, சீராட்டி வளர்த்தெடுத்த ஒரே மகள். அவளது வாழ்க்கையில் இப்படி ஒரு இன்னல் வரும் என்று அன்னத்தாய் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இதைக் காரணமாக்கி மகளது வாழ்வை நிரந்தர இருட்டில் தள்ளிவிடக்கூடாது, திருமணம் பற்றிய நமது நம்பிக்கைகளையும், புரிதல்களையும், சாக்காக வைத்து கட்டாயப்படுத்தியேனும் இந்த திருமண பந்தத்தைத் தொடரச் செய்துவிடக்கூடாது. மகள் நிம்மதியாக வாழ வேண்டும். என்ற யோசனை மட்டும் அவருக்கு வலுவாக இருந்திருக்கிறது. அதனடிப்படையில்தான் அவர் அந்தத் திருமணத்தை ரத்து செய்திருக்க வேண்டும்.

திருமணத்தை ரத்து செய்ததற்காக மட்டுமல்ல, உடனடியாக அன்றிரவே, தன் மகளையும், தான், அவளுக்கு அளித்த சீர்வரிசைப் பொருட்களையும் அதைக் கொண்டுவந்து இறக்கிய லாரியிலேயே ஏற்றிக்கொண்டு டிரைவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து நெஞ்சுரத்துடன் தன் வீடு திரும்பிய அன்னத்தாயை இன்றும்கூட தைரியலட்சுமி என்றுதான் மெச்சிக்கொள்கிறார்கள் வயதான பாட்டிமார்கள்.

காரணம், வாழ்வின் மிகச் சிக்கலான தருணமொன்றில் அவரெடுத்த அநாயாசமான முடிவு! அன்று பலராலும் அது முடியவே முடியாத காரியம்.

அந்த மோசமான நிகழ்வால் அன்னத்தாயின் மகள் வாழ்க்கை நிர்மூலமாகி விடவில்லை.

அவருக்கு வழக்கறிஞர் ஒருவருடன் மறுமணம் ஆகி மிக நன்றாகவே வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பிறகு கேள்விப்பட்டோம். வாழ்வில் இப்படித் தீர்க்கமான முடிவுகளால் பலருக்கு முன்னுதாரணமாகத் திகழும் பெண்களும் இருக்கிறார்கள்.

சிலநாட்களுக்கு முன்பு, முகநூலில் ஒரு தகவலை வாசிக்க நேர்ந்தது.

ஆன்லைன் திருமண சேவை இணையதளம் ஒன்றை நடத்தி வரும் பெண்மணியொருவர், தனது மையத்தில் திருமணத்திற்காகப் பதிவு செய்திருப்பவர்களில் மணப்பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறதென்றால்... 

தனக்கு வரப்போகும் கணவன் தன்னை சமைக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது -

அலுவலகத்துக்கு மட்டம் போட்டுவிட்டு சினிமாவுக்குப் போனேன் என்று சொன்னால், யாருடன் சென்றாய்? என்றெல்லாம் கேட்டுவிடக்கூடாது -

மணமகனுக்கு பெற்றோர், உடன்பிறந்தார், உறவினர்கள் என எல்லோரும் இருந்தாலும் அவர்களெல்லாம் எங்கேயோ, எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். திருமணத்திற்குப் பிறகு தங்களது வீட்டுக்கு மட்டும் மறந்தும் வந்து டேரா போட்டுவிடக்கூடாது -

வீட்டு வேலைகள் செய்வதெல்லாம் தன்னுடைய வேலையல்ல; எல்லா வேலைகளுக்கும் ‘பணிப்பெண்’ வைத்துக்கொள்ள வேண்டும் -

திருமணத்திற்குப் பின் உடனே குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தக் கூடாது -

இப்படியான நிபந்தனைகளையெல்லாம் விதிக்கிறார்கள். என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். 

இப்படி நிபந்தனைகள் விதிக்கும் பெண்கள், பல லட்சம் செலவழித்து திருமணமான பின், ஓரிரு மாதங்களில் கணவனுடன் கருத்து வேறுபாடு என்றோ, மாமியாருடன் மணப்பிணக்கு என்றோ குறை கூறி, விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிடுகிறார்கள். இந்த விஷயத்தில் இன்றைய பெண்களுக்கு பெற்றோரது முடிவுகூட இரண்டாம்பட்சம்தான். அவர்களுக்குத்தான் இருக்கவே இருக்கிறதே ஹாஸ்டல் வாழ்க்கை அல்லது பேயிங் கெஸ்ட் வாழ்க்கை. அதனால், திருமண உறவின் சிறு சிறு சங்கடங்களைக்கூடப் பொருத்துக்கொள்வது அநாவசியம் என்றெண்ணிவிடத் தலைப்படுகிறார்கள். வாழ்வின் உண்மையான பிரச்னைகள் எவை? எதற்காகத் திருமணம் செய்துகொள்கிறோம்? பின் எதற்காக அந்த திருமணத்தை ரத்து செய்கிறோம். என்பதைக் குறித்தெல்லாம் அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்ள விரும்பாத தன்மை அதிகரித்து வருகிறது என்றார்.

இந்த இரு வேறு செய்திகளில், இரண்டுமே திருமணம் சார்ந்த செய்திகளே! ஆனால், திருமணம் என்ற விஷயத்தை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் இரண்டுக்குமான ஒரே வித்தியாசம்.

இந்தியர்களைப் பொருத்தவரை, திருமணம் என்பது பெரும்பான்மையானோரால் தவிர்க்கப்பட முடியாத ஒரு பந்தம்.

அந்த பந்தமே மூச்சுத்திணறச் செய்து, மொத்த வாழ்வையும் நெருப்பு உலையில் தள்ளச் செய்யுமெனில், அத்தகைய பந்தத்தை அறுத்து வீசி, அடுத்தொரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதில் தவறில்லை என உரக்கச் சொல்கிறார் அன்னத்தாய். 

திருமண பந்தம் என்பதை சகித்துக்கொள்வதற்கான எல்லை எதுவென அவர் உணர்ந்ததன் தன்னம்பிக்கை வெளிப்பாடுதான் இது.

அன்றியும், பின்னதில் குறிப்பிடப்பட்ட பெண்களைப்போல கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற ரீதியில் எடுத்ததெற்கெல்லாம் திருமண உறவை ரத்து செய்யத் துடிக்கும் மனப்பான்மையின் பெயர் தன்னம்பிக்கை அல்ல.

கொல்கத்தாவில் நன்கு படித்துப் பட்டம் பெற்று அரசுத்துறையில் உயர் பதவி வகித்த பெற்றோர்களின் ஒரே மகளான அபர்ணாவின் கதை தெரிந்தால், திருமணங்கள் எந்தப் புள்ளியில் ரத்து செய்யப்படத்தக்கவை என்பதை நாம் இன்னும் நன்கு உணரலாம்.

அபர்ணா, பெற்றோரின் ஒரே மகளாக இருந்தாலும் 23 வயதிலேயே திருமணம் செய்துவைத்து கூட்டில் அடைக்கும் அளவுக்கு அவளது பெற்றோர் கட்டுப்பெட்டிகள அல்ல. 

திருமணம் என்பது அவளது சுயவிருப்பம் சார்ந்தது, விரும்பும்போது செய்துகொள்ளட்டுமே! என்பது அவளது பெற்றோரின் எண்ணம். எனவே அவர்கள் அபர்ணாவைத் திருமணத்திற்காக என்றுமே வற்புறுத்தியது இல்லை. ஆனால், குடும்ப விழாக்களில் கலந்துகொள்ளும்போதெல்லாம் உறவினர்கள் அனைவரும் எப்போது இவளுக்கு திருமணம்? ஏன் இன்னும் திருமணப் பேச்சையே எடுக்காமல் இருக்கிறீர்கள்? அவளுக்கு என்ன பிரச்னை? என்றெல்லாம் ஊருக்கு உதவும் உபகாரிகளாக கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கத் தொடங்கவே, ஒரு ஆன்லைன் திருமண சேவை மையத்தில் அபர்ணாவுக்குப் பொருத்தமான மணமகன் தேவை என பதிவு செய்து வைத்தனர். சில மாதங்கள் உருண்ட பின், அவள் பணிபுரிந்த அலுவலகத்திலேயே வேறொரு பிரிவில் பணியிலிருந்த ஒரு ஆணின் ஜாதகம் அபர்ணாவுக்குப் பொருத்தமாக இருந்ததால், இருவீட்டுப் பெற்றோரும் கலந்து பேசி திருமண ஏற்பாட்டில் இறங்கினர்.

அதற்கு முன் சில மாதங்கள் நாங்கள் காதலர்களாக வாழ்ந்துகொள்கிறோமே?

ஒரே அலுவலகத்தில் பணியிலிருந்தாலும் இருவருக்குமிடையில் பெரிதாக எவ்வித அறிமுகமும் இல்லை. ஒருவரையொருவர் அறிந்துகொள்ள திருமணத்தைச் சில காலம் தள்ளிவைக்கலாமே என்று அபர்ணாவின் விண்ணப்பத்தை மணமகன் வீட்டார் நிராகரித்திருக்கின்றனர்.

கணவனாக ஆகப்போகிறவர்,  ‘நாம் திருமணத்திற்குப் பிறகு காதலிக்கலாம் கண்ணே!’ என்றிருக்கிறார். இந்த வார்த்தையிலும் அவரது இன்னும் சில பரிவான செயல்பாடுகளாலும் கவரப்பட்டு, இருவருக்கும் திருமணம் நடந்தேறியது.

திருமணத்திற்குப் பிறகு என்ன? எல்லோரையும்போல அபர்ணாவுக்கும் மணநாள் நள்ளிரவு வந்தது. எத்தனையோ எதிர்பார்ப்புகள் அவளுக்கு இருந்திருக்கலாம். ஆனால் அதில் ஒன்றுக்குக்கூட வாய்ப்பின்றி அலங்கரித்த கட்டிலை நிறைத்துக்கொண்டு மாப்பிள்ளை குறட்டையொலிக்கத் தூங்கி இருக்கிறார். ஏமாற்றமாக இருந்தாலும், சரி அசதியில் தூங்கிவிட்டார், இன்னும் எத்தனையோ காலம் சேர்ந்து வாழப்போகிறவர்கள்தானே, வசந்தங்கள் சற்று தாமதமானால்தான் என்ன நஷ்டம்! என்ற சுயசமாதானத்தோடு அபர்ணாவும் தூங்கி எழுந்தாள். 

மறுநாள் இரவு மட்டுமல்ல, அதற்குப் பின் வந்த பல இரக்கமற்ற இரவுகள் அபர்ணாவை பெரும் மன உளைச்சலில் தள்ளக்கூடியவையாகவே கழிந்தன. எப்போதும்போல கணவர் கட்டிலில் குறட்டை விட்டுத் தூங்க, அதை செய்வதறியாது வேடிக்கை பார்ப்பவராகவே அபர்ணாவின் நாட்கள் கழிந்தன. இந்தச் சூழலில்தான் ஒருநாள் கணவரை ஆராயும் நோக்கில், ஒருநாள் அலுவலகத்திலிருந்து அபர்ணா சீக்கிரமே வீடு திரும்பி, தன்னிடம் இருந்த சாவியால் வீட்டைத்திறந்து தன்னுடைய அறைக்குள் நுழைய... உள்ளே கண்ட காட்சியில் தன்னிரக்கத்திலும், சுய பச்சாதாபத்திலும் செத்துச் சுண்ணாம்பாகாத குறை!

உள்ளே, மனைவியின் உள்ளாடைகளை அணிந்த நிலையில், கனத்தும் தடித்த உதடுகளில் லிப்ஸ்டிக் தீற்றிக் கொண்டிருந்த கணவரைக் கண்டால் எந்த மனைவிக்குத்தான்தான் சுகமாயிருக்கும்?!

அபர்ணா ஆத்திரத்துடனும், அழுகையுடனும் சண்டையிட்டுக் கேட்டபின் கணவரது வாயால் வெளிவந்த உண்மை, அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது. அவருக்கு தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்துக்கொள்வதில் மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால்தான் மனைவிக்குத் தெரியாமல் மனைவியில்லாத நேரத்தில் அந்தக் கோலம். பிறகெதற்கு என்னைத் திருமணம் செய்து என் வாழ்வை வீணடித்தாய்? என்று சட்டையைப் பிடித்து உலுக்கியதில், ‘இந்த சமூகத்திற்காக, அதன் கேள்விகளுக்குப் பயந்து நடத்தப்பட்ட நாடகம்தான் நம் திருமணம், நீ வந்து சிக்கிக்கொண்டாய்’ என்றிருக்கிறார். அதைக் கேட்டதும் அபர்ணா அப்படியே உடைந்து நொறுங்கிப்போனாள்.

ஆனால் ஏனோ, அபர்ணா இவை எதையும் காலாகாலத்தில் தன் பெற்றோரிடம் தெரிவிக்கவே இல்லை. அவர்கள் தங்கள் மகள் நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்ற நினைப்புடன் இருந்தனர்.

இந்நிலையில், தன் கணவரது பொருத்தமற்ற செயல்களை மாமியாரிடமோ, மாமனாரிடமோ தெரியப்படுத்தி, அவர்கள் கண்டித்தால் ஒருவேளை அவர் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பக்கூடுமோ என்ற நப்பாசையில், அபர்ணா அந்த முயற்சியிலும் இறங்க, கிடைத்த பலனோ அவள் முற்றிலும் எதிர்பாராததாயிருந்தது. மாமியார் இவள் சொன்னதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. தன் மகன் அப்படிப்பட்டவனில்லை என்று சாதிக்கத் துடித்தார் அவர். மாமனாரோ, படித்து நல்ல பதவியில் இருக்கும் அழகான மருமளோடு, மகன் வாழாத வாழ்வை தான் வாழ்ந்து பார்க்கத் துடித்தார். மொத்தத்தில் இருவருக்குமே அவளொரு போகப் பொருளாகவே தெரிந்தாள். அவளது நிலை குறித்த இரக்க சிந்தனை இருவரிடத்திலும் இல்லை.

இதை உணர்ந்தபோதுதான் அபர்ணா மிக வெறுத்துப்போனாள்.

திருமணத்தின்போது சிக்கென்று அழகு தேவதையாக இருந்த பெண், திருமணமான சில மாதங்களிலேயே இருமடங்கு உடல் எடை கூடி, தன் வாழ்வின் ஆற்றாமை தன்னைச் சுடும்போதெல்லாம் கவலையை மறக்க எதையாவது உண்பது எனத் தொடங்கி, தன் உருவத்தை தானே சீரழிக்கத் தொடங்கி இருந்தாள். இதற்கிடையில் வீட்டில் மாமனாரின் எல்லை மீறலும் தொடரவே, தாங்க முடியாத தனிமை உணர்வில் வாழ்க்கையை வெறுத்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள்.

அப்போது காப்பாற்றப்பட்டுவிட்டாலும், தற்கொலை முயற்சிகள் தொடரவே, அபர்ணாவுக்கு மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அவசியம் வந்தது.

சிகிச்சைக்கும் பிறகுதான் அவளுக்குப் புரிந்திருக்கிறது; தான் செய்ய வேண்டியது தற்கொலை அல்ல விவாகரத்து என.

அப்போதும் கணவர் வீட்டார் அபர்ணாவை விட்டுத்தர முன்வரவில்லை. மரபான பழக்கவழக்கங்களில் ஊறிப்போன வங்காளிகள், இப்போதும் கட்டுப்பெட்டிகள்தான். இந்தத் திருமணம் ரத்தாகாமல் காக்க, மீண்டும் கணவன் வீடெனும் நரகக் குழியில் அபர்ணாவைத் தள்ளும் முயற்சியில் அவளது பெரும்பான்மையான உறவினர்கள் இறங்கத் தயங்கவில்லை.

ஒரு கொடுங்கனவுபோல் இருந்த அந்த திருமண பந்தத்திலிருந்து மீண்டு வர எனக்கு என் பெற்றோர் உதவினர். அவர்கள் என்னுடன் இல்லாவிடில் என்னால் துணிந்து இந்த முடிவை எடுத்திருக்க இயலாது என்பது அபர்ணாவின் கூற்று.

திருமணங்கள் ஒருவேளை சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படலாம், அதை யாரும் நேரில் கண்டதில்லை. ஆயினும், பூலோகத்தில் அவை கறிக்கு உதவாதவை எனத் தெரியவந்ததும், அவற்றை விட்டு விலகிவிடும் முடிவுக்கு வருவதற்குள்தான் எத்தனைவிதமான போராட்டங்கள்!

திருமண பந்தத்தில் ஆணையும், பெண்ணையும் இணைப்பதற்கான பிணைப்புக் கயிறு வெறும் சம்பிரதாயங்களின் நிர்பந்தங்களால் ஆனதாக மட்டுமே இருப்பது வரை இந்தச் சங்கடம் நீடிக்கத்தான் செய்யும்.

பெண் என்பவள் எப்போதும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள மட்டுமே படைப்பட்டவள் அல்ல. வெகு சில சந்தர்ப்பங்களில் ஆணுக்கும் இது பொருந்தும்.

எந்த பந்தமாக இருந்தால் என்ன? அதை எங்கே, எப்போது, எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பதைப் பற்றி பாதிக்கப்பட்ட பெண் நினைத்துப் பார்ப்பதுகூட குற்றமாகத்தான் இன்றளவும் கருதப்படுகிறது. 

இல்லை. தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் அளவிலான பந்தங்களில் இருந்து விடுபட்ட முதல் பெண்ணாக தன்னை எந்தப்பெண்ணும் நினைத்துக்கொண்டு துக்கம் கொள்ளத் தேவை இல்லை. சரித்திரத்தில் சிறந்த முன்னுதாரணங்களாகப் பலர் இருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com