சென்னை ரயில் நிலைய பெயர் மாற்றத்தால் பரிதவிக்கும் பயணிகள்: சரி செய்ய முயலும் ரயில்வே

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் புரட்டிசித் தலைவர் டாக்டர். எம்ஜி ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை ரயில் நிலைய பெயர் மாற்றத்தால் பரிதவிக்கும் பயணிகள்: சரி செய்ய முயலும் ரயில்வே


சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் புரட்டிசித் தலைவர் டாக்டர். எம்ஜி ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் என்பது அதிமுகவினரின் விருப்பமாக இருக்கலாம். அதனை தேர்தல் நேரம் என்பதால், பாஜகவும் உடனடியாக நிறைவேற்றி வைத்திருக்கலாம்.

இதெல்லாம் அரசியலில் சாதாரணம் என்றாலும், ஒரு ரயில் நிலையத்துக்கு பெயர் சூட்டும் போது, அந்த பெயரை விடவும், அந்த ஊரின் பெயர் ரொம்ப முக்கியம் என்பதை ஒருவர் கூட உணரவில்லையா. பெயரை மாற்றி பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்ட பிறகு சமூக வலைத்தளங்களிலும், பயணிகளிடம் இருந்தும் கடுமையான விமரிசனங்கள் எழுந்த பிறகே பெயர்ப் பலகையில் சென்னை என்ற வார்த்தை காணாமல் போனதே அதிகாரிகளுக்குத் தெரிய வந்ததா?

சரி, பெயர் மாற்றப்படுவதாக அறிவித்து ஒரு வார காலத்துக்குள் பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டுவிட்டன. எல்லாம் தேர்தல் நேரம் என்பதால் ஜரூராக நடந்து முடிந்து விட்டது. ஆனால் இப்போது அதில் சென்னை என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்றால் அதுவும் உடனடியாக நடக்குமா?

இதோ ரயில்வே என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்?

சென்னைக்கு வரும் ரயில்களிலும் சரி, ரயில் நிலையத்திலும் சரி சென்னை என்ற வார்த்தையே இல்லாததால் பயணிகள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகினர். இது பற்றி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து தெற்கு ரயில்வேயின் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் அனுப்பியிருக்கும்  அறிவுறுத்தல் கடிதத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புதிதாக சூட்டப்பட்ட பெயரான புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில்வே நிலையம் என்ற பெயரை ரயில் பெட்டிகளில் எழுத வேண்டாம் என்றும், ரயில் பெட்டிகளில் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் என்று எழுதலாம் என ரயில்வே முடிவெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். 

இதேப் போலவே ரயில் டிக்கெட்டுகளிலும் இடப்பற்றாக்குறை காரணமாக எம்ஜிஆர் சென்னை சிடிஎல் என்று அச்சிடும் முறை அமலுக்கு வருகிறது.

எனவே, இனி ரயில் பெட்டிகளில் சென்னை சென்ட்ரல் என்ற பெயர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் என்றே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகவும், சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் சென்ட்ரல் ரயில் நிலையம் விளங்குகிறது. இந்த ரயில் நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அதிமுக தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கடந்த மாதம் 6-ஆம் தேதி சென்னை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் மூலமாக தெரிவித்தது. தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதுபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் பலகை வைப்பதற்கான பணிகளும் ஜரூராக நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில்தான் நமது அண்டை மாநிலங்களில் இருந்து முதல் முறையாக சென்னை வரும் பயணிகளும், சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள், பிற ரயில் நிலையங்களில் நிற்கும் போது சென்னை ரயில் என்பதை அடையாளம் காண்பதிலும் சிக்கல் எழுந்ததாக கடுமையான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

காரணம், அந்த பெயர்ப் பலகையில் சென்னை என்ற வார்த்தையே இல்லாமல் இருப்பதுதான். தற்போது ரயில் பெட்டிகளில் மட்டும் முதல் கட்டமாக இந்த தவறு சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லது நடந்தால் சரிதான்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com