இரஞ்சித் - ராஜராஜ சோழன் சர்ச்சை: அச்சமூட்டும் பாசிசமும்.. உறுத்தும் சில மவுனங்களும்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர் பாரூக் நினைவுநாள் பொதுக்கூட்டம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது.
இரஞ்சித் - ராஜராஜ சோழன் சர்ச்சை: அச்சமூட்டும் பாசிசமும்.. உறுத்தும் சில மவுனங்களும்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர் பாரூக் நினைவுநாள் பொதுக்கூட்டம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றி சில கருத்துகளைத் தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து இரஞ்சித்தின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் விதத்திலும், இளைஞர்கள் மனதில் தீய எண்ணத்தை விதைக்கும் வகையிலும் உள்ளது.  எனவே, இரஞ்சித்தைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் பாலா புகார் அளித்தார். மேலும் சில வழக்குகளும் காவல்துறையினரால் பதிவுசெய்யப்பட்டன.

இதையடுத்து இரஞ்சித் மீது  இந்திய தண்டனைச் சட்டம் 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பேசியது), 153(ஏ), (1) (எ) (பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக வரலாற்றுத் தகவல் அடிப்படையிலேயே அவ்வாறு பேசியதாக இயக்குநர் பா. இரஞ்சித், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்

அவர் தனது மனுவில் உள்நோக்கத்துடன் நான் கருத்து தெரிவிக்கவில்லை, பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள குறிப்புகளையே நானும் பேசினேன். என்னுடைய பேச்சு சமூகவலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இயக்குநர் இரஞ்சித்தின் முன் ஜாமீன் மனு கடந்த வியாழனன்று (13.06.19) விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 'பேசுவதற்கு எத்தனையோ விஷயங்களிருக்க மக்கள் கொண்டாடும் ஒரு மன்னனைப் பற்றி பொதுவெளியில் இப்படிப் பேசலாமா? தேவதாசி முறை எப்போதோ ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது அதைப் பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியம் என்ன? இப்போது அரசு தனது தேவைக்காக, திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துவது போலத்தான்,அப்போது அரசர்கள் நிலங்களைக் கையாண்டார்கள்' என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறு நீதிபதி தெரிவித்த  சூழ்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு ஜாமீன் வழங்குவதற்கு தமிழக அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு  தெரிவித்தது.பின்னர் வரும் புதன்கிழமை (19.06.19) வரை இரஞ்சித்தைக்  கைது செய்யய மாட்டோம் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது. அதையடுத்து வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (21.06.19) ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டதால், இயக்குநர் இரஞ்சித்தைக் கைது செய்யத் தடை நீடிக்கிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரஞ்சித் கடுமையாக, தரம் தாழ்ந்த முறையில்   விமர்சிக்கப்பட்டார். அதிலும் குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவில், இயக்குநர் இரஞ்சித், அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் குடும்பப் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.  ராஜாவின் இந்த செயலுக்கு பின்னால் இருக்கும் விஷமத்தனம் கொண்ட உள்நோக்கம் கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் இரஞ்சித்தைத் தாண்டி அவரது குடும்பத்தினரையும் பொதுவெளியில் அநாகரீக விமர்சனத்திற்கு இட்டுச் செல்லுமிந்தப் போக்கை, ராஜாவின் ட்விட்டர் பக்கத்திலேயே பலரும் உடனடியாக கண்டித்திருந்தனர்.

இப்படி செயல்படுவது ராஜாவிற்கு புதியதல்ல. இதே ராஜா முன்னதாக 'மெர்சல்' திரைப்பட சர்ச்சையின் போது நடிகர் விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை ட்விட்டரில் வெளியிட்டு விஜய் ஒரு கிறிஸ்துவர்' என்று அந்தப் பிரச்னைக்கு மதச்சாயம் பூசியிருந்தார்.     

இதே ஹெச்.ராஜா, தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னதும், அது தொடர்பாக அவர் மீது பெரிய அளவில் வழக்கு தொடரப்படாதது கவனிக்கத்தக்கது. அவ்வளவு

ஏன் நீதிமன்றத்தையே மிகவும் கீழ்த்தரமாக பேசியதற்கே ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவர் மட்டும் அல்ல; திரைத்துறையில் பணியாற்றும் மேனஜர் ஓருவரே, 'தமிழக மக்களின் பெருமைமிகு அடையாளமான மன்னர் ராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் இரஞ்சித்திற்கு உங்கள் கண்டங்களைத் தெரிவியுங்கள்' என்று தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக பதிவிட்டு ரஞ்சித்தின் அலைபேசி எண்ணையும் பதிவில் வெளிப்படையாக கொடுக்கிறார். அங்கும் இயக்குநர் இரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிரான ஜாதிய வன்மம் கொண்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.  அதன் பின்னர் அவருக்கு அலைபேசி வழித்  தாக்குதல்கள் வந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.    

இதேபோல சிறிது காலம் முன்பு தற்போதைய கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இந்துத்துவ இயக்கங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததை அடுத்து, அவரது அலைபேசி எண்ணும் பொதுவெளியில் பகிரப்பட்டது. அதையடுத்து உள்நாடு மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் அவருக்கு வந்த கொலை மிரட்டல்கள் மற்றும் ஆபாச அழைப்புகள் குறித்து எல்லாம் ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் ஸ்க்ரீன்சாட்டுகளுடன் பகிர்ந்திருந்தார்.

இத்தகைய செயல்களின் மூலம் சம்பந்தப்பட்டவருக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் மற்றும் தேவையற்ற மன உளைச்சல்களும்  இங்கு குறிப்பிடத்தக்கது.   சுருக்கமாகச் சொல்வதென்றால் இவை எல்லாமே சகிப்புத்தன்மை எதுவுமில்லாத, அதிகரித்து வரும் பாசிச மனப்பான்மையின் குரூர வெளிப்பாடுகள்தான். தனக்கு எதிராக கருத்துக் கொண்டவர்களே இருக்கக் கூடாது என்பது எப்போதும் அபாயகரமான ஒன்றுதான்!

உங்களது நிலைப்பாட்டிற்கு எதிராக ஒருவர் கருத்து தெரிவிக்கிறார் என்றால், அவரது கருத்தை எதிர்த்து தெளிவாக உங்கள் தரப்பு வாதங்களை / கருத்துக்களை முன்வைக்கலாம்.  இப்போது இயக்குநர் இரஞ்சித், மன்னர் ராஜராஜ சோழன் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு ஆதாரமாக பல்வேறு நூல்களை குறிப்பிடுகிறார். அப்படியென்றால் அதனை மறுக்கத்  தேவையான தரவுகளைத் திரட்டி முன்வைத்து இரஞ்சித்தின் கருத்துக்களை எதிர்கொள்வதே சரியான முறையாக இருக்கும்.  ஆனால் அதுதான் இங்கே நடப்பதில்லை. எல்லாமே வெறும் வசையிலேயே முடிந்து போகின்றது என்பதுதான் வருத்தமான விஷயம்!

தமிழகத்தை அரசாண்ட மன்னர்களின் காலத்தில் நிலம் மற்றும் கோவில் ஆகிய இரு விஷயங்களுக்கு இடையேயான நுண்ணிய தொடர்பு மற்றும் அப்போது ஜாதி நிலைமை தமிழ்நிலத்தில் எவ்வாறு இருந்தது என்பது குறித்தெல்லாம் நிறைய புத்தகங்கள் தமிழில் இருக்கின்றன. கல்வெட்டு தகவல்கள் மற்றும் செப்பேடுகளை ஆராய்ந்து வெளியிடப்பட்ட நூல்கள் நிறைய இருக்கின்றன. தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனமே அத்தகைய நூல்களை வெளியிட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. பொதுவாக, எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர்  பொ.வேல்சாமி எழுதியுள்ள "கோவில் நிலம் ஜாதி" என்னும் சிறுநூல் இதுகுறித்த சிந்தனைகளுக்கு ஓர் நல்ல ஆரம்பப் புள்ளியாக  இருக்கும்.     

இந்த விஷயத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு அம்சம் உள்ளது. இரஞ்சித் தமிழில் இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ளார்.  நான்குமே வெற்றிப்படங்கள். அதில் கடைசி இரண்டு படங்கள் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ளார். இயக்குநர் சங்கத்திலும் உறுப்பினர். அதேசமயம் தனது நீலம் புரொடெக்ஷன்ஸ் மூலம் முதன்முறையாக  'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். ஆனால் இதுவரையில் இந்த விவகாரத்தில் ரஞ்சித் விமர்சிக்கப்படும் முறைக்கு ஆதரவான ஒரு குரல் கூட எழவில்லை.

ராஜராஜன் குறித்த அவரது கருத்துக்களுக்கு இரஞ்சித்தான் பொறுப்பு என்பது வேறு. அதுதொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் அதனை அவர் எதிர்கொள்வார். ஆனால் அதற்காக சமூக வலைத்தளங்களில் அவரும் அவரது குடும்பமும் விமர்சிக்கப்படும் விதம் குறித்து ஒரு சிறிய அளவிலான கண்டனம் கூட இந்த இரு சங்கங்களிடமிருந்தும் எழவில்லை. இந்த மவுனம் ஏன் என்பது நாம் சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான்.      

குறிப்பாக சொல்வதென்றால் கடந்த ஆண்டு வைரமுத்து - ஆண்டாள் சர்ச்சை வெடித்த சமயத்தில், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வடபழனியில் நடந்த ஒரு திரைப்பட நிகழ்வில் பேசியபோது விநாயகரை "இறக்குமதிக் கடவுள்" என்று விமர்சித்துப் பேசியிருந்தார். அதற்காக அவர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது  அதற்காக அப்போது இயக்குநர் சங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவித்து ஆதரவுக் குரல் எழுந்தது நாம் கவனிக்கத்தக்கது.     

சமீபத்தில் திரைப்பட  நிகழ்வொன்றில் நடிகை நயன்தாரவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த நடிகர் ராதாரவிக்கு, பல நடிகர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்களிடம் இருந்து கண்டனக்குரல் எழுந்தது. இறுதியில் அவர் வருத்தம் தெரிவித்தார்.

வேறொரு உதாரணம் வெளியிலிருந்து தெரிவிப்பதென்றால் மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்களன்று (17.06.19) நாடு தழுவிய அளவில் மருத்துவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தது உங்களுக்குத் தெரியும். கொல்கத்தாவில் தாக்கப்பட்ட மருத்துவருக்காக சென்னை எழும்பூரில் கூட கண்டன போராட்டங்கள் நடந்தது. இவை எல்லாமே அவரும் மருத்துவர் என்ற துறை சார்ந்த சக உணர்வு மட்டும்தான். ஆனால் நமது சினிமாத் துறையில்?    

இலக்கிய உலகத்தை எடுத்துக் கொண்டால், எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் அவரது ஊரில்  மளிகைக்கடை ஒன்றால் மாவு பாக்கெட்டை வீசியெறிந்த சம்பவத்தில் தாக்கப்பட்டார். உடனே அவருக்கு ஆதரவாக, எழுத்தாளரும் விசிக எம்.பியுமான ரவிக்குமார் தனது 'சக படைப்பாளிக்காக' ஆதரவுக் குரல் எழுப்புகிறார். மற்றொரு புறம் எழுத்தாளர் சாருவும் கண்டனத்தைப் பதிவு செய்கிறார். ஆனால் இதே நிலையில் ஏன் இரஞ்சித்திற்காக அவர்களது குரல் எழவில்லை? இங்கே படைப்பாளிக்கான தார்மீக ஆதரவு நிலை கிடையாதா?

அதேசமயம் பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழங்கங்களில் இயங்கும் அம்பேத்கர் சார்பு மாணவர் இயக்கங்ககள் இரஞ்சித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் ஏறக்குறைய 300 தமிழ் திரைப்படக் கலைஞர்கள் தனிப்பட்ட முறையில் இரஞ்சித்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

சுருக்கமாக சொல்வதென்றால் தமிழர்களின் பெருமிதமாக ராஜராஜ சோழன் திராவிட இயக்க அரசியல்வாதிகளால் முன்னிறுத்தப்பட்டார்.அதற்கு பின்னால் ஒரு அரசியல் காரணம் இருந்தது. அதேநேரம் சமீப காலங்களில் ராஜராஜ சோழனுக்கு சாதிய சாயம் பூசப்பட்ட போது, எவ்வித எதிர்ப்பும் தமிழ்ச்சூழலில் எழவில்லை. மாறாக, அதற்கு பெருமளவு மௌனமே எதிர்வினையாக இருந்திருக்கிறது. தற்போது ராஜராஜ சோழன் குறித்த விமர்சன கருத்துக்களை இரஞ்சித் தெரிவித்ததால் அவர் மீது ஜாதி ரீதியிலான வன்மம் கொட்டப்படுகிறது.    

ஏகப்பட்ட நிச்சயமற்ற சூழல்களின் நடுவில் இருக்கக் கூடிய ஒரு துறையாக சினிமா தற்போது இருக்கிறது. அப்படியிருக்கும்போது தனக்குக் கிடைக்கக் கூடிய ஒவ்வொரு சினிமா வாய்ப்புகளிலும் தான் நம்பும் அரசியலை நேர்மையுடன் பேசத் துணியும் ஒருவராக இரஞ்சித் இருக்கிறார். அத்துடன் திரைப்படங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் சமுதாயம் சார்ந்த உரையாடல்களை முன்னெடுக்கும் விதமாக பல்வேறு தளங்களில் செயல்பட்டும் வருகிறார். அப்படி இருக்கும் ஒருவருக்கு இந்த ராஜராஜ சோழன் சர்ச்சை தமிழ்ச் சமுகம் சார்ந்த மேலும் பல புரிதல்களை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்பலாம்.

தமிழ்ச்சூழலில் ஒரு கருத்து முன்வைக்கப்படும் போது அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை இந்த சம்பவம் நன்கு உணர்த்துகிறது. இங்கு நிறைய சமயங்களில் எதிர்ப்பு என்பது  சொல்லப்பட்ட கருத்துக்காகவா அல்லது அந்த கருத்தை சொன்னவருக்காகவா

என்பதையும் பார்க்கலாம். ஏன் என்றால் ராஜராஜ சோழன் குறித்த மாறுபாடான சில கருத்துக்கள் முன்பும் ஆய்வாளர்களால் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதைச் சொல்வது இரஞ்சித் என்பதால் கூடுதல் கவனமும், ஜாதிய வன்மமும் காட்டப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அத்துடன் பரவலாகி வரும் அச்சமூட்டும் பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களையும், சகிக்க முடியாத சில மவுனங்களையும்தான் !    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com