இவ்வளவு செலவு பண்ணிதான் ஒரு திருமணத்தை நடத்தணுமா..?

நவீன கால கட்டத்தில் திருமணங்கள் பெயருக்காகவும், புகழுக்காகவும் மட்டுமே ஆடம்பரமாக நடந்தப்படுகின்றனவோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. 
Marriage
Marriage

நம் வாழ்வில் வரும் புதுவரவை உற்றார், உறவினர்கள் முன்னிலையில் நமது குடும்பத்துடன் இணைக்கும் நிகழ்வாக திருமணம் பார்க்கப்படுகிறது. சமூகத்தில் மற்ற நிகழ்வுகளை விட திருமணம் என்பது மிகவும் முக்கியமான, வாழ்நாள் முழுவதும் நினைவுகூறத்தக்க நிகழ்வாகும். ஆனால், இந்த நவீன கால கட்டத்தில் திருமணங்கள் பெயருக்காகவும், புகழுக்காகவும் மட்டுமே ஆடம்பரமாக நடத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. 

முந்தைய தலைமுறைகளில் திருமணங்கள் என்பது உறவுகள் ஒன்று கூடும் ஒரு திருவிழாவாக இருக்கும். திருமணத்திற்கு முன்னதாகவே பெண் பார்ப்பது, பூ வைப்பது, நிச்சயதார்த்தம் என திருமணத்திற்கு சில நிகழ்வுகள் அரங்கேறும். அதன்பின்னர் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டிற்கு அவர்களது நெருங்கிய உறவினர்கள் வந்துவிடுவர்.

உறவினர்கள் ஒன்றாக கூடி மனம் விட்டு பேசி, ஒன்றாக சமைத்து உணவருந்தி, குழந்தைகள் எல்லாம் ஒன்றாக விளையாடி, பெரியவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி, அந்தக் கால நினைவுகளை பகிர்ந்து, இளசுகள் எல்லாம் மற்றவர்களை கலாய்த்து விளையாடி... இந்த நிகழ்வுகளை எல்லாம் இந்தத் தலைமுறை குழந்தைகள் ஒரு சில திரைப்படங்களிலாவது பார்க்கும் வாய்ப்பைப் பெற்றதே அதிர்ஷ்டம் தான்.

திருமணம் பெரும்பாலும் மணமகன் அல்லது மணமகள் வீட்டின் முன்பாகவே நடைபெறும். இதற்கென பந்தல் போட்டு, வாழை மரத் தோரணங்களுடன்  அலங்கரிக்கப்பட்டிருக்கும். வீட்டில் உள்ள மணமகனுக்கு பட்டு வேட்டி, சட்டை, மணமகளுக்கு பட்டுச் சேலையுடன் வீட்டில் உள்ள அலங்காரப் பொருட்களைக் கொண்டே உறவினர்கள் அலங்கரிப்பர். மேலும், மிகவும் எளிமையாக நடத்தப்படும் திருமணம் என்றால் வீட்டில் உள்ளவர்களே இணைந்து உணவைத் தயார் செய்வார்கள். இல்லையென்றால் பெரும்பாலும் தனது வீட்டின் அருகே உள்ள சமையல்காரரை வரவழைப்பர்.

மணமகள், மணமகனின் நண்பர்கள் சர்வர்களாக பறந்து, திரிந்து வேலை செய்வர். வீட்டில் உள்ள பெரியவர்கள் தாலி எடுத்துக்கொடுக்க, உறவினர்கள் புடைசூழ திருமணம் அரங்கேறும். பின்னர் வழக்கமான சில சம்பிரதாயங்களும் நடைபெறும்.பின்னர் பெண்ணின் வீட்டார் இறுதியாக மணமக்களை தனது வீட்டிற்கு அழைக்கும் பொருட்டு 'வரவேற்பு' நிகழ்ச்சியை நடத்துவர். வாழ்வில் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்படும் திருமணத் திருவிழா எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது...

ஆனால், இன்றோ ஆடம்பரம், அமர்க்களமாக இருந்தாலும் சில மணி நேரங்களே கூடும் உறவுகள் மனம்விட்டு வெளிப்படையாக பேசுவது என்பது அரிதாகவே இருக்கிறது. அந்தக் காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, உறவினர்களை வைத்து நல்ல குடும்பம், குணத்தை வைத்து வரன் பார்க்க, இப்போதோ மேட்ரிமோனியில் புகைப்படத்தைப் பார்த்து செல்போனில் பேசி திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு தேதி குறிப்பது மட்டுமே மணமக்கள் வீட்டாரின் வேலை. திருமணத்திற்கென இப்போது காண்ட்ராக்டர்கள் எண்ணிக்கை பெருகிக் கிடைக்கவே, அவர்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக திருமணத்திற்கென அனைத்து வேலைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

மணமகன், மணமகள் அலங்காரத்திற்கு என்று பல மணி நேரம் செலவழித்து அவர்களை அலங்கரிப்பது புகைப்படத்திற்கு மட்டும் தான். அதிலும், கவரிங் நகைகள் மட்டுமில்லாது, தங்க நகைகள் கூட கடன் வாங்கி மணமக்களை அலங்கரிக்கும் அவலமும் நடக்கிறது. முன்னதாக மணமக்களை உறவினர்கள் சூழ்ந்து இருக்க, இப்போதோ, புகைப்படம் எடுக்க முடியாது; வீடியோ எடுக்க முடியாது என்று கூறி மணமக்களின் பின்னால் மட்டும் ஒரு சிலர் மட்டுமே நிற்க வைக்கப்படுவார்கள். திருமணத்தைக் கூட காண முடியாதபடி மணமக்களின் முன்னும் புகைப்படக்காரர்கள் தான் சூழ்ந்திருப்பர். 

இதுதவிர, முன்னதாக, ஊரில் உள்ளவர்களுக்கு இங்கே ஒரு விழா நடக்கிறது என்பதற்காக தாங்கள் வசிக்கும் தெருவின் முனையில் ஒலிபெருக்கிகள் வைத்து பாடல்களை ஒலிக்க விட்டிருப்பர்.  ஆனால், இப்போதைய நிலைமை திருமணத்தை கொண்டாடும் விதமாக, திருமண மேடைக்கு அருகிலேயே பாட்டுக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருப்பர். மண்டபத்தில் ஒருவர் பேசுவது மற்றொருவருக்கு கேட்காத படி, அங்கே பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். அதுபோன்று, அந்தக் காலத்தில் ஒரு ரோல் (சுமார் 30 -40 புகைப்படங்கள்) எடுப்பதே அரிதாக இருக்கும்.

இப்போது, மணமக்கள் உள்ளே நுழைவது முதல் வெளியேறுவது வரை அவர்களை நிற்க வைத்து, வந்தவர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுப்பது வழக்கமாகி விட்டது. திருமணத்திற்கு யாரெல்லாம் வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள தான் புகைப்படம், விடியோக்கள் என்றெல்லாம் சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திருமணம் முடிந்து மணமக்களைத் தனியாக நிற்க வைத்து சில சமயங்களில் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. 

மங்கள வாத்தியங்கள் மறைந்து, தற்போது செண்டை மேளங்கள், பட்டாசுகள் தான் வாத்தியங்களாக பார்க்கப்படுகின்றன. திருமண விருந்து, புகைப்படம் எடுத்து முடித்ததும் மண்டபத்தை காலி செய்ய வேண்டும். ஏனென்றால் அடுத்த விழாவுக்கு அங்கே புக்கிங் செய்யப்பட்டிருக்கும். 

மேலும், சில மணி நேர மண்டப வாடகைக்கு பல லட்சங்கள் தானம் செய்யும்போது எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் மனசு சற்று வலிக்கத் தான் செய்யும். ஆனால், உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை பார்த்து வாயடைக்க வேண்டும் அல்லவா...

மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி திருமணம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வரம்புக்கு மீறி, வட்டிக்கு கடன் வாங்கி போலித் தன்மையுடன் திருமணம் நடத்தும் நடுத்தரக் குடும்பஸ்தர்கள் தான் இவ்வுலகில் அதிகம். பின்னர் வாழ்நாள் முழுவதும் அந்தக் கடனை அடைக்க அவர்கள் உழைக்க வேண்டும். உண்மையாக, இந்தத் திருமணத்திற்கு ஆகும் செலவை வைத்து புதிதாக மணமக்களுக்கு வீடு வாங்குவது, அல்லது வருங்காலத்தில் அவர்களின் குழந்தைகளுக்கு பயன்படும் விதமாக சேமித்து வைக்கலாம். 

ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் அன்றைய தினம் முதல் மகளின் திருமணத்திற்கு நகை சேர்த்து வைக்க வேண்டும் என்று உழைக்க ஆரம்பிக்கும் பெற்றோர்கள், பின்னர் மகளின் திருமணத்திற்கு கடன் வாங்கி நாள் முழுவதும் உழைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? வீட்டிலோ அல்லது கோவிலிலோ திருமணம் நடத்தி விட்டு உறவினர்களுக்கு வீட்டிலே சமைத்து விருந்து வைக்கலாம். திருமணத்திற்கு செலவாகும் லட்சத்தை/ கோடியை மகன்/ மகளுக்காக சேர்த்து வையுங்கள்.

உங்களது அடுத்த தலைமுறைகளுக்கு அடிப்படை வசதிகள் முழுமையும் கிடைக்க சேமித்து வையுங்கள். தற்போது அதிர்ச்சி அளிக்கும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துகொண்டே செல்கிறது. எனவே, அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட பணம் இல்லை என்றால் மணமக்கள் இருவரும் எப்படி வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க முடியும். திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க பல ஆண்டுகளாக அடைக்க முயற்சிக்கும் மணமக்களை நமது உறவினர்களில் கூட பார்க்க முடியும்.

எனவே, திருமணத்திற்கு சேமித்து வைத்திருக்கும் தொகையை அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்துங்கள். எளிமையாக திருமணத்தை நடத்தி மணமக்களைப் போன்று நீங்களும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com