எங்கிருந்து தொடங்குகிறது காதல் ரோஜாவின் பயணம்?

சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒசூர் பகுதி ரோஜாக்களுக்கு
எங்கிருந்து தொடங்குகிறது காதல் ரோஜாவின் பயணம்?
Published on
Updated on
2 min read

காதல் மீண்டும் மீண்டும் சொன்னாலும் சலிக்காது இந்த வார்த்தை! காரணம் காதல் அலுக்காத விஷயமாயிற்றே. அதைப் பற்றி எந்தவொரு விஷயத்தை தெரிந்து கொள்ளும் போதெல்லாம் ஆர்வமேற்படும். முதல் காதல், திருமணத்தில் முடிந்த காதல், அல்லது நமக்குத் தெரிந்தவர்களின் காதல் என காதல் நம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு வட்டம் போலச் சுழன்று கொண்டிருக்கிறது. வாழ்வின் இனிமையான பக்கம் எதுவென்றால் அது இளமையும் காதலும் என்று கண்ணை மூடிச் சொல்லலாம். வாயை மூடிக் கொண்டு பேசச் செய்வது காதலன்றி வேறென்ன? 

1537-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் 7-, ஹென்றி, செயிண்ட் வேலண்டைன் நினைவாக பிப்ரவரி 14-ம் தேதியை வேலண்டைன் தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக காதலர்கள் தினம் உலகெங்கிலும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மதம், இனம், மொழி என பாகுபாடின்றி உலகக் காதலர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை இது.

காதலர் தினக் கொண்டாட்டம் என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜாக்கள்தாம். ரோஜா மலருக்கு காதலர்கள் மத்தியில் எப்போதும் தனி ஈர்ப்பு உண்டு. இந்த ரோஜாக்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஒசூர் விவசாயிகளின் பங்கு முக்கியமானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ரோஜா மலர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன், ஆண்டுதோறும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஒசூரில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை, அரசு வழங்கும் மானிய விலையில் பசுமைக் குடில் மற்றும் அரசு வழங்கும் 100 சதவீத சொட்டுநீர்ப் பாசன வசதிகளைப் பயன்படுத்தி ரோஜாக்களை உற்பத்தி செய்கின்றனர்.

ஒசூர் அருகே பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஓர் ஏக்கரில் 50,,000 ரோஜாக்கள் கிடைக்கும்.

ரோஜா மலர்களை பல வண்ணங்களில் உற்பத்தி செய்தாலும், காதலர்களுக்கு மிகவும் விருப்பமானது சிவப்பு ரோஜாக்கள்தாம். தாஜ்மஹால் ரகமான இதனை காதலர்கள் விரும்பி வாங்கும் மலராக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த ரகத்துக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது.

குறிப்பாக நோப்லஸ், கோல்டு ஸ்ட்ரைக், கார்வெட்டி, தாஜ்மகால், பீச் அவலஞ்ச், டி.ஏ. என்ற பலவிதவிதமான ரோஜாக்கள் இப்பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றன. 

இந்த ரோஜாக்கள் தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட பின்னர், குளிர்பதனக் கிடங்கில் 2 நாள்கள் வைத்து பாதுகாக்கப்பட்டு, பின்னர் பெங்களுரு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் ஜரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், உள்நாட்டில் சென்னை, கேரளம், தில்லி, ஹைதராபாத், மும்பை போன்ற பெருநகரங்களுக்கும் ஆண்டுதோறும் அனுப்பப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒசூர் பகுதி ரோஜாக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது சீனா- இந்தியாவுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், நமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, இப் பகுதி ரோஜா உற்பத்தியாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ஆயினும் இந்தாண்டு, 2 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டுச் சந்தையில், தாஜ் மகால் மற்றும் கிட்டம் வண்ணத்துடன் காணப்படும் பீச் அவலஞ்ச் என்ற ரோஜா மலருக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழக அரசு மலர் உற்பத்தியாளர்களுக்கு, தோட்டக்கலைத் துறை மூலம் அளித்து வரும் மானியங்கள் ரோஜா உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்துக்காக பிப். 6-ஆம் தேதி முதல் ஏற்றுமதியைத் தொடக்கியுள்ளனர் ஏற்றுமதியாளர்கள். இந்தாண்டு ஒசூர் பகுதியிலிருந்து சர்வதேச சந்தைகளுக்கு 2 கோடி ரோஜா வரை ஏற்றுமதி செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com