மனிதக் கடத்தல்

மனிதர்களை கடத்துதல் என்பது ஒருகை வியாபாரமாகவே கடத்துபவர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
bonded labour
bonded labour

மனிதர்களை கடத்துதல் என்பது ஒருகை வியாபாரமாகவே கடத்துபவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. கட்டாய உழைப்பு, பாலியல் சுரண்டல்கள், பாலியல்ரீதியான அடிமைத்தனம் ஆகியவையே இந்த வியாபாரத்தின்  பிரதான நோக்கம். உலகின் மிகப் பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களான ஆயுதம் மற்றும் போதைப் பொருட்களின் வர்த்தகத்திற்கு பின் மனிதக் கடத்தல்கள் மூன்றாவது பெரிய குற்றமாகும். மனிதக் கடத்தல் பற்றி ஐக்கிய நாடுகளின் வரையறைப்படி பார்த்தால் ஆள்கடத்தல் என்பது ஒரு நபர் மீதான ஒப்பந்தங்களை செய்வது, அச்சுறுத்தி அல்லது கட்டாயப்படுத்தி ஒருவரை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திருப்பது என்பதாகும்.

ஆசிய கண்டத்தில் இந்தியா மனிதக் கடத்தலின்  மிக முக்கியமான மையமாக திகழ்கிறது. பெரும்பாலும் இங்கு பெண்களும், குழந்தைகளுமே பாலியல் சுரண்டல்களுக்காகவும், ஆபாசப் படங்கள் மற்றும் கட்டாயத் திருமணத்திற்காகவும் கடத்தப்படுகிறார்கள். கணிசமான எண்ணிக்கையில் குழந்தைகள் ஆலையில் வேலை செய்யவும், வீட்டு வேலையாட்களாகவும், விவசாய வேலைகளில் ஈடுப்படுத்தவும் கடத்தப்படுகிறார்கள். மட்டுமன்றி சில இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் பணியமர்த்தப்படுகிறார்கள். கடத்துபவர்களால் நல்ல வேலை கிடைக்கும் என ஏமாற்றப்பட்டு கிராமப்புறங்களில் வசிக்கும் விளிம்பு நிலை பெண்களும், குழந்தைகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நகரத்திற்கு அழைத்துவரப்பட்டு  நவீன அடிமைகளாகவும், பாலியல் சுரண்டல்களுக்காகவும் விற்கப்படுகிறார்கள்.

யாரால் பணம் கொடுக்கப்படுகிறதோ அவர்களுக்காக இடைத்தரகர்களால் மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள். இது நன்கு திட்டமிட்ட குற்றச் செயல்களாகும். மேலும் இந்தக் குற்றச் செயல்களில் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் குற்றங்களில் மறைமுகமாக நிறைய நபர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். கடத்தப்பட்ட மக்கள் பாலியல் மற்றும் கட்டாயப் பணிகளால் சுரண்டப்படுகிறார்கள். கடத்தல்காரர்களில் பொறிகளில் அதிகமாக அகப்படுவது பெண்களும், குழந்தைகளும்தான். பாலியல் சுரண்டல்களுக்காக இளம்பெண்கள் கடத்தப்பட்ட வழக்குகள் நிறைய பதிவுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இது மாதிரியான வழக்குககள் உலகின் பல்வேறு பகுதிகளில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் வெகு எளிதாக கடத்தப்பட்டு வருகிறார்கள். கடத்தப்பட்ட குழந்தைகள் பணியாளர்களாக மாற்றப்படுகிறார்கள் அல்லது கட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைக்கப்படுகிறார்கள். மட்டுமன்றி உடலுறுப்பு கொள்ளையும் இந்தக் குழந்தைகளின் மீதே நடந்தேறுகின்றன. மேலும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்காக கடத்தப்பட்ட குழந்தைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

மனிதக் கடத்தல்களில் மிகவும் பொதுவான அடையாளங்களாக பாலியல் சுரண்டல் மற்றும் கட்டாய உழைப்பு ஆகியவை பார்க்கப்படுகிறது. மேலும் பாலியல்  சுரண்டல் மற்றும் கட்டாய உழைப்பு தவிர்த்து பிற வடிவிலான சுரண்டல்கள் குறித்த அறிக்கைகளும் இங்கு மிக குறைவாகவே இருக்கின்றன அல்லது அவற்றுக்கெல்லாம் போதுமான முக்கியதுவம் வழங்கப்படவில்லை எனலாம். இந்தப் பிற வடிவிலான சுரண்டல்களுக்குள் உள்நாட்டில் நிலவும் கட்டாயத் திருமணங்கள் மற்றும், உடலுறுப்பு திருடுதல், குழந்தைகளை பிச்சை எடுக்கச் செய்தல், பருவம் அடையாதவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்றவை அடங்கும்.

இந்தியp புலனாய்வுத் துறையின் குற்றப் பதிவுகளின் படி 2017 ஆம் ஆண்டு சுமார் 3000 ஆள்  கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2016 ஆண்டு பதிவுகளை ஒப்பிடும் போது சுமார் 60 சதவிகிதம் குறைவுதான். 2016-ல் மட்டும் சுமார் 8000 மனிதக் கடத்தல் வழக்குககள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆட்கடத்தல்கள் வெகுவாக குறைந்திருந்தாலும் கூட அது இன்னமும் உலகம் முழுதும் பரவலாக இருக்கவே செய்கின்றன. சமூகத்தில் வலுவற்ற நிலையில் வாழும் விளிம்புநிலை மக்களே இந்தக் கொடுமையான குற்ற ச் செயல்களுக்காக குறி வைக்கப்படுகிறார்கள். மனிதர்களைக் கடத்துதல் என்பது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும் அதுமட்டுமன்றி  இது மனித உரிமைக்கெதிரான மிகப் பெரிய வன்முறை ஆகும்..

மனிதக் கடத்தலுக்கான காரணங்கள்:

மனிதர்கள் கடத்தப்படுவதற்கான காரணங்கள் மிகவும் சிக்கலானவை மற்றும் அவை யாவும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. சமூக மற்றும் அரசியல் பொருளாதாரக் காரணிகளும் இதனுள் அடக்கம். மேலும் வறுமை மட்டும் இந்த கடத்தல்களால் ஏற்படும் பாதிப்புக்களை உருவாக்குவதில்லை, வறுமையுடன் வேறு பிற காரணிகள் இணையும் போது கடத்தபடுதலால் ஏற்படும் பாதிப்புகளின் அளவுகள் வெகுவாக உயர்கிறது.  இந்த பிற காரணிகளுக்குள் ஊழல், சமூகத்தினரின் உரிமைகள் மீதான சமநிலையின்மை, வலுவற்ற அரசாங்கம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அணுகுவதில் உள்ள சிரமங்கள், மற்றும் மனித உரிமைகள் பற்றின போதிய அறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாமையும் அடங்கும். சட்ட விரோதமான ஆயுத மற்றும் போதை பொருட்கள் கடத்துவதோடு சேர்த்து மனிதக் கடத்தலும் சர்வதேசத்தில் மிகப் பெரிய தொழில்துறையாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு  கொடுத்த அறிக்கைகளின்படி கட்டாயப்படுத்தபட்ட தொழிலாளர்களால் ஒரு வருடத்திற்கு சுமாராக 150 பில்லியன் டாலர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் லாபமாகக் கிடைக்கிறது. இந்த லாபத்தின் பெரும்பகுதி பாலியல் சுரண்டல்களிலிருந்தே கிடைக்கப் பெறுகின்றன. மீதமுள்ளவை பொருளாதார சுரண்டங்களிலிருந்து இருந்து அதாவது வீட்டு வேலைகள், விவசாய வேலைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அது சம்பந்தமான செயல்பாடுகளிலிருந்து கிடைக்கின்றன.

ஏன் இன்றளவும் கடத்தல்கள் இந்தியாவில் பரவலாக காணப்படுகின்றன:

தேவை மற்றும் வழங்குதலின் அடிப்படைக் கோட்பாட்டை நாம் இந்த சூழலில் சரியாக பொருத்தி பார்த்து கொள்ளமுடியும்.மனிதர்கள்இங்கு பொருட்களாக கருதப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் சுரண்டல்களுக்காக கடத்தப்பட்டு விற்கப்படுகிறார்கள். எப்பொழுத்தெல்லாம் பாலியல் தொழில்கள் மற்றும் கட்டாய உழைப்பிற்காக தேவை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மனிதர்கள் பணத்திற்காக கடத்தப்படுகிறார்கள். இதன்பின் அவர்களிடம் பொருளாதார அநீதி மற்றும் வறுமையும் வந்து சேர்கிறது. நீங்கள் ஒருவேளை கிராமப்புறத்தில் ஏழையாக அதுவும் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவராக பிறந்துவிட்டால்  நீங்கள் விற்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் அதிகம். அதுவும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் சாத்தியகூறுகள் மேலும் அதிகம். சில சமயங்களில் பெண்களை பெற்றவர்களே பணமில்லா காரணத்தினால் விற்கவும் முற்படுகிறார்கள்.பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளுமே சுரண்டலுக்கு பயன்படுகிறார்கள், ஆண்கள் அதிகமாக கட்டாய உடல் உழைப்பிற்காகதான் பயன்படுத்தப்படுகிறார்கள். இதுமாதிரியான குற்ற செயல்பாடுகளில், கடத்துபவர்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொள்கின்றனர். சமூக ஊடகங்களும் இணையதளங்களும் மனிதக் கடத்தலை பலகையான வழிகளில் மாற்றியுள்ளன. ஏதுமறியா குழந்தைகளை பாலியல் சுரண்டலுக்குள் கொண்டுவர இணையதளங்கள் வெகுவாக பயன்படுத்தப்படுகின்றன. வேலைவாய்ப்பு மற்றும் பணம் போன்ற தவறான வாக்குறுதிகளால் நகர்புறத்திலிருந்து வந்தவர்களும் கட்டாயப்படுத்தபடுகிறார்கள்.

சமுத்தவமின்மை, பிராந்திய பாலின விருப்பம்,ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழல் போன்றவைகளும் மனித கடத்தல்கள் இந்தியாவில் நிகழ முதன்மையான காரணிகள் ஆகும். கடத்துபவர்கள் தங்கள் செயல்பாட்டு முறைமைகளை மாற்றி கொள்கின்றனர். அதாவது கடத்துபவர்கள் கடத்துதலில் அறியப்பட்ட பழைய வழிகளை நிராகரித்துவிட்டு புதிய வழிமுறைகளை தேடி பயன்படுத்துகின்றனர். இதனால் பல வழக்குகளில் காவல் துறையினரால் மனித கடத்தல்களில் ஈடுப்பட்ட கடத்தல்காரர்களை அடையாளம் காணவே முடியாமல் உள்ளது.

நாம் என்ன செய்ய முடியும்:

மனிதர்கள் கடத்தப்படுதல் குறைந்துவிட்டது என்றாலும் கூட அது முழுதும் அழியவில்லை. இன்னமும் நம் சமூகத்தில் பரவலாக இருக்கிறது. மனித கடத்துலுக்கான சிறந்த பதில், மக்கள் முதலில் கடத்தப்படுவதை தடுப்பதாகும். சமூகத்தில் நிலவுகின்ற இந்த குற்ற செயல்கள் குறித்தான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்க வேண்டியது மிக அவசியம்.இந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வுகள் உருவாக்கப்பட வேண்டும். மனித கடத்தலை தவிர்க்க அரசாங்கமும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அதற்கு தன்னார்வ தொண்டு நிறுவங்னகள், சமுதாயநல அமைப்புகள் பலவும் தங்களுது பங்களிப்பை தந்து மனித கடத்தல்களுக்கெதிராக போராட வேண்டும். இந்த ஒட்டுமொத்த கூட்டமைப்பும் கடத்தலுக்கு ஆளானவர்களை அடையாளம் காண உதவும். மனித கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுதும் விற்கும் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். எனவே ஒரு மனசாட்சியுள்ள நுகர்வோராக இருப்பதே மனிதக் கடத்தலை அடையாளம் கண்டு போராடுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் மனித கடத்தலுக்கு எதிரான சங்கங்கள் அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும்.இது மாதிரியான சங்கங்கள் மனித கடத்தல்களை கண்காணிக்கவும் உள்ளூர் சமூகத்திற்கு இதனை குறித்த கல்வியறிவை வழங்கவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த குற்றத்திற்கான பின் விளைவுகளை மக்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். சமூகத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும். மட்டூமன்றி இது மாதிரியான குற்றங்களுகெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீங்கள் மனித கடத்தல்கள் மற்றும் வேறு வகையான சுரண்டல்களை உங்களை சுற்றி யூகித்தால், உரக்க பேசுங்கள் மேலும் அந்த குற்றத்தை பற்றி புகாரளியுங்கள். மனிதத்திற்கெதிரான இந்த குற்றத்திற்கு எதிராக அரசாங்கம் மற்றும் நம் சமூகத்துடன் கைகொடுத்து ஒன்று சேருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com