

'பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா'
என்ற பாரதியின் வரிகளை உற்சாகத்துடன் உரக்கச் சொல்வோம், இந்த மகளிர் தினத்தில்! மகளிர் தினம் என்பதை மகளிர் தம் மாண்பினை, தம் வலிமையை, தம் திறமையை உணர்ந்து கொள்ளும் தினமாகக் கொள்ளலாம். இன்றும் பெண் விடுதலை, பெண் சமத்துவம் என்பதெல்லாம் வெறும் பேசுபொருளாகத் திகழும் நிலை பல இடங்களில் உள்ளது.
'பெண் விடுதலை வேண்டும்' என்று பலர் ஆண்களை நோக்கி கேட்கின்றனர். ஆனால் ஆண்கள் கையிலா உள்ளது பெண்விடுதலை? அவர்கள் தந்து நாம் பெற்றுக்கொள்ள?
சுமார் 60,70 ஆண்டுகளுக்கு முன்புவரை பெண்கள் பிற ஆண்களுடன் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கூட பேசுவதில்லை. கதவுக்குப் பின்னால், சன்னலுக்குப் பின்னால் மறைந்து கொண்டுதான் பேசுவார்கள். 'பொட்டப்புள்ளய வேலைக்கா விடப்போறோம்? கையெழுத்துப் போடவும், நாலெழுத்து வாசிக்கவும், கூட்டக் கழிக்கப் பெருக்க வகுக்கவும் தெரிஞ்சா போதும்' என்று ஏதோ சில வகுப்புகள் படிக்க அனுப்பினாலே பெரிய விஷயம்! சில பெண்கள் வீட்டில் சண்டை போட்டு மேற்கல்வி படித்தாலும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். 'பொம்பளய படிக்க வச்சா, அதைவிட
படிச்சவனா பாக்கணும். வரதட்சணை கூடுதல் குடுக்கணும். போதாக்குறைக்கு பொம்பளய வேலைக்கு அனுப்புனா அவ அடக்க ஒடுக்கமா இருக்க மாட்டா' என்று எல்லா வகையிலும் விலங்குகள் போடப்பட்ட நிலை.
ஆண்குழந்தைக்குக் கொடுக்கும் நல்ல உணவு பெண் குழந்தைக்குக்
கிடைக்காது. கேட்டால், 'உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு' என்பார்கள். கணவன் அடித்தாலும் உதைத்தாலும் 'கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்று ஒரு மனைவி தாங்கிக்கொள்ள வேண்டும். அவள்தான் உத்தமி; பத்தினி என்று பாராட்டுவார்கள். பொருளாதார சுதந்திரம் இல்லாமை, குழந்தைகள், தன் மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பு போன்றவை காரணமாக கணவனுக்கு அடிபணிந்து வாழும் நிலை இருந்தது. அப்படிப்பட்ட காலத்தில் கூட எத்தனையோ பெண்கள் தடைகளைத் தாண்டி முன்னால் வந்துள்ளனர். முதல் பெண் மருத்துவர், முதல் பெண் நீதிபதி போன்ற இந்த
'முதல்'களே இன்றைய விடுதலையின் அஸ்திவாரம் எனலாம்.
தற்காலத்தில் இந்நிலையில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. வளர்ந்து வரும் பெண்கல்வியால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் இந்த அடக்குமுறையின் அளவு மிகவும் குறைந்துள்ளது. பெருகிவரும் குடும்ப பொருளாதார தேவை,
குடும்பத் தலைவனின் குடிப்பழக்கம், பொறுப்பற்ற தன்மை போன்றவை பெண்கள் வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. தன் காலில் நிற்கும் பொருளாதார சுதந்திரம், தன்னம்பிக்கை, தைரியம் போன்றவை வளர காரணமாக அமைந்துள்ளது.
அதே சமயம் வேலை பார்க்கும் இடத்தில், சமூகத்தில் வளர்ந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை போன்றவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அண்மையில் பெங்களூருவில் பாலியல் வன்முறைக்கு இரையான விலங்குகள் மருத்துவரான பெண்ணைப் பற்றிய தகவல்கள் வந்ததும் பலரின் விமர்சனம், 'இந்த இரவு நேரத்தில் அவள் ஏன் தனியாக வெளியே சென்றாள்? திமிர் தானே?' என்பது. என்ன ஒரு மடமை! நம் நாட்டில் இது போன்ற வன்கொடுமைக்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது, கூடவே இருந்து பிள்ளைகளை பாதுகாப்பார்கள் என நம்பும் உறவினர்கள் தானே! ஏன், சில இடங்களில் பெற்ற தந்தையே கூட அல்லவா?
ஆனால் அதேசமயம் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக உலகத்தையே கையில் 'சுமந்து' திரிந்தும் உலகத்தைப் பற்றி அறியாமல் 'அழகே...!' என்றதும் தானே சென்று வலையில் வீழ்ந்து அழிபவர்களை என்ன சொல்வது என்றே
தெரியவில்லை.
அதேசமயம் இன்னொரு பக்கம் சமவுரிமை என்று சிகரெட்டும் மதுவுமாகப் பெண் மாறி வருவது சரியல்ல. நல்லது கெட்டது பகுத்தறியும் தன்மையே நல்லறிவு. ஒழுக்கம் உயிரினும் மேலானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இத்தவறுகள், ' மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' எனும் பாரதி பாடலை வேறு பொருளில் பொருள் கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தும். பெண்கள் தாமே தம்மை பலவீனர்களாக நினைக்கும் நிலை மாற வேண்டும். உலகத்தில் ஆணும் பெண்ணும் சரிபாதி என்பதையும் ஆண்கள் உடலளவில் வலிமை பெற்றவர்கள் என்றால் பெண்கள் மனத்தளவில் வலிமை மிக்கவர்கள் என்ற உண்மையையும் உணர வேண்டும். இந்த பண்பினால்தான் இன்றும் என்றும் கணவனை இழந்த அல்லது கணவனால் கைவிடப்பட்ட
ஒரு பெண் எப்பாடுபட்டாவது தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விடுவதைப் பார்க்கிறோம். அதேசமயம் ஒரு ஆண் மறுமணம் செய்து கொள்கிறான். இதில் இருபக்கமும் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம் அவ்வளவே!
பலநாடுகளில் பெண்கள் பிரதமர்களாக, பல உயர்ந்த அமைப்புக்கள் அல்லது நிறுவனங்களின் தலைவர்களாக சாதனைப் பெண்களாக சிகரம் தொட்டு வருகிறார்கள்.
'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'
என்ற பாரதியின் கனவு நனவாகி வருகிறது.
'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' என்று நம் வலிமையை நாமே உணர்ந்து தடைகள் தாண்டி சாதிப்போம்... வெற்றிக் கொடி நடுவோம்.
மகளிர் தின வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.