இளம் படைப்பாளிகள் அத்தனை பேருடனும் நெருக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்திய எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தின் வழியே வாழ்வை தரிசித்தவரல்ல. எழுத்தாகவே வாழ்வை தரிசித்தவர். அறுபதுகளின் பிற்பகுதியில் நெற்றியில் திருநீறும், இடதுகையில் பாரதிதாசன் கவிதை நூலையும் வைத்திருந்த வைத்தியலிங்கமே, பின்னாள்களில் பிரபஞ்சனாக அறியப்பட்டிருக்கிறார். கரந்தைத் தமிழ்ப்புலவர் கல்லூரி மாணவனாகத் தஞ்சாவூருக்கு வந்திருந்த அவரை, எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் எல்லாவகையிலும் ஆதரித்திருக்கிறார். "பிரபஞ்சக்கவி' என்னும் பெயரில் கவிதைகளை எழுதிவந்த அவர், எழுத்தாளர் பிரபஞ்சனாக மாறிய தருணங்கள் முக்கியமானவை. "நெற்றியில் திருநீறு கையில் பாரதிதாசன்' என்கிற சித்திரம், ஓர் எளிய படைப்பாளன் படைப்பாளுமையாக முன்னேறப் பயன்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் திருநீறை விடுவதா? பாரதிதாசனை விடுவதா? என்கிற குழப்பம் பிரபஞ்சனுக்கு இருந்திருக்கிறது. ஆனால், இறுதியில் அவர் இரண்டையுமே கைவிடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
திராவிட இயக்கத்தின் தேவைகளை உணர்ந்திருந்த அவர், அத்தேவைகளுக்காக ஆன்மிகத்தை கைவிடச் சொல்லியதாகத் தெரியவில்லை. இரண்டு பக்கத்திலுமுள்ள நல்லதுகளைத் தேர்ந்துகொள்ளவே பணித்திருக்கிறார். சித்தாந்தங்களுக்குள் அடைபடாத போதிலும், தம் எழுத்துகளின் வரையறைகளாகச் சிலவற்றை வைத்துக்கொள்ள எண்ணியிருக்கிறார். மானுட நேசத்தின் மையத்தை அடைவதே அவர் படைப்புகளின் குறிக்கோள்களாக இருந்திருக்கின்றன அடிப்படை தமிழிலக்கிய மாணவனாக இருந்தும், பழந்தமிழ் பிதற்றல்களை அவர் கொண்டாடியதில்லை. இடதுசாரிகளிடம் தமக்கிருந்த கூடுதல் பற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர்த்தியிருக்கிறார். அவர் அவர்களுடைய மேடைகளில் தயக்கமில்லாமல் கலந்துகொண்டு, தம்முடைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார். மாறான கருத்துகளையும் கூட.
அவருடைய படைப்புகளில் "வானம் வசப்படும்', "மானுடம் வெல்லும்', "இன்பக்கேணி', "சந்தியா', "மகாநதி' ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. அந்நாவல்களில் அவர் எழுதிக் காட்டிய கதாபாத்திரங்கள், விட்டு விடுதலையாகும் மனோநிலையை உடையவை. அசோகமித்திரனின் சிறுகதைகளில் தென்படும் எளிய சம்பவங்களை, தமக்கே உரிய அரசியலுடன் வெளிப்படுத்தியவராக அவரைக் கருதலாம். பத்தி எழுத்தாளராகவும் பத்திரிகையில் பணியாற்றிய எழுத்தாளராகவும் புனைவல்லாத எழுத்துகளை பெருமளவு அவர் படைத்திருக்கிறார். ஒரு குடிமைச் சமூகத்தில் நிகழும் குற்றங்களையும் கேடுகளையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடிந்ததில்லை. வாழ்வின் அன்றாடத் தேவைகளுக்காக மனிதர்கள் செய்யும் சூழ்ச்சிகளை, அதிர்ந்து பேசாத கதைகள் அவருடையவை. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இலக்கியத்தின் தீவிரத்தை உணர்த்திய முக்கியமான படைப்பாளிகளில் அவர் குறிப்பிடத்தக்கவர். தம்முடைய வாழ்வின் அதிருப்திகளையும் பகடிசெய்து எழுதுவதில் அவர் தனித்து விளங்கியிருக்கிறார். ஜெயகாந்தனுக்குப் பிறகு வரக்கூடிய எழுத்தாளர்களில் அதிக கவனத்தை ஈர்த்ததுடன், மேடைப் பேச்சிலும் தனக்கான தனித்துவத்தை ஸ்தாபித்திருக்கிறார்.
எளிய மனிதர்களே அவருடையகதைகளில் வருபவர்கள். எந்த சந்தர்ப்பதிலும் அறத்தை மீறாதவர்கள். சிலவேளைகளில், அறமென்று சமூகம் கட்டமைத்து வைத்திருப்பதையும் அவர்கள் கேள்விகேட்க தவறியதில்லை. பெரும்பாலான அவருடைய கதைகள் பெண்களுக்காகப் பரிந்து பேசியிருக்கின்றன. "பெண்களை தெய்வமாக்கியது ஆன்மிகம். தாசியாக்கியது நிலப்பிரபுத்துவம். அடிமையாக்கியது வைதீகம். வேலைக்காரியாக்கியது குடும்பத்துவம். மனுஷியாக்கியது பெரியாரியம்' என்பதே அவருடைய புரிதல். அந்தப் புரிதலில் இருந்தே தம்முடைய பெண் கதாபாத்திரங்களை அவர் உருவாக்கியிருக்கிறார். சமூக நிர்பந்தங்களுக்கு பெண்கள் ஆட்பட நேர்கையிலெல்லாம், அவர்களுக்கான விடுதலையையும் உரிமையையும் பேசிய எழுத்துகள் அவருடையவை. மகாபாரதத்தை புதுவிதமாக அணுகி, அவர் கல்கியில் எழுதிய கட்டுரைத் தொடரில் வாழ்வின் சூழலுக்கேற்ப மனிதர்கள் எடுக்கக் கூடிய முடிவுகளை அலசியிருக்கிறார்.
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்ற கூற்றின் வழியே காவிய மாந்தர்களை அவர் அணுகியிருக்கும்விதம் அலாதியானது. ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னும் நிழலாகத் தொடரும் அவனுடைய குற்றங்களை அவர் பெரிதுபடுத்தியதில்லை. சாதாரண நிகழ்வுகளாகவே எவற்றையும் பார்த்து, அந்த நிகழ்வுகளின் சுவாரஸ்யத்தில் வாழ்வை கடத்தச் சொல்வதே அவர் எழுத்தின் ஆதார ஸ்ருதி எனலாம். பெரிய புகழுக்குள் அடைபடாத அல்லது பெரிய புகழைத் தேடி அலையாத அவருடைய படைப்பு மனம், தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்திருக்கிறது. ஆழ்ந்த வாசிப்பின் புரிதல்களே அவருடைய எழுத்துகளில் வெளிப்பட்டிருக்கின்றன. தனக்கு முன்னே எழுதியவர்களை எத்தனை அக்கறையுடன் வாசித்திருக்கிறாரோ அதைப்போலவே, தனக்குப் பின்னே எழுத வந்தவர்களையும் வாசித்திருக்கிறார். கணையாழியில் நான் உதவியாசிரியராக இருந்த காலங்களில் எத்தனையோ இளம் எழுத்தாளர்களையும் கதைகளையும் எனக்குச் சொல்லி, அவர்கள் படைப்புகளைப் பிரசுரிக்க உதவியிருக்கிறார்.
முற்போக்குப் படைப்பாளிகளை வளர்த்தெடுப்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம், வேறு எந்த மூத்த படைப்பாளிகளிடமும் காணப்படாதது. அரசியலற்ற எழுத்தே நவீன இலக்கியத்தின் முகமாகப் பார்க்கப்பட்ட வேளையிலும், அவர் அவருடைய எழுத்தில் தீவிர அரசியலையே முன்வைத்திருக்கிறார். தஞ்சை ப்ரகாஷ் மூலம் அவருக்கு ஒட்டிக்கொண்ட, "மங்கள விலாஸ்' காபி பழக்கத்தையும் சாஸ்திரிய இசை ரசனையையும் அவரால் இறுதிவரை கைகழுவ முடியாமல் போயிருக்கின்றன. எப்பொழுதும் அவர் நாக்கு, ஒரு நல்ல காபிக்காக ஏங்கியிருக்கிறது. உற்று கவனிக்கும் பொழுதுகளில் அவருடைய விரல்கள் இசைக்கான அபிநயத்தைப் பிடித்திருக்கின்றன. உரையாடலின் தொடக்கத்திலோ முடிவிலோ "ஒரு காபி சாப்பிடலாமா சார்?' என்பதே அவர் வழக்கம். எல்லோருமே அவருக்கு சார்தான். எல்லோருமே அவருடைய காபி டபராக்களைப் பகிர்ந்துகொள்பவர்கள்தாம். எழுத்தின் சகல சூட்சுமங்களையும் கற்றிருந்த அவர், அவற்றையெல்லாம் தம் உரையாடல்களில் வெளிப்படுத்தி, இறுக்கத்தை ஏற்படுத்த விரும்பியதில்லை. காபி என்பது அவர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு மூத்த படைப்பாளியிடம் பழகுகிறோம் என்கிற தடையையும் எண்ணத்தையும் உடைக்க, அவர் தயாராக வைத்திருந்த வாக்கியம் அது. சதா விரலிடுக்கில் புகைந்த சிகரெட்டின் ஒவ்வொரு இழுப்பிலும் அவர் ஏதோ ஒரு புதுக்கதைக்கான புத்துணர்வைப் பெற்றிருக்கிறார். அதுவே தம்முடைய மரணத்தை விரைந்து கொண்டுவரும் என்று அவர் நினைத்திருக்கவில்லை.
இளம் எழுத்தாளர்களை அள்ளி அணைத்துக் கொள்ள விரும்பிய அவர், அவர்கள் அழைத்த இடத்திற்கே போய் வாழ்த்தியிருக்கிறார். மேடையை தம் கட்டுக்குள் வைக்கத் தெரிந்த அவருக்கு, எந்த அளவில் தம் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் தெரிந்திருக்கிறது. ஒவ்வொரு மேடையிலும் புன்முறுவலுடன், "ஆகவே நண்பர்களே" என ஆரம்பித்திருக்கிறார். "ஆகவே நண்பர்களே" என்பது நானுமே, உங்கள் நண்பனாகிவிட்டேன் எனச் சொல்வதுதான். என்ன நினைப்பாரோ? என்ன சொல்வாரோ? என்கிற தயக்கமே இல்லாமல் எதைப்பற்றியும் அவரிடம் உரையாடலாம். ""முடிந்தால் இந்திந்த புத்தகங்களைப் பாருங்கள் சார்'' என்பதுடன் அவருடைய உரையாடல்கள் முடிந்திருக்கின்றன. இருக்கலாம், இருக்கக்கூடும் என்கிற நேர்மறையான வார்த்தைகளையே அவர் உதிர்த்திருக்கிறார். தம்முடைய படைப்புகளை வெளியிட்ட பதிப்பகங்கள் பலவற்றுடனும் அவருக்கு சுமூக உறவு இருந்ததில்லை. அதேசமயம் அவர்கள் தம்மை ஏமாற்றிவிட்டதாகவோ மோசடி செய்துவிட்டதாகவோ குற்றச்சாட்டுகளை மேடைகளில் வைத்ததில்லை. இன்னும் கொஞ்சம் கூடுதலாக தம்மை கவனித்திருக்கலாம் என்பதே அவர்கள்மீது அவர் வைத்த விமர்சனங்கள்.
'திரைத்துறைக்கு வந்திருந்தால் பொருளாதாரரீதியாக உயர்ந்திருக்கலாமே?' என நான் கேட்டதற்கு, 'என்னுடைய இயல்புக்கு அது சரியா படலையே சார்' என்றிருக்கிறார். கவிஞர் கங்கைகொண்டான் இயக்கிய ஒரு திரைப்படத்தில் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். திரைத்துறையை ஆரம்பத்தில் அவர் நேசித்திருக்கிறார். ஆனால், அவருக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்கள் தொடர்ந்து அத்துறையில் இருக்கவிடாமல் செய்திருக்கின்றன. அவ்வப்போது சில இயக்குநர்கள் அவரிடம் வந்து தங்கள் கதைகளுக்கு ஆலோசனை பெற்றிருக்கிறார்கள். இயக்குநர் ஜெயதேவி இயக்கிய "பவர் ஆஃப் உமன்' என்கிற திரைப்படத்திற்கு அவர் உதவியிருக்கிறார். திரைக்கதையிலும் உரையாடலிலும் அவர் பங்களிப்புச் செய்த அந்தத் தருணத்தில், பாடலெழுத என்னை அழைத்துப் போயிருக்கிறார். ""பணம் பெருசா கொடுக்கமாட்டாங்க, இருந்தாலும், நீங்க என் நண்பருன்னு சொன்னதால கூட்டிக்கிட்டு வரச் சொல்லிட்டாங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியல. ஒங்களுக்கு ஓ.கேன்னா வாங்க சார்'' என்றார். அவர் கேட்ட அந்தத் தொனி என்னைக் கிறங்கடித்தது. அவர் அழைப்பின்பேரில் அந்தத் திரைப்படத்திலும், அதன்பின் ஜெயதேவி இயக்கிய மற்றொரு படத்திலும் என்னுடைய பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. தன்னால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்ய அவர் தயங்கியதில்லை. அதே சமயம், தனக்கு உதவாதவர்கள் குறித்தும் ஒருவார்த்தை பேசியதில்லை. பெரும்பாலும் உடன்பாடில்லாத விஷயங்களை அவர் விவாதத்துக்கு வெளியிலேயே விட்டிருக்கிறார். தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபட்டு, தம்முடைய அகத்தையும் முகத்தையும் அவர் கெடுத்துக்கொண்டதில்லை.
அப்படியும் ஒருமுறை, ஒரு குறிப்பிட்ட தலைவரை முன்னிறுத்தி அவர் எழுதிய கட்டுரை, பெரும் சர்ச்சைக்கு வழி வகுத்திருக்கிறது. அரசியல் தளத்திலும் இலக்கியத் தளத்திலும் தமக்கிருந்த நற்மதிப்பை அந்தக் கட்டுரை குலைத்துவிட்டதாக அவரே பிறிதொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார். உணர்ச்சி வசப்பட்டு தாம் அவ்வாறு எழுதவில்லை என்றும், அந்த தலைவரின் நடவடிக்கைகளே தன்னை அவ்வாறு எழுதத் தூண்டின என்றும் அவர் எவ்வளவே விளக்கியும்கூட, அந்தக் கறையிலிருந்து அவரால் வெளிவர முடியாமல் போயிருக்கிறது. இத்தனைக்கும் தமிழினத்தின் புதிய தலைவராக பிரபஞ்சன் முன்நிறுத்திய அந்த ஒருவர், இலக்கியத்தின் பயன் குறித்தோ இலக்கியவாதிகளின் நலன் குறித்தோ எங்கேயும் பேசியதில்லை. முதலும் கடைசியுமாக எழுத்தில் தாம் செய்துவிட்ட பிழையாக அக்கட்டுரையைப் பற்றி பல இடங்களில் பிரபஞ்சனே சொல்லியிருக்கிறார்.
ஒரு நேரத்தில் தமக்குள் உருவாகும் கருத்தோ அபிப்ராயமோ காலப்போக்கில் மாறிவிடும் என அறிந்திருந்தும், அவர் ஏன் அதற்காக அவ்வளவு தூரம் வருந்தினார் என்பது யோசனைக்குரியது. எழுத்தை தவமாக, எழுத்தையே வாழ்வாகக் கொண்ட அவர், எழுத்தினால் நேர்ந்த துன்பங்களையும் அனுபவித்திருக்கிறார். எழுத்தின் வழியே அவர் பெற்ற அங்கீகாரங்களும் உச்சபட்ச மரியாதைகளும் எவ்வளவோ, அதே அளவு அவமானங்களையும் அவமதிப்புகளையும் சந்தித்திருக்கிறார்.
ஒருமுறை திருச்செந்தூரிலோ திருப்பூரிலோ அவரைப் பாராட்ட சில அன்பர்கள் சேர்ந்து ஒரு விழாவை ஏற்பாடு செய்திருக்கின்றனர். சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்த சமயம் என்று நினைவு. அந்த விழாவில் கலந்துகொள்ள அவரும் அவ்வூருக்குப் போயிருக்கிறார். பயணச்செலவுக்குக் கூட அவர்கள் பணம் அனுப்பவில்லை. இருந்தாலும், பாராட்ட அழைத்திருக்கிறார்களே என்பதற்காக சொந்தக் காசை செலழித்துப் போயிருக்கிறார். போனால், விழா தடபுடலாக நடந்திருக்கிறது. மாலையும் சால்வையும் புகழுரைகளுமாக நிகழ்ந்த அந்த விழாவில், அவருக்காகச் செய்த பிரத்யேகக் கேடயத்தையும் நினைவுப் பரிசாக வழங்கியிருக்கின்றனர். கேடயமென்றால் சாதாரணக் கேடயமல்ல. ஆளுயரக் கேடயம். உள்ளூர் பெரியவர்களும் முதலாளிகளும் பேசு பேசென்று பேசியதில் நள்ளிரவு வரை கூட்டம் நடந்திருக்கிறது. பாராட்டு என்கிற பெயரில் யார் யாருடைய கதைகளையெல்லாம் அவருடைய கதையாகவும் அளந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டு, சிரித்து ஒருவழியாக தூக்கமுடியாத அந்தக் கேடயத்தைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார்.
அப்போது அவரையும் அந்த கேடயத்தையும் சகபயணிகள் வித்யாசமாகப் பார்த்திருக்கின்றனர். ""இதுயென்ன சார் இவ்வளவு பெருசா?'' என்றும் கேட்டிருக்கின்றனர். தாம் ஒரு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் என்றும், என்னை கௌரவிக்க நடத்தப்பட்ட கூட்டத்தில் அளித்த பரிசென்றும் சொல்லிச் சொல்லி மாய்ந்த அவர், அக்கேடயத்தை ஒருகட்டத்தில் சுமையாகக் கருதியிருக்கிறார். அத்துடன், பேருந்து நடத்துநர் அக்கேடயத்திற்கு கூடுதல் கட்டணம் கேட்டதால், அக்கேடயத்தை யாருக்கும் தெரியாமல் அதே பேருந்து நிலையத்தில் வைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். ""எழுத்தாளனுக்குச் சமூகம் தரக்கூடிய மரியாதையை, வீட்டுக்குக் கொண்டு வரமுடியாமல் போய்விட்டது சார்'' என்று அச்சம்பவத்தை நகைச்சுவையுடன் ஒருசமயம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ""பாராட்டு விழா எடுப்பவர்கள் அவ்விழாவில் கலந்துகொள்ள வரும் எழுத்தாளனிடம் பணம் இருக்கிறதா என்று பார்க்க மாட்டாங்களா சார்?'' என்று சொல்லி, அவர் சிரித்த சிரிப்பு இன்னமும் என் நினைவில் இருக்கிறது.
ஒரு தேர்ந்த நாடகக் கலைஞனின் பாவனையை அவர் பேச்சில் உணரலாம். மலர்ந்த கண்களும் காற்றில் அசையும் கைகளுமாக அவர் பேசத் தொடங்கினால், அன்றையப் பொழுதில் நாம் ஒரு ரசமான அனுபவத்தைப் பெற்றுத் திரும்பலாம். தம்மை ஈர்த்த கதைகளை அவர் மேடையில் சொல்வது தனி அழகு. நிறுத்தி நிதானமாக ஆண்டன் செக்காவின் "தும்மல்' சிறுகதையை அவர் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அக்கதையை வெவ்வேறு அடவுகளுடன் சொல்லியதை ஆச்சர்யத்துடன் கேட்டிருக்கிறேன். ஒரு கதையை ரசனையுடன் சொல்வதல்ல, அந்த ரசனையை அடுத்தவருக்கு கடத்தும் மிக அரிய கலை அவரிடம் இருந்திருக்கிறது. குழு மனப்பான்மையுடன் எந்த எழுத்தாளரையும் அவர் பார்த்ததில்லை. எல்லாக் குழுக்களுடனும் தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்ளவே விரும்பியிருக்கிறார். சிறுபத்திரிகைகளுக்கு எழுதுவதைத்தான் பெரும் பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார். வெகுஜன ரசனைக்காக அப்படியும் இப்படியும் எழுதுகிறேனென்று வாதிட்டதில்லை. அவர் தொடர்களாக எழுதிய கதைகளிலும் ஒருவித நேர்த்தியைக் காணலாம். அநேகமாகத் தமிழில் வெளிவரும் அத்தனைப் பத்திரிகைகளிலும் அவருடைய எழுத்துகள் வந்துள்ளன.
மிக சமீபத்தில் "எழுத்தே வாழ்க்கை' என்னும் தலைப்பில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நூல் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. ஓர் எழுத்தாளன் தம் மொத்த வாழ்வையும் எழுத்துக்கு ஒப்புக்கொடுப்பது குறித்த அந்நூலிலிருந்து பகிர்ந்துகொள்ள நிறைய உண்டு. முக்கியமாக, முழு நேரத் தொழிலாக எழுத்தை கைக்கொள்வதில் உள்ள சிடுக்குகளையும் சிக்கல்களையும் அந்நூலில் விரிவாக விவரித்திருக்கிறார். ஆனாலும், அச்சிக்கல்களும் சிடுக்குகளும் அவரை அயற்சியுறச் செய்யவில்லை. மாறாக, பெருமித உணர்வுகளையே தந்திருக்கின்றன. எழுதி வாழ்ந்துவிடமுடியும் அல்லது எழுத்தினால் வாழ்க்கையை நடத்திவிட முடியும் என்கிற நம்பிக்கையை எஸ். ராமகிருஷ்ணன் அந்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சனும் அப்படியான முடிவுக்கு ஆட்பட்டே வாழ எத்தனித்தவர். என்றாலும், பிரபஞ்சனுக்கு எழுத்தை வாழ்வாகக் கொண்டது உவக்கவில்லை. தம்மைச் சந்திக்க வரும் இளம் படைப்பாளர்களிடம் அதுகுறித்து அதிகம் பேசியிருக்கிறார். 'எழுத்தாளராக வாழ்வது திருப்தியளித்தாலும், முழு நேரத் தமிழ் எழுத்தாளனராக வாழ்வது சிக்கல்' என்றே சொல்லியிருக்கிறார். ஒரு வேளை ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ எழுதியிருந்தால் அவருடைய எண்ணம் மாறியிருக்கலாம். கதாநதியாக அறுபது ஆண்டுகள் ஓடிக்கொண்டிருந்த அவர், கடைசியில் புதுச்சேரி வீதியொன்றில் கிடத்தப்பட்டிருக்கிறார். தேசியக் கொடி போர்த்தப்பட்ட அவர் உடலை அரசு, துப்பாக்கி குண்டு முழங்க மரியாதையுடன் அடக்கம் செய்திருக்கிறது. தமிழில், இதுவரை வேறு எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத உச்சபட்ச மரியாதை அது. என்றாலும், அழுத விழிகளுடன் இடுகாட்டில் நின்றிருந்த அத்தனை எழுத்தாள நண்பர்களும் அந்தச் சந்தர்ப்பத்தில் பிரபஞ்சனிடம் கேட்க நினைத்த ஒரு கேள்வி, 'ஒரு காபி சாப்பிடலாமா சார்?'