Enable Javscript for better performance
JUSTICE FOR RAJALAKSHMI!- Dinamani

சுடச்சுட

  

  சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில் கவனம் பெற வேண்டிய உண்மைகளில் சில...

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 19th November 2018 11:30 AM  |   அ+அ அ-   |    |  

  rajalatchumiii

   

  சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கைத் தமிழக மக்கள் எப்படி அணுகுகிறார்கள்? இதுவரையிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்த தகவல்களை வைத்துப் பார்ப்பதென்றால் சிறுமி கொலை வழக்குக்கு ஜாதிச் சாயம் பூச முற்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாகவே தோன்றுகிறது. சிறுமி கொலை வழக்கில் ஜாதி இல்லாமலில்லை. ஜாதியும் இருக்கிறது. ஆனால், ஜாதியைக் காரணம் காட்டி இந்தக் கொலையில் அழுத்தமாகப் படிந்து கிடக்கும் சமூக அவலத்தை நாம் மறைத்து விடக்கூடாது. சிறுமி ராஜலட்சுமி கொலை செய்யப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு தான் சிறுமி மரணத்திற்கு ஆறுதல் சொல்ல அந்த தொகுதி எம் எல் ஏ அம்மாவட்ட ஆட்சியருடன் இணைந்து சிறுமியின் வீட்டை அணுகியிருக்கிறார். தமிழகம் முழுதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பிய கொடூரமான கொலைக்கு தொகுதி எம் எல் ஏவும், மாவட்ட ஆட்சியரும் அளித்த முக்கியத்துவம் இவ்வளவு தான். அது மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் பரவலாக இந்தக் கொலைச் செய்தி வெளியான போதும் அடுத்தடுத்து அலைமோதும் செய்திகளின் வரிசையில் சிறுமி கொலைச் செய்திக்கு அளிக்கப்பட்ட இடம் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது என்றும் கூறப்படுகிறது. சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கு பின் விளைவுகளை அலட்சியப்படுத்தி குற்றவாளியால் வெகு துணிச்சலுடன் நடத்தப்பட்டுள்ள கோரம். இவர்கள் ஏழைகள் மட்டுமல்ல எதிர்க்கத் திராணியற்றவர்களும் கூட எனும் அகங்காரத் திமிருடன் வெகு திமிருடன் நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை. 

  வாழ்வதற்கான சகல உரிமைகளும் கொண்ட ஒரு சின்னஞ்சிறுமி கேட்பாரற்று... உடல் தினவெடுத்த ஆணொருவனால் கரும்பை வெட்டிச் சாய்ப்பது போல வெகு எளிதாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இதற்கு தற்போது ஜாதி சாயம் பூசப்பார்க்கிறார்கள். இதில் ஜாதி தாண்டியும் சில விஷயங்களை நாம் ஆராய வேண்டியிருக்கிறது. வழக்கறிஞர் அருள்மொழி சிறுமி கொலையுண்ட இடத்திற்கே நேரில் சென்று நடத்திய கள ஆய்வில் தெரிய வந்த உண்மைகளாக சில விஷயங்களாக யூடியூப் உரையொன்றில் தெள்ளத்தெளிவாக விளக்குகிறார். அவை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.

  முதலாவதாக சிலர் ஜாதிச் சாயம் பூசுவதைப் போல அன்றி;

  கொலை செய்த தினேஷ் அந்த ஊரின் மிகப்பெரிய ஜாதிச் செல்வாக்கு கொண்ட நபர் அல்ல.

  தினேஷ் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும், அவனது மனைவி நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதும், இவர்களது திருமணம் பெண்ணின் பெற்றோரது அனுமதியின்றி காவல்நிலையத்தில் வைத்து நடத்தி வைக்கப்பட்டது என்பதும் இந்த வழக்கிற்குத் தேவையான தகவல்கள் என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

  கொலை நிகழும் வரை இரு குடும்பத்தாருக்கும் இடையே சுமுகமான உறவே நீடித்திருக்கிறது.

  கொலை நிகழ்ந்த இடம் ஊரின் ஒதுக்குப்புறமான தோட்டப்பகுதி என்கிறார்கள். ஊருக்குள் வாழும் மக்களில் ராஜலட்சுமி சார்ந்த சமூகத்தினரே அதிகமிருக்கின்றனர். தினேஷ் சார்ந்த சமூக மக்கள் ஒன்றிரண்டு வீடுகள் தான். அவர்கள் அங்கே பெரும்பான்மையினர் அல்ல என்கிறது கள ஆய்வு.

  சிறுமி ராஜலட்சுமிக்கு ஒரு அக்கா இருக்கிறார் அவர் செவிலியருக்குப் படித்து விட்டு பணிபுரிந்து வருகிறார். குடும்பத்திற்காக உழைத்து உழைத்து தன் தாயாரைப்போலவே ஓடாகச் சுருங்கிய தோற்றம் கொண்டவர் அந்தப் பெண். ராஜலட்சுமியின் அம்மாவும் கிராமத்தின் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் ஊதியம் பெறும் கூலியாட்களில் ஒருவர். ஆக இருவருமே உடல் வலுவற்றவர்கள். தினேஷ் எட்டி உதைத்ததில் மூர்ச்சையாக விழும் அளவுக்குத்தான் ராஜலட்சுமியின் தாயாருக்கு உடல்வலுவிருந்திருக்கிறது.

  அது மட்டுமல்ல, இப்படியொரு கொடூரம் அரங்கேற்றப்பட்ட பிறகும் கூட சிறுமி ராஜலட்சுமி சார்ந்த சமூக மக்களோ அல்லது அவரது உறவினர்களோ, பெற்றோரோ கூட கொலையாளி தினேஷின் வீட்டை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதும் அவர்கள் மீது சாபங்கள் இடவில்லை என்பதும் இங்கே வெகு முக்கியமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய விஷயமாகிறது. அதோடு கூட கொலையாளி தினேஷின் வீட்டில் வாய்பேச முடியாத அவனது பாட்டியும், ஐந்து வயதுக்குட்பட்ட அவனது குழந்தையும் இருந்திருக்கிறது. தினேஷும் அவனது மனைவியும் காவல்நிலையத்தில் சரணடையச் சென்ற போது இவர்கள் வீட்டில் தனித்தே இருந்திருக்கிறார்கள். பிற சந்தர்பங்களில் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் கொலையாளியின் வீட்டை அடித்து நொறுக்கி நிர்மூலமாக்கி அங்கிருக்கும் குடும்ப உறுப்பினர்களைத் தாக்கி களேபரத்தில் ஈடுபடுவதே இம்மாதிரியான விவகாரங்களில் வாடிக்கை. ஆனால், கொலையுண்ட சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்தார் அம்மாதிரியான வன்முறைகளில் எல்லாம் ஈடுபடவே இல்லை என்பதோடு குழந்தைக்கும் அந்தப்பாட்டிக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும் தான் ராஜலட்சுமி சார்ந்த சமூகத்தாரின் நடப்பு இருந்திருக்கிறது. 

  காரணம், ஏழைகள் என்ற ஒரே காரணத்தால் அச்சுறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு தங்கள் மீதான அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் வலு கூட இல்லாதவர்களாகவே ராஜலட்சுமி குடும்பத்தார் இருந்திருக்கிறார்கள்.

  எனவே சிறுமி ராஜலட்சுமி கொலை விவகாரத்தின் மீது ஜாதி ரீதியான அர்த்தங்களைப் புகுத்தி வழக்கு விசாரணையை திசை திருப்புவதைக் காட்டிலும் இந்தச் சமூகத்தில் வறியவர்கள் மீதும், ஏழைகளின் மீதும் காட்டப்படும் அலட்சியத்தால் கேட்பாரற்று நடத்தப்படும் அநீதிகளைக் களையும் பொருட்டு நியாயமான வகையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அவசியமாகிறது.

  ராஜலட்சுமி வழக்கில் தலித் ஆதரவாளர்களாகவும், தலித் பாதுகாவலர்களாகவும் நினைத்துக் கொண்டு செயல்படாமல் அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் ஜாதி சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொள்கைகளைப் புகுத்துவதை தவிர்த்து விட்டு சிறுமி கொலையில் நிஜமான நீதியைப் பெற்றுத்தரும் பொறுப்புணர்வு ராஜலட்சுமி கொலை குறித்து மேடை தோறும் முழங்க யத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அது மட்டுமல்ல நடந்திருப்பது படு பாதகக் கொலை. அந்தக்கொலையை யாரும் தங்களுக்கான சுயலாபங்களுக்காகவோ, ஜாதி வெறித் தூண்டலுக்காகவோ அல்லது இதைக்காரணம் காட்டி தங்களை உறுத்தக் கூடிய பிற விவகாரங்களையோ, போராட்டங்களையோ பொதுமக்களின் கவனத்திலிருந்து திசை திருப்பவோ பயன்படுத்தக் கூடாது என்பதே பலரது ஆதங்கமாக இருக்கிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai