மருத்துவர்களே நீங்கள் நலமா?

மன அழுத்தம் மற்றும் பணிச் சுமையால் மருத்துவர்களின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் 13 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
மருத்துவர்களே நீங்கள் நலமா?
Updated on
2 min read

மன அழுத்தம் மற்றும் பணிச் சுமையால் மருத்துவர்களின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் 13 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சுமார் ஆறு லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாகச் சமீபத்தில் வெளியான ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 250 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவரும், டெல்லியில் 300 நோயாளிகளுக்கு ஒருவரும், கேரளாவில் 550 பேருக்கு ஒரு மருத்துவரும் உள்ளனர். அதிகபட்சமாக ஜார்க்கண்ட்டில் 8,000 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனஅழுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 13 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்குப் போதுமான மருத்துவர்கள் இல்லை. எனவே பணிச் சுமை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

`` தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. மிகவும் குறைந்த வயதில் மருத்துவராகும் இளைஞர்களின் வாழ்க்கை முறை மாறுகிறது. பணியிடத்தில் உள்ள வேலைச் சுமை, உடற்பயிற்சி இல்லாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உணவு முறைகள் இவை அனைத்துமே மருத்துவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக உள்ளன.

அவற்றில் மன அழுத்தம்தான் மிக முக்கிய காரணமாக உள்ளது. படிக்கும் காலத்திலேயே இந்த மன அழுத்தம் தொடங்கி விடுகிறது. தொடர்ந்து வேலைக்கு வந்ததும் அது நீடிக்கிறது. பெரும்பாலான மருத்துவர்கள் அரசு வேலை மட்டுமல்லாது, தனியாக கிளினிக் வைத்தும் வேலை செய்கின்றனர். இதனால் குடும்பத்துக்கு நேரம் செலவிடமுடியாமல் போகிறது. விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற எதிலும் கவனம் செலுத்தாமல் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் சம்பளம் மிகக் குறைவாக உள்ளது. கல்லூரி பேராசிரியர்களைவிட மருத்துவர்கள் சம்பளம் குறைவு. இதற்கான காரணம் கேட்டால் நீங்கள் தனியாக கிளினிக் வைத்துள்ளீர்கள் எனக் கூறுகிறார்கள். வேண்டுமென்றால் தனியார் கிளினிக்களை தடை செய்யலாம். அதை விடுத்து சம்பளத்தைக் குறைவாகத் தருகிறார்கள். சம்பளம் குறைவாக உள்ள காரணத்தினால்தான் மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்துகிறார்கள். அரசு வேலை இல்லாதவர்கள் தனியார் கிளினிக் நடத்திவந்தார்கள். தற்போது அதுவும் பெரும் சிரமமாகியுள்ளது.

முதலில் கிளினிக்கை பதிவு செய்ய வேண்டும். அதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முதல், தீயணைப்புத்துறை வரை பல துறைகளில் அனுமதி பெற வேண்டும். அதனால் தற்போது யாரும் சிறிய கிளினிக் வைத்து நடத்த விரும்புவது இல்லை. பெரும்பாலான சிறிய கிளினிக்குகள் மூடும் நிலைக்கு வந்துவிட்டன. நோயாளிகள் அதிகமாகப் பெரிய மருத்துவமனைகளுக்கு மட்டும்தான் செல்கிறார்கள். அதேபோல் மருத்துவக் காப்பீடுகளும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் வாழ்வு மிகவும் மோசமாகிவிட்டது.

நோயாளியின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. படித்து முடித்துவிட்டுப் பல மருத்துவர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான அரசு வேலை வழங்கப்படுவதில்லை. சிக்கன நடவடிக்கையால் மருத்துவர்களின் வேலைகளும் பறிக்கப்படுகிறது. இதனால் உண்டாகும் மன அழுத்தத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகமாக உள்ளது”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com