சங்ககிரியில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் ராஜபாலி குளம்

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் மலைடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் அருகே உள்ள ராஜபாலி குளத்தினை செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்ககிரியில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் ராஜபாலி குளம்
Published on
Updated on
2 min read

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் மலைடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் அருகே உள்ள ராஜபாலி குளத்தினை செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்காவும், எல்லை அம்மன் கோயிலுக்கு வடக்கே ராஜாபாலி குளம் உள்ளன. அக்காலத்தில் இதனருகே அரண்மனை ஒன்று இருந்ததுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்குளத்தில் ராஜாக்கள் அக்காலத்தில் நீராடியதால் ராஜாபாவி என்ற பெயர் பெற்றுள்ளது.

நாளடைவில் இப்பெயர் மருவி 'ராஜபாலி' என்று மக்கள் அழைக்கின்றனர். இக்குளம் 41,060 சதுரடி பரப்பளவை கொண்டுள்ளது. சங்ககிரி மலையில் உள்ள அனைத்து குளங்கள், பாலிகள் நிரம்பி மழை நீரும், ஊற்று நீரும் வடிகால் வழியாக மலையடிவாரத்திலிருந்து பொந்து கிணறு வழியாக இக்குளத்திற்கு தண்ணீர் அக்காலத்தில் வந்து கொண்டிருந்துள்ளன.

நாளடைவில் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டு இதற்கு வரும் தண்ணீர் அனைத்தும் வீணாக சாக்கடையில் செல்கின்றன. இக்குளத்தினை சுற்றிலும் சுற்றுச்சுவர்கள் சிதலமடைந்தும், கருவேலம் மரங்கள் வளர்ந்தும் வருகின்றன. குளத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து குப்பைகள் கொட்டப்பட்டும், கழிவுநீரும் விடப்பட்டு வருதால் நீர் மாசு அடைந்து ஆகாயத் தாமரை ஒரு பகுதியில் வளர்ந்து குளத்தை மறைத்து வருகின்றன.

கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பல்வேறு தேவையற்ற மண்களும் அதில் கொட்டப்பட்டுள்ளன. நகரில் பெரிய நீர் தேக்கமாக இவை விளங்குகின்றன. கடந்த 2019ம் ஆண்டு வழக்கத்தை விட சங்ககிரியில் அதிகமான மழை பெய்து மலையில் உள்ள நீர்த்தேக்கங்கள் கூட பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பின மழை நீர் வழிந்தோடின. ஆக்கிரமிப்பினால் இக்குளத்திற்கு வரும் மழை நீர் குளத்திற்கு வராமல் வீணாக சாக்கடையில் கலந்து சென்றன. இவைகளை செப்பனிடாவிட்டால் நாளடைவில் ஆக்கிரமிப்பால் இக்குளமே வருவாய்த்துறை ஆவணமாக புலவரைப்படத்தில் இருந்து காணாமல் போகும் நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இக்குளம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகத்திற்குள்பட்ட பகுதிக்குள் வருகின்றன

இது குறித்து 'தண்ணீர் தண்ணீர்' அமைப்பின் செயலர் எ.ஆனந்தகுமார் கூறியதாவது:

முதலில் இக்குளத்தை பழமை மாறாமல் பேரூராட்சி நிர்வாகம் மீட்டெடுக்க வேண்டும்.தற்போதுள்ள குளத்தின் நிலையை மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசின் கவனத்திறக்கு கொண்டு சென்று சிறப்பு நிதிகளை பெற்று முதலில் குளத்தில் உள்ள கழிவுகளை போர்கால அடிப்படையில் தூர்வாரியும், பாரபட்சமில்லாம் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அதில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் மலையிலிருந்து வரும் உபரி நீரை அக்காலத்தில் வந்த வடிகாலை அக்காலத்தில் இருந்த வருவாய்த்துறையின் ஆவணங்களின் அடிப்படையில் அளவீடு செய்து அவ்வழிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

இந்த வடிகால் வழிகளை மீட்டெடுக்கும்போது குளங்கள் வரும் மழைக்காலங்களில் நிரம்பி சங்ககிரி பேரூராட்சிக்கு நிர்வாகத்திற்கு கோடைக்காலத்தில் கை கொடுக்கும் பெரிய நீர் தேக்கமாக அமையும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com