Enable Javscript for better performance
Tamil Music Book List | தமிழிசை நூல்கள் பட்டியல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  இசைப் பிரியரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த தமிழிசை நூல்கள்

  By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published On : 30th August 2019 04:19 PM  |   Last Updated : 30th August 2019 04:19 PM  |  அ+அ அ-  |  

  music_article


   

  தமிழிசை நூல்களும் அவற்றின் வரலாறும்
  (History of Tamil music Books and history)

  இசை நூல்களைப் பொதுவாகப் பாடுதுறை சார்ந்தவை, இசையியல் துறை சார்ந்தவை என இரு வகைப்படுத்தலாம். தமிழ் நாட்டுச்சூழலில் பாடுதுறை சார்ந்த நூல்கள் கடந்த இருநூறு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவை பெரும்பாலும் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் அமைந்த கிருதிகளையும் கீர்த்தனைகளையும் உள்ளடக்கியவைகளே. இசையியல் தொடர்பாக வெளியான நூல்களும் அவ்வாறே அமைந்தவை. 15 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் தமிழிசையைப் பொருத்தவரை ஆராய்ச்சியில்லாத இருண்ட காலம் எனலாம்; ஆனால் அதே சமயம் தமிழிசைப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் இயற்றப்பட்டு பாடுதுறைக்கான பொற்காலமாக விளங்கியது.

  இசைநுணுக்கம் (Isai Nunukkam) என்பது கபாடபுரம் என்னும் பாண்டியர்களின் இடைச்சங்கத் தலைநகரில் அரங்கேறிய ஒரு இசை இலக்கண நூலாகும். தெய்வப் பாண்டியன் மகன் சாரகுமாரன் இசையறிதல் பொருட்டு அகத்தியரின் 12 மாணாக்கர்களில் ஒருவனான சிகண்டி செய்த நூல் இசைநுணுக்கம். மேலும்;

  அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் கூத்தநூல்கள்,

  • கூத்தநூல்
  • இந்திரகாளியம்
  • பஞ்சமரபு
  • பரதசேனாபதியம்
  • நாடகத்தமிழ்நூல்

  தமிழிசை ஆதாரங்கள் பட்டியல் [காலம் கணிக்க முடியாதவை]

  • தமிழ் நாட்டார் பாடல்கள்
  • சித்தர் பாடல்கள்

  சங்க காலம் (கிமு 500  கிபி 300)

  • தொல்காப்பியத்தில் தமிழிசை
  • கூத்த நூல் (தாள நூல், இசை நூல்) (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)
  • பரிபாடல்
  • புறநானூற்றில் தமிழிசை
  • அகநானூற்றில் தமிழிசை
  • பத்துப்பாட்டு
  • பெருநாரை (இன்று மூலம் கிடைக்கவில்லை)
  • பெருங்குருகு (இன்று மூலம் கிடைக்கவில்லை)
  • தேவவிருடிநாரதன் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
  • பேரிசை
  • சிற்றிசை
  • இசைமரபு
  • இசைநுணுக்கம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
  • பஞ்சமரபு (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)
  • பஞ்சபாரதீயம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
  • பரதசேனாபதீயம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
  • மதிவாணர் நாடகத்தமிழ் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
  • தாளவகை ஒத்து  (இன்று மூலம் கிடைக்கவில்லை)
  • யாப்பருங்கால விருத்தியுரை

  சங்கம் மருவிய காலம்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவக சிந்தாமணி
  • காரைக்கால் அம்மையார் பாடல்கள்
  • குடுமியான்மலை இசைக் கல்வெட்டு
  • திருமந்திரம்

  பக்தி காலம் (700  1200)

  • திவாகர நிகண்டு
  • பிங்கலம்
  • தேவாரங்கள்
  • கல்லாடம்
  • திருவாசகம்
  • நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
  • பெரியபுராணம்
  • திருவிளையாடற்புராணம்
  • 10 ம் நூற்றாண்டு  இடைக் காட்டுச்சித்தர் பாடல்கள்
  • 10 ம் நூற்றாண்டு  பட்டினத்தார்
  • இடைக் காலம் (1200 1700)
  • திருப்புகழ்
  • குமரகுருபரர் படைப்புகள்
  • முத்துத் தாண்டவர் பாடல்கள்
  • 18 ம் நூற்றாண்டு
  • தாயுமானவர் பாடல்கள்
  • சதுரகராதி
  • அருணாசலக் கவிராயர் பாடல்கள்
  • மாரிமுத்துப் பிள்ளை பாடல்கள்
  • திரிகூடராசப்பக் கவிராயர்  குற்றாலக் குறவஞ்சி

  19 ம் நூற்றாண்டு

  • சுப்பராம ஐயர் பதங்கள்
  • கவிகுஞ்சர பாரதியார் படைப்புகள்
  • கோபாலகிருட்ண பாரதியார் படைப்புகள்
  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை படைப்புகள்
  • அண்ணாமலை ரெட்டியார் படைப்புகள்
  • இராமலிங்க அடிகளார் படைப்புகள்
  • நந்தனார் சரித்திரம்

  20 ம் நூற்றாண்டு

  • 1917  ஆபிரகாம் பண்டிதர்  கருணாமிர்த சாகரம்
  • 1930  மதுரை பொன்னுசாமிப்பிள்ளை  பூர்வீக சங்கீத உண்மை
  • பாரதியார் பாடல்கள்
  • பாரதிதாசன் பாடல்கள்
  • 1947  விபுலாநந்தர்  யாழ் நூல்
  • 1940  செல்வி ஜசக்  பழந்தமிழிசை (ஆய்வேடு)
  • கண்ணதாசன் பாடல்கள்
  • புதுவை இரத்தினதுரை பாடல்கள்
  • க. வெள்ளை வாணர்  இசைத்தமிழ் (நூல்)
  • கு. கோதண்டபாணியார்  பழந்தமிழிசை (நூல்)
  • அ. இராகவன்  இசையும் யாழும்
  • வீ. பா. கா சுந்தரம்  பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்
  • 1984  பி. டி. செல்லத்துரை  தென்னக இசையியல்
  • 1992  வீ. ப. கா. சுந்தரம்  தமிழிசைக் கலைக்களஞ்சியம்
  • நா. மம்மது  தமிழிசைப் பேரகராதி

  21 ம் நூற்றாண்டு

  • 2009  மு. அருணாசலம்  தமிழ் இசை இலக்கண வரலாறு (நூல்)
  • 2009  மு. அருணாசலம்  தமிழ் இசை இலக்கிய வரலாறு (நூல்)

  ஆங்கில ஆதாரங்கள்

  Musical tradition of Tamilnadu

  Heritage of the Tamils: art & architecture

  1975  The Poems of Ancient Tamil, Their Milieu and Their Sanskrit Counterparts (இன்னூலில் தமிழின் செய்யுள் மரபும் இசை மரபும் மராட்டியின் மூத்த மொழியான மகராட்டிரப் பிராக்கிருதத்தின் மீதும், அதன்வழியாக சமக்கிருத இலக்கியத்தின்மீதும் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதைச் சான்றுகளுடன் காட்டியுள்ளார் பேரா.சியார்ச்சு ஆர்ட்டு.)
  2008  Yoshitaka Terada  Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India  (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)

  ஏறத்தாழ 5000 ஆண்டுகள் தொன்மையுடையது தமிழிசை ஆயினும், தமிழிசை குறித்த நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது அனைவரும் அறிந்த உண்மை.  இடைச் சங்க காலத்திலும் கடைச் சங்க காலத்திலும் சிறந்து விளங்கிய இசை நூல்களும் காலப்போக்கில் மறைந்து விட்டன.  தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்களிலும் திருமுறைகளிலும் பிற இலக்கிய நூல்களிலும் ஆங்காங்கே பதிவாகியுள்ள குறிப்புகள், செய்திகளின் அடிப்படையில் தமிழிசையின் வரலாற்றையும் இலக்கணத்தையும் படைக்கும் முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாயின. 1892 ஆம் ஆண்டில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்ட ‘சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரை’யும் என்னும் நூலே இம்முயற்சிகளுக்கு மூலமாகவும் அடிப்படையாகவும் விளங்கியது. இதற்குத் துணை நூல்களாக உ. வே. சா. பதிப்பித்த ‘பத்துப்பாட்டு மூலமும் உரையும்’   (1889) புறநூனூறு (1894) ஆகியன அமைந்தன.

  கி.பி. 1917 ஆம் ஆண்டு தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையின் தொன்மை வரலாற்றை முதன் முதலாக விவரித்து ‘கருணாமிர்தசாகரம்’  என்னும் மிகப் பெரிய நூலைப் பதிப்பித்தார். பல நூற்றாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழிசை குறித்து வெளிவந்ததால் தற்கால இசைநூல்களுள் இதனையே முதல் நூலாகக் கொள்ள வேண்டும், தமிழிசையியல் என்னும் பெருங்கடலில் பயணம் செய்வோருக்குக் ‘கருணாமிர்த சாகரம்’ ஒரு கலங்கரைவிளக்கமாகும்.

  ‘தமிழிசை பற்றித் தமிழில் ஒன்றுமில்லை’ என்று கருதிய காலம் பண்டிதரின் காலம். இதனைப் பண்டிதர், ‘சங்கீதத்திற்கு சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே முதல் நூலென்றும், அது சிறந்ததென்றும், தமிழ்மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லுகிறார்கள்’ என்று வேதனையுடன் குறிப்பிடுகின்றார். இக்குறையைக் போக்கும் வகையில், பல ஆண்டுகள் இசை பயின்றும், இசை நூல்களைக் கற்றும், இசையறிஞர்களோடு கலந்துரையாடியும் பழந்தமிழ்ப் பனுவல்களைத் திரட்டியும் தமிழிசை குறித்த நீண்ட வரலாற்றையும், நுணுக்கங்களையும் ஆய்ந்து அறிந்து கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டார்.

  1917 இல் வெளிவந்த இந்நூல் பெருந்தாளில் கால் அளவினதாய் 1346 பக்கங்களில் அமைந்து, நான்கு பாகங்களைக் கொண்டு, மூன்று தமிழ்ச்சங்கங்கள், குமரிக் கண்டம், கடல் கோள் ஆகியன குறித்துப் பல்வேறு சான்றுகளுடன் மிகவும் விரிவாக விளக்குகின்றது. மேலும், அக்காலத்தில் வாழ்ந்த இசைப்புலவர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

  இரண்டாம் பாகம் சுருதிகளைப் பற்றி விளக்குகின்றது. இசைக்கான சுருதிகளின் எண்ணிக்கை 24 என்றும், 22 சுருதிகள் என்னும் இசையியல் கொள்கை தவறு என்றும் பல்வேறு நிலைகளில் விவாதித்து முடிவுரைக்கின்றது. இப்பகுதி இசை இயற்பியல் பற்றியது.

  மூன்றாம் பாகத்தில் தமிழிசையியல் குறித்த பல செய்திகள் கிடைக்கின்றன. பெரும் பண்கள், திறப்பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனை, முற்காலப் பிற்கால நூற்களில் கூறியுள்ள இராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னுமட் பொருந்திசைச் சுரங்களைக் கண்டு கொள்ளும் முறைகள் ஆகியன பற்றி சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வழி நின்று விளக்கப்படுகின்றது.

  நான்காம் பாகத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை, குறித்தும், மாந்தன் உடலுக்கும் யாழ்வடிவுக்கும் ஓப்பீடு, யாழ் வகைகள் குறித்தும் விளக்குகின்றது.

  தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், பிற இலக்கியங்கள் வழிப் பெற்ற சான்றுகளின் அடிப்படையிலும் பிறமொழி நூல்கள், வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் மிகவும் ஆழ்ந்து ஆய்வு செய்து எழுதப்பட்டது இப்பெருநூல். இந்நூலின் மறு பதிப்பு 1994ஆம் ஆண்டில் அன்றில் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

  புகழ் பெற்ற நாதசுர மேதை மதுரை பொன்னுசாமிப் பிள்ளை எழுதிய ‘பூர்வீக சங்கீத உண்மை’ (1930) என்னும் நூல் மிகவும் குறிப்பிடத்தக்கது. பெரும்பண்கள், கிளைப்பண்கள், சுர அமைப்புகள், இசை நுணுக்கங்கள், ஆகியன குறித்து மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். இந்நூல், தமிழிசை இலக்கண மரபு வழி நின்று, கர்நாடக இசையில் வழங்கிவரும் 72 மேளகர்த்தா இராகங்களைத் தர்க்கரீதியாக நிராகரித்து, அவற்றுள் 32 மேளகர்த்தாக்கள் மட்டுமே பெரும் பண்கள் என நிறுவ முனைந்தது. இசை வரலாற்றில் இந்நூல் மிகப்பெரிய சிந்தனைப் புரட்சியைத் தோற்றுவித்தது. ஆனால், தமிழிசை ஆய்வு வரலாற்றில் இவருக்கு உரிய இடம் இல்லாமல் போனது பெரும் விந்தையே. 

  அடுத்து, பல்லாண்டு கால ஆராய்ச்சியின் பயனாக சுவாமி விபுலானந்தர் படைத்த யாழ் நூல் மிக முக்கிய இடம் பெறுகிறது. 1947இல் நச்சாந்துபட்டி சிதம்பரம் செட்டியாரின் பொருளுதவியால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் 1947இல் வெளியிடப்பட்டது. இந்நூலின் பெயர் ‘யாழ் நூல் என்னும் இசைத்தமிழ் நூல்’ என்றே ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்நூல் யாழ் பற்றி மட்டுமின்றி  இசைத்தமிழின் பல்வேறு கூறுகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கும் நூல் என்பதை நன்கு உணரலாம். பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் என்னும் ஏழு இயல்களையும் பல அரிய தகவல்களை உள்ளடக்கிய ‘சேர்க்கை’ என்னும் பகுதியையும் உடைய யாழ் நூல் இசைத்தமிழின் அனைத்துக் கூறுகளையும் அலசி ஆராய்கின்றது. யாழ் வகைகள் முழுப்பக்கப் படங்களாகவும் யாழின் உறுப்புகள் சிறு படங்களாகவும் மிகவும் நேர்த்தியாக வெளியிடப்பட்டுள்ளன.

   தமிழ் நூல்களை மட்டுமே சான்றாதாரங்களாகக் கொள்ளாமல், கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்கள் எனப் பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். 5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த யாழ்க் கருவியின் படம் தரப்பட்டுள்ளது சிறப்பாகும். இசைத்தமிழ் ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஓர் அரிய கருவூலமாகும். இதன் இரண்டாம் பதிப்பு 1974இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாலேயே வெளியிடப்பட்டது; மூன்றாம் பதிப்பும் அண்மையில் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

  தொடர்ந்து, 1950ஆம் ஆண்டு ஆபிரகாம் பண்டிதரின் புதல்வர் வரகுண பாண்டியன் ‘பாணர் கைவழி என்னும் யாழ் நூல்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் யாழ் பற்றிய பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியதுடன் வீணை குறித்தும் விளக்குகின்றது. 1956இல் வெளிவந்த பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனாரின் ‘ஐந்திசைப் பண்கள்’ மிக முக்கியமான தமிழிசை ஆவணமாகும். சிறந்த இசைக் கலைஞரான முனைவர் எஸ். இராமநாதன் எழுதி வெளிக்கொணர்ந்த ‘சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்’ என்னும் நூல் தமிழிசை வரலாற்றில் தடம் பதித்த நூலாகும். சிலப்பதிகாரத்தில் உள்ள அரிய இசையியல் செய்திகளைப் பெரிதும்  முயன்று ஆழமாக வெளிப்படுத்தியதில் இந்நூலாசிரியர்  குறிப்பிடத்தக்கவர். இவருடைய மற்றொரு நூல் ‘சிலப்பதிகாரத்து இசைத்தமிழ்’(1981). இவ்விரு நூல்கள் வாயிலாகத் தமிழிசை ஆய்வுகளுக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சியதுடன் பாடுதுறை நோக்கில் பழந்தமிழ் இலக்கியங்களை வாசிப்பதற்கான ஒரு புதிய அணுகு முறையையும் உருவாக்கினார் எஸ்.இராமநாதன். செம்பாலை, முல்லைப்பண், சாதாரி, இந்தளம் ஆகிய பண்கள் குறித்து உறுதியான முடிவுகளை இந்நூல்கள் தந்தன. இவருடைய மற்றொரு நூல் ‘தமிழகத்து இசைக் கருவிகள்’. இவை தவிர, பாடுதுறை சார்ந்த நூல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார்.

  1959இல் வெளிவந்த கு. கோதண்டபாணி பிள்ளையின் ‘பழந்தமிழ் இசை’ பல அரிய செய்திகளை உள்ளடக்கிய நூலாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க நூல் ‘இசையும் யாழும்’ (1971);  இந்நூலை எழுதியவர் சாத்தான்குளம் அ.இராகவன். தமிழிசையின் தொன்மையான வரலாற்றையும் சிறப்புகளையும் எடுத்துக்கூறுவதோடு நில்லாது, தமிழிசையின் சமகாலப் பிரச்சினைகளையும் பேசுகின்றது இந்நூல். வெறும் புகழுரைகள் மட்டுமின்றி விமர்சனங்களையும் முன்வைத்தது இந்நூலாசிரியரின் சிறப்பு. விபுலானந்தரின் மாணவரான க.வெள்ளைவாரணன் எழுதிய ‘இசைத்தமிழ்’  1979ஆம் ஆண்டு வெளிவந்தது. தாளக்கருவிகளைப் பற்றி ஆர். ஆளவந்தார் எழுதிய ‘தமிழர் தோற்கருவிகள்’(1981) என்னும் நூல் சிறந்த ஒன்றாகும்.

  இசைத்தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தமிழிசையின் பல்வேறு கூறுகளையும் 2500 ஆண்டு கால வரலாற்றையும் ஒரே நூலில் படித்துப் பயன் பெறும் வகையில் 1984ஆம் ஆண்டு வெளிவந்த நூல் ‘தமிழர் இசை’; இந்நூலின் ஆசிரியர்  பேராசிரியர் ஏ.என்.பெருமாள்; சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தொல் பழங்காலம் தொடங்கி தமிழ்த் திரைப்பட இசை வரையிலுமான தமிழிசை குறித்த செய்திகள் ஆய்ந்தறியப்பட்டு  ஏறத்தாழ 900 பக்கங்களில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

  ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த “தமிழிசைக் கலைக்களஞ்சியம் ஒன்று 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வெளிவந்தது. தம் நெடிய வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழிசை ஆய்விற்கே அர்ப்பணித்த, முதுபெரும் தமிழறிஞரும் இசையறிஞருமாகிய, பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம்  அவர்களால் உருவாக்கப்பட்டு, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதனை நான்கு தொகுதிகளாக (1992, 94, 97, 2000) வெளியிட்டது. இந்நான்கு தொகுதிகளின் மறுபதிப்பு 2006ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தமிழிசைக் கலைக்களஞ்சியம் மொத்தம் 2232 தலைப்புச் சொற்களையும் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டது. பல கலைச்சொற்களுக்கு வேர்ச்சொல் விளக்கங்களும், உரைஆசிரியர்கள், இசைக் கலைஞர்கள், இசையியலார்கள், பாடல் புனைந்தோர் ஆகியோர் பற்றிய குறிப்புகளும், நாட்டியம், நாடகம், நாட்டுப்புறக்கலைகள் பற்றிய செய்திகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியம், சங்க இலக்கியம், தேவாரம் தொடங்கி,  இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை அனைத்து நூல்களிலும் காணப்படும் இசைச் செய்திகளும் இக் களஞ்சியத்தில் முறையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இன்றைய இசைத் துறை சார்ந்த அனைவருக்கும் இக் களஞ்சியம் ஓர் அரிய கருவூலமாகத் திகழ்கிறது. 

  தமிழிசைக்கு வீ.ப.கா.சுந்தரம் அளித்துள்ள மற்றொரு கொடை அவர் எழுதிய, ‘பஞ்சமரபு’ விருத்தியுரையாகும். அறிவனார் எழுதிய ‘பஞ்சமரபு’ இடைச்சங்க காலத்தைச் சேர்ந்த மிக முக்கியமான இசை நூலாகும். பழந்தமிழிசை நூல்களுள் நமக்குக் கிடைத்திருப்பது இந்நூல் ஒன்றேயாகும். அருட்செல்வர் மகாலிங்கம் நல்கிய பொருளுதவியுடனும் ஆதரவுடனும் ‘அறிவனாரின் பஞ்சமரபு’(1993) வீ.ப.கா.சு. எழுதிய விருத்தியுரையுடன் கழகப் பதிப்பாக வெளிவந்தது. தமிழிசையின் தொன்மைக்குச் சான்று பகரும் இந்நூல் மிக முக்கியமான ஆவணமாகும்.

  1917இல் வெளிவந்த கருணாமிர்தசாகரத்திற்குப் பின் தமிழிசை ஆய்வுகளில் புதிய தேடல்களையும், எண்ணங்களையும் , ஆய்வுப் போக்குகளில் பெரும் மாற்றங்களையும் வீ.ப.கா.சு. தம்முடைய கீழ்க்காணும் நூல்களின் மூலம் ஏற்படுத்தினார். ‘தமிழிசை வளம்’(1985),  ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்’(1986), ‘தமிழிசையியல்’(1994), ‘தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்’(1994),பழந்தமிழ் இலக்கியத்தில் தாளமுழக்கியல் (1995).

  வீ.ப.கா.சுந்தரம் நூல்களின் வருகையைத் தொடர்ந்து, இசைத்துறை ஆய்வாளர்களிடமிருந்து வெளிவந்த குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு: 

  • வா.சு. கோமதிசங்கர ஐயர், திருஞானசம்பந்தர் அளித்த யாழ்முரிப் பண், 1977.
  • இசைத்தமிழ் இலக்கண விளக்கம், 1984.
  • து.ஆ.தனபாண்டியன், நுண்ணலகுகளும் இராகங்களும், 1987.
  • இசைத்தமிழின் வரலாறு (மூன்று பகுதிகள்), (எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டுப் பதிப்பு)
  • இ. அங்கயற்கண்ணி, திருப்புகழ்ப் பாடல்களிற் சந்தக்கூறுகள், 1989.
  • பஞ்சமரபில் இசை மரபு, 1989.
  • திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல்களில் இசை, 1999.
  • ஞானாம்பிகை குலேந்திரன், பழந்தமிழரின் ஆடலில் இசை, 1990.
  • ப.தண்டபாணி, தமிழன் கண்ட இசை, 1983.
  • திராவிடர் இசை, 1993.
  • புரட்சிதாசன், தமிழிசையில் சாமகானம், 1992.
  • இரா.திருமுருகன், சிந்துப் பாடல்களின் யாப்பிலக்கணம், 1993.
  • இரா. இளங்குமரன், தமிழிசை இயக்கம், 1993.
  • வெற்றிச் செல்வன், இசையியல், 1986, 1994.
  • சேலம் எஸ்.ஜெயலட்சுமி, சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள், 2000.
  • மார்கரெட் பாஸ்டின், இன்னிசைச் சிலம்பு, 2000.
  • இன்னிசை யாழ், 2006.
  • இரா.கலைவாணி, சங்க இலக்கியத்தில் இசை, 2005, சு.தமிழ்வேலு
  •  

  'இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர்கள்'அரசியல் பொருளாதார கலாச்சார மாற்றங்களுக்கு இடையில் தமிழிசை தன்னில் புதுமைகளைப் புகுத்தவும் அவற்றை மேலும் போளிவுபடுத்தவும் அண்ணாமலை அரசர் அவர்களால் 1943 இல் தமிழிசை இயக்கம் தொடங்கப்பட்டது. சர். ஆர். கே சண்முகம் செட்டியார், கோவை சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார், இரசிகமணி டி. கே. சி , கல்கி ஆகியோர் தமிழிசை இயக்கத்தை முன்னின்று செயல்படுத்தினார்கள்.

  ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு காலகட்டத்தில் அறிஞர் பலர் இசைத்தமிழ் பற்றி ஆய்வு செய்துள்ளனர்.

  • அண்ணாமலை ரெட்டியார் -- காவடிச் சிந்து
  • ஆபிரஹாம் பண்டிதர் -- கருணாமிர்தசாகரம்
  • விபுலானந்த அடிகள் -- யாழ் நூல்
  • டாக்டர் எஸ். இராமநாதன் -- சிலப்பதிகாரத்து இசைநுணுக்க விளக்கம்.
  • கு. கோதண்டபாணியார் -- பழந்தமிழிசை
  • அ. இராகவனார் -- இசையும் யாழும்
  • வரகுண பாண்டியர் -- பாணர் கைவழி
  • குடந்தை சுந்தரேசனார் -- முதல் அய்திசைப்பண் .
  • வீ. ப. கா. சுந்தரம் -- தமிழிசைக் கலைக் களஞ்சியம்
  • பேராசிரியர். பி. சாம்பமூர்த்தி -- தெனிந்திய சங்கீதமும் சந்கீதக்காரர்களும்
  • ஏ. என். பெருமாள். -- தமிழர் இசை
  • இ. ஜான் ஆசிர்வாதம் -- தமிழர் கூத்துகள்
  • ஆர். ஆளவந்தார் -- தமிழர் தொல்கருவிகள்
  • பேரா து. ஆ. தனபாண்டியன் இசைத்தமிழ் வரலாறு 

  தமிழில் நாடக இசை பற்றிய முன்னோடி ஆய்வுகளாக இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அவை, பேராசிரியர் அரிமளம் பத்மநாபன் எழுதி வெளியிட்ட ‘தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக் கூறுகள்’ (2000, மறுபதிப்பு 2001), 
  ‘சங்கரதாஸ் சுவாமிகளின் சந்தங்கள்’ (2002, மறுபதிப்பு 2003) என்னும் இரண்டு நூல்களேயாகும். தமிழில் நாட்டிய இசை குறித்தே சில ஆய்வு நூல்கள் வந்துள்ளன. இவ்விரண்டு நூல்கள் மூலம் தமிழிசை ஆய்வுகளில் புதியதோர் களம் உருவாகியுள்ளது.

  "மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம் மெய்யப்பன் தமிழாய்வகம்,2001

  மேற்சுட்டியுள்ள நூல்கள் தவிர, சென்னை, தமிழிசைச் சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டு வரும் பண்ணாராய்ச்சி மாநாட்டு மலர்கள் பயனுள்ள பல அரிய கட்டுரைகளைக் கொண்டவை, சில புத்தகங்கள் விடுபட்டிருக்கலாம். அதை தெரிவியுங்கள். 


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp