கைவரப்பெறுமா நடிகர்களின் அரசியல் க(வ)லை?

ரஜினி காந்த் மற்றும் கமல ஹாசனின் அரசியல் பிரவேசம் எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.
கைவரப்பெறுமா நடிகர்களின் அரசியல் க(வ)லை?


ரஜினி காந்த் மற்றும் கமல ஹாசனின் அரசியல் பிரவேசம் எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியில் அவர்களது அரசியல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதே தற்போதைய கேள்வி.

எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்துதான் புதிய அரசியல் பாதைகள் துவங்குகின்றன என்பது இதுவரையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் மாற்றங்களிலிருந்து நாம் அறிகின்ற உண்மை. சமீபகால எடுத்துக்காட்டு ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம். ஒரு ஊழல் எதிர்ப்புப் போராட்டம் சாதாரணமாக கடந்து செல்லாமல் ஒரு புதிய கட்சியையும், அதன் ஆட்சியையும் அதனையும் கடந்து ஒரு மாற்று அரசியல் சக்தியையும் ஏற்படுத்தியது.

தமிழ்த்திரையுலகில் வசூல் மன்னனாக இருந்து வந்த ரஜினி எனும் நடிகர், பிரபல இயக்குநரின் வீட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைக் கண்டிக்கப் போய் இன்று அவரே அரசியல் கட்சி ஒன்றை துவங்கும் நிலையில் முடிந்துள்ளது. இதை அவர் தனது வாழ்நாளில் எதிர்பார்த்திராத மாற்றமாகவே கருதியிருக்கக்கூடும். கடந்த 1995 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் 2017ஆம் ஆண்டின் இறுதி நாளன்று புதிய அரசியல் கட்சியை துவங்குவதாகவும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அறிவிக்கும் அளவுக்கு வந்துள்ளது.

கடந்த 22 ஆண்டுகளில் பலமுறை அரசியலுக்கு வந்து விடுவார் என்று எதிர்ப்பார்ப்புகள் கூடியிருந்த தருணங்களில் அவர் அரசியலுக்கு வருவதாக தெரிவிக்கவில்லை. “நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா வரும்போது தானா வருவேன்” என்பது அவரது பிரபல வசனம். மேலும், “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்” என்பதும் அவரது திரைப்பட வசனங்களில் ஒன்று. அது இன்று உண்மையாகியுள்ளது. தனது கட்சி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள இணையதளம் ஒன்றை அவர் துவங்கியுள்ளார். அதாவது துல்லியமான தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர் களம் இறங்குகிறார். பதிவு செய்யும் தொண்டர் தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த வாக்காளர் தமிழகத்தில் எங்கு வசிக்கிறார் என்பது தெரிய வரும். மாவட்ட வாரியாக தொண்டர்களைத் திரட்ட இந்தத் தரவு அவசியம் தேவை. மேலும் எதிர்காலத்தில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்கப்பட்டால் தொண்டரின் தனிப்பட்டத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

ரஜினி ரசிகர்மன்றங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. ரஜினியே கூட பதிவு செய்யப்பட்ட/செய்யப்படாத மன்றங்களையும் இணையதளத்தில் பதியும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதுநாள்வரை அதிகாராபூர்வ ரசிகர் மன்றங்களாக பதிவு செய்யாதவற்றின் எண்ணிக்கையே அதிகம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றிலுள்ள மொத்த ரசிகர்களின் எண்ணிக்கையும் சரிவரத் தெரியவில்லை. இதனால் இத்தனை இலட்சம் பேர் தொண்டர்களாக பதிவு செய்துக் கொள்வார்கள் என்பதையும் கணக்கிட முடியாத சூழல் உள்ளது. என்றாலும் தோராயமானதொரு எண்ணிக்கை ரசிகர்மன்றத்தின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும். அதை அவர்கள் வெளியிடுவது உகந்ததல்ல என்பதால் அது சிதம்பர ரகசியமாகவே இருக்கும்.

தமிழகத்தின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமானது. நாற்பதுகளைக் கடந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் வாக்களிக்கும் வயதுடையவர்களின் மொத்த எண்ணிக்கையில் சரிபாதியை அவர்கள் கொண்டிருக்கலாம். இவர்களே தேர்தல்களின் முடிவை நிர்ணயிப்பவர்கள். இவர்களில் எத்தனை பேரை ரஜினியின் கட்சி உறுப்பினர்களாக பெறப்போகிறது என்பதுவே அடுத்தக்கட்டத்தை நோக்கிய பயணத்தின் திசையை தீர்மானிக்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் சுமார் 4,66,03,352 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருந்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் 906 வாக்காளர்கள் இருந்துள்ளனர். இன்றைய நிலையில் இந்த எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கக்கூடும். புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. எனவே இளம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்படும் வாய்ப்பேயுள்ளது. இவர்களில் எத்தனை பேர் ரஜினியின் கட்சியில் உறுப்பினர்களாக இணைவார்கள் என்பது தெரியாது. இவர்களை தங்கள் கட்சிக்கு இழுக்க ரஜினியின் கட்சி வைத்துள்ள திட்டமும் தெரியாது.

தனது சினிமாப் புகழ் மட்டுமே தனக்கு வெற்றித் தேடித்தரும் என்பதை ரஜினி நம்பமாட்டார்தான். எனவே விரைவில் கொடி, சின்னம் மற்றும் கொள்கைகளை அவர் வெளியிட்டாக வேண்டும்.  அடுத்த மூன்றரை ஆண்டுகளில் தன் கட்சியை வெகுமக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்ல அவர் தொண்டர் பலம் மட்டுமின்றி கட்சியின் கொள்கைகளையும் நம்பியிருக்க வேண்டும். விஜயகாந்த் கட்சி துவங்கிய போது ஏழை மக்களின் உயர்வையே கொள்கையாக முன் வைத்தார். விஜயகாந்த் கட்சி துவங்குவதற்கு முன்பே தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை உள்ளாட்சித் தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிடச் செய்து சில ஆயிரங்களில் உறுப்பினர்களையும் பெற்றிருந்தார். ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களில் எத்தனைப் பேர் இவ்வாறு கலைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சுயேட்சை உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெரியவில்லை. அப்படியொரு பலமான அடித்தளம் 2011ஆம் ஆண்டில் இலகுவாக 29 பேரவை உறுப்பினர்களை பெற்றுத்தர பேருதவி புரிந்துள்ளது. அத்தகைய அடித்தளமின்றி என்னத்தான் அதிமுகவிற்கு சாதகமான அலை வீசியிருந்தாலும் விஜயகாந்த் கட்சியால் 29 இடங்களைப் பெற்றிருக்க முடியாது. ரஜினியோ உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்கிறார்.

அதற்கு முன்னர் விஜயகாந்த் 2006 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனது கட்சியை தனித்துப் போட்டியிடச் செய்தார். அவர்மட்டும் விருதாசலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் அவரது கட்சிக்கு 8% வாக்குகள் கிடைத்தன. ரஜினியின் கட்சியும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தனது பலத்தைப் பரிசோதிக்க வாய்ப்புண்டு. தொண்டர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டு வெற்றி பெறுவது கட்சியின் துல்லியமான பலத்தை அறிய உதவும். மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடுவதன் மூலம் வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் இவற்றை மேற்கொள்ளாமல் நேரடியாக 2021 ஆம் ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலை மனதில் இருத்தி மட்டுமே கட்சியை வளர்ப்பது என்ற முடிவு எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்பதைக் கணிக்க இயலாது.

தமிழகத்தின் தனிப்பெரும் கட்சிகளான அதிமுக, திமுக ஆகியன பேரவைத் தேர்தல்களில் மாறி மாறியே ஆட்சியை பிடித்துள்ளன. கடந்த முறை மட்டுமே அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. கடந்த 20 ஆண்டுகளில், 1996 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் இரு கட்சிகளின் வெற்றித் தோல்வி போட்டியாளரின் ஆட்சியின் சிறப்பையும், கூட்டணியையும் பொறுத்தே அமைந்துள்ளது. இதில் ஒருமுறை ரஜினி வாய்ஸ் எனும் திருப்பமும் அடங்கியிருந்தது. அது 1996 ஆம் ஆண்டில் ஜெயா அரசிற்கு எதிரான குரலாக அமைந்திருந்தது. அதன் பிறகு நடந்த பல தேர்தல்களில் ரஜினியின் குரலுக்கு உரிய பலன் கிட்டவில்லை. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரித்தும் அக்கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

ஆகவே தனிப்பட்ட பலம் என்பதைப் பொறுத்தே கட்சிகளின் வெற்றி அமைகிறது. எடுத்துக்காட்டாக 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான பேரவைத் தேர்தல்களில் பெற்ற வாக்குகள், இடங்கள் ஆகியவற்றை பார்க்கலாம். 


மேற்கண்ட அட்டவணை மூலம் நாம் அறிய வருவது 1996 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை கூட்டணிகளின் பலம் வெற்றிக்கான அடிப்படையாக அமைந்துள்ளது என்பதுவே. அதிமுக, திமுக ஆகியன கூட்டணிகளின் பலமின்றி நேரடியாக மோதிக்கொண்ட 2016 ஆம் ஆண்டில் இரு கட்சிகள் மட்டுமே சட்டசபையை நிரப்பிவிட்டுள்ளன. ஆகையால் தொண்டர் பலமுள்ள கட்சிகளே களத்தில் நிலைக்க முடியும் என்பது தெளிவு. ரஜினி காந்த் கட்சி குறைந்தபட்சம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடுவதாகத் தெரிகிறது.  அதாவது 2018 ஜனவரி கணக்கெடுப்பின்படி 6 கோடி வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அக்கட்சியில் இணைய வேண்டும்!... கமல் கட்சியில் எத்தனைப் பேர் இணைவார்கள் என்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இங்கு வேறொன்றையும் நாம் காண வேண்டியுள்ளது. யார் ஆட்சியமைக்கும் போதும் மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் 30% பெற்றிருந்தால் மட்டுமே அது சாத்தியமாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்குகளையும் ஆட்சியமைக்கும் கட்சியின் மொத்த வாக்குகளுடன் இணைத்துப் காண்பதே சரியாக இருக்கும். ஏனெனில் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சிக்கும் 5-10% மேல் சொந்தமாகப் வாக்குகளைப் பெறும் வலு இருந்ததில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பாமக. அக்கட்சி 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஏதேனும் ஒரு கழகத்தின் கூட்டணியில் இடம் பெற்று அதிக இடங்களைப் பெற்று வந்தது. 2011 ஆம் ஆண்டில் தனித்துப் போட்டியிட்டு 3 (5.23% வாக்குகளுடன்) இடங்களில் வெற்றி பெற்றது. 2016 ஆம் ஆண்டில் சுமார் 5% வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

ஆட்சியமைத்த காலங்களில் கழகங்கள் பெற்ற வாக்குகளை காண்போம்.

1996 திமுக 11423380 (42.07%)
2001 அதிமுக 8815387 (31.44%) 
2006 திமுக 8728716 (26.46%) 
2011 அதிமுக 14150289 (38.40%)
2016  அதிமுக 17616266 (40.77%)

2006 ஆம் ஆண்டில் திமுக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெற்றன என்பதை மேலேயுள்ள அட்டவணையில் பார்த்தோம். திமுகவிற்கு கிடைக்க வேண்டிய வாக்குகளாகவே அவற்றைக் கருத வேண்டியுள்ளது. மேலும் அதே தேர்தலில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளோடு மட்டுமே கூட்டணி கண்ட அதிமுக 70 இடங்களையும் சுமார் 50% வாக்குகளையும் பெற்றிருந்தது. இதே சூழ்நிலையை 2016 ஆம் ஆண்டில் திமுக பெற்ற 88 இடங்கள் மற்றும் சுமார் 40% வாக்குகளோடும் பொருத்திப்பார்க்கலாம்.

ரஜினிக்கு போடப்படும் இக்கணக்கு கமலுக்கும் பொருந்தும். எனவே அவரும் தொண்டர் பலம் நிறைந்த கட்சியை தோற்றுவிக்க வேண்டும்.

இதுவரை அரசியல் கணக்கைப் பார்த்த நாம் இனி தமிழகத்தின் வளர்ச்சிக்காக இவர்களது பங்கு எதுவாக இருப்பது பொருத்தமானது என்பதையும் காண வேண்டும். தமிழகம் வளர்ச்சிப்பெற்ற மாநிலமாக கருதப்படுகிறது. இக்கருத்தை மத்திய அரசின் அங்கங்கள் பல நிறுவியுள்ளன. சமீபத்திய வருடாந்திர பொருளாதார சர்வேயில் தமிழகம் அதிக ஏற்றுமதி செய்யும் மாநிலமாகவும், ஜி எஸ் டி அதிகம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட மாநிலமாகவும் காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சேவைத்துறையின் தமிழகத்தின் வருமானத்தில் சுமார் 45 விழுக்காடு என்றும் விவசாயத்தின் பங்களிப்பு 21 விழுக்காடு என்றும் தமிழக அரசு பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனாலும், வறுமை, வேலையின்மை, இடப் பெயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளை மாநிலம் கொண்டுள்ளது. கருவறை முதல் கல்லறை வரை அரசின் ஏராளமான மானியங்கள், கடன்கள், நல உதவித் திட்டங்களால் ஏழை-எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டங்களுக்குத் தேவையான நி்தியைத் திரட்டுவதில் பெரும் சிரமம் இருந்து வருகிறது. மேலும், ஜி எஸ் டி வரிமுறையால் மாநில அரசின் வருவாய் குறையும்; எனவே மத்திய அரசு இழப்பை ஈடுகட்ட வேண்டிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு தனது சொந்த முயற்சியில் வரி வருவாயை அதிகரிக்க நிலம், நிலக்குத்தகை, கனிம வளங்கள், வாகனங்கள் பதிவு போன்ற வணிக ரீதியிலான பயன்பாடுகளில்  வருவாயை பெருக்கும் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. 

தமிழக அரசுக்கு இன்றைய தேதியில் சுமார் 4 இலட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், கடனுக்கான வட்டியே ஆண்டு வருமானத்தில் 20% மேல் எடுத்துக்கொள்ளும் என்றும் கணிக்கப்படுகிறது. அரசின் நிதிநிலையை சரி செய்ய வேண்டுமென்றால் விவசாயத்திற்கான இலவச மின்சாரம், உணவு மானியம் உட்பட பல திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளோரை அடையாளம் கண்டு மானிய சலுகைகளிலிருந்து விலக்க வேண்டும். இது போன்ற நிலையில் அரசியலுக்கும், நிர்வாகத்திற்கும் புதியவர்களால், அதுவும் இத்தனை நாள் திரைத்துறையில் கோலோச்சியவர்களால் எப்படி முடியும் என்ற கேள்வியை தவிர்க்க முடியாது. அடுத்து வரும் நாட்களில் இது குறித்த பரந்தக் கண்ணோட்டதை இரு நடிகர்களும் வெளியிட வேண்டியக் கட்டாயம் உள்ளது. 

அவர்களது அரசியல் க(வ)லை வாக்கு வங்கி அரசியலாக குறுகி விடாமல் இருக்க தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் ஒன்றை அமைக்கும்படி இருப்பதே மக்களுக்கும், அவர்கள் தோற்றுவித்தக் கட்சிகளின் கடும் முயற்சிகளுக்கும் பொருள் உள்ளதாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com