இயக்குனர் மகேந்திரனை அழைக்க இயலாத அலைபேசி எண்!

இது ஒரு பைத்தியக்காரத் தனமான முடிவாக இருக்கலாம். இருக்கட்டும். அதனாலென்ன?! ஆத்மார்த்தமான சிலரைப் பற்றிய நினைவுகளை அவரவருக்கு உகந்த விதத்தில் நாம் பாதுகாத்து வைப்பது வழக்கம் தானே! அப்படித்தான் இதுவும்.
இயக்குனர் மகேந்திரனை அழைக்க இயலாத அலைபேசி எண்!

சிலரை வாழ்நாள் முழுதும் நாம் நேரில் கண்டிருக்க வாய்ப்பேதும் இல்லை.

ஆனாலும் அவர்களுக்கும் நமக்கும் ஏதோ பூர்வீக பந்தமிருக்கலாம். அவர்களது இழப்பு நெருங்கிய பந்தமொன்றை இழந்து விட்டாற் போன்றதான உணர்வை நமக்குள் ஏற்படுத்திச் சென்றால் அதற்கான அர்த்தம் அதுவே!

ஒரு பத்திரிகையாளராக எனக்கென்று சில ஆதர்ஷங்கள் உண்டு. அவர்களை ஒருமுறையேனும் நேர்காணல் செய்ய வேண்டுமென்ற ஆசையும் இருந்ததுண்டு. 

அந்த வகையில் அவர்களது அலைபேசி எண்களைச் சேகரித்து வைப்பது வழக்கம். அது ஒரு சின்ன லிஸ்ட்.

அப்படித்தான் இயக்குனர் பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரனது அலைபேசி எண்கள் எனது ஃபோனில் இடம்பெற்றன. ஆனால் அவர்களுடன் ஒருமுறையேனும் பேசும் வாய்ப்பு தான் கடைசி வரை கிடைக்காமலே போய் விட்டது. அல்லது அப்படியொரு வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொள்ளவே இல்லை எனலாம். ஆனாலும் இப்போது நினைத்துப் பார்க்கும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் இருவருமே இப்போது உயிருடன் இல்லை. இனி அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவே போவதில்லை. எதற்கும் ஒருமுறை முயன்று பார்த்திருக்கலாமே என்று மனம் துயரத்தில் மூழ்கும் போது ஊவாமுள் குத்தினாற் போல் இனம் தெரியா வலி.

மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள், மெட்டி, முள்ளும் மலரும், ஜானி திரைப்படங்கள் என் ஆல்டைம் ஃபேவரிட். இப்போதும் ஏதாவது ஒரு சேனலில் இந்தப் படங்களைக் கண்டால் பார்த்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விடுவேன். ஜானி என் அம்மாவின் ஆல்டைம் ஃபேவரிட்.  வலம்புரிச் சங்கில் உறையும் ஆழ்கடலின் மெல்லிரைச்சல் காதோடு அணைக்கும் தோறும் கடல் நடுவே மிதக்கும் உணர்வைத் தருவது போல மகேந்திரனின் திரைப்படங்களில் உறையும் அழகியலும், ஆழ்ந்த அமைதியும் மிகத் திருப்தியானவை. இந்தப் படங்களின் டேஸ்ட் வேறு மாதிரியானது. எப்படியென்றால் ’பாரதியின் காணி நிலம் வேண்டும் பராசக்தி’ வேண்டுதலைக் கேட்டு அன்னை பராசக்தி உடனே காணி நிலமும் பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்ணும் கூடுதலாக பத்துப் பண்ணிரெண்டு தென்னை மரங்களையும் வாரி வழங்கினால் பாரதி எத்தனை சந்தோஷத்தில் ஆழ்ந்திருப்பாரோ, அதைப்போல நல்ல சினிமா ரசனை கொண்டவர்களுக்கெல்லாம் அருமையான திருப்தியுணர்வைத் தரவல்லவை மேற்கண்ட திரைப்படங்கள். 

அதே தங்கப்பதக்கம் திரைப்படத்தின் கதை & வசனம் மகேந்திரன் என்று எதிலோ முதன்முறை வாசித்த போது, இது வேற மாதிரி இருக்கே. இயக்குனர் மகேந்திரன் டச் இதில் இல்லையே என்று தோன்றியதுண்டு. அதற்கு வணிக ரீதியாகவும், படைப்புச் சுதந்திரம் ரீதியாகவும் சில நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம் என்று பின்னாட்களில் உணர்ந்து கொள்ள முடிந்தது.

பள்ளிக்காலத்தில் அர்விந்த் சுவாமி, கெளதமி நடிப்பில் ‘சாசனம்’ என்றொரு திரைப்படத்தை மகேந்திரன் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று வாரமலர் துணுக்குமூட்டையில் வாசித்து விட்டு அந்தப் படம் வந்தால் அதைக் கண்டிப்பாக தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். படம் பல ஆண்டு தாமதத்தின் பின் எப்போது வெளிவந்ததோ என்று தெரியாத அளவில் வந்த சுவடின்றி வெளியாகி தியேட்டரை விட்டும் வெளியேறி விட்டது. 

இவையெல்லாம் இயக்குனர் மகேந்திரன் குறித்த நினைவுகளாகப் பள்ளிநாட்களில் தங்கிப் போனவை. பிறகு சென்னை வந்ததும் பாஸ்கர் சக்தியின் ‘கனகதுர்கா’ புத்தக வெளியீட்டு விழா வம்சி பதிப்பகம் சார்பாக சென்னை கீழ்பாக்கத்தில் ஏதோ ஓரிடத்தில் நடந்தது, இடத்தின் பெயர் மறந்து விட்டது. அங்கே அன்று நான்கு புத்தகங்கள் ஒருசேர வெளியிடப்பட்டன. அதில் பாஸ்கர் அண்ணாவின் கனகதுர்காவை வெளியிட்டுப் பேச மகேந்திரன் வந்திருந்தார். அது தான் முதல்முறை அவரைப்பார்க்க கிடைத்த சந்தர்பம். மகேந்திரனின் பேச்சு அவரது படைப்புகளைப் போலவே சுவாரஸ்யமாக இருந்தது. கனகதுர்காவை வெளியிட்டுச் சிறப்பித்து விட்டு நூலாசிரியர் பாஸ்கர் சக்தியைப் பற்றியும் மனமார சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு பத்திரிகையாளருக்கும் இயக்குனருக்குமான நட்பில் அவர்கள் இருவருக்குமான பந்தம் அழகு.

இந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டதின் பிறகே நான் இயக்குனர் மகேந்திரனின் எண்களைக் கேட்டு வாங்கி எனது அலைபேசியில் சேமித்திருந்தேன்.

என்றாவது ஒருநாள் அந்த அற்புதமான இயக்குனரை நேர்காணல் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் நிஜமாகும் முன் அவரைப் பற்றிய மரணச் செய்தி வந்துவிட்டது. இதுவும் முதன்முறை அல்ல. எனக்கிந்த உணர்வுகள் பழகிப்போனவையே.

முதன்முதலாக சுஜாதாவின் மரணச் செய்தி வந்தபோது அப்படித்தான் இருந்தது. 

பிறகு பாலுமகேந்திரா... அவரது மரணச் செய்தி வந்த அன்று ஒருநாள் முழுதும் வண்ண வண்ணப்பூக்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் பாடலை மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து கேட்டுக் கொண்டிருந்தது மறக்க முடியாத நினைவு.

பின்னர் எழுத்தாளர் பிரபஞ்சன்...  

இதோ இப்போது இயக்குனர் மகேந்திரன்...

இந்த வலி தரும் ஏமாற்றம் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் மனதில் ஆழப் பதியச் செய்வதாக இருக்கிறது.

லெஜண்டுகளை நேர்காணல் செய்வதென்பதும் அவர்களுடன் உரையாடுவது என்பதும் அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும். நான் அதைத் தவற விட்டிருக்கிறேன்.

இப்போதும் இயக்குனர் மகேந்திரனின் அலைப்பேசி எண்கள் எனது அலைபேசியில் உண்டு. ஒருமுறை கூட பேசாத எண் என்ற வகையிலும் இப்போது அவர் இறந்து விட்டார் என்ற வகையிலும் அந்த எண்ணைச் சேமிப்பிலிருந்து நீக்கி விடத் தோன்றுகிறது.

ஆனாலும் துக்கம் அனுஷ்டிக்கும் விதத்தில் சில நாட்கள் அவருடைய பெயருடன் அந்த எண்கள் அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டு விட்டேன்.

இது ஒரு பைத்தியக்காரத் தனமான முடிவாக இருக்கலாம். இருக்கட்டும். அதனாலென்ன?! ஆத்மார்த்தமான சிலரைப் பற்றிய நினைவுகளை அவரவருக்கு உகந்த விதத்தில் நாம் பாதுகாத்து வைப்பது வழக்கம் தானே! அப்படித்தான் இதுவும்.

மகேந்திரன் போன்ற அற்புதமான இயக்குனருக்கு அவரது திரைப்படங்களைக் கண்டு நல்ல திரைப்படம் என்றால் எப்படி இருக்கும் என்று இனம்கண்டு திருப்தியுற்ற ஒரு ரசிகையின் துக்க அனுஷ்டிப்பாக இதைக் கருதிக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com