இங்கிலாந்தின் சுழலை எதிர்கொள்ள இந்திய அணி தயாரா? இறுதிப்போட்டியில் யார்?
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி குறித்து...


டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று (மார்ச் 4) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே திடலில் நாளை (மார்ச் 5) நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணி எப்படி இருக்கிறது?
டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கண்டிப்பாக சாம்பியன் பட்டம் வெல்லும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அரையிறுதிக்கு தகுதி பெறாமலேயே இந்திய அணி வெளியேற்றப்பட்டுவிடுமோ என்ற கவலை இந்திய அணியின் ரசிகர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியே ரசிகர்களின் இந்த கவலைக்கு காரணம். இருப்பினும், தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதாலும், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை இந்திய அணி வீழ்த்தியதாலும் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. டாப் ஆர்டர் பேட்டர்கள் மூவரும் இடதுகை ஆட்டக்காரர்களாக இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டார். அதன் பின், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டாப் ஆர்டரில் தொடர்ந்த வலதுகை இடதுகை காம்பினேஷன் பிரச்னையும் முடிவுக்கு வந்தது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று முறை டக் அவுட்டாகிய அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் அரைசதம் விளாசி அசத்தினார். இருப்பினும், அவர் வழக்கமாக விளையாடும் பழைய அதிரடியான ஃபார்மில் இல்லாதது இந்திய அணிக்கு கவலையளிப்பதாக உள்ளது.
இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சை சமாளிக்குமா இந்தியா?
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு எதிராக இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட அந்த அணியிடம் கண்டிப்பாக திட்டங்கள் இருக்கும்.
சஞ்சு சாம்சனுக்கு சவாலளிக்கும் விதமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீசுவார். கடந்த காலங்களில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சுக்கு எதிராக சஞ்சு சாம்சன் தடுமாறியுள்ளார். அபிஷேக் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்த பவர்பிளேவில் ஆஃப் ஸ்பின்னர் வில் ஜாக்ஸ் காத்திருக்கிறார்.
பவர்பிளே ஓவர்களில் வில் ஜாக்ஸ் மட்டுமின்றி, இந்திய அணியின் பேட்டர்களுக்கு சவாலளிக்க இடதுகை சுழற்பந்துவீச்சாளரான லியம் டாஸன் இருக்கிறார். மிடில் ஓவர்களில் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த அனுபவமிக்க வீரரான அடில் ரஷீத் இருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதற்காக மும்பை வான்கடே திடலில் இந்திய அணியின் பேட்டர்கள் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை வான்கடே திடலில் அதிகம் விளையாடிய அனுபவம் கொண்ட சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா எவ்வாறு விளையாடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர்களும் மணிக்கணக்கில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி இருக்கு?
மும்பை வான்கடே திடல் சிறிய பவுண்டரிகளை உடையதால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்ஷர் படேல் சிறிது தவறான லென்த்தில் பந்துவீசினாலும் அது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துவிடும். தென்னப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரானப் போட்டிகளில் அதிக ரன்களை வழங்கியதால், வருண் சக்கரவர்த்தி லைன் அண்ட் லென்த்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஜஸ்பிரித் பும்ரா வழக்கம்போல அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சில் சற்று முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஷிவம் துபேவை சூர்யகுமார் யாதவ் எவ்வாறு பந்துவீச்சில் பயன்படுத்தப் போகிறார் என்பது சுவராசியமாக இருக்கும். தற்போது இருக்கும் பிளேயிங் லெவன் நன்றாக இருப்பதால், குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது கடினம் என்றே தோன்றுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி, இந்தியாவை நாக் அவுட் சுற்றில் வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 2024 ஆம் ஆண்டு நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து அணியை இந்தியா வெளியேற்றியது. இந்த சூழலில் இரண்டு அணிகளும் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதால் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து அணி எப்படி இருக்கு?
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்படவில்லை. பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லரிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் வரவில்லை. அந்த அணியை ஒவ்வொருப் போட்டியிலும் ஒவ்வொரு வீரர் காப்பாற்றுகிறார் என்றே கூறலாம்.
கேப்டன் ஹாரி ப்ரூக் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். முக்கியமானப் போட்டிகளில் இவர்களின் பங்களிப்பு அணிக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஆல்ரவுண்டர் சாம் கரண் நன்றாக செயல்படுகிறார்.
தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரின் ஃபார்ம் மீது அனைவரது கவனமும் இருக்கிறது என்றே கூறலாம். நடப்பு உலகக் கோப்பைத் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. முக்கியமான போட்டிகளில் நன்றாக விளையாடக் கூடிய பட்லர், இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் மீண்டும் ஃபார்முக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்த இரண்டு அணிகளில் யார் இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...