முன் மாதவிடாய் காலம் என்றால் என்ன?

முன் மாதவிடாய் காலம் என்பது, சினைமுட்டை வெளியேறிய 14- வது நாளுக்குப் பின்னரும், அடுத்த மாதவிடாய்க்கு முன் வாரத்திலும் இருக்கும் நாட்களாகும்.
முன் மாதவிடாய் காலம் என்றால் என்ன?
Published on
Updated on
2 min read

முன் மாதவிடாய் காலம் என்பது, சினைமுட்டை வெளியேறிய 14- வது நாளுக்குப் பின்னரும், அடுத்த மாதவிடாய்க்கு முன் வாரத்திலும் இருக்கும் நாட்களாகும். அந்நேரங்களில் பல்வேறு அசாதாரண மாற்றங்கள் பெண்களுடைய உடலில் ஏற்படுகிறது. இதையே, முன் மாதவிடாய் சிக்கல் என்று கூறுகிறோம். இதற்கு காரணம், சினைமுட்டை வெளியேறிய பின்னர், இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதாகும். 

இந்த நாட்களில், பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன. அனைத்து பருவப் பெண்களும் இந்த முன்மாதவிடாய் சிக்கலில் மாட்டிக் கொள்வதில்லை. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பக்குவம் தெரிந்தவர்களும், அந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற புரிதல் இருப்பவர்களும், இயற்கையிலேயே நோய் எதிர்ப்புத்திறன் வலிமையாகப் பெற்ற பெண்களும் இதனைக் கடந்து மாதவிடாய் பகுதிக்குள் நுழைந்துவிடுவார்கள். மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் சார்ந்த இதழில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வுத்தகவலில், நான்கு பெண்களில் மூவருக்கு இந்த முன்மாதவிடாய் சிக்கல் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களாக மூட்டுவலி, தசைப்பிடிப்பு அல்லது வலி, சோர்வு அல்லது மயக்கமான அல்லது மந்தமான நிலை, உடல் எடை அதிகரித்தல், வயிறு உப்புசம், முகப்பருக்கள் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவைகள் ஏற்படும். மன நலனைப் பொருத்தவரையில், எதிலும் ஈடுபாடு இல்லாத ஒரு வெறுமை, மன அழுத்தம், கோபம், எரிச்சல், திடீரென்ற மனமாற்றங்கள், பசியின்மை, ஏதாவது குறிப்பிட்ட ஒரு உணவுப்பொருளின் மீது விருப்பம், சமூக ரீதியான நிகழ்வுகள் மற்றும் விழாக்களிலிருந்து ஒதுங்குதல், செயல்களிலும் படிப்பிலும் கவனக்குறைவு போன்றவை காணப்படும். 

மேற்கூறிய அனைத்து அறிகுறிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் இரண்டு ஹார்மோன்களே காரணங்களாகின்றன. உதாரணத்திற்கு, புரோஜெஸ்டிரான் ஹார்மோனானது, மோனோஅமினிக் ஆக்ஸிடேஸ் (Mono aminic oxidace) என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்தப் பொருள் 5-ஹைட்டிரோக்ஸிட்ரிப்பிடமைன் (5- hydro oxytry pitamine) என்பதன் அளவினைக் குறைப்பதால், மன அழுத்தம் ஏற்படுகிறது. இது போலவே, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனானது தனது பங்கிற்கு, மோனோஅமினிக் ஆக்ஸிடேஸின் சிதைவை அதிகப்படுத்தி, அதிகப்படியான மோனோஅமினிக் ஆக்ஸிடேஸ் மூலக்கூறுகள் மூளைசெல்களில் வலம்வரத் துணைபுரிகிறது. இவை செரட்டோனின் (Seretonin) உற்பத்தியை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது. 

எனவே, பெண்ணின் இனப்பெருக்க ஹார்மோன்களின் சமநிலையை சரிவர பாதுகாப்பதற்காக, அவற்றிற்கு தேவையான பேரூட்டச் சத்துக்களையும் நுண்ணூட்டச் சத்துகளையும் தேவையான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு, சினைமுட்டை வெளியேறும் பதினான்காம் நாளிலிருந்தே, உணவு முறைகளை சற்றே மாற்றிக் கொள்வதன் மூலம், முன் மாதவிடாய் சிக்கலையும், மாதவிடாய் வலிகளையும் எதிர்கொள்வதற்கான முழுவலிமையையும் உடலுக்குக் கொடுப்பது மட்டுமல்லாமல், அறிகுறிகளைக் குறைத்துக்கொள்ளவும்முடியும். 

ப. வண்டார்குழலி இராஜசேகர், 
உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.
- அடுத்த இதழில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com