சிறார் பாலியல் வன்முறைச் சூழலை சட்டப்படியும், உளவியல் ரீதியாகவும் எப்படிக் கையாள்வதெனத் தெரிந்து கொள்ளுங்கள்?

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும் போதே எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதையும், நம்மைச் சுற்றியுள்ள அபாயகரமான சூழல்களையும் சொல்லிக் கொடுத்தல் அவசியம்.
சிறார் பாலியல் வன்முறைச் சூழலை சட்டப்படியும், உளவியல் ரீதியாகவும் எப்படிக் கையாள்வதெனத் தெரிந்து கொள்ளுங்கள்?

குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைக்கெதிராக நேற்று வெளியான கட்டுரையின் இரண்டாம் பாகம் இது...

முதல் பாகத்துக்கான லிங்க்...

திருமதி டெய்ஸி இராணியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு பிறகு மீடியாக்களில் வெளிவந்துள்ளது. ஆனால், சம்பவம் நடந்த சில தினங்களில் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் டெய்ஸி. அவருடைய குடும்பம் நடந்த தவறை விட, அதை மறைப்பதற்கு மட்டுமே அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்பது நமக்குப் புரிகிறது.  இந்த நிலை மாற வேண்டுமென்றால், முதலில் செய்ய வேண்டியது தனக்கு நடந்த விஷயத்தை தைரியமாக வெளியே சொல்வதுதான். இதில் டெய்ஸி எந்த தவறுமே செய்யவில்லையே! பிறகு ஏன் தவறை மறைக்க வேண்டும்?  குடும்பம், கெளரவம் போன்றவற்றை மனத்தில் கொண்டு டெய்ஸி குடும்பம் செய்த தவறு, நாசர் என்ற அந்த மனித மிருகம் கடைசிவரை தண்டிக்கப்படவேயில்லை. அவன் இன்னும் எத்தனை குழந்தைகளை சிதைத்தான் என்பது யாருக்கும் தெரியாது.

அன்று டெய்ஸிக்கு நடந்த தவறு நாளை நமக்கு மிகவும் அறிமுகமான ஒரு குழந்தைக்கும் நடக்கலாம். அதற்கு முன் இது போன்ற சூழலை எப்படி கையாள்வது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இது ஏதோ உங்களுக்கு தெரியாத விஷயங்களை பட்டியலிடுவதல்ல. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்கள் தான் மீண்டும் உங்கள் பார்வைக்கு.

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக் கதையை படிப்போம்;
    
ஒரு தெரு நாய். அதற்கு ஒரு குட்டி. எங்கு சென்றாலும் குட்டியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும். எப்படி வாழ வேண்டும், எவ்வாறு நல்லவனாக இருக்க வேண்டும்! என்றெல்லாம் அடிக்கடி குட்டிக்கு டிப்ஸ் கொடுத்தது.  

‘நீ வீரனாக வாழவேண்டும். எந்தக் காலத்திலும் தீயவர்களுக்கு துணை போகக்கூடாது. நமக்கு உணவளிப்பவர்களுக்கு நன்றியுடன் இருக்கவேண்டும்.’  என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே சென்றது.      

ஒரு நாள், நாய் தன் குட்டியோடு சென்று கொண்டிருந்தது. எதிரே ஒரு முரட்டு நாய் வந்தது. முரட்டு நாயைப் பார்த்தவுடன் தெரு நாய்க்கு பயம். அருகில் இருந்த புதரில் போய் மறைந்து கொண்டது.  குட்டியும் பின் தொடர்ந்தது.  

‘நாம் ஏன் புதருக்குள் ஒளிந்து கொள்கிறோம்? என்று கேட்டது குட்டி.  

‘கொஞ்ச நேரம் பேசாம இரு', என்றது தெரு நாய்.  

இருவரும் ஒளிந்திருந்த புதரை கடந்து சென்றது முரட்டு நாய்.  ‘அப்பாடா', என்று பெருமூச்சு விட்டது தெரு நாய். அதுவரை பொறுமையாய் இருந்த குட்டி  சட்டென்று புதரைவிட்டு வெளியே வந்தது.  முரட்டு நாயைப் பார்த்து ‘வள் வள்', என்று குரைத்தது.  கோபமடைந்தது முரட்டு நாய். குட்டியை நோக்கி ஓடிவந்தது. பயந்து போன குட்டி, புதருக்குள் புகுந்து தெரு நாயின் பின்னால் ஒளிந்து கொண்டது.  

குட்டியைத் துரத்தி வந்த முரட்டு நாய், புதரில் பதுங்கியிருந்த தெரு நாயைக் கடித்துக் குதறியது.  வலி பொறுக்க முடியாமல் தெரு நாய் கத்திக் கொண்டே ஓடியது.  பின் தொடர்ந்து குட்டியும் ஓடியது.   நீண்ட தூரம் ஓடிய பின் சோர்ந்து போய் ஓரிடத்தில் நின்றது நாய்.  பின்னால் ஓடி வந்த குட்டியிடம் பேசியது.  

‘அந்த முரட்டு நாயைப் பார்த்து ஏண்டா குலைச்ச?' என்று வலியோடு கேட்டது தெரு நாய்’.   

‘அது கடிக்குமுன்னு எனக்கு எப்படித் தெரியும்?  ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம்  செய்யனும்னு சொல்லிக்கொடுத்தியே, எதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு ஒரு நாளாவது சொல்லிக் கொடுத்தியா? அப்படி சொல்லிக் கொடுத்திருந்தா இப்படி ரத்தம் சொட்டச் சொட்ட ஓடற நிலைமை வந்திருக்காதில்ல' என்றது குட்டி.  

இதைத் தான் பழமொழியாக சொல்வார்கள்.  “குட்டி குலைத்து நாய் தலையிலே விழுந்தது” என்று.   

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும் போதே எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதையும், நம்மைச் சுற்றியுள்ள அபாயகரமான சூழல்களையும் சொல்லிக் கொடுத்தல் அவசியம். எந்தெந்த விஷயங்கள் அவை என்பதை பார்ப்போம்.

  • ‘நம்மிடம் சொல்லப்பட்ட ரகசியத்தை காப்பது', என்பது பெரியவர்களுக்கு வேண்டுமானால் பெருமைக்குரிய விஷயமாக இருக்கலாம். அதை நல்ல பழக்கம் என்றுகூட சொல்லலாம்.  ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை, அதுவே அவர்களின் எதிர்காலத்தையே நாசமாக்குகிறது.  
  • இங்கிலாந்து நாட்டில் நடந்த குழந்தைகள் பாலியல் பலாத்கார வழக்கில் ஆறு ஆயுள் தண்டனைகளைப் பெற்ற கைதி ‘ஆலன் எக்ஸ்', சொல்வதைக் கேட்போம். குழந்தைகளை பலாத்காரத்திற்காக தேர்ந்தெடுக்கும் போது அவன் தூண்டிலில் வைக்கும் புழு ‘ரகசியம்'.
  • ‘இந்தக் குழந்தை நிஜமாகவே ரகசியத்தை காப்பாற்றுகிறதான்னு சோதிச்சுப் பார்க்க சில டெஸ்ட்கள் வைப்பேன். அதில் தேறிட்டா பிரச்னை இல்லை. நமக்கு எந்த பிரச்னையும் வராது. அந்தக் குழந்தைக்கு என்மீது நம்பிக்கை வரணும். நான் நம்பிக்கைக்குரியவன் என்பதை உணர வைக்கும் வரை கஷ்டம்.  அதுக்குப் பிறகு அந்த குழந்தை என் பேச்சை மட்டுமே கேட்கும். எதையுமே வெளியே சொல்லாது.  சின்னச் சின்ன விஷயங்களுக்குகூட என்னிடமே ஓடிவரும்.  சில குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களைப் பற்றியே என்னிடம் முறையிடுவார்கள்.  பெற்றோர்களை எப்படி கையாள்வது என்று கூட என்னிடம் யோசனை கேட்பார்கள்', - என்று சொல்கிறது அந்த மனித மிருகம் ஆலன் எக்ஸ்.
  • ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியவன். இந்த மிருகம் நமக்கு உணர்த்திய ஒரு விஷயம் ‘ரகசியம்' குழந்தைகளுக்கு எதிரி என்பதுதான்.  
  • ‘இந்த ரகசியத்தை யார்கிட்டேயும் சொல்லாதே', என்று யாராவது ஒரு குழந்தையிடம் சொன்னால் அந்த வார்த்தைக்கு குழந்தை அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த ரகசியத்தை காப்பாற்றுவது உலகமகா சாதனை என்று அந்த பிஞ்சு உள்ளம் நினைக்கிறது.  இதுதான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு அடித்தளம். ரகசியமாக ஒரு விஷயத்தை வைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம், அதனால் தனக்கு முக்கியத்துவம் கிடைப்பதாக அந்தக் குழந்தை நம்புகிறது. அதனால் அந்தக் கயவன் மீது அதிக மரியாதை ஏற்படுகிறது.  
  • ‘இந்த ரகசியம் உன்னோட அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்!  உன்னை அடிச்சே கொன்னுடுவாங்க.  ஜாக்கிரதை', என்று மிரட்டுவானாம் அந்தக் கயவன். குழந்தை, அவன் மீது வைத்திருக்கும் மரியாதை, அம்மாவின்  மீதிருக்கும் பயம் ஆகியவற்றை தனக்கு சாதகமாக்கிக் கொள்வானாம் அந்தக் கயவன். 
  • இந்த நிலையில் குழந்தைகளுக்கு முதலில் நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய பாடம், ‘யாராவது ரகசியமாக ஒரு விஷயத்தை சொன்னால், அதை ரகசியமா வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.  அந்த ரகசியத்தை சொன்னது நாமாக இருந்தாலும் சரி', என்பதுதான்.     
  • ‘எங்கு சென்றாலும் தனக்கு மட்டும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது குழந்தைகளிடம் காணப்படும் மற்றொரு குணம்.  தான் செய்கிற ஒவ்வொரு செயலையும் மற்றவர்கள் பாராட்ட வேண்டும்', என்றும் குழந்தை நினைக்கிறது.  அவசர உலகில் குழந்தைகளோடு உட்கார்ந்து பேசக்கூட நேரமில்லாத பெற்றோர்களே!  ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், ‘ ‘உங்கள் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் சின்ன சின்ன  அசைவுகளையும் பெரிய அளவில் பாராட்டி, நிலைமையை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள உங்களுக்கு அருகிலேயே ஒரு கயவன் காத்திருக்கிறான்', என்பதுதான் அது.   
  •   
  • ஆகையால் குழந்தையின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதன் ஒவ்வொரு செயலையும் பாராட்டுங்கள். உங்கள் ஒவ்வொரு பாராட்டும் குழந்தை தனக்கு கொடுக்கும் முக்கியத்துவமாக நினைக்கட்டும்.  
  • ‘மாமா வந்திருக்கிறாரு பாரு.  நீ நல்லா டான்ஸ் ஆடுவியே!  மாமாக்கு முன்னால் டான்ஸ் ஆடிக் காட்டு', என்று யார் முன்னாலும் உங்கள் குழந்தையை ஆட விடாதீர்கள்.   ஏனென்றால், நீங்கள் அப்படிச் சொல்லும் போது, அந்த மனிதர் மீது குழந்தைக்கு அளவுகடந்த மரியாதை ஏற்படுகிறது. அந்த மாமா ஒரு கயவனாக இருந்தால், உங்கள் குழந்தை அவரால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம்.   
  • இப்படிப்பட்ட சம்பவங்கள் நிறைய நம்மைச் சுற்றி நடக்கிறது.  உங்கள் குழந்தையின் சுட்டித்தனமும், அசைவுகளும் உங்களின் பார்வைக்கும் பெருமைக்கும் மட்டுமே இருக்கட்டும்.
  • உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் உடல் பாகங்கள் பற்றிய அடிப்படை அறிவை ஏற்படுத்துங்கள்.  பாகங்களின் பெயர்களையும் சொல்லித் தாருங்கள். நல்ல எண்ணத்தில் தொடப்படும் பகுதி (குட் டச்), தீய எண்ணத்தில் தொடப்படும் பகுதி (பேட் டச்) ஆகியவை பற்றிய வித்தியாசத்தை உணர்த்துங்கள்.  
  • உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் ரஸ்தோகி என்ற முப்பத்தி ஆறு வயது தையல்காரன் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டான். விசாரணையின் போது அவன் காவல்துறையினரிடம் கக்கிய விஷயங்கள் அனைவரையும் மிரளவைத்தது.  
  • ‘மாசம் ரெண்டு முறை டெல்லிக்கு போவேன். பெண்கள் படிக்கும் ஸ்கூலுக்கு பக்கத்தில காத்திருப்பேன். பள்ளி முடிஞ்சு குழந்தைகள் வீடு திரும்பும்போது, தனியே வரும் குழந்தையிடம் பேச்சுக் கொடுப்பேன். வாங்கி வந்த பரிசுப் பொருட்களையும், தின்பண்டங்களையும் கொடுத்து அந்தக் குழந்தையை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வான்', என்று வாக்குமூலம் அளித்துள்ளான் அந்த கயவன்.    
  • மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்ன தெரியுமா!  இவனால் ஏமாற்றப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டும்', என்கிறது காவல்துறை. தவறு ஐநூறைத் தாண்டும்வரை இவன் தண்டிக்கப்படாதது வருத்தமான விஷயம். நடந்த தவறை குழந்தைகளோ, பெற்றோரோ வெளியில் சொல்லவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சி.
  • இந்தத் தவறு நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதையோ, சிரிப்பதையோ தவிர்க்கும்படி குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.  
  • அறிமுகமில்லாதவர்கள் தரும் பரிசுப் பொருட்களையோ, திண்பண்டங்களையோ தவிர்க்கும்டி குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  • ஆபீஸ், வேலை, வருமானம் ஆகியவைப் பற்றியே நினைத்து நாட்களை நகர்த்தாமல், குழந்தைகளோடு அதிக நேரம் செலவழியுங்கள்.  குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
  • உங்கள் குழந்தையோடு யாராவது அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றால், அதை பாசம் என்று நினைத்து அமைதியாக இருந்துவிடாதீர்கள். அந்த நபரின் மேல் ஒரு கண் வையுங்கள்.
  • கரடு முரடான பெற்றோராக இல்லாமல், நல்ல நண்பனைப் போல குழந்தையுடன் பழகுங்கள்.   
  • குழந்தை எதைச் சொன்னாலும் குறுக்குக் கேள்வி கேட்பது, பதிலுக்கு ஏதாவது பேசி அதன் வாயை அடைப்பது, ஆகிய பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்.   
  • குழந்தை எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துங்கள். அவர்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அப்படியில்லையென்றால் மனத்தில் பட்ட கருத்துக்களை சொல்வதை குழந்தைகள் தவிர்த்துவிடும்.  யார் அதன் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களிடம் குழந்தை நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளும்.   
  • குழந்தையோடு விளையாடும் எல்லா நபர்களுமே அத்துமீறுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அதே நேரத்தில் எல்லா நபர்களும் நல்ல நோக்கத்தில் விளையாடுகிறார்கள் என்று நினைக்க முடியாது.  ஒருவரின் நடவடிக்கையில் நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது என்றால், அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  ஒரு செயலை விளையாட்டாக செய்வதற்கும், கெட்ட நோக்கத்தில் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வது அவசிய்ம்.  குழந்தையை அவர் முத்தமிடுகிறார் என்றால், முதல் முறை மட்டும் அது பாசத்தின் வெளிப்பாடு என்று நினைக்கலாம். அதே செயல் தொடர்ந்தால், அது தவறு. அது அத்துமீறல். விழித்துக்கொள்ளுங்கள்.  
  • ஆசிரியரோ, விளையாட்டுப் பயிற்சியாளரோ தனியாக உங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான வகுப்பு எடுக்கிறோம்', என்று சொல்வார்களேயானால், அது தவிர்க்கப்பட வேண்டும். குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளையும் இவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். இவர்களில் யாராவது தவறானவர்களாக இருப்பார்களேயானால், குழந்தை நிச்சயமாக பாதிக்கப்படும்.  ஒரு விஷயத்தை மனத்தில் கொள்ள வேண்டும்.  ஒரு சில கேடுகெட்ட ஆசிரியர்களும், பயிற்சியாளர்களுமே தவறு செய்கிறார்கள்.  ஆனால், நம்மால் அவர்களை ஒட்டு மொத்த கூட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கடிக்கும் கொசுவாக இருந்தாலும் சரி, கடிக்காத கொசுவாக இருந்தாலும் சரி, வலை கட்டிக்கொள்வது உத்தமம்.
  • ஆண் துணை இல்லாமல் தனியே வசிக்கும் பெண்களிடம் வளரும் குழந்தைகள் அதிகம் பிரச்னைக்குள்ளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பெண்ணுக்கு துணையாக இருப்பவரோ, அல்லது அதிகம் உதவிகள் செய்பவரோ, குழந்தைக்கு வில்லனாகிறார்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
  • ‘அப்பா!  நாளைக்கு ஸ்கூல் லீவு.  என்னோட ஃபிரண்டு வீட்டில ராத்திரி சினிமாக்கு போறாங்க.  நானும் அவங்ககூட போயிட்டு, அவங்க வீட்டிலேயே தூங்கிட்டு, காலையில வரட்டுமா?' என்று குழந்தை உங்களிடம் அனுமதி கேட்டால், சட்டென்று மறுத்துவிடுங்கள். உங்கள் குழந்தை உங்கள் கண் பார்வையிலேயே தூங்கட்டும். அடுத்தவர்களோடு தங்குவதற்கு அனுமதிக்காதீர்கள்.
  • முடிந்தவரை, உங்கள் செல்போனையோ,  டேப்லெட்டையோ உங்கள் குழந்தைகளிடம் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.  அப்படியே கொடுத்தாலும், குழந்தை இண்டெர் நெட்டையோ, செல்போனையோ, உபயோகிக்கும் போது அதிக கவனத்துடன் கண்காணியுங்கள்.
  • டிவியிலோ, செய்தித் தாள்களில் வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்திகளை பற்றிய விவரங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதுடன், எச்சரிக்கையும் செய்யலாம்.
  • எவ்வளவு நெருக்கமாக பழகினாலும், குழந்தைகள் தங்கள் மனத்தில் உள்ள ரகசியங்கள் முழுவதையும் பெற்றோர்களிடம் சொல்வதில்லை. இந்த சூழலில் பெற்றோர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் குழந்தைகளுடன் பழக அனுமதிக்கலாம். இதனால் குழந்தைகள் அவர்களிடம் ரகசியத்தையும், தங்களது மனக்குறைகளையும் பகிர்ந்து கொள்வார்கள்.

‘என்னமோ தெரியலை சார்!  என் பொண்ணு முன்ன மாதிரி இல்லை. வித்தியாசமா நடந்துக்கிறா! நிறைய மாற்றங்கள் தெரியுது', என்று பதற்றத்தோடு புலம்புகிறார் ஒரு தந்தை.  

தந்தையே! உங்கள் பயம் நியாயமானதுதான். பாலியல் பலாத்காரத்திற்குள்ளான குழந்தையின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை பொறுப்பான பெற்றோரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.  நீங்கள் பார்ப்பது ஒருவேளை உங்கள் குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான அறிகுறிகளாகவும் இருக்கலாம். விழித்துக் கொள்ளுங்கள்.  

‘பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்னென்ன மாற்றங்களை தன்னையறியாமல் வெளிப்படுத்துகிறது', என்பதை பார்ப்போம்.

  • தன் வயதிற்கு ஏற்ற பக்குவத்திலிருந்து மாறி நடந்துகொள்ளுதல். குழந்தைகள், பெரும்பாலும் தன் வயதைவிட குறைவான குழந்தைகளைப் போல நடந்து கொள்வார்கள். வெகு சிலர் தன்னைவிட வயதில் மூத்த பெண்களைப் போல நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள்.    
  • அடுத்தவர்களிடம் பேசுவதை தவிர்ப்பார்கள். தனியாக இருப்பதையே அதிகம் விரும்புவார்கள்.    
  • முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல்.  எல்லோரிடமும் விரோதப் போக்கை கடைபிடித்தல், சண்டையிடுதல். அடுத்தவர்களை தூக்கியெறிந்து பேசுதல்.
  •   இரவு நேரம், இருட்டு ஆகியவற்றைப் பார்த்து பயப்படுதல்.  
  • தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுதல்.  
  • தூக்கத்தில் கெட்ட கனவும், அதனால் ஏற்படுகின்ற பயமும். 
  • வழக்கத்திற்கு மாறான தூங்கும் நேரம்.
  • வழக்கமாக வெளியில் சென்று விளையாடும் குழந்தை, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்.
  • வழக்கத்திற்கு மாறாக படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும்.

இவை மட்டுமே பலாத்காரத்திற்குள்ளான குழந்தைகள் வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்று நினைக்க வேண்டாம். இந்த அறிகுறிகள் பெரும்பாலானவர்கள் வெளிப்படுத்தியது என்ற அடிப்படையில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்பட்டால், அவர்கள் அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.  

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் என்பது இன்று இந்தியாவில் அன்றாட நடவடிக்கையாகிவிட்டது.  ஏதோ இன்று தான் சீரழிந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.  இதில் ஓரளவுக்கு உண்மை இருப்பதை மறுக்க முடியாது.  ஆனால், இத்தகைய தவறுகள் நூற்றாண்டுகளாக நடந்து வந்திருக்கிறது.  நடிகை டெய்ஸி இராணியின் எச்சரிக்கை வாக்குமூலமே இதற்கு உதாரணம். ஆனால், தற்போது அதிக அளவில் வழக்காகவும், செய்திகளாகவும்  பகிரப்படுகிறது.  இது வரவேற்கத்தக்கது.  இது தொடர்பான சில புள்ளிவிவரங்கள் பார்போம்:

ஃ    உங்களுக்குத் தெரியுமா!  இந்தியாவில் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கு ஒரு குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.     

ஃ    வருத்தமான உண்மை என்ன தெரியுமா!, நாள் ஒன்றுக்கு எட்டு பாலியல் வன்முறை வழக்கு மட்டுமே பதியப்படுகிறது.

ஃ    53% சதவீத இந்தியக் குழந்தைகள் ஏதாவது ஒருவகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  கிட்டத்தட்ட இரண்டு குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இத்தகைய கசப்பான சம்பவங்களைத் தாண்டி வளர்கிறது என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

ஃ    2016ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி 106958 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.    இதில் 36022 வழக்குகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது.  2011ம் ஆண்டு 33052 வழக்குகள், 2012ம் ஆண்டு 38172 வழக்குகள், 2013ம் ஆண்டு 58224 வழக்குகள்,  2014ம் ஆண்டு 89423 வழக்குகள், 2015ம் ஆண்டு 94172 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஃ    இந்த வழக்குகளில் தண்டிக்கப்பட்டது வெறும் 2.4 சதவீதத்தினர் மட்டுமே. இது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

ஃ    உலகிலேயே இந்தியாவில் தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகம் நடப்பதாகவும், ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை வெளியில் சொல்வதில்லை என்றும்,  உண்மையான பாதிப்பு மிக மிக அதிகம் என்றும் ஒரு முன்னணி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  

ஃ    ஐந்திலிருந்து பன்னிரெண்டு வயது வரை உள்ள குழந்தைகளே அதிக அளவில் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஃ    எண்பது சதவீத பாலியல் வன்முறையாளர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மிகவும் வேண்டியவராகவும், அந்தக் குழந்தையின் மீது அக்கறை காட்டுபவராகவும் இருக்கிறார்கள்.

ஃ    பெரும்பாலான குழந்தைகள் நடந்த தவறை வெளியில் சொல்வதில்லை.  

ஃ    நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறை குற்றங்களில் ஐம்பது சதவீத பங்களிப்பை மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே தருகிறது.  
    
ஃ    பாலியல் வன்முறைக்கு ஆளான குடும்பங்களில் நான்கில் ஒரு குடும்பம், அதாவது 25 சதவீத குடும்பங்கள் வன்முறையைப் பற்றி வெளியே மூச்சுவிடுவதில்லையாம்.  

குற்றச் செயலில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த புள்ளிவிவரங்கள் நமக்குத் தெரிவிக்கிறது.    

முன்பெல்லாம் வழக்கைப் பதிவு செய்ய பாதிக்கப்பட்ட குழந்தையோடு பெற்றோர்களும் காவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டும். பல நேரங்களில் வழக்குகள் பதியப்படாது, கேட்கப்படும் கேள்விகள் குழந்தையையும், பெற்றோர்களையும் நெளியவைக்கும்.  அப்படியே வழக்குகள் பதியப்பட்டாலும், கோர்ட் வளாகத்தில் குழந்தையும், பெற்றோர்களும் உட்கார வேண்டிய நிலை இருந்தது. வழக்குகள் காலவரையின்றி பலவருடங்கள் நடந்தன. இதனால் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்த குடும்பங்கள் பல.

இந்த நடைமுறைச் சிக்கல்களை மனத்தில் கொண்டு 2012 ல் போக்ஸோ சட்டம் கொண்டுவரப்பட்டது.  அதன்படி குழந்தைகள் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.  குழந்தையிடம் வாக்குமூலம் பெறவோ, அல்லது விசாரணை செய்யும் பெண் காவலர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் குழந்தையிடம் பேச வேண்டும்.  இதைத் தவிர குழந்தைகள் நல ஆணையம் குழந்தைக்கு உதவும் வகையில், வழக்கு முடியும் வரையில் ஒருவரை நியமிக்கும்.  இதனால், குழந்தை பயமில்லாமல், வழக்கை எதிர்கொள்ள முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com