பாலூட்டி வளர்த்த கிளியும் பஞ்சவர்ணக்கிளியும்...

தன் திறமையால் யாரிடமும் வளைந்து கொடுக்காமல்  ‘தான்’ என்ற அகங்காரத்தை வளர்த்துக் கொண்ட கதாபாத்திரமான பாரிஸ்டர் ரஜினிகாந்தின் பாசப் போராட்டம் டி.எம்.சௌந்திரராஜனின் நவரசம் தெறிக்கும் குரலில்  'பாலூட்டி வ
பாலூட்டி வளர்த்த கிளியும் பஞ்சவர்ணக்கிளியும்...

திரைப்படம் என்பது பல திறமையாளர்களின் கூட்டு முயற்சி என்பது தெரிந்ததே. அத்தகைய முயற்சியில், சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் முழுமையான உழைப்பை ஒரு தவ நிலை அர்ப்பணிப்போடு அளிக்கும்போது அது சரித்திரத்தின் ஒரு பக்கமாகின்றது. 1973ல் வெளி வந்த ‘கௌரவம்’ திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உச்சகட்ட திறமையை வெளிக்கொணர்ந்த படங்களில் ஒன்று.  வியட்நாம் வீடு சுந்தரம் மிக நேர்த்தியாக திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய திரைப்படம் ‘கெளரவம்’. ஒரே படத்தில் எத்தனை வேடங்கள் போட்டாலும் தன் முகபாவனை, உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் மலையளவு வித்தியாசம் காட்டும் சிவாஜியின் அசுர உழைப்பு, பண்டரிபாய், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், உஷாநந்தினி, வி.கே.ராமசாமி என பலரும் பாராட்டும் படி நடித்திருந்த படம் அது.

சிவாஜியின் புருவத் துடிப்பைக் கூட நேர்த்தியாகக் காட்டும் வின்சென்ட்டின் கேமரா மேற்பார்வை, எடிட்டர் ஆர்.தேவராஜனின் துல்லியமான படத் தொகுப்பு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் பிரமிக்க வைத்தன. அதில் ஒரு பாடல் நடிப்பு, இசை மற்றும் அனைத்து வகையிலும் காலத்தின் நாட்குறிப்பில் அதிசயச் செய்தியாய் பதிந்துவிட்டது.  

தனது படிப்பு, உழைப்பு மற்றும் நுண்ணறிவால் நீதிமன்றமே நடுங்கும் வழக்கறிஞராக வலம் வரும் சிவாஜியின் ‘பாரிஸ்டர் ரஜினிகாந்த்’ என்ற கதாபாத்திரத்தை எதிர்த்து அவரது வளர்ப்பு மகனான ‘வழக்கறிஞர் கண்ணன்’ என்ற இன்னொரு சிவாஜி கதாபாத்திரம் வழக்காட முடிவுசெய்கின்றது. ஆத்திரமடைந்த தந்தை வளர்ப்பு மகனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு ஆழ்மனத்  துயரின் வெளிப்பாடாக ‘பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி’ என்ற பாடலைப் பாடுகிறார்.

இந்துஸ்தானி  இசையிலிருந்து கர்நாடக  இசைக்கு பயணித்து வந்த ‘திலங்’ என்ற அற்புதமான ராகத்தில் ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்...’ என்று சாஸ்த்திரீயமாக ஏற்கனவே  பாடல் அமைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன்  ‘கௌரவம்’ படத்தில்  ‘பாலூட்டி வளர்த்த கிளி’ பாடலை அதே ‘திலங்’ ராகத்தில் கேட்பவரின் இதயத்தையே பிழிந்தெடுக்கும் விதமாக இசையமைத்திருந்தார்.

வாசகர்கள் இருபாடல்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வசதியாக திலங் ராகத்தில் அமைந்த  பஞ்சவர்ணக்கிளி பாடல்...

‘பாலூட்டி வளர்த்த கிளி’ பாடலுக்கான இசைக்கோர்வைகளில் ஷெனாய் வாத்தியம் சிவாஜியின் இதயத்தில் பீறிடும் அழுகையின் குரலாய் நிஜமாக ஒலித்தது. வயலினிசைக் கோர்வைகளும் தாளவாத்தியங்களும் கதையின் போக்கினால் தர்ம நியாயங்களை யோசித்துத் தள்ளாடும் ரசிகனை தாளாத சோகத்தில் தாலாட்டின.

பாடலின் காட்சிக்கு முதல் காட்சியாக  தந்தையான பாரிஸ்டர் ரஜினிகாந்த் மகனுடன் கோபமாக விவாதித்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். மகனும் வெளியேறுகிறார். ஏற்கனவே கோபத்தில் ஒரு பாட்டில் மதுவை குடிக்க ஆரம்பிக்கும் தந்தை, கையில் மதுக் கோப்பையுடன் மனைவியிடம் பேசி மகன் வெளியேறிவிட்டதை அறிந்து வருத்தத்துடன் வரலாறு படைத்த வசனமான "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து அது ஆத்த விட்டே பறந்துடுத்து" என்ற வசனத்தைக் கூறிவிட்டு பாலூட்டி வளர்த்த கிளி பாடலைப் பாடத் தொடங்குகிறார். அவரது மிக நுண்ணிய நடிப்பு துவங்குகிறது.

தன் திறமையால் யாரிடமும் வளைந்து கொடுக்காமல்  ‘தான்’ என்ற அகங்காரத்தை வளர்த்துக் கொண்ட கதாபாத்திரமான பாரிஸ்டர் ரஜினிகாந்தின் பாசப் போராட்டம் டி.எம்.சௌந்திரராஜனின் நவரசம் தெறிக்கும் குரலில்  'பாலூட்டி வளர்த்த கிளி...' என்ற பாடலாக வெடிக்கிறது. கம்பீரத்தின் அடையாளமான தன் கணவனை என்றுமே இந்த நிலையில் பார்த்திராததால் கையறு நிலையில் கண்ணீர்க் கடலாகும் பண்டரிபாயிடம்... சிவாஜி ஒரு குழந்தை போல் தன மனக்குமுறலை  காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசனின் காவிய வரிகளில்  வெளிப்படுத்துகின்றார்.

படத்தின் முழுக் கதையையும் இந்தப் பாடலிலேயே சொல்லிவிடும் கவியரசு மிக நுணுக்கமாக கதையின் பல விஷயங்களை பாட்டில் பதிவிடுகின்றார். ‘வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்...’ என்ற வரிகளில் அவன் வளர்ப்பு மகன் என்பதை பதிவதோடு ஒரு சீனியர் வழக்கறிஞராக சிவாஜி தன் மகனுக்கு சட்டத்தின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து தைரியத்தை வளர்த்ததை  வழக்கறிஞர் தொழிலின் ஆதாரமான விஷயமாகப் பதிகிறார்.

பாடலின் தொடக்கத்தில் ஆக்ரோஷத்தோடு மதுவை அருந்தும் சிவாஜி பாடலின் மூன்று சரணங்களிலும் மது போதையால் ஏற்படும் உடல் தளர்ச்சியை மெல்ல மெல்ல மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார். கடைசி சரணம் முடித்து மனைவியில் மடியில் தலைவைத்து கால் நீட்டிப் படுக்கிறார். பாடலின் தாளம் தரும் வேகம் பிசகாமல் தன் உடலின் அனைத்து அங்கங்களிலும் நடிப்பை வெளிப்படுத்துக் காட்டிய டாக்டர் செவாலியே சிவாஜி கணேசனுக்கு இந்தக் காட்சியைச் சொல்லிக் கொடுக்க ஒரு டைரக்டர் வேண்டுமா? பாடலும் படமும் தலைமுறைகளைத் தாண்டி சரித்திரம் படைக்கின்றன.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பொதுவாக டி.எம்.எஸ் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல்களுக்கு படப்பிடிப்பில் சிவாஜி வாயசைத்து பாடுவது வழக்கம். ஆனால் சில காரணங்களால் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடி சிவாஜி வாயசைத்து படமாக்கப்பட்ட இந்தப் பாடல் காட்சியில் எம்.எஸ்.விக்கு திருப்தியில்லாததால் மீண்டும் பாடல் காட்சியைத் திரையில் ஓடவிட்டு அதற்கேற்ற பாவங்களுடன் டி.எம்.சௌந்தர்ராஜனைப் பாட வைத்துப் பதிவு செய்தார்.  சிவாஜி என்ற வரலாற்றுத் திரைநாயகனின் மிக நுணுக்கமான நடிப்பிற்கேற்றபடி அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து பாடல் காட்சிகளில் சிவாஜியின் ஆன்மா தனது குரல் தான் என்று நிரூபித்தார் டி.எம்.எஸ்.

டெஸ்லா கணேஷ் 
இசை ஆராய்ச்சியாளர்
teslaganesh@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com