போலீஸ்ல இவர் ரொம்ப ரொம்ப நல்ல போலீஸ் மட்டுமல்ல வித்யாசமான போலீஸும் கூட!

இதோ சந்தோஷ் மிஸ்ரா இப்போது ஐபிஎஸ் அதிகாரி மட்டுமல்ல, தனது மாநிலத்தில், தான் பணியாற்றும் மாவட்டத்தின் அமோரா பகுதியின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணித ஆசிரியரும் கூட.
போலீஸ்ல இவர் ரொம்ப ரொம்ப நல்ல போலீஸ் மட்டுமல்ல வித்யாசமான போலீஸும் கூட!

பாட்னாவைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மிஸ்ரா அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியர். பள்ளிக் கல்வியை சொந்த மாநிலமான பிகாரில் முடித்து விட்டு, புனே பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பை முடித்தார். படிப்பை முடித்ததும் அவர் பெற்ற கல்விக்கும், பார்க்கும் பணிக்கும் தொடர்பின்றி 4 ஆண்டுகள் நியூயார்க்கில் தகவல் தொழில் நுட்பப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

ஆண்டுக்கு 50 லட்சம் நிகர வருமானம் என்றிருந்த நிலையில் வேலை போரடிக்கத் தொடங்க, நாட்டுப் பற்று மிகுந்த ஒரு இந்தியக் குடிமகனாகப் பிறந்து விட்டு நாட்டுக்குச் சேவை செய்யும் விதத்திலான ஒரு பணியைச் சொந்த நாட்டிலேயே தேர்ந்தெடுத்தால் என்ன? எதற்காகத் தாய்நாட்டையும், பெற்றோரையும் விட்டு விட்டு இங்கே வந்து செய்த வேலையையே மீண்டும், மீண்டும் செய்து கொண்டு சுவாரஸ்யமின்றி பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றவே... உடனடியாக பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்தியா திரும்பினார் சந்தோஷ் மிஸ்ரா. சந்தோஷின் தந்தை லக்‌ஷ்மண் மிஸ்ரா ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பதால், அவருக்கு மகனது முடிவு ஆரோக்யமானதாகவே தோன்றி இருக்கிறது. அதனால் குடும்பத்தினர் சந்தோஷின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

இந்தியக் குடிமைப் பணிகளில் தேர்வானால் அதன் மூலமாகவும் நாட்டுக்குச் சேவை செய்ய முடியும் என்று முடிவெடுத்து 2011 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பியதும் முதன்முறையாக குடிமைப் பணித்தேர்வெழுத விண்ணப்பித்தார் சந்தோஷ். விண்ணப்பித்த முதல் முயற்சியிலேயே சந்தோஷின் கடினமான உழைப்புக்கு கைமேல் பலன் கிடைத்தது. முதல் முறை தேர்வெழுதிய போதே சந்தோஷ் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்ற தேர்வானார். 

தனது பணிக்காக பிகாரின் அமோரா மாவட்டத்தில் பொறுப்பிலிருந்தபோது ஐந்தாம் வகுப்பு மாணவனொருவன் வினோதமான புகாருடன் சந்தோஷைச் சந்தித்தான். அச்சிறுவன் தனது புகாரில் “வகுப்புத் தோழன் ஒருவன் தொடர்ந்து 15 நாட்களாகப் பள்ளிக்கு வருவதில்லை என்றும் காவல்துறையினர் உடனடியாக அவனைக் கண்டுபிடித்து அவன் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதைக் கேட்டறிந்து சொல்ல வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தான். புகாரளித்த சிறுவனை நிமிர்ந்து பார்த்த சந்தோஷுக்கு அந்தச் சிறுவனின் முகத்தில், அப்பழுக்கற்ற பரிசுத்தமான நட்புணர்வும் நண்பனைத் தேடும் ஏக்கம் தென்படவே சிறுவன் அளித்த புகார் தானே என அதை ஒதுக்காமல் அந்த புகாரை சீரியஸாக எடுத்துக் கொண்டு சிறுவனின் நண்பனைத் தேடத் துவங்கினார். தேடலில் கண்டறிந்த உண்மை சந்தோஷின் வாழ்க்கையில் மேலும் சுவாரஸ்யம் கூட்டக் கூடும் என்றோ அல்லது மன நிறைவைத் தரக்கூடும் என்றோ அப்போது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  

சிறுவனின் நண்பன் காணாமலொன்றும் போகவில்லை. அவன் அவனது தந்தைக்கு உதவுவதற்காக இனிப்பகம் ஒன்றில் பலகாரம் செய்ய உட்கார்ந்து விட்டது தெரிய வந்தது. இந்த விஷயத்தை தனது நேரடி ஆய்வில் கண்டறிந்த சந்தோஷ், படிக்க வேண்டிய வயதில் இந்தச் சிறுவன் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பின்றி இப்படி ஏவல் வேலை செய்து கொண்டிருக்கிறானே என்று தோன்றவே, நேராக அவனது தந்தையை அணுகி... ‘இந்த வயதில் இவன் செல்ல வேண்டியது பள்ளிக்குத்தானே தவிர இப்படி பலகாரக் கடைக்கு அல்ல!’ என்று கூறி சிறுவனின் படிப்புச் செலவுக்கு தானே தார்மீகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அன்று முதல் அச்சிறுவன் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினான். அப்போது தான் சந்தோஷுக்கு ஒரு விஷயம் உரைத்தது. இந்த நாட்டில் ஏதோ ஒரு சிறுவன் மட்டுமே இப்படி பாதிக்கப்படுவதில்லை. இது சங்கிலித் தொடர் போல பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தன்னால் முடிந்த வரை இப்படி ஆரம்பக் கல்வியை அரைகுறையாக நிறுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கும் சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களது கல்வி தடை படாமல் காக்க முடிந்தால் நல்லது என்று யோசித்தார். அதன் விளைவே தற்போது தனது ஐபிஎஸ் பணி நேரம் முடிந்து ஓய்வு நேரங்களில் பள்ளிச் சிறுவர்களுக்கு கணிதப் பாடம் எடுக்கும் தீர்மானம்.

இதோ சந்தோஷ் மிஸ்ரா இப்போது ஐபிஎஸ் அதிகாரி மட்டுமல்ல, தனது மாநிலத்தில், தான் பணியாற்றும் மாவட்டத்தின் அமோரா பகுதியின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணித ஆசிரியரும் கூட. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஐபிஎஸ் அதிகாரி சாக்பீஸும், கையுமாக பள்ளிக்கூடத்தில் நுழைந்து விடுகிறாராம். மாணவர்களுக்கும் இதில் ஆரவார சந்தோஷமே. பலருக்கும் படித்து ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். அதே சமயத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியே நேரடியாகத் தங்களைச் சந்தித்து வகுப்பறையில் பாடம் நடத்தினாரென்றால் அவர்களது சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும். சந்தோஷின் வகுப்பறைகளில் எந்த மாணவனும் இப்போதெல்லாம் பாதியில் படிப்பை புறக்கணித்து விட்டு குடும்பக் கஷ்டம் என்று சிறுதொழில்களில் எடுபிடியாக ஈடுபடுத்தப் படுவதில்லையாம்.

சந்தோஷின் வகுப்பறைகளில் அவர் தனது மாணவர்களின் எந்த வேண்டுகோளையும் புறக்கணிப்பதில்லை. கணிதமென்றாலே கசந்து போய் எட்டுக்காத தூரம் ஓடும் சிறுவர்களைக் கூட ஜிலேபி தருவதாகக் கூறி சமாதானப் படுத்தி ஆர்வத்துடன் கணிதம் பயில் வைக்கிறார் என்கிறார்கள். அது மட்டுமல்ல ஆரம்பப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு நோட்புக், பென்சில்கள், புத்தகப்பைகள் உள்ளிட்டவைகளையும் சந்தோஷ் வாங்கித் தருவதுண்டு என்கிறார்கள் பள்ளி வட்டாரத்தில்.

ஐபிஎஸ் அதிகாரியாக மாநிலத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது சந்தோஷின் தொழிற்கடமையாக இருக்கலாம். ஆனால் இப்படி பொதுச் சேவை செய்வதென்பது தனது சமூகக் கடமைகளில் ஒன்று என்பதில் தெளிவாக இருக்கிறார் சந்தோஷ். 

சந்தோஷ் மட்டுமில்லை... அவரது மாவட்டத்துச் சிறுவர்களும் கூட இப்போ செம ஹேப்பி!

Image courtesy: Daily Bhaskar

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com