பெண்ணியம் பேசுவோம்: அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்! சட்டங்கள் இருந்தும் என்ன பயன்?

'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று கூறிய இந்த சமூகத்தின் பலகட்ட எதிர்ப்புகளை மீறி பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.
பெண்ணியம் பேசுவோம்: அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்! சட்டங்கள் இருந்தும் என்ன பயன்?

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு குற்றம் இழைத்தோருக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு பின்பே பெண்களுக்கு கல்வி, சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று கூறிய இந்தச் சமூகத்தின் பலகட்ட எதிர்ப்புகளை மீறி பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். ஆட்சிப்பணி, ராணுவம், அரசியல் என பல துறைகளில் உயர் பதவிகளில் பெண்கள் இடம்பெற்று வருகின்றனர். 

ஆணுக்கு நிகராக பல்துறை வல்லுனர்களாக பெண்கள் உருவெடுத்து வரும் இந்த நவீன யுகத்தில், பெண்களின் மீதான ஆணாதிக்கம் மாறியபாடில்லை. ஒரு சில இடங்களில் அவர்களின் உரிமைகளை போராடித்தான் பெற வேண்டியுள்ளது. சில பெண்களுக்கு அந்த வாய்ப்பு கூட கிட்டுவதில்லை. பெண்ணடிமைத் தனம் ஒழிந்துவிட்டதா? என்று கேட்டால் 100% இல்லை என்பது தான் பதிலாக இருக்க முடியும்.  

தடைகளை மீறி பெண்கள் முன்னேற்றம் கண்டு வரும் அதே நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரிக்கின்றன. அவர்களது உயிருக்கு மேலாக கருதும் கற்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில கயவர்கள் செயல்படுவது வேதனைக்குரிய, வெட்கப்படக்கூடிய விஷயம். அந்த களங்கத்தையும் துடைத்துவிட்டு வெளியில் நடமாடும் பெண்கள் அரிதினும் அரிதே. அவர்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

பதின் பருவ பெண்களைத் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிறார்கள் என்றால் எழுந்து நடக்கக்கூட தெரியாத பிஞ்சுக் குழந்தைகளிடமும் தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ளும் மனிதர்கள் உண்மையில் மனிதர்கள் தானா? அவர்களும் இந்த உலகத்தில் சுதந்திரமாகத் தானே வாழ்கிறார்கள்.. இதற்கு தீர்வு என்னவாகத் தான் இருக்கும்?

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள்:

கடந்த 2013ம் ஆண்டு முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்து தேசிய குற்றவியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிராக 2014ம் ஆண்டு 3.39 லட்சம் வழக்குகளும், 2015ம் ஆண்டு 3.29 லட்சம் வழக்குகளும், 2016ம் ஆண்டு 3.38 லட்சம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, குழந்தைகளுக்கு எதிராக 2014ல் 88,108 வழக்குகள், 2015ல் 92,715 வழக்குகள்,  2016ல் 1,04,705 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் குழந்தைகள் கடத்தல் வழக்குகள் 52.3%, பாலியல் துன்புறுத்தல் & வன்கொடுமை தொடர்பானவை 34.4% ஆகும். 

இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டில் நிகழ்ந்த குற்றங்களின் எண்ணிக்கை, 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முக்கியமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2007-2017ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மிகவும் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2017-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 1.3 லட்சம் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் கணக்கிட்டால் நாளொன்றுக்கு 350 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. தமிழகத்திற்கு 14-ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது. 

இதுபோன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மாநில, மாவட்ட வாரியாகவும் வெளியிடப்பட்டு வருகின்றன. எந்த ஒரு தகவல் அறிக்கையிலும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர சற்றும் குறையவில்லை. 

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள்: 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. முதலில் இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு 354, இந்திய ஆதாரச் சட்டம்- 1872ன் கீழ் பெண்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது 1995ம் ஆண்டு தான் முழுமையாக அமலுக்கு வந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெண்கள் பாதுகாப்புக்கென தனிச் சட்டங்கள்: 

வரதட்சணை தடை சட்டம், 1961 
பெண்களின் அநாகரீக பிரதிநிதித்துவ தடைச் சட்டம், 1986 
சதி தடுப்புச் சட்டம், 1987 
உள்நாட்டு வன்முறைச் சட்டத்திலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டம், 2005 
பணியிடத்தில் பெண்களின் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைப்பு) சட்டம், 2013 

1986ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்புச் சட்டமும், பெண்களை அநாகரிகமாக தவறாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டமும் கொண்டு வரப்பட்டது. இதன்படி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக பணியிடங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்காக பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், 2013ல் வடிவம் பெற்றது. பெண்கள் மீது தேவையற்ற தாக்குதல், அவர்களிடம் முறைதவறி நடத்தல், ஆபாசமான முறையில் பேசுதல், ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சீண்டுதல் , பாலியல் ரீதியாக தொல்லைக்கு உட்படுத்துதல் மற்றும் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசுதல் உள்ளிட்டவைகளுக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபாரதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டது. குற்றத்தின் அளவிற்கு ஏற்ப தண்டனைக் காலம் மாறுபடும். 

அதேபோன்று பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ சட்டம், 2011ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு 2012ம் ஆண்டு மே மாதம் அது சட்டமாக செயல்வடிவம் பெற்றது. பின்னர், 2012ம் ஆண்டு டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்குப் பிறகு இச்சட்டம் மேலும் வலுவாக்கப்பட்டு 2013-ல் நிர்பயா சட்டம் கொண்டு வரப்பட்டது. 

2011ம் ஆண்டு முதலே அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு காரணம், குற்றங்கள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளதே காரணமாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், பதிவு செய்யப்படாத ஆயிரக்கணக்கான வழக்குகளும் இருக்கின்றன என ஆய்வுகளும், சில புள்ளி விபரங்களும் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டது குற்றம் புரிவோரிடையே பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா? என்ற கேள்வியே இங்கு எழுகிறது. 

இந்தியாவில் ஆண்டுதோறும் 7 வயது தொடங்கி 77 வயது வரையிலான பெண்கள்  20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வன்கொடுமைக்குள்ளாகின்றனர் என்கிறது ஐ.நா. புள்ளிவிபரம். குற்ற வழக்குகளின் விசாரணை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என சட்டங்கள் முன்மொழிந்த  போதிலும், நடவடிக்கைகள் மெதுவாகவே ஊர்ந்தே செல்கின்றன.

இதேபோன்று உலக அளவில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்காவில் தான் உலகிலேயே அதிக பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன. இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவில் அதிக பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன. அதேபோன்று ஐரோப்பிய நாடுகளில் சுவீடனில் அதிக குற்றங்கள் நிகழ்கின்றன. இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் தெரிந்த நபர்களாலே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது அதிர்ச்சியான செய்தி.. 

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com