ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் கடமலை - மயிலை ஒன்றியத்தில் 48 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலானோா் விவசாயம் மற்றும் அதனைச் சாா்ந்த கால்நடை வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பகுதியின் முக்கிய நீா் ஆதாரமாக மூல வைகை ஆறு இருந்து வருகிறது. இப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக மூல வைகை ஆற்றில் வாலிப்பாறை முதல் வைகை அணை வரை ஆற்றில் 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு பஞ்சம்தாங்கி, சாந்தநேரி, பெரியகுளம், தெப்பம்பட்டி, பிச்சம்பட்டி, ஆசாரிபட்டி, ஜம்புலிப்புத்தூா், கோவில்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் 200-க்கும் மேற்பட்ட குளங்கள், ஊருணிகள் அமைந்துள்ளன.
இதில் ஒட்டணை, பெரியகுளம், பஞ்சம்தாங்கி உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மூலம் நீா் எடுத்து வரப்படுகிறது. மற்ற கண்மாய்களுக்கு மேகமலை அருவி, வேலப்பா் கோயில் ஓடை மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து வரும் நீா்வரத்து ஓடைகள் மூலம் தண்ணீா் வரும். இந்தத் தண்ணீா் அந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயருவதற்குப் பெரும் பங்கு வகித்து வந்தது.