அன்றொரு நாள்... தினமணி பிறந்த கதை!

'பாரதியார் நினைவு நாளும் தினமணி தொடக்க நாளும் ஒன்றே. 11.9.1934.பாரதியார் நீடூழி வாழ்க! தினமணி நீடூழி வாழ்க!’
அன்றொரு நாள்... தினமணி பிறந்த கதை!

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை வரதராஜ நாயுடுவிடம் இருந்து வாங்கியவரான சதானந்தம் இந்திய பத்திரிகை பதிப்புத் துறையில் முன்னோடி மட்டுமல்ல. ஒரு மேதாவியும் கூட. முதலாளியாக மாறிய
முதல் இந்தியப் பத்திரிகையாளர் அவர் தான். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் துணையாகத் ‘தினமணி’ என்ற தமிழ் நாளிதழையும் இவர் தான் கொண்டு வந்தார். வந்த வேகத்தில் லாபகரமான இரு பத்திரிகைகளுக்குக் காரணகர்த்தாவாகிப் போன சதானந்தத்தின் செயல்வேகம் கண்டு தமிழகத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஸ்தாபகரான வரதராஜுலு நாயுடுவே ஒரு கணம் இன்ப அதிரிச்சியில் உறைந்து போயிருப்பார் என்று நம்பலாம்.

சதானந்தத்துக்கு பம்பாய் கர்மபூமியாக இருந்தாலும், அவருடைய மனதில் தனி இடத்தைப் பெற்றிருந்தது மெட்ராஸ். ஏனென்றால் அது அவருக்கு ஜன்ம பூமி.

அவருடைய தலைமையின் கீழ் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வர ஆரம்பித்து ஓராண்டு பூர்த்தியான சமயத்தில், அவருடைய மனது அதை வலுப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே வந்தது. அப்போது தமிழ்ப் பத்திரிகை உலகம் எப்படி இருந்தது என்று ஊன்றிக் கவனித்த அவருக்குச் சிந்தனையில் ஒரு மின்னல் வெட்டுத் தோன்றியது. அவருடைய தகப்பனார் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகைத் துறையிலும் முன்னோடியாக இருந்தார். அதனால் சதானந்தத்துக்குத் தமிழ் மீது ஒரு காதல் இயற்கையாகவே இருந்தது.

அப்போது சென்னை மாகாணத்தில் 4 தமிழ்ப் பத்திரிகைகள் இருந்தன. அவற்றில் மிகப் பழமை வாய்ந்ததாக இருந்த ‘சுதேசமித்திரன்’ மட்டுமே நன்கு வேரூன்றியிருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ், மெட்ராஸ், மெட்ராஸ் மகாஜன சபா, தி ஹிந்து ஆகிய 3 பெரிய ஸ்தாபனங்களை உருவாக்கிய ஜி.சுப்ரமணிய ஐயர்தான் 1882 - இல் ‘சுதேசமித்திர’ னையும் அச்சிடத் தொடங்கினார். 1878 -இல்  ‘தி ஹிந்து நாளிதழைத் தொடங்கிய சுப்ரமணிய ஐயர் சில காலம் அதன் ஆசிரியராகவும் இருந்தார். நாட்டின் எதிர்காலப் பொதுவாழ்வு என்பது மாநில மொழிகளையே சார்ந்திருக்கும் என்பதை உணர்ந்தார். தமிழ்
மொழியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தச் ‘சுதேச மித்திரனை’ வாரப் பத்திரிகையாக அவர் தொடங்கினார். 1898 -இல் ஆங்கிலப் பத்திரிகையான ‘தி ஹிந்து’ வுடனான தொடர்பை முற்றிலும் விலக்கிக் கொண்டு, தன் முழு நேரத்தையும் சுதேசமித்திரனின் வளர்ச்சிக்குச் செலவிட்டார். 1899- இல் அதை அவர் தினசரியாக மாற்றியிருந்தார்.

1917 வரை போட்டியாளர் இல்லாமல் ‘சுதேசமித்திரன்’ கோலோச்சியது. 1917 -இல் திரு.வி.கல்யாண சுந்தர முதலியார் என்ற தமிழ் அறிஞரை ஆசிரியராகக் கொண்டு ‘தேச பக்தன்’  என்ற நாளிதழ் தொடங்கப்பட்டது. அவரும் அவருக்குப் பின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற வ. வே. சு ஐயரும் அப்பத்திரிகை வாயிலாகத் தமிழைப் பிரபலப்படுத்த முடிந்தது என்றாலும் 1921 - இல் ‘தேசபக்தன்’ நாளிதழ் பிரசுரமாவது நின்றது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு, ‘தமிழ்நாடு’ பத்திரிகையைத் தினசரியாகக் கொண்டுவர ஆரம்பித்தார். பெரும்பாலான தமிழர்களால் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம்
எளிமையாகவும் நேரடியாகவும் செய்திகளைக் கூறும் விதத்தில் ‘தமிழ்நாடு’ இருந்தது. எனவே மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனால் சுதேசமித்திரனுக்கு பலத்த போட்டியாகத் திகழ்ந்தது. 1930 இல் மகாத்மா காந்திக்கு எதிராக அப்பத்திரிகை திரும்பியதால் அது வாசக்ர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. 

'தமிழ்நாடு’ பத்திரிகையின் கொள்கை பிடிக்காமல், சில காங்கிரஸ்காரர்கள் சேர்ந்து ’இந்தியன்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்ற அந்தப் பத்திரிகை பிறகு வளர்ச்சி இல்லாமல் தேக்கநிலையை அடைந்தது. 

1933-ல் 'ஜெயபாரதி’ என்ற பெயரில், காலணா விலையில் 8 பக்கங்களுடன் ஒரு பத்திரிகை வெளியானது, இந்திய நிறுவனங்களிடம் மட்டுமே விளம்பரம் வாங்குவது, பிற நிறுவனங்களிடம் வாங்குவதில்லை என்ற கொள்கை காரணமாக அது வருமானம் இல்லாமல் தோல்வி கண்டது. 

1933-ல் நிலவிய இத்தகைய சூழலில்தான் தமிழ் பத்திரிகை உலகின் மீது சதானந்தத்தின் கண்கள் பதிந்தன. ஓரணா விலையில் மூன்று தினசரிகள், காலணா விலையில் ஒரு பத்திரிகை என்று 4 தமிழ் பத்திரிகைகள் மாலையில் வெளி வந்து கொண்டிருந்தன. 'ஃப்ரீ பிரஸ்’ செய்திகளுடன், அரையணா விலையில் தேசிய பத்திரிகை ஒன்றை தமிழில் கொண்டு வந்தால், நன்கு விற்பனையாகும் என்று சதானந்த் அப்போது நினைத்தார். இதன் விளைவாக 'தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ நாளிதழில் பின்வரும் விளம்பரத்தை வெளியிட்டார். 

'பத்து ரூபாய் பரிசு!’

'புதிதாக வரவிருக்கும் தமிழ் தேசிய நாளிதழுக்கு நல்லதொரு பெயரைத் தெரிவிக்கும் வாசகருக்கு பத்து ரூபாய் பரிசு தரப்படும். அந்தப் பெயர் சுருக்கமாகவும், மனதில் தைப்பதாகவும் இருக்க வேண்டும். பரிசுக்குரிய பெயரைத் தேர்வு செய்வதில் ஆசிரியரின் முடிவே இறுதியானது. ஆகஸ்டு 10-க்குள் வாசகர்கள் பெயரை எழுதி அனுப்பலாம்.’ என்பதே அந்த விளம்பரம். 

ஒரு மாதத்திற்குப் பிறகு, பெயர் சூட்டும் போட்டி முடிவு 'இந்திய எக்ஸ்ப்ரஸில்’ மற்றொரு அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

பரிசு அறிவிப்பு!

'புதிய தமிழ்த் தேசிய நாளிதழுக்குத் தகுந்த பெயரைச் சூட்டுமாறு வாசகர்களைக் கேட்டிருந்தோம். அழைப்புக்கு ஏற்ப குவிந்த ஏராளமான பெயர்ளில், ’தினமணி’ என்ற பெயரை ஏற்கிறோம். இந்தப் பெயரை எழுதி அனுப்பிய இரண்டு வாசகர்களுக்கு 10 ரூபாய்ப் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 

1. திரு.டி.என் அஷயலிங்கம், 43, பரிபூர்ண வினாயக கோயில் தெரு, மயிலாப்பூர், மெட்ராஸ்.
2. திரு.எஸ்.சுவாமிநாதன், சவுரி விலாஸ், தியாகராய நகர், தேனாம்பேட்டை தபால் அலுவலகம்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் பிரசுரமான அதே நாளில், ’தேசிய தமிழ் தினசரி’ என்ற பெயரில் மற்றொரு விளம்பரம் 'இந்தியன் எக்ஸ்ப்ரஸில்’ பிரசுரமானது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 11-ம் தேதி பாரதியார் நினைவு நாளின் போது, தினமணி என்ற புதிய தேசிய தினசரி பிரசுரமாகும் என்ற முழு பக்க விளம்பரம் இந்தியன் எக்ஸ்ப்ரஸில் இடம்பெற்றது.

விளம்பரம் வருமாறு:

'பாரதியார் நினைவு நாளும் தினமணி தொடக்க நாளும் ஒன்றே. 11.9.1934.

பாரதியார் நீடூழி வாழ்க! தினமணி நீடூழி வாழ்க!’

தினமணி முன்னணித் தேசியத் தமிழ் நாளிதழ். ஏனென்றால் அது எந்தக் கட்சியையும் சார்ந்தது அல்ல. சுயநல நோக்கம் எதுவுமில்லை. மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை. 

அதன் செய்திகள் நேர்த்தியானவை, முழுமையானவை. இப்போதுள்ள செய்தி நிறுவனங்களின் செய்திகளையும், அயல்நாடுகளிலும் இந்தியாவிலும் உள்ள தனது விசேஷ நிருபர்களின் செய்திகளையும்
தாங்கி வருகிறது. 

சூடும், சுவையும் நிரம்பிய கட்டுரைகள் தகவல்களைக் கொண்டது. 'காந்தி’ பத்திரிகையின் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், 'சுதந்திரச் சங்கு’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எஸ்.சுப்ரமணியம் ஆகியோர் அதன் ஆசிரியர் பகுதிக்குப் பொறுப்பேற்றுள்ளனர். சேவை, உண்மை, சுதந்திரம் ஆகியவையே அதன் லட்சியங்கள். சாதி, மதம், இனம் என்ற பாகுபாடு பார்க்காமல் மக்களுக்காக பாடுபடும் லட்சியம் கொண்டது.

முக்கியமான எல்லா மையங்களுக்கும் ஏற்கனவே ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள்: பெங்களூர், செங்கல்பட்டு, காஞ்சிவரம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, மன்னார்குடி, நாகப்பட்டினம், விருதுநகர், தென்காசி, வேலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சூர் மற்றும் பாலக்காடு.

இன்னும் ஒரு சில ஏஜெண்டுகளே தேவை:

விரும்புவோர் மேற்கொண்டு விவரம் அறிய, விற்பனைப் பிரிவு மேலாளர், தினமணி, 40 -42-ஏ, மூக்கர் நல்லமுத்துச் செட்டி தெரு, ஜார்ஜ் டவுண், மெட்ராஸ் என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
இதுதான் அந்த விளம்பரம்.

இதையடுத்து, 'தினமணி’ எப்படி இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஆலோசனைகள் வந்து குவிந்தன. சில பாரம்பரியமானவை, சில மிகவும் நாகரிகமானவை.

'தினமணி’ என்ற பெயரே புதுமையானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளைத் தருவதாகவும் இருந்தது. 

கர்நாடக இசைப் பாடலில் 'தினமணி வம்ச’ என்று தொடங்கும் பாடல் சூரியனைப் போற்றும் பிரபலமான பாடலாகும். நேரடியாகப் பொருள் கொண்டால், அன்றாடம் ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பும் மணி
(தின மணி) என்றும் கருதலாம். ஒரு தினசரிக்கு இது மிகவும் பொருத்தமல்லவா? 

இந்தப் பெயர் எளிதாகவும் இனிமையாகவும் சுருக்கமாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட பெயரைச் சூட்டியதற்கு 10 ரூபாய்தானா பரிசு என்று நினைக்காதீர்கள். அந்தக் காலத்தில் இந்தத் தொகையைக் கொண்டு ஆண்டு சந்தாவே கட்டிவிடலாம். 

பெயரைத் தேர்வு செய்ய முடியாமல், இதை வாசகர்களின் பொறுப்புக்கு விடவில்லை, சதானந்தம். புதிய நாளிதழின் பெயர் சூட்டலிலிருந்து அனைத்து விஷயங்களிலும் வாசகர்களின் பங்கேற்பு நேரடியாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதே இதற்குக் காரணம். பத்திரிகையை நடத்துவதில் வாசகர்கள் பங்கேற்க வேண்டும் என்று புதுமையாகச் சிந்தித்தவர் சதானந்தம். 

'தினமணி’ பிரசுரமாவதை வரவேற்று, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கமே எழுதியது. 'தினமணி’ என்ற புதிய தினசரியின் முதல் இதழ் இன்று பிரசுரமாகியிருக்கிறது என்பதை நமது வாசகர்களுக்கு
மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தோழமை ஏடாகும். இந்தியன் எக்ஸ்பிரஸின் கொள்கைகளையே இது பின்பற்றும். தேசப்பற்றிலும் தமிழ்ப்பற்றிலும் சிறந்து விளங்கும் இளைஞர்கள் இந்த தினசரியின் ஆசிரியர் குழாமில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த தினசரிக்கு நல்ல வரவேற்பு இருக்குமென்று நம்புகிறோம்’. என்று அந்த தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது. 

'பேனா மன்னர்’ என்று அழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம் 1930 வரை தமிழ்நாடு தினசரியில் வேலை பார்த்தார். காந்தி என்ற பத்திரிகையை சொந்தமாகத் தொடங்கினார். அது வாரம் மும்முறை
வெளிவந்தது. சங்கு சுப்ரமணியம் என்பவர் நடத்திய சுதந்திரச் சங்கு என்ற பத்திரிகையும் வாரம் மும்முறை வந்தது. அது அந்த நாளிலேயே லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்ற பிரபலமான
பத்திரிகையாகத் திகழ்ந்தது. 

1929-இல் தமிழ்நாடு பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் அந்த வேலையை விட்டுவிட்டு உப்புச் சத்தியாகிரகத்தில் முழு மூச்சுடன் கலந்து கொண்டார். பிறகு 1932-இல் மீண்டும் பத்திரிகை உலகிற்குத் திரும்பினார். 'காந்தி’ பத்திரிகையின் மேலாளராகவும் ஆசிரியர் குழு உதவியாளராகவும் பணியாற்றினார். தொழிலாளர் இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஏ.ஜி.வெங்கடாசாரி, இசை, நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த இளைஞர் ராமரத்தினம் ஆகியோரும் தினமணியின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றனர். தமிழ் மொழியின் வளர்ச்சியிலும், தேச முன்னேற்றத்திலும் இவர்கள் அனைவருக்கும் ஆர்வமும் அக்கறையும் இருந்தது. தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார் இவர்கள் அனைவருக்குமே ஆதர்ச புருஷராகத் திகழ்ந்தார். அந்நாளைய பிரபல இலக்கிய கர்த்தாவும்,. பாரதியாரின் பரம சிஷ்யருமான வ.ரா. இந்த இளம் லட்சியவாதிகளின் நண்பராகத் திகழ்ந்தார். 

‘’சில மாதங்களுக்கு முன்னரே பிரசுரமாகி இருக்க வேண்டிய 'தினமணி’, தவிர்க்க முடியாத சில காரணங்களால் தாமதமாக பிரசுரமாகிறது,’ என்று தொடங்கும் முதல் நாள் தலையங்கம் தினமணியின் லட்சியங்களாக மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறது. 

‘’1. இந்திய மக்களால் நடத்தப்படும் சுதந்திரப் போராட்டத்துக்கு இடையறாத ஆதரவை வழங்குவது முதல் லட்சியம்.

2. தமிழ் மக்களின் மனதில் உள்ள எல்லாவிதமான அடிமை எண்ணங்களையும் போக்குவது அடுத்த லட்சியம்.

3. நாட்டில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போக்குவது மூன்றாவது லட்சியம்’’ என்று தெரிவிக்கிறது.”

வ.ரா. ஆசி!

பாரதியாரின் லட்சியங்களின் மீது தினமணி கொண்டிருக்கும் ஆர்வத்தை பாராட்டுகிறேன். தமிழ் இலக்கியத்துக்கும், அரசியலுக்கும் 'தினமணி’யின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன்’ என்று இலக்கிய கர்த்தா வ.ரா. ஆசி வழங்கியிருக்கிறார்.

Content Courtesy: டி.ஜெ.எஸ். ஜார்ஜ் தொகுத்த கோயங்கா கடிதங்கள் புத்தகத்திலிருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com