வெல்வாரா அன்புமணி?

2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்புமணி, ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் அதிர்ச்சி தந்தார். ஆனால்...
வெல்வாரா அன்புமணி?

2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்புமணி, ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் அதிர்ச்சி தந்தார். ஆனால் 2019-ல் நடக்கும் மக்களவைத் தேர்தலில் அன்புமணி அதிர்ச்சி தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான அலை வீசியது. அந்த அலையில் தாமும் வீசி எறியப்படுவோம் என்ற அச்சத்தில் காங்கிரசுடனான கூட்டணியைத் திமுக முறித்துக் கொண்டது நினைவிருக்கலாம். அதே நேரத்தில் நரேந்திர மோடி என்ற தனிநபர் மீதான ஆதரவு அலையும் இந்தியா முழுவதும் பரவி இருந்தது. தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகளின் வாக்குவங்கியும் 2014ல் தேர்தலில் அன்புமணிக்கு உதவியது.

ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான அலை தற்போது இல்லை. நரேந்திர மோடிக்கு ஆதரவான அலையும் தற்போது இல்லை. திமுக கூட்டணிக்கு மதிமுக சென்றுவிட்டது. தேமுதிகவின் வாக்குவங்கி சிதைந்து சின்னாபின்னம் ஆகிவிட்டதாக அனைத்துக் கட்சிகளும் கருதுகின்றன.

அதிமுகவின் வாக்குவங்கி நிரந்தரமானது என்று கருதப்பட்ட நிலையில், டிடிவி தினகரனின் வருகை எம்ஜியார் உருவாக்கிய அதிமுகவை ஆட்டம் காண வைத்துள்ளது.

எனவே தனது சொந்த செல்வாக்கை நம்பியே அன்புமணி களம்காண வேண்டிய சூழலில் உள்ளார்.

1980களில் வன்னியர் சங்கம் என்ற பெயரில் கிளைகள் பரப்பிய இயக்கம், 17.9.1987ல் தமிழகத்தில் தங்களுக்கு உள் இடஒதுக்கீடு கோரி மாபெரும் போராட்டங்களைத் தொடங்கியது. கிட்டத்தட்ட 75 நாட்களுக்கும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வன்னியர்கள் ஒருங்கிணைந்தனர். இவர்களின் போராட்டங்களை அடக்குவதற்கு எம்ஜியார் அரசு தடுமாறியது. மரங்கள் வெட்டப்பட்டு சாலைகள் யாவும் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பசுமைத்தாயகம் என்ற அமைப்பை நடத்தி, மரம் வளர்ப்புக்குக் குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சி, 1987ல் மரங்களை வெட்டிச் சாலைகளை மறிப்பதற்குப் பெயர் போன கட்சியாகும்.

அந்தப் போராட்டங்களின் போது 18 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அந்த உயிர்களின் தியாகம் வீண் போகவில்லை. அன்று முதல் இன்று வரை தனது வன்னியர் வாக்குவங்கியை நிரந்தரமாகப் பிடித்து வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, வட தமிழகத்தில் தனக்கான நிலையான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ஏற்படுவதற்கும் இந்தப் போராட்டம் வழிகோலியது.

இந்தியாவைப் பொருத்தவரை தனது சுயஜாதியை நம்பிக் கட்சி ஆரம்பித்து 30 ஆண்டுகளாக அதே பிம்பத்தில், வாக்குவங்கியைத் தக்க வைத்திருக்கும் முக்கிய கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சியே என்று கூறலாம்.

வன்னியர் ஓட்டு அன்னியர்க்கு இல்லை என்ற ஒற்றை முழுக்கத்தை ராமதாஸ் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இன்றுவரை கடைபிடிக்கிறார்கள் என்று அன்புமணி நம்புகிறார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்ட்ட அன்புமணி தனது கட்சியின் வாக்குவங்கியை 5.23 சதவிதிகமாக நிலைநிறுத்திக் கொண்டார். இந்த வாக்குவங்கி முதலமைச்சர் ஆகுவதற்குப் பயன்படாது என்றும், இந்த வாக்குச் சதவிகிதத்தை மட்டும் நம்பி மக்களவைத் தேர்தலில் தனித்து நின்றால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்பதையும் அன்புமணி உணர்ந்துள்ளார். எனவே தான் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைப்பது என்பது தாயுடன் உறவுக்குச் சமம் என்று சொல்லிய நிலையிலும், திமுகவுடனும் அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். எந்தக் கட்சி அதிக சீட்டுகளை ஒதுக்கியதோ, எந்தக் கட்சி அதிக பணத்தை ஒதுக்கியதோ அந்தத் திராவிடக் கட்சியுடன் கூட்டு வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டதால் அன்புமணி எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் அதிமுகவைப் பொருத்தவரை தருமபுரி மக்களவைத் தொகுதியை விட, இடைத்தேர்தல் நடைபெறும் அரூர் (தனி), பாப்பிரெட்டி ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் அதிகம் கவனம் செலுத்துகிறது.

அன்புமணிக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் திமுக வேட்பாளரும் அதே சமுதாயத்தைச் சார்ந்தவர், மருத்துவர், திமுகவின் நிரந்தர வாக்குவங்கி, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குவங்கி போன்றவையும் அன்புமணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும். தருமபுரி இளவரசன் மரணத்திற்குப் பிறகு தாழ்த்தப்பட்டோரின் ஆதரவு பாட்டாளி மக்கள் கட்சிக்குக் குறைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

காதல் என்கிற இயற்கைக் கோட்பாட்டுக்கு எதிரான செயல்பாடுகள் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ராமதாஸ் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி ஜாதிக் கலவரத்திற்குப் பிறகு தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக பிற ஜாதிச் சங்கங்களை இணைத்து ராமதாஸ் உருவாக்க நினைத்த சமூக அமைப்புச் செயல்பாடுகள் தாழ்த்தப்பட்டோருக்குக் கோபத்தை வரவழைத்துள்ளன.

எப்போது கூட்டணி வைத்தாலும் மதிமுகவைவிடக் கூடுதலாகச் சீட்டுகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் ராமதாஸ் கவனமாக இருப்பார். இந்த முறை தேமுதிகவை விட கூடுதலாகச் சீட்டுகளை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ராமதாஸ் வெற்றி பெற்றுள்ளார்.

தொடக்கக்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆயுதமாகக் கையில் எடுக்கப்பட்ட பிரபாகரன் ஆதரவு என்பது தற்போது வீரப்பன் உருவம் போட்ட பனியனாகச் சுருங்கியுள்ளது என்று தமிழ் ஆர்வலர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

தனது சுயஜாதி அரசியல் செயல்பாடுகள் காரணமாக ராமதாஸின் மது எதிர்ப்பு, புகையிலை எதிர்ப்பு போன்ற கொள்கைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற அன்புமணி, தற்போதைய காலகட்டத்தில் பாதியளவு கூட நாடாளுமன்றத்தில் வருகை புரியவில்லை என்பதும், தன் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 கோடிக்கும் மேல் பயன்படுத்தாமல் மிச்சம் வைத்திருக்கிறார் என்பதும் தருமபுரி மக்களுக்கு வருத்தத்தைத் தந்துள்ளன.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் திண்டிவனம் ராமமூர்த்தி, கேவி தங்கபாலு போன்ற பிரபலங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் கூட்டணி என்று வந்துவிடும்போது தருமபுரியை விடாமல் ராமதாஸ் பெற்றுவிடுவார். 4 முறை பாமகவின் பிரதிநிதிகள் தருமபுரி மக்களவை உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். ஆனாலும் விவசாயக் கூலிகளாகவே தருமபுரி மக்கள் தற்போதும் காலம் தள்ள வேண்டிய சூழல் உள்ளது. விவசாயம் பொய்த்துவிட்ட சூழலில் வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் பிழைப்பைத் தேடிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது வரை தருமபுரியில் வேலைவாய்ப்பு தரும் தொழிற்சாலைகள் எதுவும் நிறுவப்படவில்லை என்பதும் தருமபுரி மக்களின் கோபமாக உள்ளது.

சீமானின் நாம்தமிழர் வாக்குவங்கி விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களின் வாக்குவங்கியை மதிமுகவிற்கு அடுத்துத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வாக்குவங்கி பாமகவின் தமிழார்வ வாக்குவங்கியைப் பதம் பார்க்கக் கூடும். புதியதாக தொடங்கப்படும் கட்சிக்குத் தமிழக மக்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆதரவைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்திற்கும் தரக்கூடும். திமுக, அதிமுக கூட்டணியை எதிர்த்து நடுநிலையை விரும்புபவர்கள் நோட்டாவையும் கமலையும் ஆதரிக்கத் தொடங்கினால், அது  அன்புமணிக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

2014ல் தருமபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றிருந்தாலும், 2016ல் நடந்த தருமபுரிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாமக தோல்வியைச் சந்தித்துள்ளது அந்தக் கட்சிக்குத் தொண்டர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவின் தலைமைக்கு ஏற்றவர்கள் இல்லை என்ற கருத்தும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. விஜயகாந்த் பிரசாரம் செய்யாததால் அவரின் ரசிகர்கள் ஊக்கம் பெறாமல் உள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை மோடிக்கு எதிரான அலை பெருகியுள்ளது. எனவே மோடி, இபிஎஸ், ஓபிஎஸ், விஜயகாந்த் கூட்டணியில் உள்ளவர்களைத் தருமபுரி மக்கள் ஏற்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

எனினும் கடைசி நேரத்தில் இறைக்கப்படும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கும் ஓட்டுக்குப் பணம், நம்பிக் கொண்டிருக்கும் ஜாதி வாக்குவங்கி, நடுநிலையாளர்களின் உறுதியான முடிவு போன்றவையே தருமபுரியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்றே தெரிகிறது.

சி.சரவணன் 9360534055

senthamizhsaravanan@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com