பல்லாங்குழி, பரமபதம், நொண்டி, மூணு கால் ஓட்டம்! பழமையை நினைவுபடுத்திய விழா இது!

பல்லாங்குழி, பரமபதம் முதல் நொண்டி, மூணு கால் ஓட்டம் வரை
பல்லாங்குழி, பரமபதம், நொண்டி, மூணு கால் ஓட்டம்! பழமையை நினைவுபடுத்திய விழா இது!

பல்லாங்குழி, பரமபதம் முதல் நொண்டி, மூணு கால் ஓட்டம் வரை........பழமையை ஞாபகப்படுத்திய ஜெர்மனியின் முன்சன் தமிழ் சங்க விளையாட்டு விழா

விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்றிருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஜெர்மனியின் முன்சன் தமிழ் சங்கம், தமிழர்களின் பல பாரம்பரிய விளையாட்டுகளை வளரும் தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில் கடந்த 20-ம் தேதி நடத்திக் காட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

பார்க்கும் வெளியெங்கும் வண்ண மலர்கள், பச்சை பசேலென்ற செடிகொடிகள், காலநிலை 30 டிகிரிகளில், அவ்வப்போது சின்ன சின்ன தூறல்! இது தான் ஜெர்மனியின் கோடை காலம். ஜூன் மற்றும் ஜூலை கோடை விடுமுறையாதலால் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே இந்த காலம் கொண்டாட்டம்தான்!  அதன் காரணமாக, முன்சன் தமிழ் சங்கம் சார்பாக 2-வது முறையாக städtische sportanlage மைதானத்தில்தான் நம் பாரம்பரிய விளையாட்டுகள் அரங்கேறின.

விக்னேஷ், சூர்யா, மீனாட்சி, ரத்னமங்கை, தமிழ்செல்வி, பவித்ரா  என்று ஒரு குழுவே இதற்கென நேரம் செலவழித்து, திட்டம் வகுத்து அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய, திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. 3 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை பலரும் உற்சாகத்துடன் கலந்து கொள்ள,  களம் அமைத்துக் கொடுத்த தமிழ் சங்கத்தை எத்தனைப்  பாராட்டினாலும் தகும். 

தமிழ் சங்க நிர்வாகி தேவநாதன் அவர்களிடம் பேசினோம். 'நம் குழந்தைகளுக்கு நாம் மேடை அமைத்துக்கொடுக்காமல் வேறு யார் கை தூக்கி விடுவார்?' என்றவர், 'இந்த நிகழ்ச்சியின் மூலம் நம் தமிழர்களின் பல பாரம்பரிய பல விளையாட்டுகளை வளரும் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சி' என்றார்.

சிறு குழந்தைகளுக்கான ஒரு போட்டி - ஸ்பான்ச்சை தண்ணீரில் முக்கி, தூரத்தில் உள்ள பாட்டிலில் அந்த நீரை நிரப்ப வேண்டும்.இதற்கு நடுவராக இருந்த தீபா பார்த்தசாரதி கூறும் போது, 'குழந்தைகள் அனைவரும் பரிசு வாங்க வேண்டும் என்பதற்காகவே பல விளையாட்டுகளை அவர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். எம் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்' என்றார்.

கரண்டியில் எலுமிச்சை பழத்தை வைத்து ஓடும் போட்டியில் பரிசு கிடைக்காத தியானேஸ்வரனின் சோகத்தைப்  பார்த்து அனைவருமே அவனை சுற்றி நின்று ஆறுதல் கூறியது, அவனுக்கு  கிடைத்த மிகப்பெரிய பூஸ்ட்.  அதனால்தானோ என்னவோ, அடுத்து நடந்த சாக்கு ஓட்டப் போட்டியில் பரிசைத்  தட்டிச்  சென்றான்.

மூன்று வயது குழந்தைகளுக்கு பலூனை பெரியவர்கள் ஊதிக்  கொடுக்க, அதை  அவர்கள்  காலால் மிதித்து உடைக்க வேண்டும். அந்த பிஞ்சு பாதங்களின் ஜதிகளுக்கு பரதநாட்டியம் ஆட அந்த பலூன்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாரதியாரின் ஓடி விளையாடும் பாப்பா ஞாபகத்தில் வந்து போனாள்.

கபடி, வடம் இழுத்தல், கயிராட்டம், கண்ணாமூச்சி, தாயம், ஆடு புலி ஆட்டம், கோலிக்  குண்டு, சுட்டிக்கல் என பல விளையாட்டுகள் நம்மை பழைய காலத்திற்கு கொண்டு சென்றதை மறுக்க முடியாது.

பரிசுகளை, சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் அகாடெமி ஆசிரியர்கள் வழங்கி அனைவரையும் ஊக்கப்படுத்தினார். மொத்தத்தில் இந்த விளையாட்டுப் போட்டிகள்  அனைவருக்குமே குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com