யார் இந்த ‘கியூபிட்’? கிரேக்க மன்மதக் கடவுளான கியூபிட்டின் காதல் கதை!

மத்தவங்கள காதல் வலையில் விழ வைக்கிற இந்த கியூபிட் பையனுக்கும் ஒரு அழகான காதல் கதை இருந்து இருக்குங்க, அது என்னனு பார்ப்போம் வாங்க.
யார் இந்த ‘கியூபிட்’? கிரேக்க மன்மதக் கடவுளான கியூபிட்டின் காதல் கதை!

நமக்கு ஒருவர் மேல் காதல் வருவதற்கு இந்த ‘கியூபிட்’ விடும் காதல் அம்புதான் காரணம்னு பல கதைகளை கேட்டு இருப்போம். அதனாலேயே எப்போதும் கையில் வில்லும் அம்புமாக, ரெக்கையுடன் பறந்து கொண்டிருக்கும் இந்த கியூபிட்டின் உருவத்தைக் காதலின் ஒரு முக்கிய சின்னமாகவே பலரும் பார்க்கிறோம். 

யார் இந்த கியூபிட்? காதலுக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு? அப்படினுலாம் என்னைக்கினா யோசித்து இருக்கிங்களா? எப்பவும் மத்தவங்கள காதல் வலையில் விழ வைக்கிற இந்த கியூபிட் பையனுக்கும் ஒரு அழகான காதல் கதை இருந்து இருக்குங்க, அது என்னனு பார்ப்போம் வாங்க.

கிரேக்க கடவுளான இந்த கியூபிட் (Cupid) வேற யாரும் இல்லைங்க நம்ம ஊரு பாஷைல சொல்லனும்னா மன்மதன். யார்? எப்போ? எங்கே? யாரை? காதலிக்கனும்னு முடிவு பன்றது இவர்தான். கிரேக்கர்களின் புராண இதிகாசங்களின் படி பார்த்தால் இவர் தான் காதல், ஆசை, காமம் மற்றும் அன்பிற்கான கடவுள். அழகின் கடவுளான வீனஸ் அவர்களின் இரு மகன்களுள் ஒருவர். இப்படி எல்லாரையும் காதல் வசப்பட வைக்கிற இந்த கியூபிட்டுக்கும் ஒரு அழகான காதல் கதை இருந்திருப்பதா கிரேக்க வரலாறு சொல்லுகிறது. இந்தக் காதலர் தினத்துக்குக் காதல் கடவுளுடைய காதல் கதையை தெரிஞ்சிப்போம்!

ஆபத்தில் தள்ளிய அழகு:

முன்னொரு காலத்தில் ரோமின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வந்த ராஜாவுக்கு 3 மிகவும் அழகான மகள்கள், அவர்களில் பேரழகியாக இருந்தவள் சைக் (Psyche). சைக் என்பதற்குத் தமிழில் ஆன்மா எனப் பொருள். இவளை அனைவரும் அழகின் கடவுளான வீனஸின் மறு உருவமாகவே பார்த்தனர். காலப் போக்கில் பலரும் வீனஸை மறந்து வாழும் கடவுளாகவே சைக்கை வழிப்பட்டனர். இதனால் ஆத்திரமும், பொறாமையும் அடைந்த வீனஸ், அவள் அழகைக் கண்டு வியக்கும் எவருக்கும் அவள் மீது காதல் வராதபடி செய்து விடுகிறார். தனது மற்ற இரு மகள்களுக்கும் திருமணம் ஆன பிறகும் மூன்றாவது மகளுக்கு மட்டும் திருமண வரன் ஏதும் வராததால் கவலையடைந்த சைக்கின் தந்தை ஒளியின் கடவுளான புளூடோவிடம் சென்று வேண்ட, “உன் மகளை மலையின் உச்சியில் தனியாக விட்டு விட்டு வா” என்று கடவுள் உத்தரவிட்டதைக் கேட்டு சைக்கின் தந்தையும் வலுக்கட்டாயமாக அவளை அழைத்துச் சென்று மலையின் விளிம்பில் நிக்க வைத்து விட்டு வருகிறார்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்த நினைத்த வினஸ் தனது மகன் கியூபிட்டை அழைத்து இந்த உலகிலேயே மிகவும் கொடூரமான, பார்க்கவே பயங்கரமாக இருக்கும் பாம்பு உடல் கொண்ட ஒரு அரக்கனுக்கு இவள் மேல் காதல் வரும்படி செய்துவிடு என்று உத்தரவிடுகிறார். தாயின் கட்டளையை ஏற்று கியூபிட்டும் சைக் தனியாக நின்று கொண்டிருக்கும் மலையின் விளிம்பிற்குச் செல்கிறான். திடீரென்று மேற்கில் இருந்து வீசிய தென்றல் சைக்கை அப்படியே காற்றில் தூக்கிச் செல்கிறது. காற்றில் மிதந்தவாறே சில தூரம் பயணித்த பிறகு ஒரு பிரம்மாண்டமான கோட்டையின் வாசலில் அவளைக் கீழே இறக்குகிறது. அந்தக் கோட்டையை பார்த்து வியந்தபடியே நின்று கொண்டிருந்த சைக்கிற்கு ஒரு அசரீரி கேட்கிறது, “இனி இதுதான் உன் வீடு, உள்ளே செல்” என்று அந்தக் குரல் சொல்லியது.

மர்ம காதலன்:

அந்தக் கோட்டை முழுவதும் விலை மதிக்க முடியாத போருட்களால் உருவாகி இருப்பதைக் கண்டு சைக் வியந்து போகிறாள். நடக்கும் தரை முழுவதும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, சுவர்கள் எல்லாம் வைரம், வைடூரியம், ரூபி, எமரால்ட் போன்ற விலையுர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு அறை அவள் கண்ணில் படுகிறது, மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, உள்ளே செல் என்று. அதைக் கேட்டு சைக்கும் உள்ளே சென்றால் அறை முழுவதும் இருள் சூழ்ந்து துளி வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. அந்த இருளில் யாரோ தன்னை தொடுவதை சைக் உணர்கிறாள். அந்த உணர்வை வைத்தே தன்னை தொடுவது ஒரு ஆண் என்பது அவளுக்குத் தெரிகிறது, அந்த ஆண் அவளிடம் “நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், உனக்கு எந்தக் குறையும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகப் பார்த்து கோள்வேன் உனக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் நான் சொல்வதை நம்பு, அதே சமயம் என்றுமே நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள முயலக் கூடாது, மேலும் என் முகத்தைப் பார்க்கவும் நீ என்றுமே ஆசைப் படக்கூடாது” என்று மிகவும் கவர்ச்சிகரமான அந்தக் குரலுக்கு சைக்கும் சற்றும் யோசிக்காமல் ஒப்புக் கொள்கிறாள். 

தினமும் இரவில் மட்டும் சைக்குடன் நேரத்தை அந்த இருட்டு அறையிலேயே கழித்துவிட்டு காலைச் சூரியன் உதயமாகுவதற்கு முன்பே ஜன்னலின் வழியாக வெளியே செல்வதே சைக்கின் காதலனது வழக்கம். இப்படியே பல நாட்கள் கழிகிறது பின்பு ஒரு நாள் சைக் கர்ப்பமாகிறாள், தனது கணவன் யார் என்றே தெரியாத நிலையில் எப்படி ஒரு குழந்தைக்கு தாய் ஆவது என்ற கவலையில் அவளை அந்தக் கர்ப்ப செய்தி ஆழ்த்துகிறது. சைக்கின் இந்தப் பிரம்மாண்டமான வாழ்க்கையைப் பார்த்து பொறாமை அடைந்த அவள் சகோதரிகள் இருவரும் ஏற்கனவே குழப்பத்தில் உள்ள சைக்கை மேலும் பயமுறுத்துகிறார்கள். “ஒரு வேளை நீ யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ அவர் மிகவும் பயங்கரமான ஒரு பாம்பாக இருந்தால் என்ன செய்வாய் நீ?” என்று அவளை தங்களது பேச்சால் தூண்டி தனது கணவனின் பேச்சை மீறிச் செயல்பட தூண்டுகிறார்கள்.

சத்தியத்தை மீறியதால் கணவனைப் பிரியும் சைக்:

தனது சகோதரிகளின் பேச்சைக் கேட்ட சைக்கும் அடுத்த நாள் விடிவதற்கு முன் கையில் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு ஒரு வேளை அவர்கள் சொன்னது போல் கொடூரமான ஒரு அரக்கனாக இருந்தால் என்ன செய்வது என்கிற பயத்தோடு அறையினுள் நுழைகிறாள். விளக்கை உயர்த்தி தனது கணவனின் முகத்தை வெளிச்சத்தில் பார்த்து உறைகிறாள். இந்த உலகிலேயே மிகவும் அழகான ஆண் என்று சொல்லும் அளவிற்கு கியூபிட் படுத்திருப்பதை பார்க்கிறாள். அந்த மகிழ்ச்சியில் கை நழுவ, அந்த விளக்கில் இருந்த எண்ணெய் கியூபிட்டின் மேல் பட்டு காயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தூக்கத்தில் இருந்து விழித்த கியூபிட் “நீ என் வார்த்தையை மீறிவிட்டாய், இனி என்னால் உன்னுடன் வாழ முடியாது” என்று கோவத்துடன் ஜன்னல் வழியாகப் பறந்து செல்கிறான். 

தனது தாயின் பேச்சைக் கேட்டு சைக்கிற்கு ஒரு அரக்கன் மீது காதல் வரச் செய்ய சென்ற கியூபிட் அவளது அழகில் மயங்கி அந்த அம்பில் தன்னை தானே குத்தி சைக்கின் மீது காதல் வயப்படுகிறான்.

தனது கணவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடன் சேர்ந்து விட வேண்டும் என்ற முடிவு எடுத்து சைக், கியூபிட்டை தேடி செல்கிறாள். வழியில் கியூபிட்டின் தாய் அவளைத் தடுத்து “உனக்கு என் மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நான் வைக்கும் சில சோதனைகளில் நீ தேர்ச்சி பெற வேண்டும்” என்று நிபந்தனை போடுகிறார். அதற்கு சைக்கும் ஒப்புக் கொள்கிறாள்.

காதலை நிரூபிக்க 3 பரீட்சைகள்:

முதலாவதாக ஒரு பல வகையான விதைகள் ஒன்றாகக் கலந்து மலை போல் உயர்ந்திருக்கும் ஒரு குவியலை காட்டி இன்று இரவுக்குள் இதில் இருக்கும் ஐந்து வகையான விதைகளையும் தனி தனியே பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார், சற்றும் சாத்தியம் இல்லாத அந்த முயற்சியில் சைக் படும் கஷ்டத்தைப் பார்த்த ஒரு எறும்பு கூட்டம் அதை அவளுக்குப் பிரித்து தருகிறது. இதனால் முதல் பரீட்சையில் சைக் வெற்றி பெறுகிறாள். 

அடுத்ததாக மிகவும் முரட்டுத் தனமான தங்க ரோமங்களை உடைய ஆட்டின் உடலில் இருந்து அந்தத் தங்கத்தை எடுத்து வருமாறு சொல்கிறார். அங்கும் ஆற்றின் கடவுள் அவளுக்கு உதவி செய்து ஆட்டின் தங்க ரோமங்களை அவளுக்குத் தருகிறார், இதனால் இரண்டாவது பரீட்சையிலும் சைக் தேருகிறாள்.

இறுதியாக மரண உலகம் என்று சொல்லப்படும் பாதாளத்திற்குச் சென்று இறப்பின் ராணியிடமிருந்து சிறிது அழகை ஒரு பெட்டியில் வாங்கி வர வேண்டும் என்று வீனஸ் சொல்கிறார். எப்படி அங்குச் செல்வது என்று சைக் தவித்து நிற்கும் நிலையில் மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, சில கேக் துண்டுகளையும், வெள்ளி நாணயங்களையும் எடுத்துக் கொண்டு இந்தத் திசையில் செல் என்கிறது. அதன்படி சைக்கும் செல்ல மரண உலகமான பாதாள உலகத்தின் நுழைவாயிலைப் பாதுகாக்கும் மூன்று தலை நாய்களுக்கு கேக் துண்டை கொடுத்து அதைக் கடந்து உள்ளே செல்கிறாள். பின்னர் அங்கிருக்கும் ஆற்றைக் கடக்க படகோட்டியிடம் வெள்ளி நாணயங்களைக் கொடுத்து மரணத்தின் ராணியிடமிருந்து அழகைப் பெட்டிக்குள் வைத்து மிகவும் பத்திரமாக கொண்டு வருகிறாள்.

முடிவில்லா உறக்கம்:

வினஸின் கோட்டை அருகே வந்த சைக் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் அழகைத் தானும் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்கிற ஆசையோடு பெட்டியை திறக்கிறாள், ஆனால் அந்தப் பெட்டிக்குள் முடிவில்லா தூக்கம் மட்டுமே இருக்கிறது, அதனால் மயங்கி விழுந்த சைக் ஆழ்ந்த உறக்கம் செல்கிறாள். அந்த நேரத்தில் காயங்கள் குணமடைந்து தான் செய்தது தவறு என்பதை உணர்ந்த கியூபிட் மீண்டும் தனது மனைவியான சைக்குடன் சேர்ந்து வாழ முடிவு செய்து அங்கு வந்த கியூபிட் கர்ப்பவதியான தனது மனைவி மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின்னர் கடவுள்களின் அமரத்துவத்திற்குக் காரணமான அமிழ்தத்தை சைக்கிற்கு கொடுத்து அவளைத் தூக்கத்தில் இருந்து மீட்கிறான். பின்னர் அனைத்துக் கடவுள்களின் ஆசியுடன் இவர்கள் இருவரது திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது.

இவர்கள் இருவருக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது, அதற்கு ‘பிளெஷர்’ (Pleasure)  எனப் பெயரிடுகிறார்கள். கியூபிட் அன்பு மற்றும் ஆசையின் வடிவமாக, சைக் ஆன்மாவின் வடிவமாக, இவர்களின் மகள் பிளேஷர் அதனால் கிடைக்கும் இன்பத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்டு, இந்த மூன்றும் சேர்ந்ததே காதலாகி உலகில் உள்ள அனைவரது காதல் வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com