சபரிமலை கோயில்
சபரிமலை கோயில்

சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி: இந்த வழக்கின் பின்னணி இதுதான்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வழங்க உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வழங்க உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 64 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை காலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு தீர்ப்பளித்தது. "குறிப்பிட்ட வயது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாரபட்சம்; இது ஹிந்து பெண்களுக்கான உரிமை மறுப்பு' என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

5 நீதிபதிகளில் நான்கு பேர், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும், அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும், மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதில், "இந்த விஷயம் ஆழ்ந்த மத நம்பிக்கையுடன் தொடர்புடையது. இந்த விஷயத்தை ஆண், பெண் பாகுபாடு என்ற நோக்கில் அணுகக் கூடாது" என்று அவர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

செப்டம்பர் 24, 1990: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைந்து வழிபாடு செய்ததாக நாளிதழ்களில் புகைப்படத்துடன் வெளியான செய்தியை மேற்கோள் காட்டிய மகேந்திரன் என்பவர், சபரிமலைக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடுத்தார்.

ஏப்ரல் 5, 1991: 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்வதை தடை செய்து உத்தரவிட்ட கேரள உயர் நீதிமன்றம், இதனை உறுதி செய்யுமாறு திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு அறிவுறுத்தியது.

(சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது சரியாக எப்போது என்பது எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் நடத்திய ஆய்வில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நடைமுறை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வருகிறது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.)

ஜூன் 27, 2006: கன்னட நடிகை ஜெயமாலா, தான் 1987ம் ஆண்டு சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்ததாகவும், அப்போது அவரது சிலையைத் தொட்டு வழிபட்டதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் 4, 2006: இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது. இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினர் சார்பில், சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ஜனவரி 11, 2016: சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி
மாதவிலக்கு அடையும் வயதுடைய பெண்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதி மறுக்கப்படுவது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிபதிகள் கூறியதாவது:
சபரிமலை அனைவருக்கும் பொதுவான கோயிலாகும். இங்கு வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. எனினும், இதற்கு மத ரீதியாக (பிற மதத்தினருக்கு அனுமதி மறுப்பு) இதற்கு கட்டுப்பாடுகள் இருக்கலாம். ஆனால், பொதுவான கண்ணோட்டத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது.

மேலும், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்திலும் இடமில்லை.

அதேவேளையில், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற மரபு கடந்த 1,500 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறினர்.

ஏப்ரல் 11-13, 2016: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில், அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஏப்ரல் 18, 2016: கோயிலுக்குள் நுழைவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு வழங்கிய உரிமையில் ஒன்று. இந்த பாரம்பரிய வழக்கம், பாலின சமத்துவத்துக்கு எதிராக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியது.

நவம்பர் 7, 2016: சபரிமலையில் பெண்களுக்கான வயதுத் தடையை நீக்குக: உச்ச நீதிமன்றத்தில் கேரளா வாதம்

அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று கேரளாவில் நடந்து வந்த இடதுசாரிகள் முன்னணி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த வாதத்தின் மூலம், கேரள அரசு சபரிமலை விவகாரத்தில் மிகப்பெரிய பல்டியை அடித்தது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 20, 2017: உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது வழக்கு தொடர்பாக தங்கள் முடிவை நிறுத்தி வைத்தது. மேலும், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக பரிந்துரை செய்தது.

அக்டோபர் 13, 2017: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 17, 2018: சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.

ஜூலை 18, 2018: ஆண்களைப் போலவே பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் சென்று வழிபடுவது, பெண்களின் அரசியலமைப்பு சார்ந்த உரிமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சட்டங்கள் இயற்றப்படவில்லை. ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான உரிமைகளும், பெண்களுக்கும் பாகுபாடுகள் ஏதுமின்றி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களின் உடலியல் சார்ந்து ஏற்படும் இயற்கை நிகழ்வான மாதவிலக்கைக் காரணம் காட்டி,கோயிலுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுப்பதும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

ஜூலை 19, 2018 : சபரிமலை புனிதப்பயணத்தை மேற்கொள்ள அடிப்படைத் தேவையான 41 நாள்கள் கடும் விரதத்தை, பெண்களால் கடைப்பிடிக்க முடியாது. எனவே தான் அவர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்று தேவஸ்வம் போர்டு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஜூலை 25, 2018: சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தால், அது கோயிலையும், பக்தர்களையும் பாதிக்கும் என்று என்எஸ்எஸ் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

ஜூலை 26, 2018 : பல நூற்றாண்டு கால பழக்க வழக்கத்தை மாற்றுவது என்பது, மற்றொரு அயோத்தி பிரச்னையை போல சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று ஷேத்திர சம்ரக்ஷனா சமிதி சார்பில் கூறப்பட்டது.

செப்டம்பர் 28, 2018: பெண்களும் சபரிமலையில் வழிபடலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு தீர்ப்பளித்தது. "குறிப்பிட்ட வயது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாரபட்சம்; இது ஹிந்து பெண்களுக்கான உரிமை மறுப்பு' என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அக்டோபர் 17, 2018: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வன்முறை வெடித்தநிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க மறுத்து ஏராளமான போராட்டம் நடைபெற்றது. நிலக்கல் பகுதியைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள், பெண்கள் நுழைவதை தடுத்தனர். அனைத்து தனியார் வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அக்டோபர் 2018: சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கு பாதுகாப்புக் கேட்டு சில பெண்கள் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினர்.

நவம்பர் 13, 2018 : சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. 2019 ஜனவரி 22-ஆம் தேதி மறுஆய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதேவேளையில், சபரிமலை தொடர்பான தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

ஜனவரி 2, 2019: பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் பெண்களின் மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது. அதே சமயம், பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள், காவல்துறை பாதுகாப்போடு சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். சபரிமலைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதிப்படுத்தினார்.

ஜனவரி 3, 2019: சபரிமலையில் பெண்கள் இருவர் சுவாமி தரிசனம் செய்ததை அடுத்து கோயில் நடையை அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்திரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களுடன் சேர்த்து இந்த மனு விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

ஜனவரி 16, 2019: சபரிமலை செல்ல முயன்ற ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா ஆகியோர் நீலிமலா அருகே தடுத்து நிறுத்தப்பட்டன. இதையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்ட பெண்களும், அவர்களுக்கு எதிராக ஏராளமான ஐயப்ப பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

ஜனவரி 17, 2019: சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த இரண்டு பெண்களும் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஜனவரி 18, 2019: கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனவரி 22, 2019: சபரிமலை தொடர்புடைய மறுஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த மனுக்களை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதிபதி ஒருவர் மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதால் ஜனவரி 30 வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 1 2019 : சபரிமலை தீர்ப்பு மறுஆய்வு: அரசியல் சாசன அமர்வு முன்பு பிப். 6-ஆம் தேதி விசாரணை

"சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5, 2019: மேலும் இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் சென்று திரும்பினர். அவர்களும் பாதுகாப்புக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

பிப்ரவரி 6, 2019: சபரிமலை தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனு: தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நவம்பர் 4, 2019: சபரிமலை கோயில் நடை மண்டல-மகரவிளக்குப் பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

சபரிமலையில் பெண்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற இயலாது: பினராயி விஜயன்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வதற்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் எதுவும் இயற்ற இயலாது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறினாா்.

அந்த தீா்ப்புக்கு மாறாக, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரலாமா என்பது குறித்து சட்ட நிபுணா்களுடன் ஆலோசனை கேட்கப்பட்டது. ஆனால், அவ்வாறு சட்டம் கொண்டு வர இயலாது என்று அவா்கள் கூறிவிட்டனா்.

ஏனெனில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுப்பது, அவா்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். மேலும், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான செயலுமாகும் என்று தெரிவித்தார்.

மறுஆய்வு மனு மீது நடந்த இறுதி வாதங்கள்:
இந்த வழக்கில், கேரள அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் ஜெய்தீப் குப்தா, விஜய் ஹன்சாரியா, திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் சார்பில் ராகேஷ் துவிவேதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். 

கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கூறியதாவது: கேரள ஹிந்து வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படி, சபரிமலை ஐயப்பன் கோயில்,  ஒரு குறிப்பிட்ட சமயத்தினர் மட்டும் வழிபடும் கோயில் அல்ல. எனவே, ஹிந்துக்கள் அனைவரும் கோயிலில் வழிபடுவதற்கு கேரள ஹிந்து கோயில்கள் சட்டம் அனுமதி அளிக்கிறது. மேலும், கோயில்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது, ஹிந்து மதத்தில் பின்பற்றப்படும் வழக்கமும் கிடையாது.

இதுமட்டுமன்றி, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை விதிப்பது என்பது, ஒருவருடைய வாழ்வின் பெரும்பாலான காலத்துக்கு தடை விதிப்பதாகும். இதுவும், கேரள ஹிந்து கோயில்கள் சட்டத்துக்கு எதிரானதாகும்.

மேலும், சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஒன்றில் கூட அடிப்படையான, சட்ட ரீதியிலான பிரச்னைகள் குறிப்பிடப்படவில்லை.

சமூக அமைதி பாதிக்கப்படுவதாக எதிர்த் தரப்பில் வாதிடப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை, சமூக அமைதி ஆகியவை குறித்து நீதிமன்றம் கவலை கொள்ளக் கூடாது. முதலில் எதிர்ப்பு வந்தாலும், இறுதியில் அமைதி நிலைநாட்டப்படும். அதுவரை, சட்டவிரோதச் செயல்களுக்கு துணைபோக முடியாது என்று அவர்கள் வாதிட்டனர்.

அதைத் தொடர்ந்து, நாயர் சர்வீஸ் சொசைட்டி(என்எஸ்எஸ்) சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.பராசரன் முன்வைத்த வாதம்:

அரசமைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவின்படி, மதச்சார்பற்ற அமைப்பு அல்லது நிறுவனங்களில் அனைத்து தரப்பினருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதே சமயம், மதச்சார்புள்ள இடங்களுக்கு அந்த அனுமதி பொருந்தாது. சபரிமலையில் அருள் பாலிக்கும் ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் சிறப்பு வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து வழக்கில் திடீர் திருப்பமாக, திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பதற்கு ஆதரவாக வாதிட்டார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தேவஸ்வம் வாரியம் நிலைப்பாட்டில் மாற்றம் 
 சபரிமலை விவகாரத்தில், தொடக்கம் முதலே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கடுமையாக வாதிட்டு வந்த திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி முன்வைத்த வாதம்:

அரசமைப்புச் சட்டப்படி, சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். எனவே, பாலினத்தைக் காரணம் காட்டி, எந்த வயதுடைய பெண்ணுக்கும் அனுமதி மறுக்கக் கூடாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி மல்ஹோத்ரா, இதற்கு முன்பு சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக வாதாடினீர்கள் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த ராகேஷ் துவிவேதி, ஆமாம், தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு தேவஸ்வம் வாரியம் முடிவு செய்துள்ளது என்றார். மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 25(1) பிரிவின்படி, அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று ராகேஷ் துவிவேதி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com