காதலர் தினத்தில் மறக்க முடியாத இளையராஜாவின் 10 காதல் பாடல்கள்!

இளையராஜாவின் 10 காதல் கீதங்கள்!
காதலர் தினத்தில் மறக்க முடியாத இளையராஜாவின் 10 காதல் பாடல்கள்!

இயற்கை நமக்கு இரண்டு பாதைகளை காட்டுகிறது. ஒன்று வழக்கமான வாழ்க்கை. இன்னொன்று நமக்கேயான வாழ்க்கை. இதில் இரண்டாவது வகை வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால் அந்த வாழ்க்கையை மேலும் அழகாக்குவது காதல்தான். இந்தக் காலத்தில் (நாமும் இந்தக் காலம்தான் எனினும்) ஒரு குறுஞ்செய்தியில் காதலை வெளிப்படுத்தி, ஒரு மாலையில் சந்தித்து, இன்னொரு இரவின் முடிவில் பல காதல்கள் நீர்த்துப் போவதைப் பார்க்க முடிகிறது. நாங்கள் வாழ்ந்த காலகட்டம் உண்மையிலேயே சந்தோஷமாக, இசைவாக, இசையாக, காதலாக வாழ முடிந்த தொண்ணூறுகள். அதற்கு முக்கிய காரணம் இளையராஜா. எங்கும் இசையாக எப்போதும் மின் அலையாய் பாடல்கள் நமது விரல்நுனியில் இருந்தாலும், அன்றைய நாட்களில் எங்கேயோ எப்போதோ ஒரு பேருந்து நிலையத்தில் தேநீர் நிறுத்தத்தில் ஒலி பெருக்கியில் கேட்ட 'வா வா அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே' மூளைக்குள் ஊடறத்து காலத்தை உறைய வைக்கும் தன்மையுடையதாக இருந்தது.

ஒவ்வொரு மன நிலைக்கும் ஒவ்வொரு பாடல்களை தந்த ராஜா, காதலுக்கு மட்டும் ஆயிரமாயிரம் பாடல்களைத் தந்துள்ளார். எதை கேட்பது எதை விடுப்பது என எண்ணிக்கை வரிசையில் ஒரு பட்டியலில் சுருக்கிவிட முடியாது. காதல் எப்படி ஒரு கடலாக விரிந்திருக்கிறதோ அது போலத் தான் இளையராஜா இசையமைத்துள்ள காதல் பாடல்களும். இந்த பத்துப் பாடல்களை சும்மா ஒப்புக்குத் தான் தந்திருக்கிறேன். இவை முழுக்க முழுக்க எனது சொந்தத் தெரிவுகள். எனது விருப்பப் பட்டியலில் என்றென்றும் நிறைந்திருப்பவை. காதலர் தினத்தில் இந்தப் பாடல்களை பதிவிடுவதன் மூலம் காதலர்களுக்கு இசையால் வாழ்த்துக்களை தெரிவிக்கவே இந்த முயற்சி. அதுவும் நம் காலத்து திரை இசையெனில் என்னைப் பொருத்தவரையில் ராஜா மட்டுமே தான் ‘என்றென்றும் ராஜா’.

1. காதல் ஓவியம் பாடும் காவியம்

எத்தனையோ பாடல்கள் நாம் கேட்டிருப்போம். ஆனால் இளையராஜாவின் இந்தப் பாடல் நம் நினைவுகளை மடைமாற்றம் செய்துவிடும். ஏதோ ஒரு தூர தேச காதல் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளச் செய்துவிடும். ஜென்ஸியின் குரல் இதம் இதம் அவ்வளவு மென்மையான இதம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? காதலில் மிதப்பவர்கள், கனவு காண்பவர்கள் இவர்களை இலவசமாக விண்வெளியில் உலா வரச் செய்துவிடும் இந்தப் பாடலை ஒரு முறைக் கேட்போமா? 

2. காதலின் தீபம் ஒன்று

காதலர் தினத்தன்று மட்டுமல்ல, இந்தப் பாடல் காதல் என்று சொல்லும் போதே நினைவிடுக்குகளிலிருந்து விடுபட்டு மேலெழுந்து வந்துவிடும். ஒரு குரல் என்னவெல்லாம் செய்யும் என்பதை இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த பாடகரான எஸ்.பி.பியின் குரல் சொல்லாமல் சொல்லும். கண்களை மூடிக் கொண்டு இந்தப் பாடலை கேட்கலாம், அல்லது கண்களைத் திறந்து காட்சிகளை ரசித்தபடியும் பார்க்கலாம். எது செய்தாலும் அது இக்கணத்தை பொற்கணமாக மாற்றச் செய்துவிடும்.

3. விழியிலே மணி விழியிலே

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என இந்தப் பாடலை இசைஞானியின் அபார இசையில் கேட்கலாம். இசைக்கு மொழி தேவையில்லை என்பதை 'ஜானே தூனா' கேட்கும் போது உணர்வோம். போலவே 'சங்கத்தில் பாடாத கவிதை' என்ற பாடலைக் கேட்கும் போதும் தோன்றும் உணர்வு, 'தும்பி வா தும்பக்குடத்தில்’ கேட்கும் போதும் பன்மடங்காகும். நல்ல பாடல்களை நாம் ரசிக்கும் போது மொழி ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு இந்தப் பாடலே சான்று.  

4. வளையோசை கலகலவென

இதுவரை காதலிக்காதவர்களைக் கூட இந்தப் பாடல் காதலிக்கச் செய்துவிடும். காதல் பற்றிய எதிர்ப்புணர்வை உடையவர்களை குற்றவுணர்வுக்குள்ளாகி விடும் தன்மையுடையது இப்பாடல். கவிதை எழுதத் தெரியாதவர்களையும் ஒருசில வரிகளை எழுதச் செய்துவிடும். இந்த இசை, அதன் காலகட்டம், இதில் நடித்துள்ள கமல் ஹாசன் மற்றும் அமலா, இசைஞானி என்று அந்த மாய உலகத்தை மீட்டுறுவாக்கம் செய்ய முடியாதா என்று ஏங்கச் செய்துவிடும் இப்பாடல். எங்கள் வாழ்க்கை எங்கள் வளம் மங்காத ராஜாவின் இசையென சங்கே முழங்கு என்று பித்தேறச் செய்துவிடும். என்னுடைய விருப்பப் பட்டியில் நீங்கா இடம் பிடித்த இந்த வளையோசையை ஒருபோதும் காதலர்களால் மறுக்க முடியாது.

5. பூந்தளிர் ஆட..

காதல் ஒருவர் மனத்தினுள் நுழைய அனுமதி கேட்பதில்லை. அது வரும் நேரத்தில், பருவத்தில் சரியாக வந்துவிடும். அதன் மெல்லிய சப்தத்தைக் கேட்கத் தெரியாதவர்கள் வாழ்வில் எதோவொன்றை இழந்தவர்களாகிறார்கள். பதின் பருவத்தில் தோன்றும் இனக் கவர்ச்சியல்ல காதல். அது வாழ்நாள் முழுவதும் தொடரும் அனுபந்தத்திற்கான கீதம். இந்தப்  பாடல் எனக்குப் பிடித்த காரணம் இதில் என் பெயர் உச்சரிக்கப்படுவதினாலும் கூட இருக்கலாம்.

6. நீ தானே என் பொன் வசந்தம்

ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது. இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனத்துக்குள்ளிருந்து ஏதோ ஒரு நீறூற்றி வண்ணமயமாக நம் மூளை வரைத் தெறிக்கும். ரசனைக்குள் மூழ்கி, ரசனையில் நனைந்து, ரசனையில் காய்ந்து, என ரசித்து வாழும் காதலர்கள் இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒவ்வொரு வரியையும் உண்மை என உணர்வார்கள்.  பாடும் நிலா பாலுவின் உற்சாகக் குரலில் நினைவெல்லாம் நித்யாவிலிருந்து நம் நினைவெல்லாம் நிறைத்த பாடலிது. 

7. சுந்தரி கண்ணால் ஒரு சேதி

உறக்கத்துக்குள்ளும் ஒலிக்க முடிகின்ற பாடல் எனக்கிது. 'நான் உனை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன்’ இந்த வரியும் அது தரும் நினைவுகளும் காதலிப்பவர்களின் இதயத்தில் பொன் எழுத்துக்களால் கல்வெட்டாக பதிந்துவிட்டவை. இதன் காட்சியமைப்பும், மென் சோகமும், பிரிவுத் துயரும் காதலை காவியமாக்குகிறது. காவியத்தை வாழ்க்கையாக்குகிறது. காதலின் ஆழத்தை உணர முடியுமெனில் அது இப்பாடலைக் கேட்பதன் மூலம் நிகழும்.

8. ராஜ ராஜ சோழன் நான்

மழைத் தூறலில் நின்று கொண்டு, கையில் ஆவி பறக்கும் ஒரு சூடான காப்பி கோப்பையை வைத்துக் கொண்டு இளையராஜாவின் இந்தப் பாடலை ஒரு முறையேனும் கேட்டிருப்பீர்கள் எனில், நீங்கள் சொர்க்கத்துக்குள் காலடியெடுத்தவராக உணர்ந்திருப்பீர்கள். இசையும், அந்தப் பாடல் வரிகளும் இயைந்து மெய்சிலிர்க்கச் செய்யும் அற்புத அனுபவத்தை அள்ளித் தரும் பாடலிது. காதலின் சுவை அறிந்தவர்களுக்குத் திகட்ட திகட்ட பாடல்களை தந்தவர் ராஜா. ராஜ ராஜ சோழன் இசைக் காதலர்களுக்கு அவர்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?

9. மணியே மணிக்குயிலே மாலை இளம்

இந்தப் பாடலின் இடையே ராஜா ஒரு சிரிப்பு சிரிப்பார். பாடலை அதன் வரிகளை அந்தச் சூழலை கேட்கும் நம்மை என அனைத்துமே தட்டாமாலை சுழல்வது போலச் சுழலும். நம்மை வேறாக்கி விடும் வல்லமை ஒருவருக்கு உண்டெனில் அது காதலுக்கும், இசைக்கும் மட்டுமே சாத்தியம். அவ்வகையில் இந்தப் பாடல் உன்னதமான ஒரு உணர்வை உயிருக்குள் ஊட்டும். கேளுங்கள்.

10. கொடியிலே மல்லிகைப்பூ....

இந்தப்  பாடலைக் கேட்கும் போதெல்லாம் மெல்லிய கோடாக உங்கள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடினால், அதே சமயத்தில் சன்னமாக உங்கள் இதழோரம் புன்னகையும் அரும்பினால், நீங்கள் காதலிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். அவ்வகையில் அசீர்வதிக்கவும் பட்டுள்ளீர்கள். ஒரு தேவதையாக உங்களை உணரச் செய்ய வல்லது காதல் எனில், அதை எடுப்பதா கொடுப்பதா என்பது போராட்டமே. எந்த அளவுக்கு கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு பெற முடிந்த அன்பின் பேரமுதம் காதல் மட்டும்தானே?

நன்றி : இசைஞானி இளையராஜா / ராஜ் விடியோ விஷன் / யூ ட்யூப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com