இந்துவாகவே பிறந்தோம், இந்துவாகவே இறப்போம்
இது இந்துக்களுக்கு மோசமான காலமல்ல. விழித்துக்கொள்ளும் காலம். விழித்துக்கொள்ளுங்கள்.


இந்து உணர்வுகளுக்கு இது சோதனைக் காலம். திருச்சியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற கல்லூரி ‘பன்னாட்டுக் கருத்தரங்கம்' ஒன்றை டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் நடத்துகிறது. “தமிழ் இலக்கியப்பதிவுகளில் பெண் வன்கொடுமைகள்” என்பது தலைப்பு. இதை நடத்துவது அந்தக் கல்லூரியின் தமிழாய்வுத்துறை. இந்த அபத்தமான தலைப்போடு நிற்கவில்லை. அழைப்பிதழின் இரண்டாவது பக்கத்தில் ‘மாதிரித் தலைப்புகள்' என்ற தலைப்பில் இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் சில:
இப்படி அடுக்கிக்கொண்டே போகிறது. இவை “மாதிரித் தலைப்புகள்” மட்டுமே. இது இந்துக்களின் உணர்வுகளை அவமதிக்கிறது. தனிப்பட்ட முறையில் யாராவது இத்தகைய சிந்தனைகளை வெளிப்படுத்துவது என்பது வேறு. இது போன்று கருத்தரங்கு என்ற பெயரில் வெளிப்படுத்த மாணவர்களை தூண்டுவது வேறு.
இத்தகைய தலைப்புகளின் மூலம் இந்து மதத்தின் மீது விஷம் தூவப்படுகிறது. வெறுப்பு விதைக்கப்படுகிறது. மதமாற்றத்துக்கு துணைபோகிறது. அதே நேரத்தில், இந்து மதத்தின் மீது அதிக பிடிப்பை வைத்திருக்கும் நமது சகோதரர்களை வன்முறை பாதைக்கு இழுத்துச் செல்லும் அபாயமும் இருக்கிறது. அதுமட்டுமில்லாது, இதற்கு போட்டியாக யாராவது மற்ற மதங்களில் காணப்படும் தவறுகளை பட்டியலிட்டால் அது தமிழகத்தில் மத ரீதியான மோதல்களுக்கு வழிவகுத்துவிடும்.

அடுத்ததாக ஒரு வீடியோ சமூக வளைத்தளங்களில் உலவி வருகிறது. அதில் கிருஸ்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். திருச்சியில் ஜெபக்கூட்டம் நடத்த பல கிருஸ்தவ கல்லூரிகளை நாடினாராம். யாரும் இடம் கொடுக்கவில்லையாம். ஆர்.எஸ்.எஸ்.காரங்க நடத்துகிற நேஷனல் காலேஜ் இடத்தை கேட்டாராம். இடம் கொடுத்தார்களாம். “ஆண்டவர் யாரை நமக்காக பயன்படுத்துகிறார் பாருங்கள். நம்பல்லாம் நினைச்சுட்டு இருக்கோம், சோனியா காந்தி, ராகுல் காந்தி கிருஸ்தவர்கள் அவர்கள் மூலமா எழுப்புதல் வரும்னு. மோடி மூலமாத்தான் எழுப்புதல் வரப்போகுது, பி.ஜே.பிகாரங்க மூலமாத்தான் எழுப்புதல் வரப்போகுது. ஆர்.எஸ்.எஸ் காரங்கதான் எழுப்புதலில் ஊழியக்காரர்களாக நிற்கப்போகிறார்கள்” என்ற பேச்சோடு அந்த வீடியோ முடிகிறது.

இது என்ன விஷமத்தனமான பேச்சு! இப்படிப் பேசினால் இவர் பேச்சு விமர்சிக்கப்படும், பிரச்னை வரும்' என்று அவருக்கு தெரியும். இப்படி பேசுவது இவருக்கு முதல் முறையுமல்ல. பிரச்னையின் ஆழத்தை தெரிந்தே பேசுவதை பார்க்கும் போது விமர்சனத்தையும் தாண்டி ஏதோ ஒரு புயலை அவர் எதிர்பார்க்கிறார் என்பது புரிகிறது. அத்தகைய புயல்கள் அவர் சொன்னதைப் போல எழுப்புதலின் பல்வேறு நிலைகளில் ஒன்றாகக்கூட இருக்கலாம். இதை இந்துக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ‘நம் மதம் விற்பனைக்கல்ல' என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.
உலகத்தின் பார்வையை தன்பால் ஈர்த்த மற்றொரு சம்பவம் மூன்று நாட்களுக்கு முன் அந்தமான் நிகோபார் தீவில் நடந்தது. ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க இளைஞர் மதமாற்றத்தை தொழிலாகக் கொண்டவர், அந்தமான் தீவிற்கு சென்றார். வெளிஉலக தொடர்பில்லாத ‘வடக்கு சென்டினால்' என்ற தீவு ஒன்று அங்கு உண்டு. அது தடை செய்யப்பட்ட பகுதி. அங்கு வாழும் பழங்குடியினரை பாதுகாக்கும் வகையில் அங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வெளி உலக நபர்களின் வருகையால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பும், அதற்கான எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இல்லாமல் இருக்க வாய்ப்பிருப்பதால் இந்த தடையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
தடை செய்யப்பட்ட அந்த தீவிற்கு கள்ளத்தோணியில் சென்றார் ஜான் ஆலன் சாவ். அங்கிருப்பவர்களை கிருஸ்தவ மதத்திற்கு மாற்றுவது அவரது நோக்கம். ஆனால், பழங்குடியினர் தாக்கியதில் உயிரிழந்தார். பழங்குடியினர் அவரின் உடலை தீவின் கடற்கரையில் புதைத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அது தடை விதிக்கப்பட்ட பகுதி. அடுத்த நாட்டிற்கு வந்தவர், தடையை அலட்சியம் செய்துவிட்டு அந்தப் பகுதிக்கு செல்கிறார் என்றால், நம் நாட்டின் சட்டதிட்டங்கள் மீது பயமோ, மரியாதையோ அவருக்கில்லை என்பது புரிகிறது. எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் சட்டவிரோதமான விஷயத்தை தெரிந்தே செய்யும் ஒருவர் செய்யும் போதனைகள் எப்படி நியாயமானதாக இருக்கும்?
அங்கு சென்றால் உயிர் தப்ப முடியாது', என்ற எச்சரிக்கை¨யைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை. தன் உயிரைவிட தனது மதமே முக்கியம் என்று அவர் நினைக்கிறார். அவருக்கு அவர் மதம் முக்கியம் ஆனால், ஒரு இந்தியனின் மதம் அவருக்கு முக்கியமில்லையா? இந்தியன் ஒருவனது மதத்தை குறிவைத்து அமெரிக்காவிலிருந்து ஒருவன் பயணித்திருக்கிறான் என்றால், நம்மைப் பற்றிய அவர்களின் சிந்தனை எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இறந்து போன அந்த மதவியாபாரி தனது டைரியில் வடக்கு சென்டினால் தீவைப் பற்றி எழுதி வைத்திருக்கும் குறிப்பு இதுதான்.
“கடவுளே! இதுதான் சாத்தானின் கடைசி கோட்டையோ? இங்கிருப்பவர்கள் யாரும் கடவுளின் பெயரை கேட்டதில்லையோ அல்லது கேட்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டதா?
யாருக்கு யார் கடவுள்? யார் சாத்தான்? இதை முடிவு செய்வது யார்? அடுத்தவர் மதம் சாத்தானுடையதா? அந்த தீவில் வசிப்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்தியர்கள் யாரும் ஆராய்ந்து, அதை வெளிப்படையாக பேசுவதில்லை. அவர்களை பழங்குடியினர் என்று மட்டுமே நாம் அவர்களை பார்க்கிறோம். ஆனால், இந்த மதவியாபாரி அவர்கள் வசிக்கும் தீவை ‘சாத்தானின் கோட்டை' என்று சொல்வது சரியா? அந்தத் தீவில் நூற்றுக்கும் குறைவானவர்கள் வாழுகின்றனர் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. உலகம் முழுவதும் பரந்து, விரிந்துகிடக்கும் ஒரு மதம், அந்த நூறு பேரையும் தன்னுடன் இணைக்க நினைப்பதும், அதற்காக ஒருவர் தனது உயிரை விடவும் துணிவதும் பிரம்மிப்பூட்டுகிறது. இது மதமாற்றம் என்ற பிரச்னையின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறது.
தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு அரசன். அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. பிழைப்பது கடினம் என்று எல்லோரும் நினைத்தார்கள். அந்த நேரத்தில் ஒரு சாது அங்கு வந்தார். ஒரு கிண்ணத்தில் சுத்தமான தேனை எடுத்துவந்தார். தேனை தினமும் சாப்பிடச் சொன்னார். அரசனும் தொடர்ந்து சாப்பிட்டான். பூரணகுணமடைந்தான். அன்றிலிருந்து தேனைப் பற்றியும், தேனிக்களைப் பற்றியும் எல்லோரிடமும் பெருமையாகப் பேசி வந்தான். இது அந்த நாட்டு வைத்தியருக்கு பிடிக்கவில்லை. தேனிக்களை அழித்தால் மட்டுமே தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று நினைத்தான். அரசனிடம் சென்று நயவஞ்சகமாக பேசினான்.
‘அரசே! தேன் உங்களை குணப்படுத்திவிட்டது. பின்னொரு நாளில் உங்களுக்கு இதுபோன்ற நோய் ஏற்படும் போது தேன் கிடைக்காவிட்டால் உங்களை காப்பாற்ற முடியாமல் போகலாம். ஆகையால், இப்போதே நாட்டில் உள்ள தேனை சேகரித்து சேமித்து வைப்போம்', என்றான் வைத்தியன்.
‘நல்ல யோசனை. அப்படியே செய்யுங்கள்', என்றான் அரசன்
வைத்தியன் மக்களிடம் சென்றான். ‘யார் நல்ல தேனை கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்', என்று அறிவித்தான். மக்கள் தேன் கூடுகளை வேட்டையாடத் தொடங்கினர்.
தேனிக்கள் வருத்தமடைந்தன. எல்லாத் தேனிக்களுக்கும் ஓரிடத்தில் கூடி பேசின. ‘நாம் இந்த நாட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் நம் இனமே அழிந்துவிடும். ஆகையால், பக்கத்து நாட்டுக்குச் சென்றுவிடுவோம்', என்று பெரும்பாலான தேனிக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தன. அப்போது அதன் தலைவன் பேசினான்.
‘நண்பர்களே! நாம் ஏன் அடுத்த நாட்டுக்கு செல்ல வேண்டும். இந்த அரசனே எதிர்த்தாலும் நம்முடைய இடத்தை விட்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. நான் ஒரு யோசனை சொல்கிறேன். அதன்படி செயல்படுங்கள்', என்றது.
அனைவரும் அமைதியாக தலைவன் சொல்வதை கேட்க தயாரானார்கள். தலைவன் மீண்டும் பேசினான்.
‘நாம் இதுவரை பூக்களிலிருந்து தேனை மட்டுமே பிரித்து எடுத்து சேகரிக்கிறோம். நாம் சேகரித்த தேனை மற்றவர்கள் அபகரித்த போதும் அதை பொறுத்துக்கொண்டோம். ஆனால், இன்றைய நிலைமை வேறு. நம் இனத்தை அழிக்கும் முயற்சி நடக்கிறது. இனி நாம் விழித்துக்கொள்ள வேண்டும். இத்தனை காலம் தேனை மட்டும் சேகரித்த நாம், இனி விஷத்தையும் சேகரிப்போம். அதை நம் தேனடையில் ஒரு ஓரத்தில் வைப்போம். அபகரிப்பவர்கள் தேனடையை பிழியும் போது தேனுடன் விஷமும் கலக்கும். அவர்கள் அழிந்து போவார்கள்', என்றது.
அனைவரும் தலைவனின் யோசனையை பாராட்டினார்கள். விஷம் சேகரிக்கப்பட்டு தேனடையின் ஓரத்தில் வைக்கப்பட்டது. வழக்கம் போல் மனிதர்கள் தேனீக்களை விரட்டினார்கள். தேனை சேகரித்தார்கள். சுவைத்துப் பார்த்தார்கள். இறந்து போனார்கள். விஷயம் அரசனை சென்றது. அரசனால் இதை நம்ப முடியவில்லை. நேராக சாதுவிடம் சென்றான்.
‘சாதுவே! என்ன இது? அமிர்தத்திற்கு ஒப்பான தேன் எப்படி விஷமானது?' என்று வருத்தத்தோடு கேட்டான்.
‘அமிர்தத்தை விஷமாக்குவதும், விஷத்தை அமிர்தமாக்குவதும் ஆள்பவர் கையில்தான் உள்ளது. தவறான யோசனையை சரியென்று நம்பியதுதான் இந்த பிரச்னைக்கு காரணம். நம் கண்ணுக்குத் தெரியாத தேனை பிரித்து சேமித்த தேனிக்கள் இன்று விஷத்தை சேகரிக்கும் நிலைக்கு தள்ளியது நீங்கள். ஆகையால், உங்களுக்கு தேவையான நேரத்தில் தேன் என்ற அமிர்தம் உதவாமல் போகும்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

எந்த இடத்தில் விஷமிருக்கிறது, எந்த இடத்தில் தேன் இருக்கிறது என்பது தேனிக்களுக்குத் தெரியும். அரசனுக்கு தெரியாது. இந்தக் கதையில் வரும் தேனிக்களை போன்றவர்கள் இந்துக்கள். தங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு, உலக உயர்வுக்கு வழிவகுக்கும் இதிகாசங்களையும், புராணங்களையும், சங்க இலக்கியங்களையும் தன்னுள் கொண்டவர்கள். தேவையில்லாமல் இவர்களை விஷமாக்கும் செயலை யாரும் செய்ய வேண்டாம். அரசு இதுபோன்ற தவறான நிகழ்வுகளை தடை செய்ய வேண்டும். அடுத்தவர் மதத்தில் தலையிடுவது, அசிங்கப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் வகையில் கடுமையுடன் அரசு நடந்துகொள்ள வேண்டும். இந்துக்களை அவமதிக்கும் இந்த கருத்தரங்கை தடை செய்ய வேண்டும். இத்தகைய கருத்தரங்குகளை இந்துக்கள் மட்டும் எதிர்க்க வேண்டும் என்பதல்ல. சமத்துவத்தின் மீது பற்று கொண்ட யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். நம்முடைய எதிர்ப்பை ஜனநாயக ரீதியில், அமைதியாக பதிவு செய்வது அவசியம். இது இந்துக்களுக்கு மோசமான காலமல்ல. விழித்துக்கொள்ளும் காலம். விழித்துக்கொள்ளுங்கள்.
நம் மதம் உயர்ந்தது. அதை மற்ற மதத்துடன் ஒப்பிட்டு நமது உயரத்தை உலகிற்கு உணர்த்த வேண்டிய அவசியமில்லை. அடுத்த மதத்தை அசிங்கப்படுத்துவதும் நமது வேலையல்ல. அதே நேரம் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நம்மைச் சுற்றி ஒரு நெருப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்வதும் தவறில்லை. “எந்த தருணத்திலும் இந்து என்ற அடையாளத்தை இழக்கமாட்டோம். இந்துவாகவே பிறந்தோம், இந்துவாகவே இறப்போம்” என்று ஒவ்வொருவரும் நமக்குள் அழுத்திச் சொல்லிக்கொள்வோம்.
அடுத்த பிறவி என்று இருந்தால் அந்தமான் தீவில் அமைந்துள்ள, வடக்கு சென்டினல் தீவில் பிறக்கும் வரத்தை கடவுள் அருளவேண்டும். சூது, சூழ்ச்சி, வஞ்சம், மதமாற்றம், திருட்டுத்தனம் என்று எந்த தவறான செயல்களும் இல்லாத அந்த தீவு நாம் வாழும் மதமாற்ற உலகத்தைவிட எவ்வளவோ மேலானது.
- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...