ஹிந்தி மொழி விவகாரம்: பின்வாங்கியது யார்? அமித் ஷாவா? ஸ்டாலினா?

ஹிந்தி மொழி விவகாரத்தில் அமித் ஷா மற்றும் ஸ்டாலின் இருவருமே இதுவரை இல்லாத அளவுக்கு தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 
ஹிந்தி மொழி விவகாரம்: பின்வாங்கியது யார்? அமித் ஷாவா? ஸ்டாலினா?

ஹிந்தி மொழி குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்ததை அடுத்து, ஹிந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20ம் தேதி நடத்தப்படவிருந்த திமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் ஸ்டாலின் இருவருமே இதுவரை இல்லாத அளவுக்கு தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

ஹிந்தி மொழி குறித்த அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு:

கடந்த செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி தினத்தை முன்னிட்டு, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அமித் ஷா, 'இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. அனைத்து மொழிகளுக்குமே அவற்றுக்கான முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், நாடு முழுமைக்கும் ஒரே மொழி என்பது தேவை. அந்த வகையில், நாட்டில் பெரும்பான்மையான மக்களால் ஹிந்தி பேசப்படுவதால், அந்த மொழியால் நாட்டை ஒருங்கிணைக்க முடியும்' என்று கூறியிருந்தார். 

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு: 

மத்திய பாஜக அரசு வெளியிடும் அறிவிப்புகளுக்கு/கூறும் கருத்துகளுக்கு தமிழகத்தில் இருந்து தான் முதல் எதிர்ப்பு கிளம்பும் என்ற அளவிற்கு பேசப்படும் நிலையில், மொழிக்காக போர் நடத்திய தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு எப்படி இருக்கும் என சொல்லவா வேண்டும்...  

அமித் ஷாவின் பேச்சு, ஹிந்தி திணிப்பு முயற்சி என திமுக, மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தமிழகத்தில் இருந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அமித் ஷா தனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுத்தனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் ஹிந்தியைத் திணிக்க முற்பட்டால் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தைக் காட்டிலும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.

அதேபோன்று, மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த் கூட, ஹிந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை தென் மாநிலங்கள் மட்டுமல்ல; வடமாநிலங்களே எதிர்க்கும் என்று கூறியிருந்தார்.   

ஹிந்தி திணிப்புக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்:

ஹிந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தமிழகத்தில் செப். 20-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்தது.  போராட்டத்திற்கான வேலைகளிலும் திமுக முழுவீச்சில் இறங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற வேண்டும் என்றும் அனைத்து தொண்டர்களும் கலந்துகொள்வதோடு, மிகப்பெரிய அளவிலான போராட்டமாக இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுடனும் இதுகுறித்து ஸ்டாலின் ஆலோசனையும் நடத்தினார். மாவட்டத் தலைநகரங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் நிலையில் இருந்தன. 

அமித் ஷாவின் தன்னிலை விளக்கம்:

இந்த ஒரு சூழ்நிலையில் தான் நேற்று ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஹிந்தி மொழி பத்திரிகை ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, 'ஹிந்தி மொழியை நாட்டின் எந்தவொரு பகுதியிலும், எப்போதும் திணிக்க நினைத்ததில்லை. எனினும், அந்தந்த பிராந்திய மொழிகளுக்குப் பிறகு 2-ஆவது மொழியாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டும் என்றுதான் பேசி வருகிறேன். 

மாநில மொழிகளை வலுப்படுத்த வேண்டும் என்றே நான் எப்போதும் கூறி வருகிறேன். ஹிந்தி மொழியை பிரதானமாகக் கொண்டிராத மாநிலத்திலிருந்து தான் நானும் வந்துள்ளேன். நான் சார்ந்த குஜராத் மாநிலத்தில் குஜராத்தி தான் தாய்மொழியே தவிர, ஹிந்தி அல்ல. 

ஒரு குழந்தை தனது தாய்மொழியில் கற்கும்போது தான் அதன் மூளை வளர்ச்சியும், செயல்பாடும் தடுமாற்றமில்லாமல் இயல்பாக இருக்கும். அவ்வாறு தாய்மொழி என்று குறிப்பிடுவது ஹிந்தி மொழியை அல்ல. குஜராத் மாநிலத்துக்கு குஜராத்தி மொழி இருப்பது போல், அந்தந்த மாநிலத்தின் பிரத்யேக மொழியே தாய்மொழியாக குறிப்பிடப்படுகிறது. 

அதேவேளையில், நாட்டுக்கென பொதுவாக ஒரு மொழி இருக்க வேண்டும். ஒருவர் தனது தாய்மொழிக்கு அடுத்தபடியாக, மற்றொரு மொழியைக் கற்க விரும்பினால் அது ஹிந்தியாக இருக்க வேண்டும். இதையே ஒரு கோரிக்கையாக முன்வைத்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது என்பதைத் தான் புரிந்துகொள்ள இயலவில்லை' என்று விளக்கம் அளித்தார்.

அமித் ஷாவின் இந்த விளக்கம், ஹிந்தி திணிப்பு குறித்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதாகவே இருந்தது. எனினும், அமித் ஷா இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

அமித் ஷா தனது நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? 

ஹிந்தி மொழி குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக தீவிர போராட்டப் பணிகளில் திமுக இறங்கியது இந்திய அளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; முக்கியமாக தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவுக்கு திமுகவின் இந்த போராட்டம் முட்டுக்கட்டையாக இருக்கும்; ஏற்கனவே திமுக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதோடு, வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்று பேசப்படுகிறது.

கலைஞர் மறைவுக்கு பிறகு திமுக காணாமல் போகும் என்று கூறியவர்களே, ஸ்டாலின் மிகவும் நுட்பமாக அரசியலை கையாள்கிறார் என்று பேசுகிறார்கள்.  இந்த நிலையில், திமுக ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அது தமிழக மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த போராட்டங்கள்:

முன்னதாக, 1964ல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அரசு ஹிந்தியை கட்டாயமாக்கியது. இதையடுத்து, தமிழகத்தில் 1965ம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுகவில் மிகப்பெரிய அளவிலான ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இது இந்தியாவையே உலுக்கியது என்று சொன்னால் மிகையாகாது. 

1965ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் நாளான குடியரசு நாளை கருப்பு தினமாகக் கொண்டாட திமுக அழைப்பு விடுத்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் திமுகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் உயிர்பலியையும் சந்திக்க நேரிட்டது.

இந்தப் போராட்டதில் மாணவர்கள் பெரும்பாலானோர் ஈடுபட்டனர். மாணவர் சங்கத் தலைவர்கள் இருவர் தீக்குளித்து உயிரிழந்ததை நினைவுகூறும் வகையில்தான் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

இந்த மாபெரும் போராட்டதையடுத்து, மத்திய அரசு தனது முடிவை தளர்த்திக் கொண்டது. அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடரும் என்று பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அறிவித்தார். 

திமுகவின் இந்தப் போராட்டம் பின்னாளில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தது. அதன்பின்னர் 1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. 

சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. 1937ம் ஆண்டு  சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்றது இந்திய தேசிய காங்கிரஸ். அப்போது தமிழகத்தில் ஹிந்தியை கட்டாயமாக்கினார் ராஜாஜி. இதற்கு எதிராக பெரியார் தலைமையில் பெரும் போராட்டம் வெடித்தது. மூன்று வருடங்களுக்கு இந்த போராட்டம் நீடித்தது . பின்னர் ராஜாஜி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

எனவே, இத்தகைய போராட்டங்கள் இந்திய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியதால் திமுகவின் போராட்டமும் நாட்டு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவாது என்று கருதி அமித் ஷா இதுபோன்று ஒரு விளக்கம் அளித்திருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ஏனென்றால் அமித் ஷா, தனது அரசியல் வரலாற்றில், தான் கூறிய ஒரு கருத்துக்கு விளக்கம் அளித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஸ்டாலின் - ஆளுநர் சந்திப்பு:

இதற்கிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதன்கிழமை காலை அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று ஆளுநரை மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை சந்தித்தார். மு.க.ஸ்டாலினுடன் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் உடன் சென்றார்.

ஆளுநருடனான சந்திப்பையடுத்து, அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "ஆளுநர் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றோம். வரும் 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார். ஆர்ப்பாட்டத்தை என்ன காரணத்துக்காக நடத்துகிறோம் என்பதை விளக்கிச் சொன்னோம்.

அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்ன கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும், எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் ஆளுநர் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னார்.

இதை மத்திய அரசு சொல்ல முன்வருமா என்று கேட்ட நேரத்தில், நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர். மத்திய அரசு சொல்லித்தான் உங்களிடம் கூறுகிறேன் என்கிற உறுதியைக் கொடுத்தார். அதன்படி, வரும் 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். அதேசமயம், எந்த நிலையில் ஹிந்தி திணிக்கப்பட்டாலும், நிச்சயமாக அதை திமுக என்றும் எதிர்க்கும்' என்று பேசினார். 

ஸ்டாலின் பின்வாங்கக் காரணம் என்ன?

கட்சித் தொடக்கம் முதலே ஹிந்தித் திணிப்பை எதிர்த்து வரும் திமுக, முதல்முறையாக ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைத்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஸ்டாலினின் பின்வாங்கலில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். 

ஹிந்தி மொழி குறித்த தனது பேச்சுக்கு விளக்கமளித்த அமித் ஷா நேற்று பேசும்போது, ஹிந்தி மொழி குறித்த தனது கருத்து தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும்; தனது கருத்துகளைக் கொண்டு எவரேனும் அரசியல் செய்ய நினைத்தால், அது அவர்களின் விருப்பம் சார்ந்தது; அதை வைத்து அரசியல் செய்தால் செய்யட்டும்' என்றும் பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலினைத் தான் அவர் மறைமுகமாக எச்சரித்து இவ்வாறு கூறியிருப்பார் போலும். இதனால் தான் ஆளுநர் கூறியவுடன் ஸ்டாலின் தனது போராட்டத்தை கைவிட்டுவிட்டார். ப.சிதம்பரத்தை அடுத்து தமிழகத்தில் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்படலாம் என்று பாஜகவினர் கூறி வருவதன் தாக்கமாக இருக்குமோ? மத்திய அமைச்சர் கூறிய ஒரு சர்ச்சை கருத்து, ஆளுநர் வாயிலாக சமரசம் செய்யப்படுவது ஏன்? நாட்டின் நலன் கருதி தான் ஆளுநர், ஸ்டாலினை சந்தித்து பேசினாரா? என்பன போன்ற கருத்துகள்/ விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 

திமுகவை தோற்றுவித்த அண்ணாவும் சரி, வழிநடத்திய கலைஞர் கருணாநிதியும் சரி, மொழி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் பின்வாங்கியதே இல்லை. 1965ல் ஹிந்தி திணிப்பு போராட்டத்தில் கருணாநிதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். டால்மியாபுரத்தை 'கல்லக்குடி' என்று மாற்ற வேண்டும் என தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தியதெல்லாம் இங்கு குறிப்பிடத்தக்கவை. 

ஆனால், ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் திமுக தலைவரான ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக்கொண்டது முக்கியமாக தமிழக மக்களிடையே பல்வேறு கேள்விகளையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.