தலைவர்களைத் தத்ரூபமாக வரைந்து அசத்தும் ஆசிரியை!

சேலத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தலைவர்களின் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து முகநுாலை அலங்கரித்து வருகிறார்.
தலைவர்களைத் தத்ரூபமாக வரைந்து அசத்தும் ஆசிரியை!
Published on
Updated on
2 min read

சேலத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தலைவர்களின் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து முகநுாலை அலங்கரித்து வருகிறார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியை, தேசியத் தலைவர்களை  தத்ரூபமாக ஓவியயமாக வரைந்து, அவர்களது பிறந்தநாள்,  நினைவு நாளில் பதிவிட்டு, முகநுாலை அலங்கரித்து வருகிறார். இவரது ஓவிய பதிவுகளுக்கு ஏராளமானோர் ரசிகர்களாகியுள்ளனர். தனது அழகிய ஓவியங்களை அரசுப்பள்ளிகளில் காட்சிப்படுத்தி மாணவ–மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்கப்படுத்தி வருகிறார்.

சேலத்தை சேர்ந்தவர் கோகிலா(50). முதுநிலை கணித அறிவியல்  ஆசிரியையான இவர், தனியார் பள்ளியில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தோடு, கடந்த 13 ஆண்டுகளாக அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ், வட்டார வள மையத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது வாழப்பாடி வட்டார வள மையத்தின் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

தொழிலதிபரான இவரது கணவர் விஜயராஜன் சேலம் ரோட்டரி சங்கத்தில் இணைந்து சமூக சேவையாற்றி வருகிறார். இவரது மகன் ரவிந்திரன், மகள் பவித்ரா ஆகியோர் பொறியியல் படித்து வருகின்றனர்.

சிறுவயதில் இருந்தே பென்சில் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் கொண்ட ஆசிரியை கோகிலா, பணிச்சுமைகளுக்கு இடையேயும், ஓவியக்கலை மீதான ஆர்வத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். குறிப்பாக, தேசியத் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரபல நடிகர்கள் பிறந்த நாள், நினைவு தினம் மற்றும் கடவுள்களின் சிறப்பு பூஜை வழிபாட்டு தினங்களில் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து வண்ணம் தீட்டி முகநுாலில் பதிவிட்டு வாழ்த்தி வருகிறார். இவரது இந்த வித்தியாசமான பதிவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இதுமட்டுமின்றி, கிராமப்புற அரசுப்பள்ளி மாணவ–மாணவியருக்கு எளிய முறையில் ஓவியங்கள் தீட்டுவது குறித்து  பயிற்சி அளித்தும் தனது ஓவியங்களை பள்ளிகளில் காட்சிப்படுத்தி மாணவ–மாணவியரை காணச்செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி  ஊக்கப்படுத்தியும் வருகிறார்.

இவரது ஓவியத்திற்குள் அடைபடாத தேசியத் தலைவர்களே இல்லை. மகாத்மா காந்தியில் தொடங்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரை அனைத்துத் தலைவர்களும் அப்படியே வரைந்து அசத்தி வருகிறார்.

இதுகுறித்து இவரிடம் கேட்டதற்கு, ‘ சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். தற்போது பணிச்சுமை அதிகமாக இருக்கும் நிலையிலும், பிரபல தலைவர்களை ஓவியங்களை வரைந்து முகநுாலில் பதிவிடும் போது மனதில் சோர்வு நீங்கி புத்துணர்வு பிறக்கிறது. அனைத்து குழந்தைகளையும் அவரவர் தனித்திறமைகளை வெளிக் கொணர்வதற்கு, பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்கமளிக்க வேண்டும். பள்ளிகளுக்கு ஆய்வுப்பணிக்கு செல்லும்போது மாணவ–மாணவியருக்கும் ஓவியம் வரைவதற்கு பயிற்சி அளித்து வருகிறேன். இது எனக்கு மனநிறைவை தருகிறது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com