ஒரே நாடு.. ஒரே ரேஷன்.. ஒரே குழப்பம் தான்!

முதலில் பொதுவிநியோகத் திட்டத்தினைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அப்போது தான் அதில் ஏற்படும் குளறுபடிகள் புரியும்..
சிறப்பு பொதுவிநியோக திட்டம்
சிறப்பு பொதுவிநியோக திட்டம்

முதலில் பொதுவிநியோகத் திட்டத்தினைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அப்போது தான் அதில் ஏற்படும் குளறுபடிகள் புரியும்..

பொது விநியோக திட்டத்தின் நோக்கங்கள் என்னென்ன ?

  • தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்கவும்
  • அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்கவும்
  • அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம், நுண் ஊட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்கவும்
  • உள்நாட்டு எரிபொருள்களை (மண்ணெண்ணை மற்றும் எல்பிஜி) மலிவாக வழங்க
  • பயனாளிகள், நியாய விலைக் கடைகளை எளிதாக அணுகவும்
  • ஏழை மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் வழங்கவும்
  • ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில், அத்தியாவசியமான பொருட்களை வழங்கவும் தொடங்கப்பட்டது.

பொது விநியோக திட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைகள்
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்திற்குறிய கொள்கைகளை, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வகுத்திருக்கிறது. இந்த கொள்கைகள், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தலைமையின் கீழ் மற்றும் அரசு செயலாளர் தலைமையின் கீழ் உள்ளது. பின்வரும் துறைகள், தமிழ்நாட்டின் பொது விநியோக திட்டத்தின் முக்கிய பங்குதாரர்கள்:

1. உணவு வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (CS&CPD)
ஆணையரை தலைவராகக் கொண்டு 33 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 285 தாலுகா - மண்டல அலுவலங்களுடன் செயல்படுகிறது.

2. தமிழ் நாடு உணவு வழங்குதல் கழகம் (TNCSC)
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள அத்தியாவசியமான பொருட்களை கொள்முதல், பரிமாற்றம் மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்புக்களை பெற்றுள்ளது. இக்கழகம் நிர்வாக இயக்குனர் தலைமையின் கீழ் செயல்படுகிறது.

3. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவகம் (RCS)
எல்லா மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நியாய விலைக் கடைகளை நடத்த பொறுப்பை பெற்றுள்ளது.
இச்சங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுப் பதிவாளரின் துணையுடன் உள்ள பதிவாளரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது.

4. உணவு வழங்கல் முறையின் குற்றப் புலனாய்வுப் துறை
கடத்தல், பதுக்கல், கள்ளச் சந்தை போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு எதிராக வலுவான சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுள்ளது.

5. உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோக அமைச்சரகம்
இந்திய அரசாங்கத்திற்கு கீழ், உணவுப் பொருட்களின் கொள்முதல் விலையை நிர்ணம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள மாநில அரசாங்கத்திற்கு மானிய உணவுப் பொருட்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்புக்களை பெற்றுள்ளது.

6. இந்திய உணவுக் கழகம்
இது ஒரு இந்திய அரசாங்கத்தின் அமைப்பு. இந்த அமைப்பு அரிசி, கோதுமை மற்றும் மற்ற அத்தியாவசியமான பொருட்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள உணவு ஒதுக்கீடு அமைச்சரகத்தின் ஆணைகள் படி மாநிலங்களுக்கு பரிமாற்றம் செய்கிறது.

வரிசை எண் அட்டை வகை     உரிமம் பெற்ற பொருட்கள்
1. பச்சை அட்டைகள் (அரிசி தேர்வு செய்த அட்டைகள் அனைத்து பொருட்களும்
2. வெள்ளை அட்டைகள் (சர்க்கரை தேர்வு செய்த அட்டைகள்)    அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும்
3. காக்கி அட்டைகள் (காவல் துறை மற்றும் சிறைச்சாலை துறையின் பணியாளர்களுக்குறிய அட்டைகள்)    அனைத்து பொருட்களும்
4. நீல அட்டைகள் (வனத்துறை அதிகாரிகளுக்குறிய அட்டைகள்)அனைத்துப் பொருட்களும்
5. வெள்ளை நிற அட்டை - பொருட்கள் இல்லை

அந்யோதையா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள்
ஏழைக் குடும்பங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த குடும்பங்களின் குடும்ப அட்டைகளில் அந்யோதையா அன்ன யோஜனா முத்திரை இடப்படும்.

திருநங்கைகள், சமூக தொல்லைகளில் இருந்து பாதிக்கப்படுவதாலும், மற்றும் தங்கள் குடும்பங்களில் இருந்து விலகி மற்ற திருநங்கைகளுடன் வாழ்வதாலும், அவர்களுக்கு வழங்கும் குடும்ப அட்டைகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டது. அவர்களின் இக்கட்டான நிலையினால் தமிழ்நாடு அரசு, அவர்களுக்காக நல வாரியம் உருவாக்கி அடையாள அட்டைகளை வழங்குகிறது. 

மாநில அரசு, மாநிலங்களில் உள்ள வீடற்ற ஏழ்மையான நகர்ப்புற குடும்பங்களை பாதுகாக்க வழிமுறைகளை செயல்படுத்துகிறது. ஆட்சியர்களுக்கு, வீடற்ற நபர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்க வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. நடைமேடை மற்றும் தெரு ஓரத்தில் வாழும் வீடற்ற நபர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்தின் அடுத்துள்ள வீட்டின் எண் பயன்படுத்தி அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

அரிசி அட்டை இளம் பச்சை நிறத்தில் உள்ள இவ்வட்டை அரிசியை நியாய விலைக் கடைகளிலிருந்து பெற விரும்புவோர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இவர்கள் மற்ற பொருட்களையும் பெறலாம். 28-02-2010-இன்படி அந்தயோதயா அண்ணா யோஜனா அட்டையையும் சேர்த்து இவ்வட்டையின் எண்ணிக்கை 1,84,43,227 ஆகும். அடுத்த வகையான வெள்ளை அட்டை மூலம் நுகர்வோர்கள் அரிசியைத் தவிர சாதா ஒதுக்கீட்டை விட 3 கிலோ அதிக சர்க்கரை மற்றும் மற்ற பொருட்களை பெறலாம். 28-02-2010 இன் படி இந்த அட்டை வைத்திருப்போர்களின் எண்ணிக்கை 10,67,821 ஆகும்.

மூன்றாவது வகையான பொருட்கள் இல்லா அட்டை மூலம் நுகர்வோர்கள் எந்த பொருளையும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பெற முடியாது. இந்த அட்டை முகவரி அடையாள அட்டையாக உபயோகப்படுத்தப்படுகிறது. 28-02-2010 இன் படி 62,443 இந்த வகை அட்டைகள் உபயோகத்தில் உள்ளன.

எல்லா வகையான அட்டைகளையும் சேர்த்து 28-02-2010 இன் படி 1,96,32,951 குடும்ப அட்டைகள் உள்ளன. நான்காவது வகையான காக்கி அட்டை காவல் துறையில் மேலாளர் நிலை வரை உள்ள பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்த அட்டை மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய், து.பருப்பு மற்றும் உ.பருப்பு பொது விநியோகத் திட்டத்தின் வழங்கும் விலையில் 50% இல் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் பொது விநியோகத் திட்டத்தின் விலையில் வழங்கப்படுகிறது. 28-02-2010 இன் படி 59,460 காக்கி அட்டைகள் உபயோகத்தில் உள்ளன.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அமைப்பும் அதன் செயல்பாடுகளும்

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் ஒரு காவல் துறைத் தலைவர், 2 காவல் கண்காணிப்பாளர்கள் (சென்னை மற்றும் மதுரை மண்டலம்) மற்றும் நான்கு துணைக் கண்காணிப்பாளர்களை (சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை) கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்தத் துறையில் உள்ள 33 அலகுகளில், 22 அலகுகள் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலும் மற்றும் 11 அலகுகள் காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையிலும் செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோயம்புத்துார், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் வேலுார் ஆகிய இடங்களில் ஐந்து சிறப்பு ரோந்துப் படைகள் இயங்கி வருகின்றன.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை பறிமுதல்

01.01.2017 முதல் 31.05.2018 வரை 8,232 வழக்குகள் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அத்தியாவசியப் பொருட்கள் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* ரூ.1,12,00,960 மதிப்பிலான 19,824.71 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி
* ரூ.4,96,410 மதிப்பிலான 33,094 லிட்டர் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய்
* ரூ.3,36,100 மதிப்பிலான 379 எண்ணிக்கை எரிவாயு உருளைகள்
இது தவிர ரூ.2,91,853 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களான பருப்பு, பெட்ரோல், டீசல், கலப்பட எண்ணெய் போன்ற பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ1,23,25,323 ஆகும். 6801 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தென் மாநிலங்களில் துடிப்புடன் செயல்பட்டு வந்த கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இரயில், கப்பல் மற்றும் பெரிய லாரிகள் வாயிலாக கடத்தப்பட்ட அரிசி பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சந்தை தடுப்புக் காவல்
01.01.2017 முதல் 31.05.2018 வரை கள்ளச் சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 120 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

‘ஒரே நாடு.. ஒரே குடும்ப அட்டை’
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ எனும் திட்டத்தை ஓராண்டுக்குள் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது; அதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்’ என்று மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார். ஆனால், இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்தியாவிலேயே விலையில்லாமல் அரிசி கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் வேறு மாநிலத்துக்காரர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டுமெனில், அந்த மாநிலத்து விதிமுறையின் படிதான் வாங்க முடியும்.

புதிதாக, வேறு மாநிலங்களில் இருந்து ரேஷன் பொருட்களை வாங்குபவரின் ரேஷன் அட்டைகள், ஆன்லைனில் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அவை அனைத்தும் மத்தியத் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, அதற்கான அரிசியைப் பெற்றுக் கொடுப்போம்.

இதனால் தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களுக்குத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது. சிறப்பு விநியோகத் திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. துவரம்பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவை குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்நிலையில் நமது மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் மக்கள், பொருட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும். அதேபோல மற்ற மாநிலத்தவர், இங்கு எதையும் இலவசமாக வாங்கிவிட முடியாது'' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பொதுப்பகிர்வு முறை என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலின் கீழ் வருவதைப் பயன்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒரு கோடியே 99 லட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு, அவை ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டு அடிப்படைத் தேவைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

குளறுபடிகள்

தமி​ழ​கத்​தில் முதல்கட்டமாக 7.66 லட்​சம் குடும்ப அட்டைகள் போலி என கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதன் பிறகு 16.28 லட்​சம் குடும்ப அட்​டை​க​ளுக்கு பொருட்​கள் வழங்​கு​வது நிறுத்​தப்​பட்டுள்​ளன.

முன்பெல்லாம் லாரிகளில் ரேசன் அரிசி கடத்துவதாக செய்திகள் வரும். கண்டெய்னர்களிலும் கடத்தி வந்தார்கள். அவற்றில் எல்லாம் சோதனை நடைமுறைகள் அதிகரிக்கப்பட்டதும் சத்தமே இல்லாமல், ஆட்கள் மூலம் சிறிது சிறிதாக கடத்துகிறார்கள். மின்சார ரயிலில் வந்து போகும் செலவு வெறும் இருபது ரூபாய்தான். ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை வரும்போது, ஒரு நபர் சாதாரணமாக 600 ரூபாய் வரையில் சம்பாதிக்கிறார். இதையே, ஆயிரம் பேர் செய்யும்போது கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இனி வட மாநிலத்தவரை வைத்து சுலபமாகக் கடத்துவார்கள்.

மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர் 10 கிலோ அரிசியை ரூ.3-க்கு அவரது மாநிலத்தில் வாங்கியிருந்தால், அதே விலைக்கு தமிழகத்தில் வாங்குவார். அப்படியெனில், தமிழக மக்கள் பெறும் இலவச அரிசியை பிற மாநிலங்களில் இலவசமாகக் கொடுப்பார்களா?

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சிறப்பு பொதுவிநியோக திட்டம் செயல்படுத்துவது கிடையாது. இதையடுத்து, வெளி மாநிலத்தவர் இந்த சிறப்பு பொதுவிநியோக திட்டத்தில் இடம் பெறமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

போலி அட்டைகள் பெருகும், கடத்தல் எளிமையாகி விடும், இனி உணவு பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின்பாடு திண்டாட்டம் தான்  ?

தமிழக அரசு இந்த குழப்பங்களுக்கு வழிவகுக்காமல், நம் மாநிலத்தை மட்டும் பார்த்தல் நம் மக்களுக்கு நன்மை பயக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.