/

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாத் திடல் தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறியுள்ளது.

News image

படம் | AP

Updated On :24 பிப்ரவரி 2026, 2:49 pm

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாத் திடல் தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறியுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் அணிகள் அனைத்தும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் அதன் முதல் போட்டியில் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பை சிக்கலாக்கியுள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரை பொருத்தவரையில் தென்னாப்பிரிக்க அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குரூப் சுற்றுப் போட்டிகளில் தோல்வியே காணாமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க அணி, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி நடை தொடர்கிறது. குரூப் ஸ்டேஜில் தென்னாப்பிரிக்க அணி, கனடா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு எதிராக விளையாடியது.

தென்னாப்பிரிக்க அணி குரூப் ஸ்டேஜில் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் அகமதாபாத் திடலில் விளையாடியது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் விளையாடியது.

அதன் பின், தென்னாப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியை இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத் திடலில் விளையாடியது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாத் திடலில் விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அகமதாபாத் திடலை தனது கோட்டையாக மாற்றியுள்ளது தென்னாப்பிரிக்கா.

சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியையும் தென்னாப்பிரிக்க அணி அகமதாபாத் திடலிலேயே விளையாடுகிறது. அதன் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் அகமதாபாத் திடலில் தென்னாப்பிரிக்க அணியே ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகமதாபாதில் அதிக போட்டிகளில் விளையாடுவதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரணிக்கு எதிராக வியூகங்களை வகுப்பது மிகவும் எளிதாக உள்ளது. பாகிஸ்தான், இலங்கை இந்த இரண்டு அணிகளைத் தவிர்த்து இரண்டு திடல்களில் மட்டுமே தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடும் வாய்ப்பு தென்னாப்பிரிக்க அணிக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இறுதிப்போட்டி அகமதாபாதில் நடைபெறும் சூழல் உருவானால், அதுவும் தென்னாப்பிரிக்க அணிக்கே மிகவும் சாதகமான விஷயமாக இருக்கும்.

Summary

The Ahmedabad venue has become a stronghold for the South African team in the ongoing World Cup series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.