பெண்ணியம் பேசுவோம்: பெண்களே.. வெளியில் சொல்லத் தயங்காதீர்கள்!

உடல் ரீதியான பிரச்னைகளையே ஆண் மருத்துவரிடம் சொல்லத் தயங்கும் பெண்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லும்போது அதனை எந்த விதத்தில் கையாள வேண்டும் என்ற புரிதல் அவசியம்.
பெண்ணியம் பேசுவோம்: பெண்களே.. வெளியில் சொல்லத் தயங்காதீர்கள்!

'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மா!' என்றார் பாரதி. சங்க காலத்தில், பெண்பாற்புலவர்கள், சுதந்திர போராட்ட வீராங்கனைகள் மூலமாக பாரதியின் புதுமைப் பெண்கள் வெளிப்பட்டுள்ளனர். இருந்த போதிலும், சமூகத்தில் பெரும்பாலாக பெண்கள் அடிமைப்படுத்தப்படுவது தொடர்ந்துகொண்டு தான் இருந்தது; இருக்கிறது. அந்த சமயத்தில் உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், பெண் குழந்தைகளை சிதைத்தல் உள்ளிட்டவை பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பறைசாற்றின. ஆனால், இன்று ஓரளவுக்கு இந்த நிலைமை மாறினாலும், பாலியல் சம்பவங்கள் அவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

பெண் என்பவள் சூழ்நிலைக்காக தன்னைத்தானே அடிமைப்படுத்திக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தனக்கு ஒரு கொடுமை இழைக்கப்படும்போது, அதை வெளியில் சொல்ல எத்தனை பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். குடும்பச் சூழல், சமூகம் என இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. 

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 'me too' விவகாரம் பரபரப்பான போது, சினிமா உலகில் பெண் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை 'me too' ஹேஷ்டேக்கில் வெளியிட்டனர். அப்போதும் கூட, அவர்களின் பிரச்னை குறித்து பேசாமல், இவ்வளவு ஆண்டுகள் கழித்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ஏன் அவர்கள் கூற வேண்டும்? என்றே கேள்விகள் எழும்பியது. 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அதனை தைரியமாக வெளியில் சொல்லக்கூடாது; மாறாக, அழுது ஒப்பாரி வைக்க வேண்டும்; தனிமையில் மனம் சோர்ந்து வாழ வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். அதன் மூலமாகவே அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.  இதையெல்லாம் மீறி வெளியில் பேசினால், அவளது நடத்தையைத் தான் பெரும்பாலோனோர் சந்தேகப்படுகின்றனர். பணிபுரியும் இடங்களில் படித்த பெண்கள் கூட தங்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை வெளியில் சொல்வதில்லை.

பாலியல் துன்புறுத்தல்களை வெளியில் சொன்னால் அதன்பின்னர், எவ்வாறு பணியிடங்களுக்குச் செல்வது? எப்படி பிறரை எதிர்கொள்வது? என பல கேள்விகள் எழுகின்றன. உலகம் முழுவதும் உள்ள பெண்களிடம் இந்தத்  தயக்கம் காணப்படுகிறது.

புகைப்படங்கள், வீடியோக்கள் மூலமாக மிரட்டப்படுவதும், எங்கே, தனக்கு நேர்ந்த அவமானம் தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுவிடுமோ? என்று பெண்கள் அமைதியாக அவர்கள் சொன்னதை செய்துவிட்டு கடந்து விடுகின்றனர். ஆனால், இதனால் எதிர்காலத்தில் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் அப்போது புரிந்துகொள்வதில்லை. அதுமட்டுமின்றி, சட்டங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பெண்களிடையே இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். 

பெண்கள் சம்மந்தப்பட்ட பிரச்னைகளில் காவல்துறையும் தற்போது சிறப்பாகவே செயல்படுகிறது. எனவே காவல்துறை, சட்டத்தின் மூலமாக தீர்வு காணலாம். அதே நேரத்தில், அலட்சியம் மிக்க சில காவல் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அதிலும் சில பெண் காவல் அதிகாரிகளே பெண்கள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. பல கேள்விகளை எதிர்கொண்டு, காவல்துறையை நம்பி வரும் பெண்களுக்கு அவர்களே தீர்வளிக்கவில்லை என்றால் குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாகத் தான் திரிவார்கள்.  

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும்போது அதனை சட்ட ரீதியாக முறையாக அணுக வேண்டும், அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் அந்த சமயத்தில் என்ன மனநிலையில் இருந்திருப்பாள்? அவளுக்கு என்னென்ன ஞாபகம் இருந்திருக்கும்? அவள் என்ன யோசித்திருப்பாள்? என்பதை உணர்வுப்பூர்வமாக புரிந்து காவல்துறையினர் செயல்பட வேண்டும்.

ஏனென்றால் விசாரணையில், கேள்விகளுக்கு மாற்றி பதில் அளித்தால், பாதிக்கப்பட்டவர் மேலே போலீசாருக்கு சந்தேகம் எழும் சூழல் உருவாகிறது. இதன் காரணமாகவும் பெண்கள் பலர் தங்களது வாழ்வில் நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு தீர்வு காண விரும்புதில்லை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, தாங்கள் கூறுவதை  காவல்துறையோ, நீதித்துறையோ நம்பப் போவதில்லை என்ற எதிர்மறை சிந்தனையும், காவல்துறையின் தொடர் விசாரணைக்கு பயந்துமே பலர் காவல்துறையை நாடுவதில்லை. 

காவல்துறையும், நீதித்துறையும் ஒரு குற்றத்துக்கு உடனடித் தீர்வு காணும் பட்சத்திலே, மற்றவர்களுக்கும் அதன் மீது நம்பிக்கை ஏற்படும். அவர்களே அலட்சியமாக செயல்பட்டால், இன்றைக்கு ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்திய வலியை, நாளை மற்றொரு பெண்ணுக்கும் ஏற்படுத்திவிட்டுச் செல்வான். ஒருநாள் சம்பவம் என்று கடந்துவிட்டு போகக் கூடிய விஷயம் இதுவல்ல. ஆதாரங்கள் சரியாக இல்லை என்று பெண்கள் தொடர்பான வழக்குகள் பல முடிக்கப்பட்டுள்ளன.   

இதற்கெல்லாம் முக்கியத் தீர்வு, தங்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளை பெற்றோர்கள் அல்லது நண்பர்களிடம் வெளிப்படையாக பேச வேண்டும். அவர்கள் மூலமாகவோ அல்லது அடுத்த கட்ட வழிகள் மூலமாகவோ தீர்வு காணலாம். பிரச்னைகளை முதலில் வெளிப்படுத்துங்கள். ஏதோ ஒரு வகையில் கண்டிப்பாக  உங்களுக்குத் தீர்வு கிடைக்கும். நம்முடன் பயணிக்கும் பெண்கள் பலரும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படி ஒருவருக்கு தீர்வு கிடைக்கும் போது, அந்த பெண்ணிற்கு கிடைத்த வெற்றியை பல பெண்கள் கொண்டாடுகின்றனர். எனவே, காவல்துறை மற்றும் நீதித்துறை பெண்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பாக செயல்படுவதன் மூலமாகவும் குற்றங்களை குறைக்க முடியும். 

உடல் ரீதியான பிரச்னைகளையே ஆண் மருத்துவரிடம் சொல்லத் தயங்கும் பெண்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லும்போது அதனை எந்த விதத்தில் கையாள வேண்டும் என்பதை காவல்துறை புரிந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com