சதம் அடிக்கும் வெங்காயத்தின் விலை! என்ன காரணம்? எப்போது குறையும்? தீர்வு என்ன?

வெங்காயம் உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும் என்பதைக் கடந்து, இனி வெங்காயத்தின் விலையைக் கேட்டால் கூட இல்லத்தரசிகளுக்கு கண்ணீர் வரும் அளவுக்கு, வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
சதம் அடிக்கும் வெங்காயத்தின் விலை! என்ன காரணம்? எப்போது குறையும்? தீர்வு என்ன?

வெங்காயம் உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும் என்பதைக் கடந்து, இனி வெங்காயத்தின் விலையைக் கேட்டால் கூட இல்லத்தரசிகளுக்கு கண்ணீர் வரும் அளவுக்கு, வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. சாதாரண சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவருமே வெங்காயத்தின் விலை எப்போது குறையும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

வெங்காயத்தின் விலை உயர்வு:

சமையலில் அத்தியாவசியப் பொருளாக பார்க்கப்படும் வெங்காயத்தின் விலை, தலைநகர் தில்லி முதல் மும்பை, சென்னை உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தில்லி உள்ளிட்ட நகரங்களில் சராசரியாக ரூ.40 -50 வரை இருந்த வெங்காயத்தின் விலை தற்போது ரூ.70-80-ஆக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

சென்னையில் கடந்த மாதம் 1 கிலோ வெங்காயம் ரூ.20-25க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.62-க்கு விற்கப்படுகிறது. சராசரியாக ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.2,600. கடந்த ஆண்டு இது ரூ.1,100 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில தினங்களில், முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை ரூ.100 -யைத் தொடும் என்று கூறப்படுகிறது. 

குறைந்து வரும் வெங்காய விளைச்சல்:

உலகிலேயே அதிகபட்சமாக 30 முதல் 40% வரை வெங்காயம் அதிகமாகப் பயிரிப்படும் இடம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் இதர மாநிலங்களில் விளைச்சல் செய்யப்படும் வெங்காயம், நாசிக்கின் மிகப்பெரிய வெங்காயச் சந்தைக்கு வரும். அங்கிருந்து தான் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

தற்போது வெங்காயத்தின் விலை வெகுவாக உயரக் காரணம் பருவமழை என்று கூறப்படுகிறது. மகாராஷ்ராவில் பெய்த தொடர் கனமழை காரணமாக பயிர்கள் நாசமாகின. வெங்காய விளைச்சல் இந்தாண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.  

 3 ஆண்டுகளாக வெங்காய விளைச்சல் குறைவு:

நாசிக்கைச் சேர்ந்த வெங்காய வணிகர் ஒருவர் இதுகுறித்து தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த போது, 'வெங்காயத்தின் விலை இந்தாண்டு தான் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், நாசிக்கில் கடந்த 3 ஆண்டுகளாக வெங்காய விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது.  பருவமழையின் போது வழக்கமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்படும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இரண்டு சீசனிலுமே உற்பத்தி குறைந்துள்ளது.  

கோடைக்காலத்தில் கடும் வெயில் இருப்பதால், பயிர்கள் பட்டுப்போகின்றன. வெங்காய விளைச்சலுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், கோடைக் காலங்களில் பெரும்பாலான பகுதிகளில் குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காத சூழல் நிலவும் வெங்காயம் பயிரிடுவது சாத்தியம் இல்லாததாகி விடுகிறது. வெங்காய விளைச்சல் இல்லாத காரணத்தினால் கடந்த ஆண்டு விவசாயிகள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். 

அதேபோன்று பருவமழை சமயத்திலும் வெங்காயப் பயிர்கள் அழுகி விடுகின்றன. கடந்த ஆண்டு எங்களது பகுதியில் உள்ள விவசாயிகள் வெங்காய விதைகளை பயிரிட முடியாமல் சாலையில் வீசி எறிந்தனர். வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அரசுக்கும் வலியுறுத்தினர். ஆனால், அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. ஆனால், இன்று வெங்காயத்தின் விலை அனைத்துப் பகுதிகளிலும் உயர்ந்தவுடன் அரசு நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது. விவசாயிகளுக்கு தொடர்ந்து அரசு ஆதரவு அளித்தால் மட்டுமே இதுபோன்ற நிலை வருங்காலத்தில் வராமல் தடுக்க முடியும்' என்று தெரிவித்தார். 

ஆந்திரா, கர்நாடகா​விலும் விளைச்சல் குறைந்தது:

இதேபோன்று ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் பருவமழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திண்டுக்கல், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளைச்சல் குறைவாக இருக்கும் சமயத்தில் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்படும். இந்தாண்டு தமிழகத்திலும் வெங்காய விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது. 

மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை:

வெங்காய விலை உயர்வை அடுத்து, உள்நாட்டு சந்தைகளில் வரத்தை அதிகரிக்கவும், வெங்காயத்தின் விலை மேலும் உயர்வதை கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் இருப்பில் உள்ள 56,000 டன் வெங்காயம் பல்வேறு மாநிலங்களுக்கு அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதில் 16,000 டன் வெங்காயம் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2,000 டன் வரையிலான வெங்காய இறக்குமதிக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திலும் நிலைமையை சரிசெய்ய வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும்:

இதற்கு முன்னதாக கடந்த 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் பருவமழை காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.

தற்போது பெரிதாக வெங்காயத்தின் உற்பத்தி இல்லாததால், இன்னும் ஒரு மாத காலத்திற்கு இதே நிலை தான் நீடிக்கும் என்று நாசிக் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் தீபாவளி பண்டிகையின் போது வெங்காயத்தின் விலை தற்போதைய விலையை விட அதிகரிக்கக்கூடும் என்று மக்கள் வருத்தத்தில் உள்ளனர். 

வேளாண்மையின் முக்கியத்துவம்:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு 1970களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. நம் நாட்டில் 60%க்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தையே நம்பி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு'; 'பொருளாதாரத்தின் அச்சாணி' என்று கூறுவதுண்டு.

ஒரு நாட்டின் வேளாண்மை சிறப்பாக இல்லை எனில் அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டால், அங்கு விவசாயத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது பொதுவான ஒரு கருத்து. 

வெங்காயத்தின் வரத்து குறைந்ததற்கு மத்திய, மாநில அரசுகள் தற்போது தற்காலிகத் தீர்வை எதிர்நோக்கியுள்ளன. ஆனால், நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டுமெனில் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். 

தீர்வு என்ன?

விவசாயத்திற்கும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ரூ.6,000 வழங்கப்படும் திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பயிரிட வங்கியில் கடன் வழங்கப்படுகிறது. வருகிற 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. 

அதற்கேற்ப, வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். இதனை பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் வலியுறுத்தியும் வருகின்றனர் நமது விவசாயிகள்.

விவசாயத்தை மேம்படுத்த அரசு தீவிரமாக முயற்சிக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டாவது அதற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com