Enable Javscript for better performance
Hasini's Killer Dasvanth Conversation Inside the Jail- Dinamani

சுடச்சுட

  

  ‘நான் அப்பாவி’ கூசாமல் விவரிக்கும் தஷ்வந்த்! சிறைச்சாலைகள் தண்டனைக்கா? குற்றவாளிகளைப் போஷாக்காக வளர்க்கவா?

  By RKV  |   Published on : 23rd November 2018 11:41 AM  |   அ+அ அ-   |    |  

  dasvanth

   


  சிறைச்சாலைகள் எதற்காக? குற்றவாளிகள் தண்டனை அனுபவித்துக் கொண்டே தங்களது குற்றத்தை உணர்ந்து திருத்திக் கொள்ளவும் தானே? ஆனால், சமீபத்தில் அப்ஸரா ரெட்டி எனும் ஊடகவியலாளர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்காக எடுத்திருந்த சென்னை புழல் சிறைச்சாலைக்குள் நுழைந்து எடுத்த ஆவணப் படமொன்றில் பங்கேற்று உரையாடிய தண்டனைக் கைதிகளில் பலரும் தங்களது குற்றத்தை உணர்ந்தாற் போலத் தெரியவில்லையே! அந்தத் தண்டனைக் கைதிகள் ஆற்றிய குற்றங்களனைத்தும் அத்தனை சாமான்யமானவை அல்ல. ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை புழல் சிறையில் நுழைந்து அங்கிருக்கும் கைதிகளின் மனநிலையையும், அவர்களின் எண்ண ஓட்டத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் அப்ஸரா ரெட்டி ஆவணப் பதிவொன்றை எடுத்து வெளியிட்டிருந்தார். 

  அந்த ஆவணக் காணொளியில் அவர் போரூர் மதனந்தபுரத்துச் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி தஷ்வந்த் முதல் ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளியாக புழல் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனைப் பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஈரானியக் கைதி வரையிலும் பலரிடமும் தனது கேள்விகள் வாயிலாக உரையாடியிருந்தார். அவருடன் உரையாடியவர்களில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்து ஊழல் வழக்கிலும் கைதாகி தண்டனை பெற்றுள்ல அயல்மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும் கூட உண்டு. இவை தவிர ஆயுதக் கடத்தல் வழக்கில் கைதாகி தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கைதிகளுடனும் கூட அவர் உரையாடியிருந்தார். 

  மேற்கண்ட உரையாடல்களில் தெரிய வந்த செய்தி என்னவென்றால், பெரும்பாலான கைதிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை தவறானது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் அநியாயமாகத் தங்கள் மேல் தண்டனையைத் திணித்துள்ளனர். தாம் அப்பாவிகள் என்பது போல பதில் அளித்திருக்கின்றனர். இவர்களில் ஹாசினியைக் கொன்ற தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்த போதும் சிறைச்சாலைக்குள் தஷ்வந்த் எனும் அந்தக் குற்றவாளி தன்னை நியாயப் படுத்திக் கொள்ளும் விதமாக முன் வைக்கும் பதில்களைப் பார்த்தால்... நம் நீதித்துறையின் மேலும் சட்டங்களின் மேலும் சாமான்ய மக்களுக்கு இன்னும் நீர்த்துப் போகாமலிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கை எனும்  பாதுகாப்பு அரணில் ஓட்டை விழுந்தாற் போலிருக்கிறது. 

  தஷ்வந்த் சிறைச்சாலையில் தண்டனை அனுபவிப்பதைப் போலத் தெரியவில்லை. மூன்று வேளையும் சிறைச்சாலை உணவைப் போஷாக்காக உண்டு மேலும் திடகாத்திரமாக இருப்பதைப் போலத்தான் தெரிகிறது அந்தக் காணொளியில். ஒரு இளைஞன், தனது வக்கிர புத்திக்காக 7 வயதுச் சிறுமி ஒருத்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அது தோல்வியில் முடிய சிறுமியைக் கொலை செய்து சடலத்தை மறைக்கவும் தான் கொலை வழக்கில் இருந்து தப்பிக்கவும் கிரிமினல் தனமாகச் சிந்தித்து சிறுமியின் உடலை டிராவல் பேகில் வைத்து சில கிலோமீட்டர்கள் பயணித்து புறநகர்ப்பகுதியில் சடலத்தை எரித்து விட்டு வீடு திரும்பியதோடு.... காணாமல் போன சிறுமியைத் தேடிய கூட்டத்தினருடனும் அப்பாவியாக வேடமிட்டு தான் கொன்ற சிறுமியை தேடுவது போல நடிக்கவும் செய்திருக்கிறான். இதற்கான சிசிடிவி கேமிரா பதிவுகள் அக்கொலை வழக்கின் முக்கிய ஆவணங்களாக கருதப்பட்டு அத்தனை ஊடகங்களிலும் வெளியாகின. அவன் செய்தது ஒற்றைக் கொலை அல்ல, இடையில் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு ஜாமீன் பெற்று வீடு திரும்பிய போது, பணத்திற்காக தனது சொந்தத் தாயைக் கொலை செய்ததற்கும் ஆவணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் நேர்காணலில் கேள்வி கேட்கப்படுகையில்... சற்றும் அசராது... செய்த படுபாதகச் செயல்களுக்காக கொஞ்சமும் அசராது... தன்னை அப்பாவி எனக் காட்டிக் கொள்ளும் விதத்தில் தஷ்வந்த் பதில் சொல்வதைக் கேட்கையில் இப்படியான குயுக்தியான மூளை கொண்ட குற்றவாளிகளை சிறைச்சாலைகள் மூன்று வேளையும் உணவிட்டு போஷாக்காக வளர்ப்பதின் காரணம் என்ன? என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  தஷ்வந்தைப் போன்றவர்களுக்கான தண்டனை உறுதியான பிறகு அதைச் செயல்படுத்துவதில் ஏன் தாமதம்?

  மொத்த தமிழ்நாட்டையே கொந்தளிக்கச் செய்யும் வகையில் ஒரு கொடூரத்தை நிகழ்த்திவிட்டு அதை நியாயப்படுத்திக் கொள்ளும் தைரியத்தை எங்கிருந்து பெறுகிறார்கள் இவர்கள்?

  அப்பாவி பொதுஜனத்தின் இந்த நியாயமான சந்தேகத்தைத் தீர்க்க நீதித்துறை ஆவண செய்யுமா?

  Image Courtesy: Behindwoods TV

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai