கரோனா விடுமுறை: வரமா, சாபமா?

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிரான இந்த வாழ்க்கையில். எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமலேயே எல்லோரும் பயணம் போய்க் கொண்டிருக்கிறோம்.
கரோனா விடுமுறை: வரமா, சாபமா?

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிரான இந்த வாழ்க்கையில். எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமலேயே எல்லோரும் பயணம் போய்க் கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கை பயணத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் இன்னல்கள் நம்மை எல்லோரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது. ஆனாலும் இதுவும் கடந்து போகும் என்ற தத்துவ ஞான ஒளியில் எல்லாவற்றையும் கடந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எத்தனை இன்னல்கள் வந்தாலும், சில சின்ன சின்ன சந்தோசங்களில் துயரங்களை வென்று புத்துணர்சி பெறுவது நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒரு இயல்பான குணம் என்றால் அது மிகை இல்லை. 
இப்போது கரோனா என்ற ஒரு அரக்கன் மனித குலத்துக்கே பெரும் துயரத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறான். அடுத்த நொடி என்னவாகும், என்று எல்லோருமே அச்சம் கொள்ளும் வகையில் உயிர் பயம் காட்டி உலக வீதிகளில் உலா வந்து கொண்டிருக்கிறான். இந்த வேதனையைச் சொல்ல மொழியில்லை, காக்கும் கடவுளைக் கூட காண வழியில்லை. என்ற நிலையில் இயல்பு நிலையை தொலைத்துவிட்டு, சிறைப்பட்டு கிடக்கும் கூண்டு கிளிகள் போல் ஆணோம். 
தனிக் குடித்தனமாய் வாழப் பழகிக் கொண்ட நமக்கு, இப்போது தனித்தனியாய் சமூக இடைவெளிவிட்டு பழக முடியவில்லை. காலார நடந்து கடற்கரையோரம் காற்று வாங்க முடியவில்லை. நினைத்த நேரத்தில், நினைத்த உறவுகளை சென்று பார்க்க முடியவில்லை. ஆயிரம் பிரச்சனைகள் இருந்தும், அலுவலகம் சென்று, புரளி பேசி  ஆனந்தமாய் வேலை செய்யும் நேரம் வாய்க்கவில்லை, அடுத்த தெருவில் இருக்கும் அன்புக்குரியவர்களை கூட நேரில் பார்க்க முடியாமல் வீட்டுக்குள் இருந்தே விடியோ கால் பேசும் நிலை.. கொளுத்தும் வெயிலிலும் ஓடி ஆடி கிரிக்கெட் ஆடும் கூட்டம் இல்லை, இப்படி அடுக்கடுக்காய் நாம் எல்லோரும் அங்கலாய்ந்து கொள்ள எத்தனையோ இருந்தாலும், அதற்கும் மேலாய் சில நன்மைகளும் இங்கே கரோனாவால் நடந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.. வாகன இறைச்சல் ஏதும் இல்லாமல், ஒலி மாசு இல்லை, தொழிற்சலைகள் இயக்கம் இல்லை, கழிவு நீர் இல்லை, வாகனப் புகை இல்லை, காற்றின் தரம் உய்ரந்துள்ளது. ஆற்று நீர் தூய்மை ஆகி இருக்கிறது. பக்தர்களின் புலம்பல்கள் எதுவும் கேட்காமல் ஆலயங்களில் தெய்வங்கள் நிம்மதியாக இருக்கின்றன. 
இரவு பகல்,, வெற்றி, தோல்வி, என இந்த உலகில் எல்லாமும் இரண்டு பக்கங்களை கொண்டிருபது போல் கரோனாவாலும் நன்மை தீமை என இரண்டும் நடந்துள்ளது என்பதை பார்க்க முடிகிறது. சாமானியன் வாழ்வில் இது ஒரு பெரும் பொருளாதார இழப்பை கொடுத்திருக்கிறது என்று பார்த்தால், மாணவர்கள் வாழ்வில் தேர்வு இல்லாத தேர்ச்சியை கொடுத்து மகிழ்ச்சியானதாக தென்படுகிறது, வேலை இழப்பு வருமான இழப்பு, உயிரழப்பு என ஈடு செய்ய முடியாத இழப்புகள் நிறைந்து கிடக்கும் இந்த கொடூரமான நாட்களுக்குள்ளும் சில மகிழ்ச்சியான ஆனந்தமான தருணங்கள் இருப்பதை சில ஜன்னல்களை எட்டிப்பார்க்கிறபோது புரிகிறது. 
ஆம். எப்போதும் வேலை வேலை என்று விடிந்தது முதல் அடையும் பொழுதுவரை வீட்டுக்கு வர நேரம் இல்லாம் ஓடி ஓடி உழைத்த ஒரு உழைப்பாளி, இப்போது மனைவி, மகன் மகள்களுடன் முழு நாளையும் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கழிக்கிறான். மனைவிக்காக சமையல் அறையில் வேலை செய்யும் கணவனையும், கணவனுக்காக, அலுவலக வேலையை பகிர்ந்து கொள்ளும் மனைவியும், குழந்தைகளுக்காக கதை கதையாய் சொல்லி, பாரமபரிய விளையாட்டுக்களை உடன் சேர்ந்து விளையாடும் தாத்தா பாட்டி, என அன்பொழுகும் இல்லங்களில் கரோனா அரக்கனாய் தெரியவில்லை. 
எந்த ஒரு சூழலையும் கையாளத் தெரிந்த மனிதனுக்கு மனச்சுமை என்பது எப்போதும் இருக்காது. அரசு சொல்லும் அறிவுரையை கேட்போம். அதன்படி நடந்து பாதுகாப்பாய் இருப்போம். பேரின்ப வாழ்வை.. எதிர்நோக்கியே பேரிடரைக் கடப்போம்.. நம்பிக்கை ஒன்றே நம் முதன்மை வாழ்வாதாரமாகட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com