பரீட்சையில் சென்டம் வாங்கினால் ‘சென்னை டு கோவை’ விமான டிக்கெட் பரிசு! அறிவித்த டீச்சரும் அசத்திய மாணவிகளும்!

தங்களது விமானப் பயண அனுபவத்தைப் பற்றிப் பேசும் போது மாணவி யமுனா கூறியது; சமூக அறிவியல் பாடத்தில் 100/100 வாங்கியதால் தான் எங்களுக்கு இந்த விமானப் பயணம் வாய்த்தது.
பரீட்சையில் சென்டம் வாங்கினால் ‘சென்னை டு கோவை’ விமான டிக்கெட் பரிசு! அறிவித்த டீச்சரும் அசத்திய மாணவிகளும்!

பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் பி.சரண்யாவுக்கும், ஹெச். யமுனாவுக்கும் அந்த நாள் மிக இனிய நாளாக அமைந்து விட்டது. அவர்களது சமூக அறிவியல் டீச்சரான செல்வகுமாரி, தான் முன்னதாக அறிவித்திருந்தபடி, பொதுத்தேர்வில் தனது பாடமான சமூக அறிவியல் பாடத்தில் 100/100 மார்க் வாங்கிய அந்த இரு மாணவிகளுக்கும் சென்னையிலிருந்து கோவை வரை சென்று திரும்ப விமான டிக்கெட்டுகளைப் பரிசளித்திருந்ததில் அதைப் பெற்றுக் கொண்ட ஆனந்தம் அந்த இரு மாணவிகள் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. இருவருக்குமே அது தான் முதன்முதல் விமான நிலைய தரிசனம். 

விமான நிலையத்தின் பிரமாண்ட தோற்றத்தையும், உள்ளிருக்கும் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் விலையையும் கண்டு வியந்து போன மாணவிகளில் சரண்யா கூறுகிறார், விமான நிலையத்தை இன்று தான் முதன்முதலில் நேரில் பார்க்கிறோம்... பார்க்கப் பார்க்க எங்களுக்கு வியப்பாக இருக்கிறது... ஆனால் இங்குள்ள பொருட்களில் எதுவுமே நாங்கள் வாங்கக் கூடிய விலைகளில் இல்லை. உள்ளே நுழைந்தது முதல் நாங்கள் இங்கு வாங்கிய ஒரே பொருள் தண்ணீர் பாட்டில் மட்டுமே’ என்கிறார் சற்றே சோகமாக! அவரது சோகத்தையும் மிஞ்சிக் கொண்டு இரு மாணவிகளது முகத்திலும் மிதமிஞ்சித் தெரிந்த சந்தோஷம் தங்களது முதல் விமானப் பயணத்தைக் குறித்ததாக இருந்தது. ஏனெனில் அவ்விரு மாணவிகளின் பெற்றோருமே கூலித்தொழிலாளிகள். விமானப் பயணம் என்பதெல்லாம் எங்களால் நினைத்துப் பார்க்க கூட முடியாதது என்கிறார்கள் இருவரும்.

தங்களது இந்தப் பயணத்துக்கு அஸ்திவாரமிட்ட டீச்சர் செல்வகுமாரியின் மீதான மதிப்பும், மரியாதையும் அவர்களது பேச்சில் ஒவ்வொரு நொடியும் மின்னி மறைகிறது. தன் மாணவிகளுக்கு இப்படி ஒரு சந்தோஷத்தைப் பரிசளித்த டீச்சர் செல்வகுமாரி இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்! பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்னிடம் பயிலும் மாணவிகளில் பெரும்பாலானோரின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள். அவர்களது வருட வருமானம் மிஞ்சிப் போனால் 1 அல்லது 1.50 லட்சம் ரூபாய்களுக்கு மேல் மிஞ்சாது. அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியரிடையே கல்வியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்ய மாணவிகளை மென்மேலும் உற்சாகப் படுத்த புதுமையான பரிசுகள் எதையாவது அறிவிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தேன். அப்போது தான் போக்குவரத்து பற்றிய பாடத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது என் மாணவிகளில் ஒருவர் கூட விமான நிலையத்தை நேரில் கண்டதே இல்லை என்ற உண்மை எனக்குத் தெரியவந்தது. அப்போது கிடைத்த ஐடியா தான் இது! இன்று சமூக அறிவியல் பாடத்தில் 100/100 வாங்கிய இரு மாணவிகளை விமானத்தில் ஏற்றியிருக்கிறது. இந்த வெற்றியை ஒட்டி அடுத்த வருடமும் 100/100 வாங்கும் மாணவிகளை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்று பாராளுமன்றம், செங்கோட்டை எல்லாம் சுற்றிக் காண்பிப்பதாக உறுதி அளித்திருக்கிறேன். அவற்றை எல்லாம் மாணவிகள் இன்று வரை அவர்களது பாடப்புத்தகத்திலும், தொலைக்காட்சியிலும் மட்டும் தானே பார்த்து வருகிறார்கள். அதனால் தான் பாடங்களைப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு அவர்களுக்கு இந்தப் பரிசுகள் ஒரு உந்துதலாக இருக்கட்டுமே என்று இப்படி அறிவித்திருக்கிறேன் என்கிறார் செல்வகுமாரி.

நல்லாசான்கள் வாய்ப்பது அரிது. அப்படியே வாய்த்து விட்டாலும் கூட ஆசான்கள் சொல்லை மதித்து நடந்து அவர்களது கனவுகளை நனவாக்கும் மாணவர்களும், மாணவிகளும் கிடைப்பது அதனினும் அரிது. இங்கே அந்த இரண்டு அரிதுகளும் சரியாக அமைந்து விட்டதனால் தான் வெற்றி சாத்தியப்பட்டிருக்கிறது.

தங்களது விமானப் பயண அனுபவத்தைப் பற்றிப் பேசும் போது மாணவி யமுனா கூறியது; சமூக அறிவியல் பாடத்தில் 100/100 வாங்கியதால் தான் எங்களுக்கு இந்த விமானப் பயணம் வாய்த்தது. இதைக் கேள்விப் பட்ட பிற மாணவிகளுக்கும் கூட இதே மாதிரியாக வெற்றி பெற வேண்டும் என்ற ஆவல் இப்போது அதிகரித்திருக்கிறது. எனது உறவினரின் மகளொருத்தி மே மாத விடுமுறையில் எனது நோட்ஸ்கள் அனைத்தையும் படிப்பதற்காக வாங்கிச் சென்று விட்டாள். அவளிடம் நான் அறிவுறித்தியது ஒன்றே ஒன்று தான்; நோட்ஸ்களைப் படிப்பது சரி... ஆனால் மதிப்பெண்கள் பெற புத்தகத்தைப் படிப்பதையும் தாண்டி வகுப்பறையில் டீச்சர் கற்றுக் கொடுப்பதை கவனமாகப் கற்றுக் கொள்ள வேண்டும். என்பதே! என்கிறார்.

சந்தையில் காய்கறி விற்பவர்கள், தள்ளுவண்டியில் வாழைப்பழங்கள் விற்று ஜீவனம் நடத்துபவர்கள், வீட்டு வேலைகள் செய்து பிள்ளைகளைப் படிக்க வைப்பவர்கள், தோட்ட வேலைகள் செய்பவர்கள் என கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி தான் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள கிடைத்த ஒரே பிடிமானம் என்பதை உணர வைக்க செல்வகுமாரி மாதிரியான டீச்சர்கள் இருக்கும் வரை இந்தியா ஒளிர்வதில் எந்தப் பிரச்னையில் இருக்காது என நம்பலாம்.

Image courtesy: Google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com