சுடச்சுட

  

  சென்னை மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த  வேலை ஆரம்பமாகிவிட்டது!  ஆனால்..

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 12th September 2019 03:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chembarakkamlake

  செம்பாம்பாக்கம் ஏரி

   

  சென்னை மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த  செம்பரம்பாக்கம் ஏரியை தூர் வாரும் பணி ஆரம்பமாகியுள்ளது.

  சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான, செம்பரம்பாக்கம் ஏரியை, தூர் வாரி, ஆழப்படுத்தும் பணி, பூமி பூஜையுடன், நேற்று துவங்கியது. எட்டு ஆண்டுகள் நடைபெற உள்ள இந்த பணியால், அரசுக்கு, 191.27 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

  சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. இது, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மொத்தம், 3,800 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 3.63 டி.எம்.சி., நீரை சேமித்து வைக்க முடியும். இந்த நீரை வைத்து, சென்னையின், 100 நாள் குடிநீர் தேவையை, எளிதாக பூர்த்தி செய்ய முடியும். பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால், ஏரியின் கொள்ளளவு, 40 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள் அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வில், இந்த தகவல் தெரியவந்துள்ளது.

  இதுமட்டுமல்லாமல், செம்பரம்பாக்கம் ஏரியின் நீரை நம்பி, 38 கிராமங்களில், விவசாயம் நடந்து வந்தது. குடிநீர் தேவைக்காக, ஏரி நீர் பயன்படுத்துவதால், தற்போது, திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்துார் ஆகிய பகுதிகளில், 1,000 ஏக்கர் விவசாயத்திற்கு மட்டுமே, தண்ணீர் வழங்கப்படுகிறது.

  கடந்தாண்டு, வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால், நீர்வரத்தின்றி, செம்பரம்பாக்கம் ஏரியில், நீர்மட்டம் குறைவாகவே இருந்தது. மெல்ல மெல்ல தண்ணீரின் அளவு குறைந்ததால், ஏப்., 2ம் தேதி முதல், சென்னைக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு கிடக்கும் நிலையில், தூர் வாரும் பணிகளை துவக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை எழுந்து வந்தது. நிதித்துறை அனுமதி பெறுதல் உள்ளிட்ட காரணங்களால், இப்பணிகள் தாமதமாகி வந்தன. இந்நிலையில், 15 ஆண்டுகள் கழித்து, செம்பரம்பாக்கம் ஏரி, முழுமையாக வறண்டதால், தூர் வாரி, ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

  ஒரு வழியாக, இந்த பணிகளுக்கு, ஜூன் மாதம் அனுமதியும் கிடைத்தது. தொடர்ந்து, அளவீடு கற்கள் நடுதல் உள்ளிட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டு, ஏரியை தூர் வாரும் பணி, பூமி பூஜையுடன், நேற்று துவங்கியது. 

  மேலும் படிக்க: செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடக்கி வைப்பு

  வருமானம் 
  ஏரியை தூர் வாரும் தனியார் நிறுவனம் மூலம், அரசுக்கு, 191.27 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஏரியை தூர் வாரும் பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சியில், கொசஸ்தலை வடிநில கோட்ட செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், செம்பரம்பாக்கம் உதவி பொறியாளர், சத்திய நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏரியின் அடிமட்ட அளவிற்கு மேல் தேங்கியுள்ள, உபரி மண் முழுமையாக அகற்றப்படும். இது, இடத்திற்கு ஏற்றார் போல் மாறுபடும். அதாவது, சில இடங்களில், 3 அடியிலும், சில இடங்களில், 5 அடியிலும் மண் தேங்கியிருக்கும். சில இடங்களில், சுத்தமாக மண் தேங்கியிருக்காது. அந்த இடங்களில், தூர் வாரப்படாது. அதேநேரத்தில், மற்ற இடங்களில், அடிமட்ட அளவிற்கு தூர் வாருவர்.

  மேலும் படிக்க: திருப்பத்தூர் ஏரியின் நீர்வரத்து கால்வாயில் சாலை அமைத்ததால் வீணாகும் மழை நீர் 

  பொதுப்பணித்துறை அதிகாரிகள் 1 மீட்டர் தூர் வார முடிவு
  செம்பரம்பாக்கம் ஏரியை, தூர் வாரி, ஆழப்படுத்த, கடந்தாண்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

  இத்திட்டத்தின் படி, 6,303 ஏக்கர் பரப்பளவிற்கு, 1 மீட்டர் ஆழத்திற்கு தூர் வாரப்படும். இப்பணி, எட்டு ஆண்டுகள் நடைபெறும். மொத்தம், 25.30 லட்சம் லோடு மண் வெளியேற்றப்படும். ஒரே நேரத்தில், முழு பரப்பளவிலும், தூர் வார முடியாது என்பதால், பகுதி பகுதியாக பணி மேற்கொள்ளப்படும். இப்பணியால், 536 மில்லியன் கன அடி கொள்ளளவு மீட்கப்படும். இதன் மூலம், கூடுதலாக, 56.50 கோடி லிட்டர் தண்ணீரை தேக்கலாம். மேலும், உபரி நீரை உடனுக்குடன் வெளியேற்றுவதை தடுக்கலாம். கோடையில், கூடுதலாக சில மாதங்கள், சென்னைக்கு தண்ணீர் வழங்க முடியும்.

  மேலும் படிக்க: ஏரிக்கரையை உடைத்து தொழிற்சாலைக்கு பாதை அமைக்க முயற்சி

  கனிம வளத்துறை திடீர் எதிர்ப்பு
  காலை முதல் லாரிகளில் மண் எடுத்து செல்லப்பட்ட நிலையில், பிற்பகலில், காஞ்சிபுரம் மாவட்ட கனிமவளத் துறையினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

  குன்றத்துார் அருகே சென்ற இரண்டு மண் ஏற்றிய லாரிகளை மடக்கிய கனிமவளத்துறை உதவி இயக்குனர், பெருமாள்ராஜன், லாரிகளை சிறைபிடித்துள்ளார். ஏரிகளில் மண் அள்ளுவதற்கு, பொதுப்பணித்துறை அனுமதி மட்டும் செல்லாது. கனிமவளத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறி, குன்றத்தூர் போலீசிலும் அவர் புகார் கூறியுள்ளார். இதையடுத்து தூர் வாரும் பணிகளுக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை விழுந்துள்ளதால், பொதுப்பணித் துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை விரைவில் துவங்கவுள்ள நிலையில், இந்த பிரச்னையில் முதல்வர், எடப்பாடி பழனிசாமி தலையிட்டு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai