‘சென்னையின் சமையல்ராணி’ மெகா சமையல் போட்டி ஹைலைட்ஸ்!

காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலான முழு நாள் நிகழ்வாக நடந்த இந்த மெகா சமையல் போட்டியின் பிரதான நோக்கம் நம் சென்னைப் பெண்களின் சமையல் திறனைப் பற்றி மீண்டுமொரு முறை ஊருக்குப் பறைசாற்றும் விதத்தி
‘சென்னையின் சமையல்ராணி’ மெகா சமையல் போட்டி ஹைலைட்ஸ்!

தினமணி இணையதளம் சார்பாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை எம் ஓ பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சென்னையின் சமையல் ராணி மெகா சமையல் போட்டி குறித்து தினமணி வாசகர்களிடம் ஒரு பகிரல்.

முன்னதாக அறிவித்தபடி போட்டிக்கான பதிவு காலை 8.30 மணி முதல் தொடங்கியது. தினமணி வாசகர்களுடன் எம் ஓ பி கல்லூரி மாணவிகள் வாயிலாக போட்டி குறித்த விவரங்களை அறிந்து மாணவிகளின் அம்மாக்களில் பலரும் கூடப் பெருவாரியாகப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். போட்டியாளர்கள் குலுக்கலில் தங்களுக்குக் கிடைத்த சீட்டில் குறிக்கப்பட்டிருந்த மெனுவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு சமைக்கத் தயாராக அவரவருக்கான இடங்களில் நின்றனர்.

முதலில் 11.30 மணியளவில் ஸ்டார்ட்டர் மெனு தொடங்கியது.

சமையல் போட்டியில் பங்கேற்றவர்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் போட்டிக்கான வளாகத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருந்தன. சமையல் போட்டிக்குத் தேவையான இண்டக்‌ஷன் அடுப்பு வசதிகள், அரைப்பதற்கான மிக்ஸிகள், டிஸ்ப்ளே ட்ரேக்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள் அனைத்தும் அங்கேயே ஒருங்கமைக்கப் பட்டிருந்தன.

அது தவிர போட்டியாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கூடுதலாகத் தாங்களே கொண்டு வந்தும் பயன்படுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்னாக்ஸ் மற்றும் பழரசங்கள் வழங்கப்பட்டன. ஸ்டார்ட்டர் பிரிவு 11.30 க்குத் தொடங்கி சரியாக 12.30 மணியளவில் முடிவுற்றது. ஸ்டார்ட்டர் பிரிவு உணவுகளை உணவியல் வல்லுனரான மீனாக்‌ஷி பெட்டுக்கோலா நடுவராகப் பங்கேற்று தேர்ந்தெடுத்தார். 

ஸ்டார்ட்டர் பிரிவில்... முதல் பரிசு - தீபா மேத்தா, இரண்டாம் பரிசு - பாயல் ஜெயின், மூன்றாம் பரிசு - லட்சுமிகாந்தம்மா மூவரும் பெற்றனர்.

அடுத்ததாக மெயின் கோர்ஸ் மெனு சிறு உணவு இடைவேளைக்குப் பிறகு 2 மணியளவில் துவக்கப்பட்டது. சரியாக 1 மணி நேரத்தில் போட்டியாளர்கள் மஷ்ரூம் பிரியாணி, பனீர் பிரியாணி, காஷ்மீரி புலாவ், சாஃப்ரான் புலாவ், நவதானிய பிரியாணி, கத்தரிக்காய் தீயல், ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதம் விதமான ரய்தாக்கள் என்று சமைத்து அசத்தியிருந்தனர். சமையல் வாசனை உணவு இடைவேளையின் பின்னும் கூட மூக்கைத் துளைத்துப் மீண்டும் பசியுணர்வைத் தூண்டும் விதமாக இருந்தது.

மெயின் கோர்ஸ் மெனுவில் பரிசுக்குரியவர்களை நளமகாராணி மல்லிகா பத்ரிநாத் நடுவராக வந்திருந்து தேர்ந்தெடுத்தார்.

மெயின் கோர்ஸ் பிரிவில்... முதல் பரிசு - பேனசீர் ஷாகுல், இரண்டாம் பரிசு - சத்யா, மூன்றாம் பரிசு - அனுராதா. மூவரும் பெற்றனர்.

அடுத்ததாக 3.30 மணியளவில் டெஸ்ஸர்ட் மெனு துவங்கியது. இப்பிரிவில் பரிசுக்குரியவர்களை அறுசுவை அரசு நடராஜன் அவர்களின் புதல்வி ரேவதி தேர்ந்தெடுத்தார்.

டெஸ்ஸர்ட் பிரிவில் எலிஸா, இரண்டாம் பரிசு - மாதவி, மூன்றாம் பரிசு - ஸ்வேதா மூவரும் பெற்றனர்.

மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசாக தினமணி இணையதளம் சார்பில் ரூ.5000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.3000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும், மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.2500, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. இவை தவிர, போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.

இப்போட்டியை, எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் சொந்தாலியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர்கள் லக்ஷ்மி மேனன், விக்னேஷ் குமார், எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு துணைப் பொது மேலாளர் மாலினி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியின் இடையே எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி மாணவிகளின் மெல்லிசைக்குழுவினர் தங்களது ரம்மியமான பாடல்கள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

நிகழ்ச்சி நடைபெற்ற எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி வளாகத்தில் மெகா சமையல் போட்டியின் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் கோ ஆப்டெக்ஸ், ஃபுடிக்ஸ், வைப்ரண்ட் நேச்சர், டப்பர் வேர், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம், ப்ரீத்தி மிக்ஸி உள்ளிட்டோரது ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.

காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலான முழு நாள் நிகழ்வாக நடந்த இந்த மெகா சமையல் போட்டியின் பிரதான நோக்கம் நம் சென்னைப் பெண்களின் சமையல் திறனைப் பற்றி மீண்டுமொரு முறை ஊருக்குப் பறைசாற்றும் விதத்தில் மிக இனிதாக நடந்தேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com