பெண்ணியம் பேசுவோம்: பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கிறதா?

வேத காலத்திற்கு பின்னரே ஆண்- பெண் பாகுபாடு தலைதூக்கியுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் பெண்ணியம் என்ற சொல் தோன்றியிருக்க வேண்டும். இதற்கு பல தலைவர்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
பெண்ணியம் பேசுவோம்: பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கிறதா?

வேத காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகவே கல்வியறிவில் சிறந்து விளங்கியுள்ளனர். வேத காலத்திற்கு பின்னரே ஆண்- பெண் பாகுபாடு தலைதூக்கியுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் பெண்ணியம் என்ற சொல் தோன்றியிருக்க வேண்டும். பெண்ணியம் பிறப்பிற்கு பல தலைவர்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தை களையவும், பெண்ணுரிமையை நிலைநாட்டவும் தங்களது பேச்சுகள், எழுத்துகள் மூலமாக பலர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன் காரணமாகவே, தற்போதைய நூற்றாண்டில் பெண்கள் பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக சாதனை படைத்து வருகின்றனர். இருந்த போதிலும், சுதந்திர நாட்டில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினால் முழுமையான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. நடு இரவில் யார் ஒருவரின் துணையில்லாமல் பெண் ஒருத்தி தனியாக பாதுகாப்பாக நடந்து செல்லும் நிலை வருகிறதோ அன்றுதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்த நாள். 

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் புள்ளியியல் விபரம் மற்றும் பெண் பாதுகாப்புக்கான சட்டங்கள் குறித்து முந்தைய கட்டுரையில் பார்த்தோம். தொடர்ந்து, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சில சம்பவங்களை முதலில் இங்கு நினைவு கூற வேண்டியது அவசியமாகிறது. 

நிர்பயா முதல் பொள்ளாச்சி சம்பவம் வரை:

பெண்களுக்கு பொது இடத்தில்கூட பாதுகாப்பு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்ததுதான் தில்லி சம்பவம். நாட்டின் எதிர்காலம் என்று கருதப்படும் இளைஞர் கும்பலால் மிகவும் மோசமான, கொடூரமான முறையில் நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல். 

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி, 23 வயது மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, ஓடும் பேருந்தில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, ஆடையின்றி அவரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு பேருந்தை ஏற்றி கொலை செய்யவும் முயற்சித்துள்ளனர். இதன்பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த வழக்கில், 6 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுநர் ராம்சிங், 2013ம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் இளம் குற்றவாளி என்பதால் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று ஆண்டு தண்டனை அனுபவித்த பிறகு, விடுதலையாகி விட்டார். மற்ற நான்கு பேருக்கும் கடந்த 2014ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 2015ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றமும், 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் அதனை உறுதி செய்துள்ளன. இதைத் தொடர்ந்து, விரைவில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதிலும், குற்றவாளிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அளிக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். 

உலக நாடுகளையே பதற வைத்த நிர்பயா சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும், குற்றவாளிகளுக்கு தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாகத்தான் என்னவோ பல நிர்பயாக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். 

இந்தியா முழுவதும் உள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 40% டெல்லியில் நடப்பவை என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் மட்டுமல்லாது வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலைதூக்கி நிற்கின்றன. 

கடந்த 2018 ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, சிறுமியை 6 நாட்கள் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். பின்னர் சிறுமியின் உடலை காட்டுப்பகுதிக்குள் வீசிச் சென்றனர். இந்த வழக்கில் ஒரு சிறுவன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

தமிழகத்திலும் தொடரும் பாலியல் சம்பவங்கள்:

தமிழகத்திலும் பல சம்பவங்களைக் கூறலாம். சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளியான தஸ்வந்துக்கு  செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. பால் மணம் மாறாத பிஞ்சுக்குழந்தையிடம் எப்படி மிருகத்தனமாக நடந்துகொள்ள முடிகிறது? 

இதேபோன்று அரியலூர் நந்தினி கொலை வழக்கு, சேலம் வினோதினி கொலை வழக்கு, கடந்த ஜனவரியில் அயனாவரத்தில் 11 வயது சிறுமி, 16 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் என பாலியல் வழக்குகள் தொடர்கின்றன. பள்ளிகளுக்கு செல்லும் பிஞ்சு மழலைகள் முதல் வேலைக்குச் செல்லும் வயதான பெண்கள் வரை தினம் தினம் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்டவைகளுக்காக பெண் குழந்தைகளை கொல்லும் வழக்கம் மாறுபட்டு, தற்போது வேறு விதத்தில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். 

இதுபோன்ற பாலியல் வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், அதனை நிறைவேற்றத் தாமதப்படுத்துவது குற்றவாளிகளை சுதந்திரமாகவே செயல்பட வைக்கிறது. 'பணம் பத்தும் செய்யும்' என்பது போல பல வழக்குகளில் குற்றவாளிகள் அதிகாரம் மற்றும் பணபலத்தை வைத்து குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும் சம்பவங்களும் சாதாரணமாகி விட்டது. 

ஒரு நாட்டில் பெண்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக நடமாடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் வளர்ச்சியும் இருக்கிறது. ஒரு பெண் பாதிக்கப்பட்டு, தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கு தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என நினைத்து நீதியை நாடுகிறாள். குற்றவாளியும் கைதாகிறான். கைதாகி சில நிமிடங்களிலேயே ஜாமின் பெற்று வெளியே வந்துவிடுகிறான். மீண்டும் மற்றொரு பெண்ணிடம் தன் வேலையை ஆரம்பிக்கிறான். ஒருவழியாக போராடி குற்றம் புரிந்தவனுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தாலும், போலீஸ் ஸ்டேஷன் போற அளவுக்கு இவளுக்கு என்ன தைரியம்? என்று வசை பாடியே இந்த சமூகம் அவளை சீரழிக்கிறது.    

மீ டூ விவகாரம்: 

கடந்த ஆண்டு மீ டூ(Me Too) விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. முதல் முதலில், பிரபல நடிகர் நானா பட்னேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்தார். இது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக திரையுலக பிரபலங்கள் முதல் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். 

இதில் கவிஞர் வைரமுத்து - சின்மயி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹாலிவுட்டில் பிரபலமான மீ டூ இயக்கம் இந்தியாவிலும் முக்கியமாக தமிழகத்திலும் பிரபலமானதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சாதாரண குடும்பத்து பெண்கள் பலரும் வேறு ஒருவரின் ட்விட்டர் தளத்தின் வாயிலாக தங்களது வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை உலகிற்கு தெரியப்படுத்தினார்கள். இன்றும் சொல்லப்படாத பல கதைகளும், சம்பவங்களும் உள்ளன. 

மீ டூ விவகாரத்தில் பல ஆணாதிக்கவாதிகளின் கேள்விகள்   என்னவென்றால்... இவ்வளவு காலம் கழித்து ஏன் இவர்கள் இதனை தெரியப்படுத்த வேண்டும்? பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விவகாரத்தை இப்போது வெளிக்கொண்டு வருவது எதற்காக? பிரபலமானவர்களை பழிவாங்கத்தான் பெண்கள் இதுபோன்று கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள்? என பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் வந்து சொல்கிறாள்; அவளுக்கு என்ன தீர்வு வழங்கப்போகிறோம் என்று யோசிக்காமல், அவளது புகாரில் சந்தேகிக்கக்கூடிய ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த கேள்விகளுக்கும், 'முந்தைய காலகட்டத்தில் இதனை வெளிக்கொண்டு வரக்கூடிய சூழல் இல்லை; தற்போது அதற்கான சூழல் இருப்பதால் தெரியப்படுத்துகிறோம். சமூக கட்டுப்பாடுகள் இன்னும் பெண்களின் சுதந்திரத்தை கட்டிப்போட்டுள்ளன' என்று பதில் அளித்தனர். 

ஒரு பெண்ணோ, ஆணோ இந்த உலகத்தில் யாரையும் சார்ந்திராமல் வாழ்ந்திர முடியாது. அவர்களைச் சுற்றி சமூகம் என்ற ஒன்று இருக்கிறது. பல தடைகளை தாண்டி தான் பெண் என்பவள் இந்த சமூகத்தில் வாழத் தகுதியானவள் ஆகிறாள். அப்படி இருக்கையில், அவர்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளியில் சொல்வது என்ன சாதாரண விஷயமா? மீ டூ விவகாரம் இருந்த சமயத்தில் எத்தனை ஆண்மகன்கள் மரண பயத்தில் இருந்திருப்பார்கள்? அந்த வகையில் மீ டூ இயக்கம் வெற்றிதான்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள் அதனை வெளியில் தெரியப்படுத்த வேண்டும். அதுவே முதல் தீர்வாக இருக்கும். பெண்களுக்கு நிகழும் அநீதிகளுக்குத் தீர்வு காண்பதில் குடும்பத்தினரின் பங்கும் இருக்கிறது. அதேபோன்று சில ஆண்களின் பாலின வேட்கையே பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழக் காரணம். குழந்தைப் பருவத்தில் இருந்தே பெண் குழந்தையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும். பெண்களின் உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு என அனைத்தும் தெரியப்படுத்த வேண்டியது பெற்றோர்களின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. இதன்மூலமாக ஓரளவுக்கு குற்றங்கள் குறைவதை நாம் தடுக்கலாம்.. 

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com