உணவுப் பொருளான ‘குல்சா’ ஹைதராபாத் நிஜாமின் அரசு முத்திரையில் இடம் பெற்றது எப்படி? ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் கதை!

சூஃபி குருவான ஹஸ்ரத் நிஜாமுதீன், அசாஃப் ஜாவை விருந்துண்ண அழைத்திருந்தார். விருந்தின் போது அசாஃப் ஜாவுக்கு மஞ்சள் துணியில் மூடிப் பொதியப்பட்ட குல்சாக்களை சாப்பிடத் தந்தார்.
உணவுப் பொருளான ‘குல்சா’ ஹைதராபாத் நிஜாமின் அரசு முத்திரையில் இடம் பெற்றது எப்படி? ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் கதை!

குல்சா சாப்பிட்டிருப்பீர்கள், கிட்டத்தட்ட நாண் போல அதுவும் ஒரு முகலாய உணவு வகை. குல்சாவில் பல வகைகள் உள்ளன. முகலாயர் வருகைக்குப் பின் இந்தியாவில் ஊடுருவிய பலதரப்பட்ட முகல் உணவு வகைகளில் வெகு சில, குறீப்பிட்டுச் சொல்வதென்றால் நாண், ரொட்டி, பிரியாணி, சப்பாத்தி, தந்தூரி, கபாப், போன்றவற்றுள் இன்றளவும் இந்தியர்களால் பெரிதும் விரும்பப்பட்டவற்று வழக்கத்திலிருக்கும் உணவு வகைகளில் குல்சாவும் ஒன்று. இந்தக் குல்சா, முகல் பிரியாணி போல அப்படி ஒன்றும் சுவை நரம்புகளை கட்டிப்போடும் உணவு வகை அல்ல... ஆயினும் இந்த உணவுக்குத் தனது அரசு முத்திரையில் இடம் கொடுத்து கெளரவப்படுத்தி இருக்கிறார் அப்போதைய ஹைதராபாத் நிஜாம்! ஏன் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த குல்சாவில் என்று கேட்கிறீர்களா? அது ஒரு சுவாரஸ்யமான கதை.

ஹைதராபாத் நிஜாம் மன்னர்களின் அரச பரம்பரையானது ‘அசாஃப் ஜா டைனாஸ்டி’ என்று குறிப்பிடப்படுவது வழக்கம். 18 ஆம் நூற்றாண்டு வாக்கில் அதனை தோற்றுவித்தவர் மிர் உமர்- உத்தீன் கான் அசாஃப் ஜா. இவர் முகலாய மன்னர்களின் அரசவையில் அந்நாளில் வீற்றிருந்த நீதிமான்களில் ஒருவராக இருந்தவர். பரம்பரையாக அசாஃப் ஜாவின் குடும்பத்தினரில் பலரும் இந்தப் பதவிகளை முகலாய மன்னர்களின் அரசவையில் வகித்து வந்துள்ளனர்.

முகலாய அரசவையில் நீதிபதியாக இருந்த மிர்- கமர்- உத்தீன், 1712 ஆம் ஆண்டு வாக்கில் நிஜாம் உல்முல்க் என்ற பெயரில் தக்காணத்துக்கு கவர்னராக நியமிக்கப்படுகிறார். இந்த நியமனத்தை அறிந்த அடுத்த நொடியில் அசாஃப் ஜா வாஸ்தவத்தில் மிகுந்த மகழ்ச்சி கொண்டார். ஏனெனில் அப்போது ஒளரங்கசீப் மறவை ஒட்டி டெல்லியில் நிலவிய அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து விலக்கப்பட்டு தான் தக்காணத்திற்கு கவர்னராக அனுப்பப்படுவது குறித்து அவருக்கு எல்லையற்ற விடுதலை உணர்வு தோன்றியது. நல்ல வேளை டெல்லியிலிருந்து தப்பித்தோமடா சாமி! என்று கூவாத குறையாக அசாஃப் ஜா தக்காண கவர்னராகப் பொறுப்பேற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டார். 

ஆனால், பொறுப்பேற்கச் செல்லும் முன் தமது மத வழக்கப்படி. மதவழிகாட்டியாக இருந்த சூஃபி ஞானி ஒருவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து, ஆசி பெற்ற பின் தக்காணத்துக்குச் செல்லலாம் என அவர் முடிவெடுத்தார். அதன்படி அசாஃப் ஜா, தனது சூஃபி குருவான ஹஸ்ரத் நிஜாமுதீன் ஒளரங்கா பாதியிடம் சென்று அவரது ஆசிர்வாதத்தைக் கோரினார். (இந்த சூஃபி ஞானியின் தர்கா இப்போதும் ஔரங்காபாத்தைச் சேர்ந்த ஷாகானியில் இருக்கிறது).

சூஃபி குருவான ஹஸ்ரத் நிஜாமுதீன், அசாஃப் ஜாவை விருந்துண்ண அழைத்திருந்தார். விருந்தின் போது அசாஃப் ஜாவுக்கு மஞ்சள் துணியில் மூடிப் பொதியப்பட்ட குல்சாக்களை சாப்பிடத் தந்தார். குல்சாக்கள் வெகு ருஷியாக இருந்ததோடு, அசாஃப் ஜாவுக்கு அப்போது பசியும் அதிகமிருந்ததால் சுமார் 7 குல்சாக்களை உண்டு முடித்தார். விருந்தின் இறுதியில் அசாஃப் ஜாவை வாழ்த்திய சூஃபி ஞானி, “விரைவிலேயே நீ சுதந்திர அரசனாவாய், உன் பரம்பரையில் உன் பெயர் சரித்திரத்தில் நீடூழி நிலைத்திருக்கச் செய்ய உனக்குப் பின்னும் உன் அரச பரம்பரையில் 7 மன்னர்கள் வருவார்கள்” என்று வாழ்த்தினார். தீர்க்கதரிசனமான இந்த வாழ்த்து பலித்தது.

விரைவிலேயே மாமன்னர் ஒளரங்கசீப் மறைய, நாடெங்கும் நடந்த கிளர்ச்சியை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு அசாஃப் ஜா தன்னை ஹைதராபாத்தின் சுதந்திர மன்னராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அப்போதிருந்து துவங்கியது ஹைதராபாத் நிஜாம் வம்சம். சூஃபி ஞானி வாழ்த்தியதைப் போல தான் ஹைதராபாத்தின் சுதந்திர மன்னராக ஆனதால் நன்றிக் கடனாக தனக்களித்த விருந்தில் இடம் பெற்ற மஞ்சள் துணியில் பொதியப்பட்ட குல்சாக்களை நினைவுறுத்தும் பொருட்டு... அதையே தனது அதிகாரப்பூர்வ கொடியில் முத்திரையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினாராம் நிஜாம்.

இதோ இந்த மஞ்சள் நிறக் கொடியையும் அதனுள் இருக்கும் அரசு முத்திரையையும் பார்த்தீர்களானால் அது உங்களுக்கே புரியும்.

சூஃபீ ஞானியின் தீர்க்கதரிசனத்தின் படி அதன் பின் 7 தலைமுறை காலம் நிஜாம் வம்சம் ஹைதராபாத்தை ஆண்டது. 7 வது நிஜாமான நவாப் சர் உஸ்மான் அலிகான் இந்திய விடுதலைக்குப் பின் தனது சமஸ்தானத்தை இந்திய யூனியனில் இணைத்துக் கொண்டார். அந்த வரிசையில் 8 வது நிஜாமாக வந்தவரான முஹரம் ஜா தனக்கு பரம்பரையாகக் கிடைத்த அனைத்து செல்வத்தையும் இழந்து சூஃபி ஞானியின் ஆசிர்வாதமான 7 தலைமுறை சுதந்திர அரசு வாழ்த்தை மெய்ப்பித்து விட்டார் என்கிறது வரலாறு!

Image courtesy:  LHI Team

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com