பாலியல் வன்முறைக்கு தொடர்ந்து பலியாகும் முயல்குட்டிக் குழந்தைகள்; எதிர்கொள்ளக் கற்றுத் தராதது யாருடைய பிழை?!

இளம் வயதில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு அதைப் பற்றிப் பொது வெளியில் விவாதிக்கவோ, விளக்கமளிக்கவோ வாய்ப்பற்றுப் போன குழந்தைகள் தான் பெருமளவில் மனநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
பாலியல் வன்முறைக்கு தொடர்ந்து பலியாகும் முயல்குட்டிக் குழந்தைகள்; எதிர்கொள்ளக் கற்றுத் தராதது யாருடைய பிழை?!

கடந்த வாரம் முழுக்க குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் குறித்த செய்திகளே ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றிருந்தன. அவற்றில் மிக முக்கியமானது நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகளிடம் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையும், காவல்துறையினரும் அநாகரீகமாகவும், மிரட்டுதலாகவும் நடந்து கொண்ட முறை. இது வெளிப்படையாக ஊடக வெளிச்சத்தில் கண் முன்னால் நடந்தேறியதை நேரலையில் அந்த நிகழ்வைப் பார்த்த அனைவருமே அறிவர். பள்ளி மாணவர்களை சிறுவர்கள் லிஸ்டில் வைப்பது தானே நமது பொதுவான வழக்கம். அந்த வகையில் சிறுவர்கள் தானே, மிரட்டினால் கலைந்து ஓடி விடுவார்கள் என்ற அசாத்திய நம்பிக்கையில் தான் அரசும், பள்ளி நிர்வாகமும், போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளைப் பள்ளியை விட்டு நீக்கவிருப்பதாக அறிவித்து பயமுறுத்தியிருக்கிறது. அதனால் நீட் தேர்வுக்கெதிரான கிளர்ச்சிகள் ஒடுங்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது நமது மத்திய அரசு. அது மட்டுமல்லாமல் நீட் தேர்வால் தனது மருத்துவக் கல்விக் கனவு நசிந்து போனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதா கூட ஒரு சிறுமியே! இதில் நீட் தேர்வை ஒதுக்கி வைத்து விட்டு அவளை சிறுமி என்ற நிலையில் மட்டும் வைத்து இந்த விஷயத்தை அணுகினோமென்றால் ஒரு உண்மை புலப்படக்கூடும். மேற்கண்ட மாணவிகள் போராட்டத்தில் கூட, போராடிய மாணவிகளை தலைமுடியைப் பற்றி இழுத்து, ஜடையைப் பிடித்திழுத்து அவர்களை கலைக்க முயன்றதாம் காவல்துறை. நீட்டைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பெண்குழந்தைகளை அடக்குவதில் இது என்ன விதமான அணுகுமுறை?! இது கூட ஒரு வகையில் பலாத்காரத்திற்கு ஒப்பானது தானே?! இந்தியாவில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளின் சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே செல்கிறதே தவிர குறைவதற்கான வழியே தென்படவில்லை என்பது!.

இந்த வருட ஆரம்பத்தில் சென்னை, போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஹாசினி, அண்டை வீட்டில் வசித்த இளைஞன் ஒருவனால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டாள். 

அரியலூரைச் சேர்ந்த நந்தினி எனும் கட்டடத் தொழிலாளியான சிறுமி, உடன் பணிபுரிந்த மேஸ்திரியால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமாகி, உண்மை வெளிவந்து விடக்கூடாது எனும் பயத்தில் கர்ப்பிணி என்றும் பாராமல் கிணற்றில் வீசிக் கொலை செய்யப்பட்டாள்.

சென்னை எண்ணூரில் சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்டு மாநகராட்சி குப்பைத் தொட்டியில் பிணமாக மீட்கப்பட்டாள். இந்தக் கொலை குழந்தை அணிந்திருந்த நகைகளுக்காக என்று பின்னர் அந்த வழக்கு நீர்த்துப் போனாலும் இப்போதும் இந்தச் செய்தியை ஊடகங்களில் கண்ட சிலருக்கு இதுவும் கூட பாலியல் வன்முறைக்கொலை தானோ?! என்றொரு சந்தேகம் உண்டு.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவும் இந்த விஷயத்தில் விதிவிலக்கில்லை. அங்கும் குழந்தைகளுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்முறை தலைவிரித்தாடத் தான் செய்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தச் செய்வதில் பிரபல நடிகர்கள் சிலரும் ஈடுபட்டுள்ளதாக அங்கே பெரிய பூகம்பமே வெடித்தது. அந்த விஷயத்தில் எந்த அளவுக்கு உண்மை வெளிவந்திருக்கக் கூடுமெனத் தெரியவில்லை. ஆனால் சிலர் இதற்காகக் கைதானதை ஊடகச் செய்திகளில் காண நேர்ந்தது. 

கடந்த ஆண்டில், கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி கணேஸானந்தா தீர்த்தபதா ஸ்வாமி எனும் போலிச் சாமியார் ஒருவர், தான் வழக்கமாக பூஜைக்குச் செல்லும் ஒரு வீட்டிலிருந்த பெண் குழந்தையிடம் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அந்தப் பெண் குழந்தையின் 12 ஆவது வயதிலிருந்து இந்த அவலம் அவளுக்கு நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருந்திருக்கிறது. இதற்கு பயத்தாலோ, அல்லது மூட நம்பிக்கையாலோ அவளது அம்மாவும் உடந்தை. ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்து கொண்டிருந்த கொடுமையைச் சகிக்க முடியாமலும், பொறுத்துக் கொள்ள முடியாமலும் வெகுண்டெழுந்த அந்தச் சிறுமி கடந்த மே மாதத்தில் ஒரு நாள் தன் வீட்டுப் பூஜைக்கு வந்து விட்டு, வழக்கம் போல தன்னிடம் பாலியல் வன்முறைக்கு முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்து வீசி தனது எதிர்ப்புணர்வை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி சட்டத்தின் உதவியை நாடினார். கேரள முதல்வர் பினராயி விஜயன், அந்த மாணவியின் தைரியத்தைப் பாராட்டியதோடு, அவரது எதிர்காலப் பாதுகாப்புக்கு அரசு உதவும் எனவும் வாக்களித்தார். கேரளச் சிறுமி விஷயத்தில் அவள் செய்தது கொலை முயற்சி ஆகாது. அவளைப் பொறுத்தவரை தற்காப்பு முயற்சியே. நமது சட்டங்கள், ஒரு பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள சில வரம்புகளை அனுமதிக்கிறது. அதில் இதுவும் ஒன்று. ஆனால் இது எத்தனை குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதாக நினைக்கிறீர்கள்? இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்வதற்கான காரணங்களில் ஒன்று, அவர்களை எளிதில் அச்சுறுத்திப் பணிய வைத்து விடலாம் என்ற அதிகார உணர்வே!

இதையடுத்து ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட போது, ஆந்திர மாநில மகளிர் ஆணையத் தலைவியான ராஜகுமாரி மிகவும் கொதித்துப் போய், மேற்கண்ட கேரள சம்பவத்தை உதாரணமாகக் கூறி, இனி பெண்குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் வரும் போது, தங்களது தற்காப்புக்காக இடுப்பில் கத்தியை வைத்துக் கொண்டு தான் வர வேண்டும். அப்போது தான் இம்மாதிரியான அராஜக மிருகங்களுக்கு ஒரு பயமிருக்கும்’ என்று பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கும், தற்காப்புக்கும் ஒரு உபாயம் கூறி இருந்தார். அவர் ஏதோ எமோஷனலாக இப்படிச் சொல்லி விட்டார் என்று இதை ஒதுக்கத் தேவை இல்லை. ஏனென்றால் தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றங்களைப் பார்க்கையில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக மேற்படி ஆயுதங்களை தங்களுடன் எடுத்துச் செல்வதில் தவறே இல்லை என்று தானே எண்ண வேண்டியதாக இருக்கிறது.

இதோ கடந்த வரம் டெல்லி, சர்வதேசப் பள்ளியொன்றின் இரண்டாம் வகுப்பு பாலகனொருவன் பள்ளியின் பேருந்து ஓட்டுநரான மனித மிருகத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு, கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக மற்றொரு செய்தி வந்து பெற்றோர்கள் பலரது நிம்மதியைக் காவு வாங்கியுள்ளது. காலையில்...சொல்லப்போனால் அதிகாலையில் அன்றலர்ந்த தாமரைகளாய் பளிச்சென பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப் படும் தங்களது செல்லக் குழந்தைகளை வேட்டையாடும் வல்லூறுகள் அந்தப் பள்ளிகளிலும் கூட உண்டு என்பதை பெற்றோர்களால் எப்படி ஜீரணிக்க முடியும்? குழந்தைகள் தனித்திருந்தால் தான் ஆபத்து, என்பது போய் இப்போதெல்லாம் பலநூறு குழந்தைகள் பயிலக்கூடிய பள்ளிக்கூடங்களே இப்படி அவர்களுக்கான சுடுகாடுகளாக மாறிப் போனதற்கு யார் காரணம்? பள்ளி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியங்கள் மிகப்பெரிய காரணம் என்றாலும் மற்றொரு முக்கிய காரணமாக அமைவது குழந்தைகளைப் பற்றிய நமது வலுவற்ற கண்ணோட்டங்களும் தான்.

டெல்லி சம்பவத்தின் அதிர்ச்சி குறையும் முன் பெங்களூரிலும் அதே விதமாக தொடக்கப் பள்ளி மாணவனொருவன் அலுவலக உதவியாளனென்ற போர்வையில் இருந்த 40 வயதுக்கும் அதிகமாக மதிக்கத்தக்க ஈனப்பிறவியொன்றால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்ட செய்தி ஊடகங்கள் வாயிலாக நம் கண்களை மறித்து நிற்கிறது.

அதோடு முடிந்து விட்டதா? என்றால் ...இல்லை இதற்கொரு முடிவே இல்லை என்பதாக வந்து நெஞ்சம் பதறச் செய்கிறது  கோயம்பேடு கூலித்தொழிலாளியான ஏழு வயதுச் சிறுமி ஒருத்தியை , வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று அரசு மருத்துவர் ஒருவர் மூலமாக மயக்க மருந்து அளிக்கச் செய்து பாலியல் வன்முறையில் ஈடுபடுத்திய அவலச் செய்தி! இன்று இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் பிடிபட்டு விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபடும் பட்சத்தில் அவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனையே மரண தண்டனையாக இருந்தாலொழிய இத்தகைய குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை என மனம் அடித்துக் கொண்டாலும் குழந்தைகளை இப்படிப்பட்ட வல்லூறுகளிடமிருந்து காப்பதற்கான சரியான வழிமுறையென ஒன்றை ஏன் நம்மால் இன்னமும் உறுதியாகக் கண்டடைய முடியவே இல்லை எனும் ஆற்றாமையும் உள்ளூர வேதனைப் படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.

சென்னை, கேரளா, பெங்களூர், டெல்லி, என எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள் மட்டுமே அல்ல, இப்போது இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அது கடைசியில் நமது தொலைக்காட்சித் தொடர்கள், ஆபாசமும், வன்முறையும் நிறைந்த சினிமாக்கள், கட்டற்ற சுதந்திரத்துடன் இயங்க அனுமதிக்கும் இணைய வசதிகள் போன்றவற்றின் தாக்கம் என்பதில்  தான் வந்து நிற்கிறது.

எந்த ஒரு தனிமனிதனின் வாழ்விலும் இவை செலுத்தும் ஆதிக்கங்கள் அபிரிமிதமானவை. 

இந்த சினிமாவைப் பார்த்து நான் திருந்தினேன், இந்தத் தொடரைப் பார்த்து நான் என் உறவினர்களைப் புரிந்து கொண்டு இப்போது எங்களுக்குள் நல்லுறவு நீடிக்கிறது. இந்த இணைய வசதியைப் பயன்படுத்தி நான் என் வாழ்க்கையில் உயர்ந்தேன் என்று செய்தி வந்தால் அது அந்தந்த ஊடகங்களுக்கு கிடைத்த நற்பெயராக காலத்துக்கும் நீடிக்கும். ஆனால் இப்பொதெல்லாம் மேற்படி தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி... அதனாலான தாக்கத்தால், குழந்தைகளும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் சீரழிக்கப்பட்ட, சீரழிவிற்கு உள்ளான செய்திகளைத் தான் அதிகமும் காண வேண்டியதாக இருக்கிறது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?

அதனால் தான் ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி சொன்னதை ஒப்புக் கொள்ளத் தோன்றுகிறது. அவர் சொன்னது இது தான், ‘மக்கள் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்ப்பதை நிறுத்தினாலே போதும்... பெரும்பாலான குற்றங்கள் குறைந்து விடும். இன்றைக்குப் பாருங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இப்படி வகை தொகையில்லாமல் அதிகரிக்க, சீரியலில் வரும் கொடூர வில்லன்களும், வில்லிகளும் தான் இன்ஸ்பிரேஷனாக இருந்து விடுகிறார்கள். அவர்களில் யாராவது சாதாரண வில்லன். வில்லிகளாக காட்டப்படுகிறார்களா? என்று பருங்கள்; சொந்தச் சகோதரனுக்கு விஷம் வைக்கும் அக்கா, அண்ணன்கள், சொந்த அம்மாவை ஏமாற்றி சொத்தைப் பிடுங்கித் தெருவில் விடும் வாரிசுகள், குடும்ப உறுப்பினர்களைக் கொல்ல கூலிப் படையின் உதவியை நாடும் கேடு கெட்ட கதாபாத்திர சித்தரிப்புகள். வில்லன், வில்லி என்றாலே அவனோ, அல்லது அவளோ பாலியல் ரீதியாக கெட்ட எண்ணம் கொண்டவர்கள் மட்டுமாகத் தான் இருந்தாக வேண்டும் எனும்படியான பாத்திரப் படைப்புகள், இவையெல்லாம் தான் தினமும் நாம் பார்க்கும் சீரியல்களில் இடம்பெறுகின்றன. இப்படிப்பட்ட சீரியல்களை முதலில் புறக்கணிக்க வேண்டும்’ - என்று அவர் கூறியிருந்தார். அவர் சொல்வதில் நிஜம் இல்லாமலில்லை. டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக நமது சீரியல்கள் எந்த எல்லைக்குச் செல்லவும் தற்போது தயாராகவே இருக்கின்றன.

சினிமாக்களைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பெண்களைப் பின் தொடர்வதை காதலின் நியாயமாகப் பேசி வலியுறுத்தும் பொறுப்பற்ற திரைப்படங்கள் முதலாக, ஆபாசத்துக்கும், கவர்ச்சிக்கும் வித்யாசம் காண முடியாத அளவுக்கு காட்சிகள் மட்டுமன்றி வசனங்கள் கூட காதுகளைக் கூசச் செய்யும் அளவுக்கு தவறான வழிகாட்டுதல் செய்யும் சினிமாக்களின் பட்டியல் இன்று அதிகமாகி வருகிறது. அவை எந்தெந்தப் படங்களென நிச்சயம் படம் பார்த்த அத்தனை பேருக்குமே தெரியும். தியேட்டருக்குப் போய் படம் பார்க்க வாய்க்காதவர்களுக்கு திரை விமர்சனம் என்ற பெயரிலோ, அல்லது ரியாலிட்டி ஷோக்களுக்கு இடையிலான புரமோஷன் விளம்பரக் காட்சிகளிலோ எந்த வகையிலாவது நம் வீட்டின் வரவேற்பரை வரைக்குமே வந்து விடுகிறது நாம் பார்க்க வாய்க்காத சினிமாக்களின் வன்முறையும், ஆபாசங்களும்! வலியத் திணிப்பது தான் தொலைக்காட்சிகளின் கடன் என்றாகி விட்டபின் எளிதில் கிடைக்கிறதே என்று வன்முறையையும், ஆபாசத்தையும், வாழ்க்கைக்கு ஒவ்வாத மாயஜால நிகழ்ச்சிகளை மட்டுமே திணிப்பானேன். கொஞ்சம் கிரியேட்டிவ்வாக யோசித்து உங்களது பார்வையாளர்களிடம் நல்ல விஷயங்களையும் தான் திணிக்க முயற்சியுங்களேன்! குறைந்த பட்சம் பெண்கள் மற்றும் குழந்தைகள் இடம் பெறும் காட்சிகளிலேனும்! என்று யாராவது இவர்களுக்கு ஒரு கடிவாளம் போட முன்வந்தால் நல்லது.

இணைய வசதி... இது தரும் கட்டற்ற சுதந்திரம் எந்த ஒரு பெண்ணுக்கும் அவளது தாய் வீட்டிலும் கூட அத்தனை எளிதில் கிட்டி விடாது. எத்தனை எத்தனை ஆபத்துகள் உண்டோ, அத்தனைக்கத்தனை கட்டற்ற சுதந்திரமும் உண்டு இணையத்தில். அந்தத் தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் உருவாக்கப்பட்ட போது மனித குலத்தின் மகத்தான முன்னேற்றத்துக்காக மட்டுமே தான் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் இன்றோ குழந்தைகளைக் கவர்வதற்காக உருவாக்கப்படும் ஆப்களையும், கேம்களையும், சாஃப்ட் வேர்களையும் பார்த்தால் அவை திட்டமிட்டு அவர்களை சைக்கோக்களாக மாற்றவே உருவாக்கப் பட்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. சிறுவர் முதல் பெரியோர் வரை விரலசைவில் பார்த்து விடும் வாய்ப்புகளுடன் இணையத்தில் எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்று கொட்டிக் கிடக்கும் ஆபாச இணையதளங்களின் வரிசைகளையும், சைக்கோத்தனமாக அவைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் பாலியல் வக்கிரங்களையும் கண்டால் ஆரோக்யமான மனநிலை கொண்டோருக்கு கூட மனப்பிறழ்வு ஏற்பட்டு விடக் கூடும். அத்தனை மோசமான இணையதளங்கள் யூ டியுபில் வகை தொகையின்றி விரவிக் கிடக்கின்றன. பேரன்டல் கண்ட்ரோல் மூலமாக, நம் குழந்தைகளை வேண்டுமானால் அவற்றைக் காண்பதிலிருந்து தப்பச்செய்து நாம் தடுப்பணை இட்டுக் கொள்ளலாம். ஆனால் இத்தகைய காட்சிகளைக் காணும் பிற மனித ஜீவன்களொண்றும் வேற்றுக் கிரகவாசிகள் அல்லவே! அவர்களும் இங்கே நம்முடன் சக மனிதர்களாக உலவுபவர்கள் தான். யாரும் பிறப்பால் கேடு கெட்டவர்களாகப் பிறப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்கும் வாழ்க்கை அனுபவங்கள் தான் அவர்களை வில்லன்களாகவும், வில்லிகளாகவும், சமூகத்தில் இழிந்த பிறவிகளாகவும் ஆக்கி விடுகிறது. அப்படியானவர்கள், இப்படியான ஆபாசப் படங்களைத் தொடர்ந்து காண்பது கூட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிப்பிற்கான காரணமாகி விடுகிறது. முதலில் இணையத்தில் இலவசமாகப் பரந்து விரிந்து கிடக்கும் ஆபாச இணையதளங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட வேண்டும். மீறி திருட்டுத்தனமாக அத்தகைய வீடியோக்களைப் பார்ப்பவர்களும், பிறருக்குப் பகிர்பவர்களும் கண்காணிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இப்படி இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு, சதா நாம், நம் குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் அவர்களுக்கு அறிவுரை சொல்வதிலுமே கவனமாக இருந்து வருகிறோம். இதனால் ஆகப்போவது என்ன? 

முதலில் குழந்தைகளை அடக்க ஒடுக்கமாக, பணிவு, பதவிசாக வளர்க்கிறோம் என்ற பெயரில் அவர்களை இந்த சமூகத்திற்குப் பயந்தவர்களாக ஆளாக்கவல்ல குழந்தை வளர்ப்பு முறையை நாம் கைவிட வேண்டும். காலத்திற்கு ஒவ்வாத இத்தகைய வளர்ப்பு முறை மேலும், மேலும் அவர்களை ஆபத்தில் தான் தள்ளப் பார்க்கிறது. இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அயல் மனிதர்களது தொடர்புகள் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. அவர்களது எல்லாத் தொடர்புகளுமே வீடு, பள்ளி, டியூஷன் நண்பர்கள் தவிர்த்து தொலைக்காட்சிகளும், இணையமும் தான் என்றாகி விட்டது. விடுமுறைகளில் பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டே காட்சியளிக்கின்றன. இன்றைய தலைமுறையினருக்கு வீட்டுக்குள் மட்டுமல்ல வெளியிலும் கூட உலகம் உள்ளங்கையில் தான் விரிகிறது. தானாக அது விரியாவிட்டாலும் அவர்களாக அதை விரிய வைத்து அதில் புதைந்து போகிறார்கள். அக்கா சீரியலில் ஆழ்ந்திருந்தால் தம்பி ஸ்மார்ட் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கலாம். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஆஃபீஸ் வேலைகள் லேப் டாப்பில் வற்றாத ஜீவநதிகளாய் மூழ்கடிக்கக் காத்திருக்கலாம். இப்படியொரு சூழலில் வளரும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள். ஒன்று அதிமேதாவிகள் போல யாருடனும் ஒட்டாமல் தங்களை ஜீனியஸாகக் காட்டிக் கொள்ள முனைவார்கள், அல்லது எல்லாவற்றுக்கும் பயந்து, பயந்த கோழிக்குஞ்சுகளாய் பிறரால் அடையாளம் காணப்படுவார்கள். இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுவில், இந்த உலகைப் புரிந்து, யதார்த்தமான மனநிலை கொண்டு சமநிலையில் வளரும் பேறு பெற்ற குழந்தைகள் அரிதானவர்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் பொதுவாக பிறரது அதிகாரத்துக்கோ, பலாத்காரத்துக்கோ உட்படுத்தப்படுவது அரிது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் குழந்தைகளையும், தங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்ய மறுக்கும் குழந்தைகளையும் கண்டு இந்த சமூகத்தின் கயமை நிறைந்த மனிதர்களுக்கு சற்றேனும் பயமிருக்கத்தான் செய்கிறது. அவர்களிடம், அவர்கள் பொதுவாக வாலாட்ட முனைவதில்லை. 

பாலியல் வெறி முற்றிய மனிதப் பதர்கள், தங்களது பசிக்கு தேர்ந்தெடுப்பது பொதுவில்  ‘தனக்கு நேர்வது என்னவென்று அறிந்திராத பசும் பிஞ்சுகளைத் தான்’ இந்தக் கேடு கெட்ட மிருகங்களிடமிருந்து பாசத்தைக் கொட்டி நாம் வளர்க்கும் குழந்தைகள் தப்ப வேண்டுமெனில், குழந்தைகளுக்கு பள்ளி செல்லத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே அவர்களுக்குப் புரியும் அளவிலேனும் சிறிது, சிறிதாகப் பாலியல் கல்வி குறித்த அடிப்படை விஷயங்களைப் போதிப்பதே சரியான வழி. இதை குட் டச், பேட் டச் எனும் அடிப்படையிலிருந்தே கூட ஆரம்பிக்கலாம். அது மட்டுமல்ல பாசம் காட்டுவதற்கும் பாராட்டுவதற்கும், மெச்சுவதற்கும் கூட குடும்ப உறுப்பினர்கள் தவிர பிற வெளியார் எவருமே, அவர்கள் யாராகவே இருந்த போதும்... குழந்தைகளின் உடலைத் தொட்டுத்தான் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று அவசியமே இல்லை என்பதை குழந்தைகள் மனதில் அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டிலும் சரி, வகுப்பிலும் சரி குழந்தைகள் எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள் எனில், அவர்களுக்குப் பொறுமையாக விளக்கம் தர முயற்சி செய்யுங்கள். அவர்கள் எதையாவது செய்ய மறுத்தால் அதில் அவர்களுக்கான அசெளகரியங்கள் என்னென்ன என்று நிதானமாக அலசி ஆராய்ந்து கண்டறிய முயற்சி செய்யுங்கள். குழந்தைகளை எந்த விஷயத்திலும் வற்புறுத்திப் பணிய வைக்க முயற்சிக்காதீர்கள். குழந்தைகளைப் பயமுறுத்தாதீர்கள். வீடு, பள்ளி, அண்டை வீட்டுக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள், என குழந்தைகள் புழங்கக் கூடிய அத்தனை இடங்களிலும் அவர்கள் இயல்பாக நடந்து கொள்ளும் அளவில் சூழல் இருக்கிறதா? என்பதைச் சோதித்து அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோர்களான நமது கடமையே! குறிப்பிட்ட இடைவெளிகளில் இவற்றையெல்லாம் நாம் சரி வரச் செய்தாலே போதும் நமது குழந்தைகளின் பாதுகாப்பென்பது ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டதாகவே நாம் நம்பிக் கொள்ளலாம். 

இளம் வயதில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு அதைப் பற்றிப் பொது வெளியில் விவாதிக்கவோ, விளக்கமளிக்கவோ வாய்ப்பற்றுப் போன குழந்தைகள் தான் பெருமளவில் மனநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, திருமண வயதை அடைந்த பின்னரும் கூட தங்களது குழந்தைகளுக்கு இளமையில் நேர்ந்த பாலியல் கொடுமைகளைப் பற்றி அறிந்திராத பெற்றோர்கள் நம்மிடையே பலருண்டு. காரணம் இன்றளவிலும் நாம், நமது குடும்ப உறுப்பினர்களுக்குள் இம்மாதிரியான விஷயங்களைப் பற்றி விவாதிக்கத் தயங்குகிறோம். தனக்கு நேர்ந்ததைப் பற்றி வெளியில் சொன்னால் அதை அவமானம் என்று கருதிக் கொள்கிறோம். அதனால் தான்... குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர்களாக இருந்தபோதிலும் கூடப் பல பாலியல் குற்றவாளிகள்  தண்டனைகளிலிருந்து எளிதில் தப்பி விடுகின்றனர். இது மிக மோசமான கண்ணோட்டம். இவற்றிற்கெல்லாம் பலியாகாமல் நமது குழந்தைகள் தப்ப வேண்டுமானால் அவர்களை மிகுந்த மனோபலத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரான நமது முழு முதல் கடமை!

எனவே எதிர்த்துக் கேள்வி கேட்கும் குழந்தைகளை வாயாடி என்றோ அடங்காப் பிடாரி என்றோ, தலைப்பிரட்டை என்றோ அடைமொழியிட்டு அவர்களை அடக்கி வைக்க நினைக்காமல்... அவர்களது கேள்விக்கான காரணத்தைக் கண்டறிந்து பொறுமையாக விளக்கப் பாருங்கள் இனியாவது. 'ஒரு பெண் நோ என்று சொன்னால் நோ என்று தான் அர்த்தம்' என்பதற்கிணங்க; குழந்தைகள் விஷயத்திலும் 'ஒரு குழந்தை நோ என்று சொன்னால் அதற்கு நோ என்று தான் அர்த்தம்' என்பதை மனதார உணரப் பழகுவோம். ஏன் மறுக்கிறது என்பதை கண்டறிவதெல்லாம் அடுத்த கட்டம். முதலில் குழந்தை மறுக்கும் விஷயத்தை அதன் மீது திணிப்பதில்லை என்ற உறுதி பெற்றோருக்கு வந்தே ஆக வேண்டும். ஏனெனில் அப்போது தான் தனது மறுப்பை தீவிரப் படுத்தும் மனோபலம் குழந்தைக்கும் வரும்.

அது மட்டுமல்லாமல் எத்தனை சிறந்த பள்ளிகளில் நமது குழந்தைகளைப் படிக்க வைப்பதாக இருந்தாலும் கூட குறிப்பிட்ட இடைவெளிகளில் பள்ளிகளில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியதும் பெற்றோர்களது கடமையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com